Thursday, December 31, 2015

வெண்முரசு சிறுநூல்கள்



இப்புத்தகங்கள் முன்னுரையுடன் நம் தளத்தில் வெளியிடப்படும் என நினைக்கிறேன். வெண்முரசின் அடர்வையும் வீரியத்தையும் கண்டு அஞ்சி படிக்காமல் விட்டவர்களுக்கு இது ஒரு முன் பயிற்சி நூல்களாக அமையும்.  நான் ஒருவருக்கு வெண்முரசின் முதல் நூலை வாங்கிப்பரிசளித்தேன். அவர் இன்னும் படிக்கவில்லை.  அவர் இலக்கிய சிறு பத்திரிக்கைகளை படிப்பவர். புறப்பாடு நூலை உருகி உருகி படித்தவர். ஆனால் அவரால் புத்தகத்தின் கனம் (பொருள்) காரணமாக உள் நுழைய முடியாது இருக்கிறார். இது ஒரு சிறந்த ஏற்பாடு. பின் அட்டையில் இது வெண்முரசின் உள்ளடங்கிய கதைகள் என ஒரு அறிவிப்பும் இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இதைவைத்து அரசியல் செய்ய சில இணைய வீரர்கள் முயல்வார்கள்

தண்டபாணி துரைவேல்

அரசர் எண்ணாததை எண்ணற்க



ஐயா,

கர்ணன் அவையில் அமைச்சர் , அரசர் சொல்லாததை அமைச்சர் முன்னெடுக்கக் கூடாது என்கிறார் இன்றைய கார்பரேட் உலகில்
நடுநிலை மேலாளர்களாக இன்று இருப்போர் அமைச்சர் நிலையில் உள்ளனர். நாமாக ஒரு நவீனக் கருத்தை முன் மொழிந்தால், உயர்நிலை மேலாளர்கள் மெல்லிய நகையுடனோ சொல்லற்ற நிராகரிப்புடனோ தாண்டிச் செல்வதைப் பார்க்கிறோம்.

அர்த்த சாஸ்திரத்திலும் குறளிலும் இது தொடர்பான குறிப்புகள் உண்டா என தயவுடன் தெரிவிக்கவும்
கர்ணன் அனைத்துக் குடிகளுக்குமிடம் அளிக்கும் இடம் கண்ணீரை வரவழைப்பது
எனது வாசகர்கள் எதிர்காலத்தில் வருவர் என்று நிகழ்கால வாசகர்களுக்கு சவால் விடும்போது
மாணவனுக்கு சிரமத்துடன் ஈகோவை தூண்டி கணக்கு கற்பிக்க முயலும் நல்லாசிரியனின் தொய்வைக் காண்கிறோம்
நாமும் உம்முடன் ஓடி வருவோம்
விழுந்தால் மீண்டும் பின்னாலாவது வருவோம்


அன்புடன்
ஆர் ராகவேந்திரன்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்-வெய்யோன்-6




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

எதுவும் எல்லைத்தாண்டுவதில்லை, எல்லைத்தாண்டினால் எல்லைத்தாண்டியது எதுவும் முன்போல் இருக்கமுடிவதில்லை. தனக்கான எல்லைக்குள்தான் உலகில் உள்ள அனைத்தும் வாழ்க்கை நடத்துகிறது.

வான்விட்டு மனிதனாக வந்த தெய்வங்கள்கூட மனிதன் என்ற எல்லையிலேயே வாழ்ந்து உள்ளன. மனிதனாக வந்ததாலேயே தெய்வங்களையும் ஐயம் அச்சம் பிடித்துக்கொள்வதைப்பார்க்கிறோம். தெய்வங்களும் தனது எல்லையை தாண்டமுடியாமல் தோற்றுப்போகின்றன. பரசுராமன் கதையும், கர்ணன் கதையும் பாடும் சூதன் // “வெல்லற்கரியோர் என்று இப்புவியில் எவருமில்லை. விண்ணிழிந்து மண் நிறைத்த இறைவடிவங்கள் கூட”// என்று பாடுகின்றான்.

வெற்றிப்பெறுதல்  என்பது எதிரியை வெல்வது மட்டும்தான் என்று நினைக்கையில் “தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன். தெய்வங்கள் அவனை மட்டும் நோக்கி புன்னகைக்கின்றன” என்று வெற்றியை திருப்பிப்போடுகின்றான்.

எதிரியை வெல்லுதல் என்பது அவன் புறத்தை வெல்லுதல், தன்னை வெல்லுதல் என்பது எதிரியின் அகத்தையும் வெல்பவனுக்கு மட்டுமே சாத்தியம்.

“இன்றுபோய் நாளைவா“ என்றபோதே இராமன் தன்னையும் வென்று இராவணனையும் வென்றுவிடுகிறான். இதற்குபிறகு இராவணன் ராகவனுடன் ஏன் யுத்தம் செய்தான். யுத்தம் செய்து வென்றாலும் அது வெற்றியாக இருந்து இருக்குமா? தோற்றவன் தன் உயிரையும் குலத்தையும் அழித்துக்கொள்ள அன்று மீண்டும் ராமனுடன் யுத்தம் செய்தான். எது வெற்றி? எது தோல்வி? என்பதை அறியாத ஒருவனானல் ஒரு மாபெரும் யுத்தம் நடந்து முடிந்தது இராமயணத்தில்.  

தோற்பதில்லை என்ற ஒற்றைச்சொல்லால் என்னை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் சிவதரேஎன்று இன்று கர்ணன் சொல்லும் வார்த்தைகளை முதலில் தவறாகப்புரிந்துக்கொண்டேன். ராவணன் ராமனை நினைத்துச்சொன்னால் எப்படி இருக்கும் அப்படி புரிந்துக்கொண்டேன். இதே வார்த்தையை மகாத்மா காந்திச்சொன்னால் எப்படி இருக்கும்? கர்ணன் புறத்தை வெல்வதைப்பற்றி இங்கு சொல்லவில்லை. எதிரியின் அகத்தை வெல்வதைப்பற்றிச்சொல்கிறான். எதிரியின் அகத்தை வெல்லும்போதே தன்னை வென்றவன் உருவாகிறான் என்பதை கர்ணன் வாழ்வில் இன்று அறிந்து ஒளிப்பெற்றேன்.

தன்னை வெல்வதற்கும் எதிரின் அகத்தை வெல்வதற்கும் எத்தனைப்பெரிய பொறுமையை கையாளவேண்டி உள்ளது. தந்தையையும், மனைவியையும் ஒரே நாளில் சந்திக்கும் உள்வலி இல்லை என்று கர்ணன் சொன்னபோது அது விளங்கவில்லை. இன்று கர்ணன் வாழ்ந்துக்காட்டும்போது அசர அடிக்கிறீர்கள்.  அதே நேரத்தில் மதுவை தொடமாட்டேன் என்ற மகாத்தமாவின் உள்வலியையும் நினைத்துப்பார்க்கிறேன். ஆனால் கர்ணனுக்கு மனைவி விஷாலினி, காந்திக்கு மனைவி கஸ்தூரி பாய். காந்திக்கு கொடைசெய்த தெய்வம் ஏன் கர்ணனுக்கு கைமடக்கிக்கொண்டது? 
.  
தேவகுமாரன் கல்வாரி மலைக்கு சிலுவைசுமந்துச்சென்று, அதே சிலுவையில் ஆணியால் அறையப்பட்டு   குருதி வடிய வடிய தொங்கும் தருணத்தில் “பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் மன்னித்துவிடுங்கள்” என்று இவர்களுக்காக பிராத்திப்பான் என்றால் அவன் எதிரி எத்தனை ஆழத்தில் இருளில் இருக்கிறான். அந்த எதிரியைத்தொட, அந்த எதிரியை கைத்தூக்கிவிட அவன் எத்தனை உயரத்தில் ஏறி நின்று உயிர் ஊசலாடியப்படி பிதாவிடம் மன்றாட வேண்டி உள்ளது. அந்த மன்றாட்டு அல்லவா அவர் முன் அவர் எதிரிகள் பிரியமானவர்களாகி மண்டியிட வைக்கிறது. ராஜியத்தில் இடமில்லாதவன் இதயங்களின் ராஜகுமாரனாய் பிறந்துக்கொண்டே இருக்கிறான்.

கர்ணன் விருஷாலியை எத்தனை தாழ்நிலைக்கு சென்று மன்னிக்கிறான். அவன் தாழ்நிலைக்கு செல்லச்செல்ல எத்தனை உயரத்தில் அவளுக்காக சென்று மனதில் மன்றாட்டு நடத்துகிறான்.

எடுத்த எடுப்பிலேயெ விருஷாலினி இருக்கும் இடம் என்ன, கர்ணன் இருக்கும் இடமென்ன என்பதை செவிலிச்சொல்லிவிடுகிறாள். “//உடல்கொதிக்கிறது. தலைநோவுமிகுந்துள்ளது. விழிதிறந்துஒளிநோக்கஇயலவில்லை. உள்ளறைஇருளில்முகம்புதைத்துபடுத்திருக்கிறார்கள்.// விழிதிறந்து ஒளிநோக்க முடியாததுதான் பிரச்சனை. கண்ணோவு கொண்டவனுக்கு சூரியன்மீது கோபம் வரும். நோவுமீது அவன் கோவம் கொள்வதில்லை. பிரியத்தில் சூரியன் அவனை நெருங்க நெருங்க அவன் சூரியனையே வெறுப்பான். விருஷாலினியின் பிரச்சனையும் கண்நோவுதான். இதே வேறு ஒரு கணவனாக இருந்தால் எப்படி புரிந்துக்கொள்வான். அவன் அகம் பார்க்கமாட்டான் உடல் பார்த்து வெட்டி எறிந்து இருப்பான். “பாவிகளை வெறுக்காதீர்கள், பாவங்களை வெறுங்கள்” என்பதுபோல கர்ணன் விருஷாலினியின் பாவத்தை வெறுக்கிறானே தவிர விருஷாலினியை வெறுக்கவில்லை.

விருஷாலினியை அங்கமன்னாக சென்று கர்ணன் பார்ப்பதற்கு எது தடையாக இருக்கமுடியும். அவனை அங்க மன்னாக அவள் பார்க்கிறாள். அவன் அவளை மனைவியாகப் பார்க்கிறான். அரசனுக்கு மனைவியைப் பார்க்க கடமையென ஒன்றுண்டா? கணவனுக்கு மனைவியைப்பார்க்க கடமை இருக்கிறது.  ஒரு மனைவியை கணவன் பார்க்கப்பிரியப்படுகின்றான். ஒரு அன்பு அன்பைப்பார்க்க ஏங்குகின்றது. ஒரு தந்தை தாயைப்பார்க்க ஏங்குகின்றான். ஒரு செவிலியில் அன்னையைப்பார்பவன் இதயத்தை புரிந்துக்கொள்ள முடியாத மனைவி எத்தனை பெரிய இருட்டில் இருக்கிறாள். மனைவிக்கு பெரும் அரண்மனையை தந்தவன் அவளுக்காக எத்தனை சிறிய இருக்கையில்  அமர்ந்து இருகிறான்.

