Monday, October 31, 2016

பைரவர்



ஜெ,




காலபைரவன் பைரவி வழிபாடுகள் நிறையவே நம்மூரில் இருந்திருக்கின்றன. சைவ ஆலயங்களில் காலபைரவர் இல்லாத இடமே இல்லை.  பல தலங்கள் காலஃபைரவ க்‌ஷேத்ரங்கள் என்றே அழைக்கபப்டுகின்றன

இந்த இணைப்பில் காலபைரவரைப்பற்றி எல்லா தகவல்களும் விரிவாகவே அளிக்கப்பட்டுள்லன

காலபைரவர்\

சிவக்குமார்



http://saturnineinks.tumblr.com/http://saturnineinks.tumblr.com/

படிமக் களஞ்சியம்





அன்புள்ள ஜெ


ஒவ்வொரு நாளும் கிராதம் படித்து முடித்ததும் கடலை கவிழ்த்துக்குடிப்பதுபோல் மூச்சு முட்டுகிறது. எந்த இடத்தில் கைவைத்து வாய்வைத்து பிடிப்பது என்பது புரியவில்லை. எத்தனை பெரிய படிம களஞ்சியம் இந்த கிராதம் கரிபிளந்தெழல் அத்தியாயம்.

கற்பனை நாரில் உண்மை மலர்களை தொடுத்துக்கொண்டே செல்கின்றீர்கள்.  மலர்பந்தாக இருப்பதால் ஆதியும் அந்தமும் முடிவிலி என்று விரிகின்றது. 

அன்னை கலைவாணி அருளால் எண்ணும் எழுத்து அறியும் நாளில் தொடங்குகின்றது அன்னைகலைவாணி உறையும் நாவன் பிரம்மன் கபாலம் நம் கையில். எண்ணும் எழுத்தும் கற்று கற்று மேதாவியாகும் தருணத்தில் சொல்லும் மேதமையும் புணர்ந்து புணர்ந்து சொல்லாகிய கலைவாணியை மறந்து இறையாகிய சிவத்தை மறந்த நான் என்னும் மயக்கத்தில் ஆழும் தருணத்தில்  பிரமகாபாலம்  பல்லிளிக்கும் நிறையா கைக்கபாலமாக மாறிவிடுகிறது.

தன்னைத்தான் அறிந்து சொல்லில் இருந்து விளையும் உலத்தை உணர்ந்து தன்னை சுவைத்து தனக்குள் எழும் சிவத்தை உணர்கையில் பிரமகபாலம் எல்லாவற்றையும் கழுவி புனிதம்நீங்க புண்ணிய கங்கையில் கழன்று விழந்து கங்கையோடு போகின்றது. கபாலம் ஏந்தியவன் பிச்சை ஏற்றாலும் பிரபஞ்சத்தின் மன்னன் என்று திரிகின்றான்.  அவனை எப்படி வெல்வது? இருளில் விழுந்து இதங்கள் இணைந்து இருளாகி எதிர்க்கின்றன. 

தன்னைத்தான் புலன்களில் கட்டி சிறைவைத்திருக்கும் விலங்குகள். தன்னைத்தான் அவைகள் விலங்கிட்டு இருப்பதால் அவை விலங்குகள். விலங்கில் இருந்தாலும் விலங்குகள் சுதந்திரமானவை என்று மனிதன் நினைக்கிறான். விலங்கி்ற்கு ஏது சுதந்திரம். புலன்களில் கட்டுண்டு இருக்கும் மனிதனும் ஒரு விலங்கு, புலன்களை தாண்டும் மனிதன் மனதின் விலங்கில் விலங்கிடப்பட்டு உள்ளான். புலன்விலங்கைவிட மனதின் விலங்கு பெரும் விலங்கு  அதை கொல்வது தன்னையே கொல்வது. தன்னையே கொன்று திண்பது.  தன்னை திங்கத்தொடங்கும் ஒருவனுக்கு பின்னால் துரத்திவந்த அறியாமை என்னும் திசையானை முன்னால்வந்து நின்று முட்டுகின்றது. ஒருயானையா அது? எட்டுதிசையும் பெரும் இருளாய் பெருகிவரும் எட்டுமதயானை.
//எது எது என்று தேடிச்செல்பவன் இல்லை இல்லை என்று மறுத்துமறுத்துச் செல்கிறான். அவன் அறியும் பேரிருள் இப்புடவியை ஏழுமுறை மூடியிருக்கிறது. விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம் அறியும் இருள்என்றார்.//

