Saturday, November 8, 2014

மருந்து பிரயாகை-14




அன்புள்ள திரு.ஜெ வணக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நடைபயணநேரத்தில் பிரயாகையின் நினைவோடு ஒரு வாக்கியத்தை நினைத்துக்கொண்டேன்.

“நான் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றேன், நீங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றீர்கள்“ என்று. மீண்டும் அந்த வாக்கியத்தை நினைத்து சிரித்துக்கொண்டேன்.
ஏன் சிரித்தேன்?
“நான் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றேன், நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றீர்கள்” என்று அல்லவா நினைக்கவேண்டும். நான் ஏன் மாற்றி நினைத்தேன் என்று சிரித்தேன்.
மனம் இப்போது சிரித்தது. முன்னால் நினைத்ததுதான் சரி என்றது. எப்படி என்றேன்?
உயரம் உயரமில்லாமல் போகும் ஒரு தருணமும், உயரமே  அர்த்தம் அற்றதாகவும் போகும் தருணத்தை கண்டுகொண்டேன்.
அறியாமையின் உயரத்தில் நானும், அறிவின் ஆழத்தில் நீங்களும் இருக்கின்றீர்கள் என்றது மனம்.

அர்த்தமற்ற உயரம் அறியாமை, அந்த உயரத்தில்தான் மனிதன் நின்று எல்லோரையும் பார்க்கின்றான். அறிவின் ஆழத்தில் நிற்கும் மனிதன் எளியவனாக சிறியவனாக தெரிகின்றான். அட அவனா? சின்னப்பையன் என்கின்றது உலகம். சூரபத்மன் முன்பு முருகன் ஒரு காட்சி. மகாபலி முன் வாமனன் ஒரு காட்சி. கம்சன் முன் கண்ணன் ஒரு காட்சி. விந்தியன் முன் அகத்தியார் ஒரு காட்சி.  

“தாக்கு அமருக்கு ஒரு சாரையை” என்னும் திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் “ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மாமருள் பூத்த மலத்ரய பூரியை “ என்று அந்த திருப்புகழ் படிப்பவன் ஆணவத்தை, அஞ்ஞானத்தை உடைத்து எறிவார்.
ஞானிகளை போற்றாதது துரோகம் என்கிறார் சுவாமிகள். துரோகத்தின் உச்சத்தில் நிற்கும் அஞ்ஞானியும், ஞானத்தின் ஆழத்தில் நிற்கும் ஞானியையும் எனக்குக் காட்டத்தான் அந்த மேற்சொன்ன வரிகள் எனது நினைவில் ஓடியது. 

எனது உயரத்தை இழந்து உங்களுடன் ஆழுத்தில் விழுந்துவிட நினைக்கின்றேன். இதைத்தான் அன்று வராக அவதாரத்தில் அடிதேடிய நாராயணன் செய்து காட்டினானோ? பாதம் தேடுதல் என்பது ஞானியின் அடியாழத்தை நாடி சென்று அமர்ந்துக்கொள்வது என்பதை உணர்கின்றேன்.
 
பிரயாகை-14ல் மனிதனின் அடிப்படை உணர்வாகிய காமத்தை, நான்காய் பிரித்து பாடம் நடத்துவது பெரும் ஞானம். ”மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற வள்ளுவன் வாய்மொழி வாழ்க!
பெண்ணுக்குத்தான் காமம் உடல் சார்ந்தது. ஆணுக்கு அது அகங்காரம் சார்ந்தது மட்டுமே. இளவரசே
”மாருதர் நகைத்துஇப்புவியில் பெருங்காமுகர்கள் இருவகை. புணர்ந்தபின் வெறுப்பவர்கள், வெறுத்தபின் புணர்பவர்கள்என்றார்.

“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே“ என்னும் பழமொழியை, ஆணின் காமம் அகங்காரம் சார்ந்தது என்பதில் வைத்துப் பொருத்திப்பார்த்தால், அந்த பழமொழி தரும் விளக்கமே புதியதாக பெரியதாக இருக்கின்றது.

மண்ணில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெண்ணின் உடலால் படைக்கப்பட்டவர்கள் எத்தனை உண்மையோ அத்தனை உண்மை உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு ஆணின் அகங்காரத்தின் உருவங்கள் என்பதும். அன்பு, பாசம், காதல். காமம் எல்லாம் அந்த அகங்காரத்திற்குள் வந்து ஒடுங்கிவிடுகின்றது. ஜெ நீங்கள் எதையும் நுணிக்கிளையில் அமர்ந்து வெட்டாமல் அதன் விதைக்குள் உட்கார்ந்து ஆராயந்து  செதுக்குகின்றீர்கள்.