ஈடு இணையற்ற காதலர்களை கண்ட பாரதத்திருநாட்டில் கர்ணன் காதலுக்கு ஈடு இணை இல்லை. அவன் காதலைத் தாங்கும் காவியங்களும் கண்ணீர் விட்டுவிடும். ஷண்முகவேல் இந்த இடத்தை தனது ஓவியத்தை உயிர்பெறவைத்ததை நினைத்து நினைத்து அதிசயிக்கிறேன்.  ஒரு புள்ளியில் ஒரே நேரத்தில் இரண்டு அம்புகள் தைத்து ஆடிக்கொண்டு இருக்கின்றன.

தன்னால் மட்டும் வெல்லப்படுபவன் கர்ணன் என்பதை விளக்க இத்தனை பெரிய அகவிளையாடலை நிகழ்த்தி நெஞ்சில் அறைந்து தடவுகின்றீர்கள்.

எதிரி எப்போதும் ஒரு யுத்தத்தை உருவாக்குகிறான். அந்த யுத்தத்தில் கருவிகளைப்பயன்படுத்தி எதிரியை கீழேத்தள்ள  வெல்ல முயற்சி செய்கிறான். யுத்தம் செய்யாதவன் கருவிகளோடு யுத்தம் செய்வதில்லை. எதிரியோடும் யுத்தம் செய்வதில்லை. எதிர்ப்போடு மட்டும் யுத்தம் செய்கிறான். எதிரி என்று ஒருவன் உலகில் இல்லை என்றே அவன் நினைக்கிறான். தன்னோடு தன்னில் ஒருத்தன் என்றே நினைக்கிறான். யுத்தம் செய்யாதவன் பார்வைக்கு இரண்டாக தெரிந்தாலும் அவன் ஒன்றே ஆன மாதொருபாகன். 

தோற்பதில்லை என்ற ஒற்றைச் சொல்லால் என்னை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் சிவதரே”-என்ற வரியை மீண்டும் திருப்பி வாசிக்கையில் வாழ்க்கையையே இது புரட்டிப்போடுகிறது ஜெ. 

ராமராஜன் மாணிக்கவேல்

உதாசீனம் (வெய்யோன் -6)


  ஜானகிராமனின் மரப்பசு நாவலில் நாயகி சமூக மரபுகளுக்கு முற்றிலும்  மாறான வாழ்க்கையை எவ்வித மனச்சங்கடங்களுக்கும் ஆளாகாமல் வாழ்ந்து வருபவளாக இருப்பாள்.  இன்றைய காலத்தில்கூட மிக அதிர்ச்சியூட்டக்கூடிய வாழ்வுமுறை அது.  அவள் மனதில் எல்லா மரபுகளயும் தூக்கி எறிய தூண்டுதலாக ஒரு நிகழ்வு கதையில் அமையும்.  அவள் மிகவும் மதிக்கும் ஆச்சாரசீலர் தன் மாணவன் போன்ற ஒருவர் செய்த சிறிய தவறுக்கு ஒரு துண்டு சீட்டில் என்னை இனி பார்க்கவோ பேசவோ செய்யாதே என குறிப்பெழுதி அந்த மாணவரை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்.  அந்தப் பெரியவர் செய்ததில் அப்படி என்ன தவறிருக்கிறது. தன்  கோபத்தை மிக மென்மையான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார் என தோன்றலாம். 
     

ஆனால் முற்றிலுமான உதாசீனம் என்பது ஒருவருக்கு  இருப்பதிலேயே கடுமையான தண்டனையாக இருக்க முடியும். எதிராளிக்கு தன் பக்கத்தை விளக்க எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்காத முறை இது. நீ குற்றமிழைத்தவன் மன்னிக்கப்படும் தகுதியற்றவன். தன்டிப்பதன்மூலம்கூட சரிசெய்யமுடியாத தவறிழைத்தவன் என கூறும் ஒருதலைப்பட்சமான மறுபரிசீலனைக்கு உட்படுத்தமுடியாத தீர்ப்பு. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த தண்டனையை ஒருவனுக்கு அளிப்பவர்கள் அவன் வாழ்க்கையின் தவிர்க்க விரும்பாத  அவன் மிகவும் மதிக்கும் நபர் அல்லது நேசம் வைத்த நபராக இருக்கும். உயிரை அறுக்கும் வேதனை அளிக்கும் தண்டனை இது. 


  கணவன் மனைவி உறவில் ஒருவருக்கொருவர் அவ்வப்போது அளித்துக்கொள்ளும் தண்டனையிது. பின்னர் ஒருவாறு சமாதானமாகி கோபித்துக்கொண்டவரே இறங்கிவரவேண்டும். இதுவே நீண்டுகொண்டே போகும் சமயத்தில் இருக்கும் காதலை வற்றவைத்து நிரந்தரபிரிவுக்கு காரணமாக ஆகிவிடுகிறது.  ஒருவருக்கொருவர் திட்டி சண்டையிட்டுக்கொளவதைவிட, அடித்து சண்டை இட்டுக்கொள்வதைவிட ஒருவருக்கொருவர் உதாசீனம் செய்து கொள்வது மிக அபாயகரமானது என்று சொல்லலாம். 

   தன் இணை தன்னை உதாசீனம் செய்வதை எத்தகைய மனத்திண்மை கொண்ட ஒருவராலும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு வகையில் அவன் துணை முடிந்தால் என்னை சமாதானம் செய்ய முயன்றுபார் என விடுக்கும் சவால். ஒரு ஆணுக்கு அவன் ஆண்மையையும், ஒரு பெண்ணுக்கு தன் பெண்மையையும் அவமதிக்கும் செயல். இதில் ஊடல் மற்றும் சிறு சண்டைகளால், பிரியமும் உரிமையும் கொண்டு காட்டும் சிறு சிறு  உதாசீனங்களைப்பற்றி பேசவில்லை.   அவை உதாசீனங்களே இல்லை. நான் சொல்வது  வெறுப்போடு காட்டும் உதாசீனத்தை. அத்தகைய உதாசீனம் ஒருவர் இல்லறத்தில் அனுபவிக்க நேர்ந்தால் அது அவர் வாழ்நாளில் அடையும் பெருந் துயரங்களில் ஒன்றாக அமையும்.

       கர்ணனை அவன் மனைவி விருஷாலி உதாசீனம் செய்வதை அதனால்  கர்ணன் அடையும் மன வலியை நன்கு படம் பிடித்துக்க் காட்டுகிறது இன்றைய வெண்முரசு.  அவள் கருவுற்றிருப்பதை ஒரு சேடிப்பெண் சொல்லி அவன் அறிந்துகொள்ள வேண்டியிருப்பது எத்தகைய அவமதிப்பு அவனுக்கு, அதுவும் எந்தக் காரணமுமின்றி.  பதிலுக்கு விருஷாலினி என்ன எதிர்பார்க்கிறாள்? அவள் மேல் அவனுடைய உதாசீனத்தையா? அதன் மூலம் தன் வெறுப்பை நியாயப்படுத்திக்கொள்ள நினைக்கிறாளா?  எல்லோருக்கும் எல்லாமும் கொடுக்கும் கர்ணன் அனைத்திலும் காண்பது இழப்பு ஒன்றே என இருப்பதுதான் இறைவன் வகுத்த விதி போலும்.

       மனதின் உணர்ச்சிகளை உடலில் வெளிப்படுத்திக்கொள்வது இயல்பாகும். ஒருவன் கோபத்தில் இருந்தால் கையை சுவறில் அறைந்து தனக்கு வலி ஏற்படுத்திக்கொள்கிறான். துயரத்தில் உணவு உண்ணாமல் பசியுடன் இருக்கிறான்.  இங்கு கர்ணன் தன் மன இறுக்கத்தின் காரணமாக வசதியான இருக்கையை தவிர்த்து சிறிய இருக்கையில் அமர்கிறான்.   கர்ணனின் மன வலிமுழுதும் வெளிப்படுத்தும் உட்ல்மொழிதான் அவன் வசதியற்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பது.   இந்த  தருணத்தை தேர்ந்தெடுத்து அற்புதமாக ஷண்முகவேல் வரைந்திருக்கிறார்.  கர்ணனின்  காத்திருப்பு,   அவன் தனிமை,  எல்லாம் வெளிப்படும்வண்ணம் ஓவியம் அமைந்திருக்கிறது.  ஆசான் விருஷாலி பாத்திரத்தின் மூலம்  புதிய உளச்சிக்கல் ஒன்றை நமக்கு கற்பிக்க தொடங்கியிருக்கிறார் என நினக்கிறேன்.

தண்டபாணி துரைவேல்

பீஷ்மரும் கர்ணனும்

:


இன்று கர்ணனின் மணத்திற்கு தடை போடும் பீஷ்மர் அவனை வெறுக்கிறாரா? நிச்சயம் இல்லை. பானுமதி தன் முடிவைத் தெரிவித்தவுடன் அவளை நோக்காமல், “இரு இல்லமகள்களும் உளம் ஒத்துச் செல்ல வேண்டும்” என்று கூறுமிடத்தில் வாழ்வின் அபத்தங்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்து, தன் பெயரனுக்கு நேரச் சாத்தியமான ஒரு துயரில் இருந்து மீட்க விழையும் ஒரு முது தாதையாகவே எழுகிறார்.

வெண்முரசு முழுவதும் வரும் விவரணங்களில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் மட்டும் ஒரே வகையான வர்ணனைகள் மீளும். ஏனெனில் இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம். இருவருமே ஓங்கி உலகளக்கும் உத்தமர்கள். ஒருவர் தன் அலைவுகளை எல்லாம் கடந்து விட்டவர். மற்றொருவர் இப்போது தான் அலைவுகளில் சிக்குண்டிருக்கிறார். அவர்கள் இருவரையும் காணும் யாவரும் வியப்பது அவர்களின் உயரத்தை. அதன் பிறகு உணர்வது அவர்களின் நடையின் வேகத்தை. பெரும்பாலும் இவர்களிடம் உரையாடும் அனைத்து கதாபாத்திரங்களும் இவையிரண்டையும் உணர்வதாகவே வெண்முரசு சொல்கிறது. ஆயினும் மிக நுட்பமான ஒரு வேறுபாட்டையும் அந்த விவரணைகளில் நிகழ்த்துகிறது.

பிரயாகையில் ஒரு இடம். வாரணவத எரியூட்டல் நிகழ்விற்குப் பிறகு முதல் முறையாக பீஷ்மர் அஸ்தினபுரிக்கு வருகிறார். அதை வெண்முரசு, “பீஷ்மர் நடந்தபோது அவரது தலை அரண்மனையின் உத்தரங்களை தொட்டுத்தொட்டுச்செல்வதுபோல விதுரருக்குத் தோன்றியது. நீளமான கால்களை இயல்பாக எடுத்துவைத்து பீஷ்மர் நடந்தாலும் உடன்செல்ல விதுரர் மூச்சிரைக்க ஓடவேண்டியிருந்தது.” என்று சொல்கிறது. அதே விதுரர் இன்று கர்ணனிடம் அவை நிகழ்வுகள் முடிந்து பேச வரும் நிகழ்வை வெண்முரசு, “அவனது நீண்ட காலடிகளை எட்டிப்பிடிக்க அவர் ஓடுவது ஓசையில் தெரிந்தது” என்கிறது. அவனிடமும் உரையாடும் முன் விதுரர் மூச்சிரைக்கிறார்.