,இந்த மதயானையை ஒன்றாகி மத்தகம் மிதித்து தோலுரித்து போத்தி அழல் என்று நின்று நெஞ்சம் நிமிர்த்திக்காட்டுகின்றான் ஆண்மைநிறைந்த வீரன். அவன் சட்டைநாதன், கரியுரிப்போர்த்திய கடவுள் எனப்படுகின்றான். மற்றைய மனிதர்கள் அனைவரும் குளிரில் இணைந்த இருள்போர்வைபோர்த்திய ஒற்றைபெரும் கூட்டம். அந்த பெரும் கூட்டத்தில் இருந்து ஒருவன் எழுகின்றான். சொல்லில் இருந்து அனல் எழுப்பக்கற்றவன். மூலாதாரத்தில் நீலச்சுடர் எழுப்புபவன். சுவாதிஷ்டானத்தில் செஞ்சுடர் பார்ப்பவன். மணிபூரகத்தில் மஞ்சள்ஒளி ஓம்புபவன். அனாகதத்தில் பச்சையொளி தரிசிப்பவன். விசுத்தில் பொன்னொளி சூடுபவன். ஆக்சாவில் வெண்சுடரில் லயிப்பவன். சகஸ்ராரத்தில் ஆயிரம் இதழ்தாமரையில் குருவின் தொடுகையில் ஒளியேற்றி நிறைபவன். அவன் திசையானைகளை உடையாக உடுத்திக்கொண்டு அதன் வெண்தந்தங்களை பரிசாகக்கொண்டு அதன் ஒளியில் உலகை காண்கிறான். . சூரிய சந்திர அக்கினி மூன்றும் அவனுக்கு முக்கண்ணாய் நின்று ஒளிர்கிறது. அவன் திசையாடை அணிந்த நெற்றிக்கண் கடவுள்.

மானிட வாழ்க்கை என்பது பிரபஞ்சமலையின் மிகஉயரத்தில் அமைந்த இருள்குகைதான். இங்கு மனிதர்கள் அனைவரும் தங்கள் அறியாமை இருளில் முட்டிமோதி ஒன்றோடு ஒன்று கலந்து குறுக்கி ஒருதிரளாகி அச்சம் என்னும் பனிச்சொட்டச்சொட்ட ஒன்றுக்கலந்து கிடப்பவர்கள்தான். அதில் யாரோ ஒருவனுக்கு சொல்லில் இருந்து வெளிப்படும் உலகம் புரிகின்றது. மேதாவும் நான்முகனும் புணரும் கற்பனை உலகம் புலப்படுகின்றது. அவன் கையில் பிரமகபாலம் கிடைக்கிறது. அவனுக்கு பின்னால் தொடந்துவந்த அறியாமை இருட்டு ஒரு கணத்தில் எதிரில் நிற்கும் மதயானை என்பது தெரிகிறது அதை அழித்து  சிவம் ஆகின்றான்.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே .திருமந்திரம்.

அன்புள்ள ஜெ. பிச்சாண்டவர் தன்னில் கண்ட சூரிய சந்திரரை வைசம்பாயன் பிரபஞ்சத்தில் காண்கின்றான் என்று கதையை முடித்ததுதான் அழகான அர்த்தமுள்ள கவிதை. பிச்சாண்டவர் பரத்தை மறைத்த பார்முதல் பூதம். வைசம்பாயணன் பரத்தில் மறைந்த பார்முதல் பூதம். பிச்சாண்டவர் பொருள் எல்லாம் குவியும் சொல்லானவர். வைசம்பாயனன் சொல்லெல்லாம் விரியும் பொருளானவர். பிச்சாண்டவர் அகக்கண் காட்டும் அருகில் இருக்கும் சேய்மை.  வைசம்பாயனன் புறக்கண் காட்டும் தொலைவில் இருக்கும் அண்மை.  ஷண்முகவேல் ஓவியமும் அற்புதம்