இச்சையின் ருசியால் நாடி, கூடி ஒவ்வொரு கூடலுக்கும் பின்னால் அகங்காரம் தீர்வதால் அது தீர்வதற்கு காரணமான பெண்ணினை வெறுத்தும், சில நேரங்களில் தன்னையே வெறுத்தும். தனது பலவீனத்தை வெல்வதாக நினைத்து பெண்ணை வெறுத்தும், வெறுப்பின் வழியாகவே தன்னை இம்சிக்கும் பெண்ணை அடைந்தும் ஆண் ஆடும் ஆட்டல் எல்லாம் அகங்காரம் என்பதை உங்களின் வார்த்தைகள் வழியாக நோக்கையில் ஆணின் சிறுமையும், காமத்தில் வலிமையும் தெரிகின்றது.


யயாதி என்னும் மன்னன் தேவயானியை எப்படி கூடியிருப்பான், அதே யயாதி சம்ரிஸ்டையை எப்படி கூடியிருப்பான். ஒன்றை கூடி வெறுத்தும். ஒன்றை வெறுத்து கூடியும். பெரியவீடு என்பதும், சின்னவீடு என்பதும் மனிதன் காமத்தின் வெளிப்பாடு இல்லை. அகங்காரத்தின் வெளிப்பாடு என்பதை எத்தனை துள்ளியமாக நோக்க முடிகின்றது.


ஆண் பெண் என்ற இருமைகளை இணைக்கும் காமம் என்னும் வெளி நீள்வதும் குறைவதும் இன்றி அப்படியே இருக்கின்றது. ஆணும் பெண்ணும்தான் காமத்தின் வளர்ந்தும் தேய்ந்தும் இல்லாமல் போகின்றார்கள்.
//இளவரசே, நிறைந்து மறைந்த காமுகர் எவருமில்லை. காமம் விளைவது மானுடக் கற்பனையில். அதில் ஒரு சிறுபகுதியை உடல் நடித்து நடித்து வெளியேற்றிக்கொண்டிருக்கிறது. வெளியேற்றப்படாதுபோகும்போது அது உள்ளத்தில் தேங்கி நிறைகிறது. முதிர்ந்த காமுகர் அடையாது எஞ்சிய காமத்தால் ஏங்கிச் சலிப்பவர்கள். நிறைவுறாத பெரும் வெளியை ஆன்மாவில் கொண்டவர்கள்//

”போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து” என்ற பழமொழிதான் எத்தனை பெரியது.


எதில் போதும் என்று நினைக்கின்றோமோ இ்ல்லையோ காமத்தில் போதும் என்று நினைப்பது எத்தனை பெரிய சுயநன்மை என்பதை விளக்கும் மாருதரின் சொற்கள் முன்னும் பின்னும் காலத்தை வென்று நிற்கும் சொற்கள்.
“வாழ்நாளெல்லாம் அவர்கள் உபாசனை செய்த அந்த தெய்வம் மெல்லமெல்ல கொடூரமாக ஆகும். அவர்களிடம் பலி கோரும். அவர்களோ உடல் தளர்ந்து நாதளர்ந்து கைகூப்புவார்கள். அதன் கண்கள் சுடர்கொண்டபடியே வரும். ஒருகட்டத்தில் அவர்களை கையிலெடுத்து வாயிலிட்டுக் கடித்து உதிரம் கொட்ட மென்று உண்ணும் அத்தெய்வம். அவர்களின் கதை எப்போதும் அதுவே.”


உண்மைகள் தெரிந்தாலும், அதை தாண்டிப்போகும் மனிதனின் அகங்காரம்தான் எத்தனை பெரும் கூர்வாள்.


காமம் பற்றி எழுதியிருந்தாலும் உடம்பையும், உள்ளத்தையும் பற்றி எழுதியது பிரயாகை-14. உடம்பையும் உள்ளத்தையும் கொண்டாட நினைப்பவர்கள். காமத்தை கொண்டாடமல் இருப்பாராக.


//“நீர் எனக்கு அறிவுரை சொல்லத் தொடங்கிவிட்டீரா?” என்றான். “ஆம், அறிவுரைதான். மருத்துவனின் உரிமை அதுஎன்றார் மாருதர். “நான் அதை ஏற்காவிட்டால்?” என்றான் அர்ஜுனன். “என் கடமை சொல்வது மட்டுமேஎன்றார் மாருதர்.//


மருத்துவர் மாருதர். மாருதர் ஜெ.

நன்றி
அன்புடன்

ராமராஜன்மாணிக்கவேல்.