பீஷ்மர் தனது அறக் குழப்பங்களில் நிலைத்த தன்மையை அடைந்து விட்டார். எனவே அவர் உள்ளத்தாலும் நிமிர்ந்து விட்டார். ஒவ்வொருவருக்கும் மூன்று வகை உயரங்கள் உண்டு. ஒன்று அவர்களின் உடல் தரும் உயரம். இரண்டாவது அவர்களின் ஆளுமை காரணமாக அவர்கள் தங்களுக்குள் உணர்ந்து கொள்ளும் உயரம். மூன்றாவது அவர்களின் ஆளுமையாக மற்றவர் உணர்ந்து அவர்கள் அளிக்கும் உயரம். இதில் அந்த இரண்டாவது உயரமே அவர்களின் உடல் மொழியையும், மூன்றாவது உயரத்தையும் தீர்மானிப்பது. (பெண்கள் உயர் குதிகால் காலணிகளை விரும்புவதற்கு இந்த இரண்டாவது உயரத்தை உயர்த்திக் கொள்ளவே. இந்தியாவில் சராசரிக்கும் அதிகமான உயரம் உள்ள பெண்கள் பெரும்பாலும் உயரமற்ற காலணிகளையே அணிவதும் இந்த இரண்டாவது உயரத்தைக் குறைத்துக் கொள்ளவே.) அவ்வகையில் பீஷ்மரின் உடல் அளிக்கும் உயரமும், உள்ளம் அளிக்கும் உயரமும் ஒன்றே. எனவே அரண்மனை உத்தரங்கள் அவர் தலையைத் தொட்டுத் தொட்டுச் செல்வதாக வெண்முரசு சொல்கிறது.

ஆனால் கர்ணன் தன் உள்ளத்தில் உணரும் உயரம் இன்னும் உடல் தரும் உயரத்தை நெருங்கவில்லை. அவன் இன்னும் அலைகழிப்புகளில் உழல்பவனாகவே இருக்கிறான். எனவே ‘அவன் தலையை அறைவது போல் எழுந்தெழுந்து வந்து கொண்டிருந்தன சம்பாபுரியின் தொல் மாளிகையின் உத்தரக்கட்டைகள்’ என்று அதே உத்தரக்கட்டைகள் அவனை அறைவதாகச் சொல்கிறது வெண்முரசு. மேலும் அவன் அந்த அரண்மனை எங்கிலும் குனிந்தே இருக்கிறான் என்றும், தனியறையில் மட்டுமே நிமிர்ந்திருக்கிறான் என்றும் சொல்கிறது. தன்னை மொத்தமாக உணர்ந்து திரட்டிக் கொள்ளும் போது அவன் எங்கும் நிமிர்வான். சந்தேகமேயில்லை ஒவ்வொரு சொல்லிலும் வெண்முரசு காவியம் தான்!!!

Wednesday, December 30, 2015

வெண்முரசு சிறியநாவல்கள்



வெண்முரசு வரிசையில் இந்த சிறிய புத்தகங்கள் விழா அரங்கத்தில் இருந்தது. இவற்றைப் பற்றிய குறிப்பு தளத்தில் வந்ததா? ஒவ்வொரு புத்தகத்தை பற்றியும் சிறிய அறிமுகம் நமது தளத்திலும் பேஸ்புக் பக்கத்திலும் தரலாம்.

சிறிய புத்தகங்கள் புதிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும், பரிசளிப்பதற்கும் ஏற்றதாக இருக்கும். 

சுரேஷ் பாபு

அன்புள்ள சுரேஷ்பாபு,

வெண்முரசில் இருந்து  சில நண்பர்களால் தேர்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்ட சிறு நூல்கள் இவை. தனியான நாவல் வடிவம் கொண்டவை. அம்பையின் கதை எரிமலர். செம்மணிக்கவசம் கர்ணன். புல்லின்தழல் துரோணர். இன்னொன்று கார்த்தவீரியன் பரசுராமன் கதை. 

சிறிய தனிநாவலளாக இவை பொதுவாசகர்கள் வெண்முரசுக்குள் வர உதவியானவை. அதிகம்போனால் 150 ரூ விலையிள்ளவை. வெண்முரசின் அடர்த்தியான உட்சிக்கல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன

ஜெ

'இறைவிருப்பம்'




http://venmurasu.in/2015/12/27

முன்னர் ஓர் முறையும், சரியாக 12 நாட்கள் முன்னும் 'இறைவிருப்பம்' என்ற இந்த பதிப்பை படித்தேன்.

இன்றைய வென்முரசை படித்த பொது என் எண்ணம் மீண்டும் மீண்டும் இந்த பதிவுக்கு செல்கிறது.
மேற்கொண்டு இந்த இறைவிருப்பம் பதிவில் நம் எழுத்தாளருடன் வரும் உரையாடல்கள் மிக ஆழ்ந்த உரையாடல்கள்.


நன்றி
வெ. ராகவ்

சிரித்து அழ வைப்பவன்-வெய்யோன்-8



சிரிப்பும் அழுகையும் மனிதனை மனிதனோடு இணைக்கிறது அல்லது மனிதனை மனிதனாக்குகிறது. அதே சிரிப்பும் அழுகையம் மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கிறது அல்லது மனிதனை மனிதனல்லாமலும் ஆக்குகிறது.

எப்போது சிரிப்பது? எப்போது அழுவது? என்பதுதான் மனிதன் படிக்கவேண்டியப் பாடம். சிரிக்க ஒரு கணம் கிடைக்குமா? என்று ஏங்கும் மனிதனிடம் வாழ்க்கை அழவொரு கணத்தை உருவாக்கும் என்றால் மனிதன் வாங்கிவந்த வரமெல்லாம் சாபமாகிவிடும்.

வரங்களை சாபங்களாக்கிவிட  படைத்தவன் யுத்தம் நடத்தினால் யுத்தத்தை யாருடன் செய்வது? படைத்தன்  இடம் அல்ல தன்னுடன்.  படைத்தவனை வெல்ல அதைவிட பெருவழி இல்லை. யுத்தம் செய்யாமல் யுத்தம் செய்யும் வழி அது. அது வலிதாங்க வழிச்சொல்லும். நகைபூக்க நலம் செய்யும். தன்னை வென்றவன் என்று தெய்வம் புன்னகைக்கும்.  

இடுக்கன் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அஃதொப்ப தில்-திருக்குறள். 

சூதர் தெருவில்தான் தான் இருப்பேன் என்று சொன்ன ராதை கர்ணனை வீட்டுக்குள் வைத்து அடிக்கிறாள். சூதன் மகளைத்தான் மணம்முடிக்கவேண்டும் என்று சொன்ன அதிரதன் ஊர் அறிய வைத்து அடிக்கிறான். இருவரும் கர்ணனை அடிக்கும் விதம்மாறியதே தவிர அடித்த இடம்மாறவில்லை. இதயத்தைக்கிள்ளி இதயத்திற்கே படையல் வைக்கும் வன்மையும் அன்பும். 

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்-என்று சொன்ன கவிஞர் கண்ணதாசன்.
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்- என்பார். வெண்முரசில் கர்ணன்படும்பாட்டை அன்றே அறிந்து பாட்டாக பாடிவிட்டாரோ?

கர்ணன் தான் கேட்கும் கதைகளில் சூதன் சொல்வழியாக மனிதர்களின் எல்லை ஐயம் அச்சம் என்பதை அறிகின்றான். அந்த சொற்கள் இங்கு பொருளாவதை தெளிகின்றான். ஐயமும் அச்சமும் கொண்ட பெற்றவர்களின் எல்லை கர்ணன் எல்லையை சுருக்கிவிடுகிறது. தோற்றுவிட செய்கிறது. தோற்பவன் அழும்போது தோற்றது உரிதிப்படுத்தப்படுகிறது. கர்ணன் தோற்பதில்லை என்று தன்னை தொகுத்துக்கொண்டு உள்ளதால் தோல்வியை தோல்வியுற சிரிக்கிறான். 

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் 

 இளம்குதிரைக்கு முதல்சேனம் பூட்டும் சடங்கில் அதிரதன் வெல்கின்றான், ஆனால் இளம்குதிரையின் வலியை அவன் அறிந்திருக்க வாப்பில்லை. ராதை அறிந்து கண்ணீர்விடுகின்றாள். இங்கு வலியில் துடித்து கண்ணீர்விடவேண்டிய இளம்குதிரை சிரிக்கிறது. கண்ணீர் மூலம் ராதையும்,  சிரிப்பின் மூலம் கர்ணனும் இன்னும் பிணைந்துவிடுகிறார்கள்.

சிரிப்பும் அழுகையும் மனிதனை மனிதனோடு இணைக்கிறது அல்லது மனிதனை மனிதனாக்குகிறது.

சிலர் சிரிக்கும் கணத்தில் அழவைத்துவிடுவார்கள். இங்கு கர்ணனின் சிரிப்புதான் அழுகையை வரவழைக்கிறது. கர்ணனைப்படைத்தவன் தோற்றுப்போகும் இடம்.

தன் அழகுக்கு நிகரான அழகுடைய அல்லது தனது வீரத்திற்கு நிகரான குலமுடைய ஒரு பெண்ணை மணக்கமுடியாமல் தவிக்கும் கர்ணன். நின்றும் நடந்தும் கிடந்தும் திருமணம் செய்துக்காண்டு இருக்கும் கண்ணனுக்கு தனது தாய் கன்னியாகி காதலியாகட்டும் என்ற இடத்தில் கண்ணனின் விரிவில் வியக்கிறான் கர்ணன். எல்லோரையும் அசைக்கும் கண்ணன் கர்ணனை இப்படி ஒரு அசைப்பு அசைப்பது அற்புதம். இல்லாமையை இருப்பதில் வைத்துதானே அளந்தரிய முடியும்.

கர்ணன் கர்ணன் என்று மனம் அவன் படும் பாட்டுக்கு வருந்தினாலும், அவன் துன்பத்தையே மீள மீள மீட்டிச்சுகம் கண்டாலும் தாயாய் ராதையின் சொல் அற்புதம்.

//ஆண்மகனாக அஸ்தினபுரியின் அவையில் எழுந்து நின்று என் தந்தை எனக்கிட்ட ஆணையே முதன்மையானது என்று சொல். அஸ்தினபுரியின் முடிசூடிய மாமன்னனும் தொல்குடியினர் அமைந்த அவையும் அரசனின் குலமகளும் சொல்லும் சொல்லைவிட உன் தந்தையின் சொல் உனக்கு பெரிதென்றால் அது உனக்கு பெருமையே அளிக்கும். தயங்கி சிறுமை கொள்வதைவிட துணிந்து பெருமை கொள்வதே வீரனுக்கு உகந்ததென்றுணர்” என்றாள்.//

அன்னைகள் யாராக இருந்தாலும் மகனை தந்தைச்சொல் கேட்கும் கோசலை ராமனாக்கவே முயல்கிறார்கள். அது ஒரு அற்புதம். ராமனை அள்ளி வளர்த்த கைகேயியால் அது முடியாமல்போனது விதி. 

பெண்களின் தலைவிதி. மகனுக்காக கணவனையோ அல்லது கணவனுக்காக மகனையோ தலைவெட்டும் வாளேந்திய காளியாக படைத்த விசும்பின் துளி எது?  