கபாலம்




ஜெ

கபாலத்தில் பிச்சையெடுத்தல் என்னும் குறியீட்டை நினைக்கநினைக்க மனம் பிரமிப்பு கொள்கிறது 

நிறையவே முடியாத கபாலம்.  கபாலத்திலே பிச்சை எடுத்தால் அது எப்படி நிறையும்? 

இந்த பூமியில் அத்தனைபேரும் நிறைக்கவே முடியாத கலம் என்பது கபாலம்தானே?

கபாலி தன்னைக்கொண்டுதான் அதை நிறைத்தான். நாம் நம்மைக்கொண்டு அல்லாமல் அதை நிறைக்கவே முடியாது

செந்தில்குமார்

காலபைரவ வழிபாடு


ஜெ


வட இந்தியாவில் காலபைரவ வழிபாடு மிகவும்ம் ப்ரஸித்தம். நான் பலமுறை அந்த ஆலயங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். ஆனால் காலபைரவம் இப்படி ஒரு விரிவான பௌராணிக ஆழம் உடையது என்று எனக்குத்தெரியாது. சிவாம்ஸம் என்று தெரியும். ஆனால் இது ஒரு தனி மதம், பின்னாடி சிவமதத்தில் இணைந்தது என்று தெரியாது. காலபைரவனின் கொடுமையான தோற்றம் எனக்கு  பயத்தைத்தான் அளித்துவந்தது. ஆனால் இன்றைக்கு அது மகாகாலத்தின் ஒர வடிவமாகத் தெரிகிறது., மிகப்பெரிய ஒரு மன எழுச்சியை அடைந்தேன்

காலபைரவனுக்கு கொடுக்கப்பட்டுள்ல ஒவ்வொரு அடையாளமும் அற்புதம். நிறையாத மண்டை. அது படைப்புக்கடவுளின் மண்டை. ஆகவே அதிலே அவன் படைத்த உலகத்தையே போட்டாலும் நிரம்பாது. அதில் தன்னை அவன் பெய்து நிறைக்கும்போதுதான் அது நிறைகிரது. அவனை ஒரு பக்கம் விசுவாசமான நாய் தொடர்கிரது. அது காலம். இன்னொரு பக்கம் பழி தொடர்கிறது. அவன் அனல் வடிவமானவன் கங்கைக்கரையில் குளிர்ந்து விடுதலை அடைகிறான்

பலமுறை அந்த அத்தியாயத்தை வாசித்தேன்.

ஹரிஹரசுதன்

 http://www.tantrikstudies.org/blog/2015/12/20/the-divine-name-bhairava-tantraaloka-195-100http://www.tantrikstudies.org/blog/2015/12/20/the-divine-name-bhairava-tantraaloka-195-100
 

இரு நிலவு



ஜெ

எங்கள் யோகவகுப்பில் ஒருமுறை பேசும்போது குரு இருநிலவுகள் எழுவதைப்பற்றிச் சொன்னார். இருட்டில் இரண்டு நிலவுகள் எழுந்துவரும் என்னும் காட்சி ஒரு மாயக்காட்சியாகவே தெரிந்தது

அது மிகவும் பழைமையான ஒரு ஆர்க்கிடைப் என்று இப்போது இதை வாசிக்கையில்தான் தெரிந்தது. ஆர்க்கிடைப் ஆக அப்படியே வைத்துக்கொண்டே அதை அற்புதமாக நடைமுறை சார்ந்தும் விளக்கியிருக்கிறீர்கள்.