நன்றி
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்

அங்கிக்குள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7 - 8)



சிலர் எப்போது ஒரே மாதிரியான உடை அணிவார்கள்.  எனக்கு தெரிந்த ஒருவர் எப்போதும் வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் அனிவார். அதைத்தவிர அவர் வேறு ஆடை அணிந்து நான் பார்த்ததே இல்லை. அவர் பணி ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் கழித்து அவரை மீண்டும் பார்த்தேன். அப்போது காலை நடைப்பயிற்சியில் இருந்தார். அப்போதும் அவர் அதே உடையில்தான் இருந்தார். இதைப்போல் தன் உடையமைப்பை தன் அடையாளமாகக் கொண்ட  அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் துறவிகளைக்கூட கண்டிருக்கிறோம். அவர்கள் அதை சமூகத்திற்கான தன் அடையாளமாக அதை கைக்கொண்டிருக்கிறார்கள்.
  

அவ்வாறே மனிதர்கள் அங்கியைப்போல ஒரு ஆளுமையை கைக்கொண்டு அதை தன் அடையாளமாக வெளியில் காட்டுகிறார்கள்.  ஒருவர் தன்னை சகஜமாக பழகுபவராக, நகைச்சுவையாளராக,  எளிதில் நட்பு பாராட்டுபவராக,  எதைப்பற்றியும் கவலைப்படாதவராக, உலக விவரம் தெரியாதவராக, அதிகம் பேசாதவராக,  கூச்சசுபாவம் கொண்டவராக, சிடுமூஞ்சியாக, கோபக்காரராக, அறக்கோபத்தோடு சமூகத்தை சதா விமர்சிப்பவராக, காரியமே கண்ணாயிருப்பவராக என பல்வேறு ஆளுமை அங்கிகளை அணிந்தபடி சமூகத்தில தன்னை
வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.   ஆனால் அப்படி ஒருவர் வெளிக்காட்டும் ஆளுமையை மட்டும் வைத்து நாம் தவறான
முடிவுக்கு வந்து விடக்கூடாது. உறுதியான நபர் எனத் தோற்றமளிக்கும் ஒருவர் பலவித குழப்பங்கள் கொண்டவராக இருக்க நேரிடும். ஒரு நகைச்சுவையாளர் ஒரு சிறிய கிண்டலுக்கு  கோபித்துக்கொள்பவராக இருப்பார். யாரும் என்னை புகழ வேண்டியதில்லை என அறிவிக்கும்
ஒருவர் உள்ளத்தின் அடியாழத்தில்  யாராவது புகழமாட்டார்களா என்ற தனியாத வேட்கை இருக்கலாம்.
   

அதிரதன் ஒரு எளிய மனிதர், மற்றவர்   கைப்பாவை, மனைவியின் சொல்லுக்கு அடங்கியவர், தேரோட்டுதல் குதிரைகள் பராமரிப்பைத்தவிர வேறெதிலும் ஆவலற்றவர்  என்ற ஓர் ஆளுமை  அங்கியை  அணிந்திருக்கிறார்.  ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தில் தானாக சிந்தித்து ஒரு உறுதியான முடிவெடுப்பவராகவும் அந்த உறுதியை யார் வற்புறுத்தலுக்கும் விட்டுக்கொடுக்காதவராகவும் இருக்கும் அதிரதர் நமக்கு புதியவராக தெரிகிறார். இந்த அதிரதர்தான் உண்மையான அதிரதர். இதை அவர் மனைவி ராதைக்கு தெரிந்திருக்கிறது.  அதிரதரும் ராதையும் இப்படி ஆடைகளற்ற ஒருவரையொருவர் அறிந்திருக்கின்றனர். அதனால்தான் ராதைக்கு அதிரதர் தன் சொல்லுக்கு கட்டுப்படும் எல்லை தெரிந்திருக்கிறது. அந்த எல்லை மீறாமல் அவள் நின்றுகொள்கிறாள்.  
“ஒவ்வொரு சொல்லுக்கும் மறுசொல் உரைத்தும் இளிவரல் நகை செய்தும் நான் அவரை எதிர்கொள்வதை இதுவரை கண்டிருப்பாய். ஆனால் என் நெஞ்சுக்குள் என்றும் கொழுநனின் கால்களை தலையில் சூடும் பத்தினியாகவே இருந்திருக்கிறேன். இது அவரது உயிர்வினா என்றறிவேன். இதற்கு என்னிடம் ஒரு விடையே உள்ளது. இவ்வுலகே அழியினும் சரி, என் கணவர் வெல்ல வேண்டும்” என்றாள் ராதை.

 

 அதிரதர் கர்ணன் திருமண விஷயத்தில் ஏன்  இந்த தீவிர நிலை எடுக்கிறார். என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அது வெறும் முரட்டுப்பிடிவாதமா? கர்ணனின் தந்தை என்பதால் அவர் அரசரின் தந்தை என்ற வகையில் செல்வந்தராக ஆகியிருக்கலாம். பெருவீரனை மகனாக பெற்றவர் என்ற புகழ் கிடைத்திருக்கலாம். ஆனால் கர்ணன் அவன் முதுகுக்கு பின்னால் சூத மகன் என இகழப்படும்போதெல்லாம் உண்மையில் அவமதிக்கப்படுபவர் அதிரதர் அல்லவா? அவர் அப்போது தான் பிறந்த குலத்தின் காரணமாக வெட்கப்படவேண்டியவராக ஆக்கப்படுகிறார். கர்ணனின் தந்தையாக இல்லாத காலத்தில் யாரும் அவரை இகழ்ந்திருக்க மாட்டார்கள். அவர் ஒரு சிறந்த தேரோட்டி, குதிரைவளர்ப்பின் நிபுணர் என்ற  பெருமையுடன் வாழ்ந்திருப்பார். ஆனால் இப்போது கர்ணன் மேல் எய்தப்படும் இகழ்ச்சி அம்புகளால் அடிபடுபவர்களாக அவரும் ராதையும் இருக்கின்றனர்.
    

கர்ணன் ஷத்திரியப் பெண்ணை மணந்தால் அவள் மூலமும் அவர்கள் அந்த அவமானத்தை அடைய வேண்டியிருக்கும். கர்ணனின் பிள்ளைகள் அடையப்போகும் இகழ்ச்சிகளுக்கான பழி இவர்கள் மீதே விடியும் என்று அதிரதர் நினத்திருப்பார். அவரின் கவலை இயல்பானது. கர்ணன் ஒரு சூதப் பெண்ணை மணந்துகொண்டு பெறும் பிள்ளைகள்மட்டுமே வாரிசு என சொல்லிக்கொள்ளமுடியும். கர்ணனுக்கு ஷத்திரிய மனைவிமூலம் பிறக்கப்போகும்
பிள்ளைகளுக்கு இவருக்கு எந்த உரிமையும் இருக்காது என அவர் எண்ணியிருப்பார். ராதையும் கர்ணனிடம் அதையே சொல்கிறாள்.
ராதை “அவர் சொல்வதில் ஓர் உண்மை உள்ளது. அவர் மைந்தனென்றே நீ எப்போதும் இருப்பாய். ஆனால் உன் மைந்தர்கள் அவருக்கு பெயரர்களாக எப்போதும் இருக்க மாட்டார்கள். ஒரு சூதப்பெண்ணுக்கு பிறக்கும் மைந்தனே என்றும் அவர் பேர் சொல்ல இப்புவியில் வாழ்வான்” என்றாள்.
    

அவர் அப்படி எண்ணினால் அது ஒன்றும் தவறில்லை. விதுரர் எப்படி தன் சூத தாயிடமிருந்து பிரித்து  வளர்க்கப்பட்டார் என்பதையும், அதனால் அந்தத் தாய் மனங்கலங்கியவராகவே தன்  வாழ்நாள் முழுதும் கழித்து மறைந்தார் எனவும் நாம் பார்த்திருக்கிறோம். ஆக அதிரதர் சிந்திப்பது அவர் வகையில் சரியாகவும் நியாயமாகவும் தோன்றுகிறது. இந்த ஷத்திரியர் உலகில் கர்ணன் புகாமல் வெறும் தேரோட்டியாகவே இருந்திருப்பதையே அவர் உள்ளம் விரும்பியிருக்கும். அவர் நினைப்பது சரிதான் என கர்ணன் அடையும் அவமதிப்புகள், தோல்விகள், துயரங்கள் நமக்கு சொல்லிவருகின்றன. அதிரதன் ராதை காணூம் இம்முடிவை பார்க்கும்போது  நூறு நாற்காலிகள் கதைநாயகனின் தாய் என் நினைவில்வந்து  என் கண்கள் கலங்குகின்றன.

தண்டபாணி துரைவேல்

விதுரர் என்னும் பேரமைச்சர்:



கர்ணன் தன் மண நிகழ்வின் முடிவை அறிவிக்கும் அத்தியாயத்தின்  (வெய்யோன் 9) நாயகர் எனத் தாராளமாக விதுரரைச் சொல்லலாம். ஒருவகையில் அவன் குழப்பங்களை மிக எளிதாகத் தீர்த்து வைப்பவர் என்றும் கூறலாம். கர்ணனின் முடிவு அவையில் ஏற்படுத்தும் கொந்தளிப்புகளை அவரும் பானுமதியுமே திறமையாகச் சமாளிக்கிறார்கள். இறுதியாக அவர் கர்ணனிடம் பேசுமிடம் அவரைச் சிறந்த மதியூகியாகவும், பேரமைச்சராகவும் காட்டுகிறது. அவர் கர்ணனிடம் பேரறத்தால் அலைவுறுகிறான் என்கிறார். ஆனால் ஒரு அரசனாக அவன் குல அறத்தில் இருந்து கோல் அறம் வரை காணும் எட்டடி பார்வை அவனுக்குப் போதும் என்கிறார். பேரறம் என்பதை ஞானியருக்கும் யோகியருக்கும் விட்டுவிட்டு அரசனாக, நிலையானவனாக அங்க மண்ணிற்கு உகந்தவற்றைச் செய்ய வேண்டும் என்கிறார்.

இந்தச் சொற்களை அவர் அமைச்சராக மட்டும் சொல்லியிருந்தால் கர்ணனின் உள்ளத்திற்கு இவ்வரிகள் சென்று சேர்ந்திருக்காது. சொல்லியவர் விதுரர் என்பதால் மட்டுமல்ல, அவரும் ஒரு சூத புத்திரர் என்பதாலும், அவரின் இருப்பும் திருதா என்னும் வேழத்தினால் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாலும் அவர் விழிகளை நோக்கும் கர்ணனுக்கு அங்கு கிடைக்கும் ஆதூரமான அரவணைப்பு, அந்த அன்பு, அந்த உள்ளார்ந்த பாசம், கிட்டத்தட்ட தான் வாழும் வாழ்வை தனக்கு முன்பே வாழ்ந்து முடித்த அனுபவம் வாய்ந்த தந்தைமை தரும் அறிவுரை என அனைத்தும் தான் அவனை விழித்தெழச் செய்கிறது. கணவனாகத் தூங்கியவன் அரசனாக எழுகிறான். அவைக்குச் செல்கிறான்.

மீண்டும் விதுரர் கர்ணன் பால் தான் கொண்ட பாசத்தை வெளிப்படுத்துகிறார். அதற்கு அவர் அவனில் தன்னையும் கண்டது மட்டும் தான் காரணமா? அது மட்டும் அன்று, அவன் குந்தியின் புத்திரனும் கூடத் தானே! அவர் அவனிடம் கூறும் இறுதிச் சொற்களைப் பாருங்கள், “பெருங்கருணையால் நோயுற்றிருக்கிறீர்கள் நீங்கள். ஊழ் உங்களை வீழ்த்தியிருக்கலாம். அதன் மறுகையில் உள்ளதென்ன என்று நாமறியோம். விண்ணளவு தூக்குவதற்காக இவ்வீழ்ச்சியை அது நிகழ்த்தியிருக்கலாம். நீங்கள் உதிர்ந்த மரத்தின் முறிகாம்பு பாலூறிக் கொண்டிருக்கலாம்”. அங்கும் கூட பாலூறிய முறிகாம்பினை அவர் நினைவு கூறுகிறார். விண்ணளவு தூக்குவதற்காக இவ்வீழ்ச்சியை நிகழ்த்தியிருக்கலாம் என்னும் போது அவர் ஒரு தந்தையாகவே இருக்கிறார். இறுதியாக ‘இதற்கப்பால் ஒரு சொல்லும் எடுக்கலாகாது என்றே என் உதடுகளுக்கு சொல்லிக் கொள்கிறேன்’, என்று சொல்லும் போது மீண்டும் அவருள் ஊறித் திளைத்து, அவரின் ஆளுமையின் பாகமாகவே மாறிப்போன பேரமைச்சர் எழுந்து வருகிறார். ஏனென்றால் சொல்லும் சொல்லை வெல்லும் பிறிதோர் சொல் இல்லாமலே பேசுபவர் அல்லவா!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.

Tuesday, December 29, 2015

பிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (வெய்யொன் -4)



      எனக்கு மூக்கு பெரிதாக இருக்கிறது என்பதால் நான் மற்றவரை விட உயர்தவன் என நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அந்த அளவுக்கு முட்டாள் தனம் வேறெந்த காரணத்திற்காகவும் தன்னை மற்றவரை விட உயர்ந்தவன் என நினைப்பது. ஒருவன் மற்றவரை விட ஏதாவது ஒரு திறமையில் அதிக தேர்ச்சியுடன் இருக்கலாம். அதற்கு  அவன் மட்டும்தான் காரணம் என அவன் நினைத்துக் கொள்வது வெற்று அகங்காரம்.  அவனுடைய சூழல், வளர்ப்பு, மற்றவர்களின் உதவி, இயற்கை, காலம் என பல கூறுகளின் உதவியோடு தான் ஒருவன் ஒரு திறமையை அடைகிறான்.


     ஆக தன் திறமையின் காரணமாகக் கூட ஒருவன் தன்னை மற்றவரை விட உயர்வாக கருதுதல்  முட்டாள்தனம் எனும்போது, வெறும் பிறப்பின் காரணமாகமட்டும் ஒருவன் மற்றவனைக் காட்டிலும் உயர்ந்தவன் எனக் கருதுவது  மிகக் கேவலமானது. தன்னுடைய கீழ்மையை வெட்கும் அவன்  மனம் இப்படி தன்னை செயற்கையாக உயர்த்திக்கொள்வது ஒருவித உளச்சிக்கல் மட்டுமே. ஆனாலும் இப்படிப்பட்ட மனதினோடு கூடிய பலரை சமூகத்தில் பார்க்கிறோம். தன் வாழ்வில் திருப்தியும் மனச் சாந்தியும் இல்லாததால்தான் ஒருவன் இப்படி தன்னை கருதிக்கொள்கிறான்.


   தான் மட்டும் இப்படி இல்லாமல் ஒரு கூட்டமாக இப்படி மக்களுக்
கிடையில் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வாழ்வது  மனிதர்களுக்கு எளிதாகவும் எதிர்ப்பை சமாளிக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக மனிதர்கள், தங்களை மதம், சாதி, இனம், தொழில், என்ற வகையில் தன்னை ஒரு உயர்ந்த  பிரிவாகவும் மற்றவரை தாழ்வாகவும் 
கற்பித்துக்கொள்கின்றனர். பின்னர் அந்த தாழ்த்தப்பட்ட பிரிவினரை தம்மைவிட எந்தவகையிலும் பொருளாதாரத்தில், திறன்களில், பதவியில், அதிகாரத்தில் முன்னேறவிடாமல் முடிந்தவரை தடுக்கப்பார்க்கின்றனர். அப்படியும் அவர்களை மீறி எவனாவது வளர்ந்துவிட்டால் அவன் மேல் வஞ்சமும், பொறாமையும் கொண்டு பொதுவெளியில் ஒன்று கூடி அவனை அவதூறு கற்பித்து தூற்றுகின்றனர். அவனை அற்ப காரணங்களை சொல்லி எள்ளி நகையாடுகிறார்கள். எப்போது அவன் சிறிது சறுக்குவான் எனப் பார்த்துக்கொண்டிருந்து அச்சமயத்தில் அவன்மேல் பாய்ந்து குதறி கிழித்துப்போட வெறியுடன் காத்திருக்கிறார்கள். தன் இனத்தைச் சார்ந்தவனுக்கும் அவனுக்கும் ஏதாவது பிரச்சினை என வரும்போது எவ்வித அறத்தையும் மனதில் கொள்ளாமல் தன் இனத்தைச்சாந்தவனுக்கு ஆதரவளிக்கின்றனர். தன் இனத்தவன் குற்றத்தை சாதுரியமாக மறைத்துக்கொள்கின்றனர். ஆனால் தான் தாழ்த்தும் ஒருவனின் குற்றத்தை நிரூபிக்க அவன் அந்த பிரிவைச் சார்ந்தவன்  என்பதே போதும் வேறு எவ்வித சான்றும் தேவையில்லை என்ற நிலையை எடுக்கின்றனர்.  இப்படிக் கூட்டாக  இந்த இழிச்செயலை செய்வது மனித இனத்தில்மட்டுமே நடக்கிறது.


  ஒரு சமூகமாக மனிதர்களின் இந்தக் குணம் கெட்ட வாடையாக வீசிக்கொண்டிருக்கிறது.  அறிந்தே இதை இக்காலத்திலும் பின்பற்றும் அநீதியாளர்களை, அற்பர்களை, அகம்பாவிகளை நான் புறங்கையால் தள்ளிவிடுகிறேன்.  நான் ஒருவனை என்னைவிட கீழானவன் எனக் கருதுகிறேன் என்றால் இப்படி பிறப்பின் காரணமாக சிலரை கீழாக நினைப்பவனை மட்டுமே. அவர்களிடமிருந்து முற்றிலுமாக  என்னை நான் விலக்கிக்கொள்ளவே விழைகிறேன். அவர்களின் கூட்டோ நட்போ தொடர்போ எனக்கு வேண்டாம் என இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்.

    நம்மிடமும் இது இருக்கலாம். ஏனென்றால் இந்த சேற்றில் பிறந்து வளர்ந்தவர்கள்தாம் நாம். பொதுவாக நான் இப்படி இல்லை என தன்னை நினைத்துக்கொள்வோம்.  ஆனால் நம்மை அறியாமல் இது நம்மிடம் இருக்கலாம்.  இதை எப்படி அறிவது? நாம் வெறுக்கும், புறக்கணிக்கும் அல்லது விமர்சிக்கும் மனிதர்களை மறூபரிசீலனை செய்யவேண்டும். அவர்கள் வேறு குழுவை சார்ந்தவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே அப்படி செய்கிறோமா? இதைப்போன்ற செயல் செய்யும் நம் குலத்தைச்சார்ந்தவரை இந்தளவுக்கு விமர்சிக்கிறோமா எனப் பார்க்கவேண்டும்.  நம் குலத்தவரின் குற்றத்தை நம்புவதற்கு எந்த அளவுக்கு தயக்கம் காட்டுகிறோம் என்பதையும், மற்றவரின் குற்றம் செய்தார் என்ற செய்தியை எவ்வளவு எளிதாக நம்புகிறோம் என்பதையும் கவனித்துப்பார்க்கவேண்டும். நம் மனதின் ஆழத்தில் ஊடுருவி  இருக்கும் இந்த கொடிய குணத்தை கவனமாக வேருடன் பிடுங்கி எறியவேண்டும்.

    நாங்கள் பிறாரல் தாழ்த்தப்பட்டவர் எனக் கருதப்படுகிறோமா என ஆய்வதற்கு முன் நாம் வேறு பிரிவினரை அப்படி கருதுகிறோமா என கவனிக்க வேண்டும். இன்னமும் ஏதாவது காலாவதியான மத , சமூக விதிகளை காரணம் காட்டிக்கொண்டிருக்காமல் அவற்றை புறந்தள்ளி நம்மை சுத்தப்படுத்திக்கொள்ளாத சமூகம் அழுகி நாறிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அதை சுகந்தம் என்று சொல்லிவரும் ஏமாற்றுக்காரர்களை நான் சமூக அயோக்கியர்கள் என்றே கருதுகிறேன்.

    இன்று கர்ணனை பிறப்பின் காரணமாக அவன் நாட்டு மக்களே தூற்றுவது வெண்முரசில் சொல்லப்பட்டது. இதைக்கேட்டு சூதன்கொள்ளும் அறச்சீற்றத்தில் அவன் தெய்வம் என உயர்ந்து நிற்கிறான். அந்த அறக் கோபத்திற்கு முன் நாமும் தலைவணங்கி நம்மிடம் கொஞ்சமேனும் ஏதாவது ஒரு உருவில் அச்சிறுமை இருக்குமானால் களைந்து  நம்மை சுத்தப்படுத்திக்கொள்வோமாக.

        முடிவற்றவை அனைத்தையும் தங்கள் சிறுவிரல்களால் மட்டுமே எண்ணி எண்ணி அளக்க வேண்டுமென்ற இழிவை இங்குள ஒவ்வொருவர் மேலும் சுமத்திய படைப்புத் தெய்வம் எது? மானுடரே, சிறியோரே, ஒவ்வொரு முறையும் நாம் ஏன் தோற்கிறோம்? ஒவ்வொரு முறையும் பெருந்திரளெனப் பொருளழிந்து நாம் ஏன் இழிவை சூடிக் கொள்கிறோம்?” என்றான் சூதன். அவன் குரல் மூதாதையர் உறங்கும் காட்டிலிருந்து எழுந்த தொல்தெய்வமொன்றின் குரலென அந்தத் தெருநடுவே ஒலித்தது. “தெய்வங்களே! மாறாச்சிறுமையை மானுடம் மீது சுமத்தினீர்கள். அதைப்பார்க்கும் விழிகளை என் முகத்தில் அமைத்தீர்கள். கருணையற்றவர்கள் நீங்கள். சற்றும் கருணையற்றவர்கள்.”     வெய்யொன் -4

தண்டபாணி துரைவேல்

விடுபடல்கள்




அன்புள்ள திரு.ஜெயமோகன்,

எழுத்தில் பேராண்மை கொண்டவர்களுள் நீங்களும்  ஒருவர். வெண்முரசு அதற்குச்  சான்று. வேகத்திலும், பாதையிலும், சொல்லாட்சியிலும் பல படிகள் உயர்ந்து  நிற்பது கண்கூடு. பாரதம் எழுதிப் பின் இராமாயணமும்  தங்கள் எழுத்துக்கள் மூலமாகப்  படிக்க விரும்புகிறேன்! 