பலவகையிலே கூர்ந்து வாசிக்கவேண்டிய அத்தியாயம். இருநிலவுகளில் ஒன்று தர்க்கம் ஒன்று கற்பனை. இவனுக்குக் கற்பனை மட்டும்தான் இருக்கிறது

அது நிலவின் நீர் நிழல். ஆடிக்கொண்டே இருக்கிறது. இவன் தான் பிற்பாடு வியாசரின் மாணவராக ஆகி மகாபாரதத்தில் பெரும்பகுதியை எழுதிச்சேர்க்கப்போகிறான் இல்லையா?


எஸ்.ஆர்

Sunday, October 30, 2016

காலத்தோற்றம்






ஜெ

காலபைரவனின்  தோற்றத்தை அற்புதமாக வரைந்திருக்கிறார் ஷண்முகவேல். உலகையே வெல்லும்பொருட்டு எடுத்த கால் . வெறிகொண்ட முகம். தீ மாதிரியான தோற்றம்.

காலபைரவர் சிவனின் காலரூபம். சிவன் ஆக்கல் அழித்தல் செய்யும் தெய்வம். அதிலிருந்த காலம் மட்டும் பிரிந்து வந்ததே காலபைரவம். நாய் வடிவாக தொடர்வது காலம்தான். விஷ்ணுபுரம் நாவலிலேகூட அந்த நாய் வரும்

பிரம்மனை அழிப்பது காலமே என்பதுதான் அந்தக்கதையின் தாத்பரியம்

சுவாமி

உருமாற்றம்




ஜெ

இந்த அத்தியாயங்களின் மிகப்பெரியஅதிர்ச்சியும் துக்கமும் என்பது கிருஷ்ணனின் உருமாற்றம்தான். இது வன்மைகளின் நாவல். எதிர்மறை அழகியல் என்று நீங்கள் சொல்லும் cruel aesthetics வெளிப்படும் நாவல். இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனசு ரொம்பவே மறுக்கிறது

கிருஷ்ணனைப்புரிந்துகொள்ள மிகவும் கஷ்டப்படவேண்டும். அவன் வேதசாரம் அறிந்தவன். அதை நிறுவ வந்த மாமனிதன்.  மாமனிதர்கள் அனைவருமே இந்த மூதேவியைக் கடந்த சென்று இது அளிக்கும் உலகப்பார்வையையும் அறிந்ந்தாகவேண்டும்

நன்மை அழகு தியாகம் வழியாக மட்டும் அல்ல இவள் அளிக்கும் துரோகம் கசப்பு அசிங்கம் வழியாகவும் அறிந்தால் மட்டுமே வேதஞானம் முழுமை அடைகிரது என்பது அற்புதமான ஒரு விஷயம்

ஆனாலும் கிருஷ்ணனை அப்படி காண மனசு மறுத்துக்கொண்டே இருக்கிறது

கல்யாணராமன்

கர்ணனின் கதை



அன்புள்ள ஜெமோ,

இப்போதுதான் வெய்யோன் வாசித்துமுடித்தேன். கட்டற்றுப்பரவும் ஒரு தொகுப்பு போல இருக்கிறது. உங்கள் மற்றநாவல்களில் இருந்த ஒரு ஒத்திசைவு அதில் இல்லை. ஆனால் எனக்கு அது ஒரு பெரிய சவாலக இருந்தது. அதை ஒன்றாகத்தொகுத்தும் இணைத்தும் புரிந்துகொள்வதற்கான ஒரு பயிற்சியை நான் மேற்கொண்டேன்

உதாரணமாக அந்நாவலின் தீர்க்கதமஸின் கதை. ஜீரணிக்கவே முடியாத காமமும் சுயநலமும். ஆனால் அது கர்ணனின் கதைக்கு ஒரு பெரிய எதிர்ப்பக்கம். சுயநலமே இல்லாதவனி கதைக்குள் அது ஏன் வருகிறது?