எனக்குச் சில சந்தேகங்கள்.. 
1.காண்டவ வன  எரிப்பு மகாபாரதத்தில் முக்கியமான  இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக நாகங்களின் பழியுணர்ச்சிக்கு இதில் ஆரம்பம் கிடைக்கிறது. தக்ஷகனின் மனைவி கிருஷ்ணப்பிரானின் தூண்டுதலால் அருச்சுனனால் கொல்லப்படுவது தக்ஷகனின் தீராத கோபத்துக்குக் காரணமாகிறது. இவனே பரீக்ஷத் மகாராஜனைத் தீண்டுகிறான்.(சில இடங்களில் 'தக்ஷன்' மற்றும்' தக்ஷகனை' நீங்கள் ஒரே ஆளாகக் காட்டுகிறீர்கள். இருவரும் ஒருவர்தானா? ) அசுரன் மயனின் அருச்சுன அடைக்கலமும், இந்திரப்பிரஸ்த நகர் மயனால், துரியோதனன் அவமானப்படும்  அளவுக்கு, அமையும் விதமும் இப்பகுதியில் வருகின்றன. மிகச் சுருக்கமாக  காண்டவ  வன எரிப்பைக்  கூறி  விட்டீர்கள்.கிருஷ்ணர் நற்காட்சியைப் பெற்றதும் இந்தப் பகுதியில்தான். இவை எல்லாம் பிறகு சொல்லப்படுமா?

2.ஒரு பாணன் அஸ்தினானபுரத்தைக் காண விழைந்து  தென் தமிழ் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக  சில பகுதிகள் வந்தன. பிறகு அவனைக்  காண வில்லையே!

3.சகுனியின் திருமணம் அவர் மகன் உலூகன் பிறப்பு இனிமேல் தான்  வருமா?

4..மகாபாரதத்தை -வெண்முரசை ஒரு  உண்மையான வரலாற்றுக் காவியமாகவே எழுதி  வருகிறீர்கள்.கண்கூடாக ஆதாரங்கள் இருந்தாலும் கூட மகாபாரதத்தை ஒரு 'MYTH' அதாவது நடந்தே  இருக்க முடியாத ஒரு கற்பனைப் புராணக் கதை என்று கூறும் உள்நோக்கம் கொண்ட  பலருக்கு நல்ல பதிலாக தங்கள் காவிய அமைப்பு இருந்து வருகிறது.எனது மனம் கனிந்த நன்றிகள். ஆனால் வரலாறாகக்  காட்டும் போது  சில இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வுகளை நடந்தவையாக  எழுத  முடியாது என நினைக்கின்றீர்களோ  என (எனக்குத்) தோன்றுகிறது. தவறென்றால் மன்னிக்கவும். திரௌபதியின் சேலை  வளர்ந்தது  கூட மாய நிகழ்வுதான். மிக முக்கியமான இந்த நிகழ்வையும் சூதனின் கற்பனையாகச் சொல்லிச் சென்று  விடப்  போகிறீர்களோ என்று  அச்சமாக இருக்கிறது. நீலத்தில் ஸ்ரீகிருஷ்ண மாயலீலா  வினோதங்கள் மற்றொரு நினைவுத் தளத்தில் நடந்தன போன்ற மாயையை உருவாக்கியது உங்கள் எழுத்து வன்மை! வியாசர்பிரானுக்கு அருளிய  எல்லாம் வல்ல ஸ்ரீ  விநாயகப் பெருமானின்  ஆசி, இந்தக் காவியத்தை நற்புகழுடன் முடிக்க, தமிழ் கண்ட இந்த சிறந்த  எழுத்தாளனுக்குக் கிடைக்கட்டும்.

அன்புடன்,
இராஜேஷ்கண்ணன்.இராம.
 
அன்புள்ள ராஜேஷ்

பொதுவாக தீர்மானமகா வரையறுத்துவிட்டு மேலே எழுதுவதில்லை. ஆகவே வரும் என நினைக்கிறேன்
 
இதில்தான் ஃப்ளாஷ்பேக்குக்கு ஆயிரம் வழிகள் உள்ளன இல்லையா?
 
ஜெ

பிறப்பு




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.


கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்லிலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
கல்லாள் பிறக்குங் குடி-நாண்மணிக் கடிகை

யார் சொல்லமுடியும் யார் எங்கு பிறப்பார் என்று, ஏன் இங்கு இவர் பிறந்தார் என்று எவர் சொல்லமுடியும். பெரும் இழிவுக்குள்தான் பெரும்புகழோன் பிறப்பானா? அல்லது பெரும்புகழோன் பிறப்பாதல் பெரும் இழிவுகள் என்னென்ன என்பதை அறிகின்றோமா? கர்ணனின் அண்ணாந்துப்பார்த்தும் அறியமுடியாத உயரத்தையும், குனிந்துப்பார்த்தும் இறங்கமுடியாத அவன் ஆழத்தையும் வடித்த விதத்தில் வெய்யோன்-4 கர்ணனின் புதிய சித்திரத்தை என்றும் அழியாத சித்திரத்தை நிலை நிறுத்துகிறது. . கர்ணன் என்றால் இனி வெண்முரசு கர்ணன்தான்.

தன்கதையை எவரும் கண்களால் பார்ப்பது இல்லை நெஞ்சத்தாலேயே பார்க்கிறார்கள். இங்கிருந்தாலும் அவர்கள் எங்கோ தொலைவிலேயே இருக்கிறார்கள். அவர்களை தொலைவில் வைக்கும் தெய்வம் அவர்களின் வாழ்க்கையை இரண்டாகப்பிரித்துப்போட்டுவிடுகிறது அல்லது இரண்டாக பிரிந்துவிடும் வாழ்க்கை வழங்கப்பட்டவர்கள் இங்கிருந்தும் எங்கோ இருக்கிறார்கள். 

அள்ளிக்கொடுக்கிறோம் என்பதை அறியாமலே அள்ளிக்கொடுக்கும் கர்ணன், கொடுத்தும் நிறையாமல் நெஞ்சிலிட்ட ஆரத்தை சூதனுக்கு சூட்டும் இடத்தில் அவன் கொடைக்கென்ற பிறந்த கற்பகவிருட்சம் என்று காட்டிவிடுகின்றான். 

புனைதல் என்பது வேறு, இயல்பு என்பது வேறு. புனைதல் என்பது புகழுக்காகவே கவச்சியாக்கப்படும். இயல்பு இயல்பாகவே இருப்பதால் கவரவும் செய்யும் கவராமல்போகவும் செய்யும். ஆனால் இயல்பு கவர்ந்தாலும் கவராமல்போனாலும்  அகத்தை அசைத்துவிடுகிறது. கர்ணனின் கொடையும் இயல்பாகவே உள்ளது. அவன் கொடையை எதற்காகவும் புனையவில்லை. சூரியன் ஒளியோல அவன் கொடையும் இயல்பு. இயல்பு என்றதும் கர்ணனின் உண்மை உரைக்கும் செயலும் இயல்பாகவே உள்ளது.  தன்னை புகழும் சூதனிடன், தான் புகழில் இருக்கும் அவையில் சூதன்மகன் என்றே பரசுராமனிடம் தன்னை அறிமுகப்படுத்தியதாக சொல்லும் இடத்தில் எத்தனை பெரிய உண்மைக்கு சொந்தக்காரனாகி உயரத்திலும் உயர்ந்து நின்றுவிடுகிறான்.  இழிவையே புகழாகச்சூடும்தோளன் என்பதை நிறுபிக்கும் இடம்.

உண்மையாக வாழ்தல் என்பது எளிதான காரியமா என்ன?. உண்மை பேசுகின்றேன் என்று சொல்லலாம் ஆனால் பேசிய உண்மைப்படி வாழ்தல் என்பது தவம்.  ஆன்மாவை உண்மையில் நிறைப்பவன் இடத்தில்தான் சொல்லும் செயலும் உண்மையாக இருக்கும். உண்மை மனிதனை அவன் புனைவுகளைக்கழற்றி நடுவீதியில் நிர்வாணமாக நிற்க வைத்துவிடுகிறது. அந்த நிர்வாணத்தை ஊர்ப்பார்த்துவிடும் என்பது அல்ல பிரச்சனை தன்னால் தன்னைப்பார்க்க முடியாது என்பதுதான் பிரச்சனை. தன்னைத்தான் பார்த்துக்கொள்ள புனைந்துக்கொள்ள தோதாக இருக்கும் சொற்களில் உண்மைகள் இருந்தால் மனிதன் உண்மைகள் பேசுவான், தான் பேசும் உண்மைகள் தன்னையே தோலுரி்க்கும் என்றால் அவன் உண்மையை உரித்துவிடுவான். கொடை வள்ளல்களில்கூட முதல்ஏழு, இடைஏழு, கடையேழு என்று இருபத்தோர்பேர் இருக்கிறார்கள் உண்மைபேசுவர்களில் அரிசந்திரன் மட்டும்தான் இருக்கிறான் எனவே அரிச்சந்திரனைத்தொட துடிக்காத மானிடர் அகம் ஒன்று மண்ணில் உண்டா? கர்ணன் இன்று அரிச்சந்திரனை தொட்டுச்செல்கிறான். உண்மைபேச பேச தெரிந்தால் மட்டும்போதாது தன்னை வெல்லத்தெரிந்து இருக்கவேண்டும். தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன் என்பது  அதுதான். உண்மைபேசும்போது உலகுக்கு உண்மையை சொல்லவில்லை நம்மை நாமே வெற்றிக்கொள்கிறோம். தன்னோடு போர்த்தோடுத்து தன்னைக்கொன்றபின்பு தான் வாழ்தல் என்பது எளிதானதா? வாழ்வாங்கு வாழ்தலுக்கு உரியவர்கள் அவர்கள். 

கர்ணன் கொடையையும் உண்மை உரைக்கும் திறனையும் ஒரே இடத்தில் வைத்தவிதத்தில் காலைக்கதிரவனை பொற்கிண்ணத்தில் அள்ளுகின்றீர்கள் ஜெ.

அன்புள்ள ஜெ, இந்த திரௌபதி ஏன் இத்தனை பெரிய அரண்மனையைக்கட்டிக்கொண்டு இருக்கிறாள், இத்தனை பெரிய அரியனையில் அமர்ந்து இருக்கிறாள் என்று இன்று அறிந்தேன். யானையை கொல்லும் பெண்சிங்கம் யானையைவிட பெரியதுதான். 

ஆணவம் 
ஆணவம் 
எதிர் எதிரே வேண்டாத சிங்கப்பற்களாய் நீள்கிறது
சிரிக்கையில் அழகாகத்தான் இருக்கிறது 
கடிக்கும்போதும் 
கடிபடும்போதும் 
மனிதமுகம் அங்கு இருப்பதில்லை 

   
நன்றி
அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்

Monday, December 28, 2015

தசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)


    இயல்பாக ஒருவர் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு வண்டு கடித்துவிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வலியில் அவர் அதிர்ச்சியடைகிறார்.    அந்த வலி  இருக்கும் வரை அவரின் இயல்பான நடை மாறிவிடுகிறது.  இப்போது இந்த கோணலான நடைக்கு அந்த வண்டு கடி அல்லவா காரணம். பார்ப்பவர் யாருக்கும் அவர் பெற்ற வண்டுக்கடி தெரியாது. அவர் நடை மாறி விட்டது என்றுமட்டும் தெரியும். புதிதாய் பார்ப்பவர்களுக்கு அவர் விந்தி நடக்கும் அந்த நடையே அவருடைய இயல்பான நடை என எண்ணக்கூடும்.
     வண்டு கடிப்பதோடு மட்டுமல்லாமல் தசையை துளைத்து உட் செல்கிறது என்றால் அப்போது அதன் வலி மேலும் மேலும் கூடுகிறது. கடிபட்டவன் மனநிலையையும் மாற்றுகிறது. அவனுடைய சிந்தையின் பெரும்பகுதி அந்த வலியே ஆக்கிரமிக்கிறது.  தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்க அவனை தூண்டுகிறது.
    அதைப்போல  ஒரு பெரும்துயரம், ஏக்கம், ஆசை,  எதிர்பார்ப்பு, வஞ்சம், ஏமாற்றம்  அல்லது ஒரு கடும் கோபம் ஒரு விஷ வண்டென ஒருவர் மனதினுள் துளைத்து புகுந்துகொள்ளும்போது அவனுடைய இயல்பான மனம் மாறிவிடுகிறது. அப்போது அவன் மனம் கோணலாக சிந்திக்க ஆரம்பிக்கிறது. அப்போது அவன் மற்றவரை  தேவையின்றி காயப்படுத்தி இன்னலுக்குட்படுத்துகிறான். அறவழியிலிருந்து மாறி நடப்பதை சரியென சிந்திக்கிறான். தான் கொண்டிருந்த பெரிய ஆளுமையிலிருந்து சரிகிறான். வெண்முரசு காவியத்தில் எந்தந்த வண்டுகள் எவரவர் உள்ளத்தில் புகுந்து அவர்களை இம்சித்து அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களை மாற்றுகிறது என எண்ணிப்பார்க்கிறேன்,
  சாந்தனு -  கங்கையிடம் இழந்த காதலும் பிள்ளைகளும்
  பீஷ்மர் - காசி மகளிரைக் கடத்தல் போன்ற அவர் மனம் ஒப்பாத அறமற்ற அவரின் செய்கைகள்
  சத்தியவதி-  தன் சந்ததியை வாழவைக்கும் பேராவல்
  விசித்திர வீரியன் -  தீரா நோய்
  வியாசர் - விரும்பாப்  பெண்களை கூடியது 
  அம்பை - அவளின் முதற்காதலன் அவளை கைவிட்டது
  அம்பிகா, அம்பாலிகா -  தன் பிள்ளைகளின் உயர்ச்சி
  திருதராஷ்டிரன் - சிறுவயதில் பார்வையின்மை  பிறகு பிள்ளைப்பாசம்
  காந்தாரி - பிள்ளைப்பாசம்
  பாண்டு - தன் உடலின் பலஹீனம்
  குந்தி - அரசியல் எதிர்பார்ப்பு மற்றும் கர்ணனை கைவிடுதல்
  விதுரன் - குந்தியின் மீது கொண்ட காதல்
  சகுனி - அரசியல் எதிர்பார்ப்பு
  துரோணர் -  துருபதனின் அலட்சியம்
 துருபதன் - துரோணர் செய்த அவமானம்
  தருமன் -அறத்தின் வழிதான் நடத்தல் என்ற அவன் பிடிவாதம்
  பீமன்  -  துரியோதனின் நட்பு முறிவு
 அர்ஜுனன் - போதுமாக கிடைக்காத தாயன்பு
  துரியோதனன் - பீமன் அவனை மிஞ்சுவது
 துச்சாதனன் -  சகோதரப் பாசம்.
  திரௌபதி - பேரரசியாகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு
  கர்ணன் - கைவிட்ட தாய்,
 பரசுராமர் - தாயைக் கொல்லும் நிகழ்வு
  பலராமர் - எப்போதும் காணும் இரண்டாமிடம்
 கண்ணனின் மனைவியர் - கண்ணனுக்கு தானே முதன்மை என்ற நோக்கம்
கண்ணன் - பக்தர்களின் உள்ளத்தை துளைக்கும் ஒரு கருவண்டு இவன். மனமற்ற இவனை எந்தவண்டு துளைக்க முடியும்.
   (கதை வளர வளர இன்னும் புதிய வண்டுகள் தோன்றி பலருடைய மனங்களை துளைக்கலாம்.) 


கண்ணாடியின் எதிர்




அன்புள்ள ஜெ அவர்களுக்கு,



                     வணக்கம்,வெய்யோன் படிக்க படிக்க உங்கள் மொழி வெள்ளத்தில் அப்படியே அடித்து செல்லபடுகிறேன், சூதர்கள் கதை சொல்ல கர்ணன் கேட்பது,காண்டவம் தொடக்கத்தில் சூதர்களிடம் திரௌபதி கதை கேட்பதை ஞாபகபடுத்தியது.
 
       கர்ணன் ,அர்ஜுனனின்  கண்ணாடியின் எதிர் பிம்பமாய் தெரிகிறான்,காண்டீபத்தில் சாபம் வாங்கி பொன்வண்டாக வந்தான் சித்ரரதன்,இங்கே சாபம் பெற்று கருவண்டாக வருகிறான் தம்சன்,அங்கு கந்தர்வன்,இங்கு அரக்கன்,வலக்கையில் குருதியும், இடக்கையில் நெருப்புடன் வந்து சித்ரரதனுக்கு விடுதலை அளித்தான் அர்ஜுனன்,இங்கு வலத்தொடையில் அக்னி வடிவான பரசுராமர்,இடத்தொடையில் குருதி வழிய தம்சனின் விடுதலைக்கு வித்திடுகிறான் கர்ணன்.
 
        அங்கு அறியாதவற்றையும் காண்பாய் என்று அர்ஜுனன் வரம் பெற்றான்.இங்கு அறிந்தவற்றை மறப்பாய் என்று சாபம் கொண்டான் கர்ணன்.அர்ஜுனன் குளிர் மழை தெய்வத்தின் மகன்.கர்ணன் காயும் கதிரவனின் மைந்தன்,என்ன ஒரு முரண் இருவருக்கும்.
இப்படிக்கு,
குணசேகரன்.

தாழொலிக்கதவுகள் – 1



 “ஆம், ஆணவம் கொண்டவர், ஐயமே இல்லை… இம்மண்ணில் ஆணவம் என்று ஒன்று தான் வாழ உகந்த இடம் தேடி அலைந்து அவரை கண்டு கொண்டது. அவரன்றி ஆணவம் அமரும் அரியணை பிறிதேது உள்ளது இப்புவியில்?” 

எனக்கு நிகர் எவனுமில்லை என கொக்கரிப்பது ஒரு வகை ஆணவம் எனில், உருவால்,சொல்லால், செயலால், நடத்தையால் ஒவ்வொரு கனம்மும் இவனுக்கு நிகர் எவனும் இல்லை என உணர்வதன் வழியே சராசரி மனம் உருவகிக்கும் ஆணவம் அது ஆணவத்தைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு அழுத்தம் கூடியது.

காதல் கொண்ட கன்னியர் உள்ளம் இந்த கீள்மைக்கு முன் கொள்ளும் சீற்றம் அழகு. உன்மத்தம் கொண்ட அவர்களின் விழிகளுக்கு மட்டுமே கவச குண்டலதாரியாக கர்ணன் தெரிவது பேரழகு.

நீலனின் சொற்றொடர் ஒன்றுன்ன்டு ''எளிய மனங்களின் வஞ்சம்'' அதில் ஒவ்வொரு கணமும் பிரதி பலிக்கிறான்ராதேயன். எவ்வளவு சருகுகளை போட்டாலும் அக்னி அவிந்து விடுமா என்ன? அவற்றையே அவிசெனக் கொண்டு எழுந்து படர்கிறான் வெய்யோன்.

கண்ணீர் வழிய கால்தளர்ந்து மண்ணில் அமர்ந்து நெஞ்சை கையால் அழுத்தி “இப்புவி ஒருபோதும் மாமனிதரை அறியமுடியாது. மானுட உள்ளங்களை மூடியிருக்கும் திரை அது. முடிவற்றவை அனைத்தையும் தங்கள் சிறுவிரல்களால் மட்டுமே எண்ணி எண்ணி அளக்க வேண்டுமென்ற இழிவை இங்குள ஒவ்வொருவர் மேலும் சுமத்திய படைப்புத் தெய்வம் எது? மானுடரே, சிறியோரே, ஒவ்வொரு முறையும் நாம் ஏன் தோற்கிறோம்? ஒவ்வொரு முறையும் பெருந்திரளெனப் பொருளழிந்து நாம் ஏன் இழிவை சூடிக் கொள்கிறோம்?” என்றான் சூதன்.
அவன் குரல் மூதாதையர் உறங்கும் காட்டிலிருந்து எழுந்த தொல்தெய்வமொன்றின் குரலென அந்தத் தெருநடுவே ஒலித்தது. “தெய்வங்களே! மாறாச்சிறுமையை மானுடம் மீது சுமத்தினீர்கள். அதைப்பார்க்கும் விழிகளை என் முகத்தில் அமைத்தீர்கள். கருணையற்றவர்கள் நீங்கள். சற்றும் கருணையற்றவர்கள்.” கைவிரித்துக் கதறி உடல் வளைத்து தெருப்புழுதியில் ஒருக்களித்து விழுந்து உடல்குறுக்கி அவன் அழத்தொடங்கினான்.
என்ன சொல்ல பிறவி அந்தகனுக்கு சூரியன் என்னவாக பொருள்படுமோ அப்படித்தான் மாமனிதர்கள் சராசரி மானுட மனத்துக்கு பொருள்படுகிரார்கள்.  

கடலூர் சீனு

தீக்குள் தேன்.-வெய்யோன்-3



அன்னையை வெட்டியவனும், அன்னையால் வெட்டப்பட்டவனும் குருவும் சீடனாகவும் அமைய யார் அமைத்தது? காலமா? விதியா? கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தும் வாழ்க்கையா?

இணைந்த இருவருக்கும் இடையில் துளைசெய்ய வந்த வண்டு தெய்வத்தின் ஆடல் என்றால் மண்ணில் மனிதன் எத்தனை பெரிய ஆற்றல் நிரம்பியவனாக இருந்தும் என்ன பயன்?

அன்னைக்கு மகளுக்கு மருமகளுக்கு உரியது வலதுத்தொடை. மனைவிக்கு உரியது இடதுத்தொடை. கனவில் கண்ட காலடி அன்னையின் திருவடி  என்று தேடி அலைந்து  கண்டுக்கொண்டபோது கைக்கெட்டியது சிறுமகவு. சிறுமகவை மகளென்று அறிந்தும் இடைத்தொடையில்  அமர வைத்தது எது? ஆணவமா?

அன்னை என்று அறிந்தும் அவள் இடத்தொடையில் விரல்வைக்க   அளர்க்கனை இழுத்துப்போனது காமம் என்றால், மகளென்று அறிந்தும் இடைத்தொடையில் அள்ளி வைக்க இழுத்தது  கர்ணனின் ஆணவம்.
பரசுராமனைச்சுற்றி சுற்றி வந்தும் அவரைக்கடிக்க முடியாத வண்டு, கர்ணனைக்கடித்தது ஆச்சர்யம். கோபத்தைக்கண்டு காமம்கூட தள்ளியே நிற்கிறது, ஆணவத்திற்கு காமமே வலியாகவும் நிற்கிறது.

தாய் எழுதிய எழுத்தை அறிந்தும் பிருகிடம் சொல்லமுடியாத அளர்க்கனும், தாய் யார் என்று அறிந்தும் பரசுராமரிடம் சொல்லமுடியாத கர்ணனும் தீச்சொல் சுமந்து அலைவதைக்காணும்போது மகன்களின் உடல் மாறினாலும் உள்ளங்கள் மாறவில்லை என்பதைக்காண முடிகிறது. மகனாக பிறந்தாலேயே அவர்கள் வாழ்க்கை சாபங்கள் ஆகினவா?

அன்னையையே வெட்டி எறிந்த பரசுராமன் கர்ணன் ஷத்ரியன் என்பதை அறிந்தும் வெட்டி எறியாமல் செறுசினத்துடன் மண்ணல்லி வீசி சபிக்க நினைத்தும் அதை நிகழ்த்தாமல் //ஷத்ரியருக்கு என நீ களத்தில் எழுந்தால் நான் கற்பித்தவை உனக்கு உதவாது போகட்டும்என்றே சொல்லமுடிந்தது. மண்ணை நிலத்திலிட்டுதீராப்புகழ் கொள்க! விண்ணுலகில் வாழ்க!” என்று வாழ்த்தியபடி முகம் திருப்பிக்கொண்டார்.// என்று கூறுமிடத்தில் ஒரு அன்னை என்றே ஆகி நிற்கின்றார். தீக்குள்  எப்படித்தேன்?

தீக்குள் விரலை வைத்தால்
உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!

வானத்து சூரியனுக்குள் தண்ணீர் தாமரையை மலரவைக்கும் கனிவை வைப்பவன் வாழ்க!

அன்புடன் 

ராமராஜன் மாணிக்கவேல்

கர்ணனின் குன்று

 
 
அன்புள்ள ஜெயமோகன் சார்,
 
 
15 நாட்கள் பீகாரில் உள்ள எங்கள் ஆஷ்ரமத்திற்கு ஒரு பயிற்ச்சிக்காக செல்கிறேன். இந்த ஆஷ்ரம் அமைந்த்திருக்கும் குன்றுக்கு" கர்ண சௌரா" என்று பெயர். இந்த பகுதி கர்ணன் ஆண்ட பகுதியாகவும், கங்கை வளைந்து செல்லும் இந்த குன்றின் மேல் உள்ள காளிக்கு தினமும் , தன் உதிரத்தால் பலிகொடை கொடுத்து , வரமாக அன்று இரவே, தன் எடைக்கு எடை தங்கம் பெற்று அதை வருபவர்கள் அனைவருக்கும் கர்ணன் தானம் செய்ததாக ஐதீகம் .
 
 இந்த குன்றை தான், சுவாமி சத்யானந்தர் வாங்கி இப்போது இருக்கும் ஆஷ்ரமத்தையும்,ஒரு குருகுல, யோகா, பல்கலை கழகத்தையும் நிறுவியுள்ளார். கர்ணன் காலத்தில் மக்களுக்கு பொன்னும் பொருளும் தேவைக்கு கொடுக்கப்பட்டது  இன்றைய மக்களுக்கு அமைதியும், ஆரோக்கியமும் தேவை இருப்பதால்,இங்கிருந்து அதற்கான பயிற்சி வாரி வாரி வழங்கப்படும் என்பது சுவாமிஜியின் கருத்து. 
உங்கள் பணியும் சற்றும் குறையாத,வாரி வாரி வழங்கும் கொடை அன்றி பிறிதில்லை.
 
இந்த நல்ல தருணத்தில் வெய்யோன்  என்னுடன் பயணம் முழுவதும் இருக்கப்போகிறான். நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இந்த கதை பகிரப்படும் போனமுறை ஆஷ்ரம் சென்ற பொது மழைப்பாடல் வரை கதை சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த முறை வெய்யோன் வரை தொடரலாம். 
 
போய் வருகிறேன்.
 
சௌந்தர்

Sunday, December 27, 2015

வெட்டுப்படும் வைரங்கள்-வெய்யோன்-5




அன்புள்ள தி்ரு.ஜெ வணக்கம்.

 
விவாசயவேலைக்கு ஆள் கிடைக்காததால் களைக்கொல்லி உருவாக்கினார்களா? அல்லது களைக்கொல்லிகள் வந்ததால் வயலில் களையெடுக்க ஆள் தட்டுபாடு உருவாகியதா? நாணலை அழிக்கக்கூட களைக்கொல்லி வந்துவிட்டதை இரண்டாண்டுக்கு முன்புதான் அறிந்தேன். நாணல்கொல்லியை Sprayerல் ஊற்றி வெயில் ஏறுவதற்கு முன்பு நாணல் கண்ட இடத்தில்  அடித்தால் அனல்பட்டு காய்ந்த இலைபோல நாணல் கருகிவிடும். இப்படி ஒரு கொடுமை தேவையா? என்று மனம் நினைத்தது. நாணலை அறுத்து எறியும்போது இப்படித்தோன்றவில்லை, மாட்டுக்காவது ஆகும் என்ற நினைப்பு அந்த எண்ணத்தை மடைமாற்றம் செய்துவிடுகிறது. மழைப்பெய்து ஒருவாரம் சென்றுப்பார்த்தால் இன்னும் அதிகமாக நாணல்கள். விவசாயியாக ஒரு வன்மம் தோன்றினாலும், மனிதனாக எழுந்த புன்னகையை மறைக்கமுடியவில்லை.

//சிவதர் “ஆம்” என்ற பின் சிரித்து “தாங்கள் புன்னகையுடன் அக்கதையை கேட்டீர்கள்பரசுராமர் ன்றால் மழு எடுத்திருப்பார்” என்றார்கர்ணன் “ஆம்சூதர்களை ொல்வதற்காக பின்னும் சில முறை ாரதவர்ஷத்தை அவர் சுற்றி வரவேண்டியிருக்கும்” என்றான்அணுக்கர் உரக்க நகைத்து “மரங்களை வெட்டி வீழ்த்தலாம்நாணல்களை யாரால் ஒழிக்க முடியும்அவை பல்லாயிரம் கோடி விதைகள் கொண்டவை” என்றார்//

கர்ணன் கதையை ஏன் எழுதுகின்றீர்கள்? எங்களை வலியறிய வைக்க எழுதுகின்றீர்களா?  பரசுராமன்போல் கர்ணன் மழுவெடுக்கப்போவதில்லை. நீங்கள் எழுதும் கர்ணன் கதையைப்படிக்கும் வாசகன் ஒவ்வொருவரும் கர்ணனுக்காக மழுவெடுப்பார்கள். எத்தனைபேரை வெட்ட முடியும். காடுகளை வெட்டுவதல் மூலம் அழித்துவிடலாம், நாணலை வெட்டுவதன் மூலம் அழித்துவிட முடியுமா?

கேலிக்கிண்டல் செய்து இழிவுப்படுத்தும் மனிதர்களை யாரால் அழித்துவிடமுடியும். புற்களும், நாணுலும் ஏன் முளைக்கிறது என்பது புற்களும், நாணலும் கூட அறிந்திருக்கபோவதில்லை. 

தந்தை மகனை ஏளனப்படுத்துவது அவன் வளர்ச்சியை, விரிவை பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கமுடியாத இயலாமையில் தாழ்மையில் உருவாவது. மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் உருவாவது. எவனிடத்திலும் பணியாத தந்தை மகனுக்காக எவனிடத்திலும் பணிய தயங்குவதில்லை. ஆணை பணியவைக்க இறைவன் ஆணுக்கு மகனைத்தருகின்றான். அந்த பணிவே கனிவே மகனை பெரிதாக நினைக்கிறது. அந்த பெரியது கைக்கடங்காமல்போகும்போது ஏளனம் என்ற இகழ்சியின் மூலம் தனது சிறுமையை பெருமை எனக்காட்டுகிறது. ஒவ்வொரு தந்தையும் தன்மகன் தன்னை தூக்கி சுமக்கும்நாள் எது என்றே ஏங்குகிறார்கள். ஆனாலும் மகன் இன்னும் வளரவில்லையோ என்ற பயத்தோடன்தான் வாழ்கிறார்கள். அந்த பயமே அவர்களை மகனை ஏளனம் செய்யச்சொல்கிறது. 

மனைவி கணவனை ஏளனப்படுத்துவது அவன் வளர்ச்சியால், விரிவால் தான் கரை ஒதுக்கப்படுவதால், வெளிச்சத்தால் விரட்டப்படும் நிழல்போல கணவனின் புகழ்வெளிச்சத்திற்கு அப்பால் சென்று ஒதுங்குவதால். வெளிச்சதை பகைக்கும் நிழல், அதனால் வெளிச்சத்தின் மூலமாகிய சூரியனை இகழ்கின்றது. சூரியன் இருட்டாக இருந்தால் நிழல் அதன்மீது படர்ந்து பிரியாமல் இருக்கலாம் அல்லவா? 


கர்ணன்போன்ற மாபெரும் வளர்ச்சியும் புகழும் கொண்டவர்களுக்கு தந்தையும் மனைவியும் எதிர் திசையில் இருப்பது ஒருபக்கம் வலித்தாலும் அ்நத வலியின் வழியாகவே அவர்கள் வளர்ந்தும்போவார்கள். இது ஒருவிதத்தில் பெரும் சாபம்தான். சுளுக்கு விழுந்த கால் வலியில் துடிக்கவைக்கும். சுளுக்கு வழிக்கவேண்டும் என்றால் அதைவிட பெரும்வலியில் துடிக்கவேண்டும். கர்ணன் வாழ்க்கையில் தந்தையும் மனைவியும் சுளுக்காக இருக்கிறார்கள். சுளுக்கை வழித்தாலும் வலிக்கும். சரி சுளுக்கு இருந்துவிட்டுப்போகட்டும் என்றாலும் வலிக்கும். என்ன வாழ்க்கை இது. 

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்திகொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்

எவ்வளவு அடிச்சாலும் தாங்க வைரநெஞ்சம் வேண்டும். வைரமாய் பிறந்ததாலேயே இடம்விடாமல் பட்டைத்தீட்டப்படுவதைப் பொருத்துக்கொள்ளவும் வேண்டும்கர்ணன் வைரம்தான்

சாலையில் எச்சில்  இலையில் சோறுதிங்கும் நாயைக்கட்டிக்கொண்டுஎனக்கு கொடுகாமல் நீ மட்டும் சாப்பிடலாமா?” என்று நாயின் எச்சிச்சோற்றை எடுத்துதின்ற அத்வைதியைக்கண்ட குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர். அத்வைதத்தில் அவரின்  நிலை பெரும்நிலை என்றுகூறி. “அம்மா காளி! என்னை அந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடாதேஎன்றாராம்

கர்ணா! உனது உள்ளம் வேறு.  வலிக்க வலிக்க வெட்டும் பரசுராமனால்கூட தாங்க முடியாத வலிதாங்குபவன் நீ. உனது வலி தாங்கும் இதயத்திற்காகவே நீ உணராத தெய்வம் உனக்கு தன்னை காட்டியே தீரும்.  கர்ணா உன்னிடம் வந்ததால் வலி வலியறியும். 

அடிதாங்கும் உள்ளமிது இடிதாங்குமா  -அந்த
இடிபோல பிள்ளைவந்தால் மடிதாங்குமா

குந்தி இடியைப்பெற்றதால் நதியில் விட்டாளோ?  

நன்றி
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்