அதேபோல நாகர்கலின் கதை. அவர்களின் வேதமும் மற்ற விஷயங்களும் நேரடியாகவே கர்ணனின் கதைக்குள் இடம்பெற்றாலும் தீர்க்கதமஸின் சுயநலம் கலந்த கதையுடன் அவை மிகவும் கூர்மையாக இணைந்துகொள்கின்றன

ரங்கராஜன்

இருளுரு



ஜெ,


எட்டுத்திசையானைகள். எட்டு இருள்மத்தகங்கள். எழுந்த பதினாறு வெண்தந்தங்கள்.  எட்டு திசைகளும் இருட்டாகி யானையாகிச் சூழ்ந்துகொள்ளும் அனுபவம். எங்கள் யோகா வகுப்பில் இதே வரியைச் சொல்லியிருக்கிறார்கள். அது ஒரு பெரிய கொடுமையான அனுபவம். சிலசமயம் அபூர்வமான சத்தங்கள் கேட்கும். சிலசமயம் கெட்டமணங்களும் இருக்கும்

வெண்முரசில் இது கதையாக வருவதனால் இது ஒரு மனம்சார்ந்த விஷயம் என்பது சிலவாசகர்களுக்கு மனதிலே பதியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது

மனோகரன்

இருள்வேழம்




ஜெ

வெண்முரசின் ஒரு துணைத்தலைப்பு இருள்வேழம். அப்போதே அந்தச்சொல் என்னை தொடர்ந்து வந்தது. நூற்றுக்கணக்கான முறை அதைச் சொல்லியிருப்பேன். நான் ரிக்கில் வேலைபார்க்கிறேன். இரவிலே மேலே போய் நின்றால் கடல்மேல் இருக்கும் இருட்டைப்பார்க்கமுடியும். அப்படிப்பட்ட இருட்டு மண்ணிலே இருக்காது. ஏதாவது வெளிச்சம் இருக்கும். அந்த வானத்தைப்பார்க்கும்போது இருள்வேழம் என்ரு சொல்லிக்கொண்டே இருப்பேன்

அந்த இருட்டு எட்டுத்திசையானைகளாக் ஆகி அவனைச்சூழ்ந்துகொள்ளும் இடம் மெய்சிலிர்க்கவைத்தது.கண்ணுக்கு மிக அருகே அந்த யானையின் இருட்டு விரிசல்களாக தோலாக தெரிவது ஒரு சைக்கடெலிக் ஆன அனுபவம். அந்த அத்தியாயமே மண்டையை தெறிக்கவைத்தது. இனிமேல் கஜசம்ஹார மூர்த்தி சிலையை ஏறெடுத்துப்பார்க்க என்னால் முடியுமா என்றே தெரியவில்லை

பிரபாகர் எஸ்

Saturday, October 29, 2016

ஆணவத்தின் கதை




அன்புள்ள ஜெ,

இன்று தன்னைதானுண்டு அமையும் காலபைரவனின் கதையை வாசித்தேன். ஆனால் முதன்மையாக எனக்கு இக்கதை அத்ரி முனிவரில் முளைத்த ஆணவத்தின் கதையாகவே நினைவில் நிற்கிறது.

முதலில் அத்ரி தன் அறிவின்மேல் கொண்ட ஆணவத்தால் ஒரு பிழை செய்கிறார். அங்கு அவையோர் அவர் பிழையை எடுத்துரைக்கும்போது அவருக்கு ஒருவாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் அத்ரி அவ்வாய்ப்பை நழுவ விடுகிறார். மனிதர்கள் எப்போதும் இவ்வாறு தெரிந்தே செய்யும் தவறுகளை, சிறுமைகளை மறைக்கும் பொருட்டே ஆணவம் கொள்கின்றனர். பிழை என தெரிந்தும் ஆணவத்தின் பாதையை அத்ரி தேர்ந்தெடுக்கிறார்.

அங்கிருந்து அவரது ஆணவம் சருகில் அனலென மேதாதேவிக்கும் அங்கிருந்து பிரம்மனுக்கும் பரவுகிறது. இங்கு மேதையை புணர்ந்து பிரம்மன் உருவாக்கிய நிகருலகு இவ்வத்தியாயத்தில் என்னை மிகவும் கவர்ந்த பகுதிகளுள் ஒன்று. ஆணவத்தின் ஆழ்கனவுகளால் உருவாகும் இந்நிகருலகம் தன் ஒவ்வொரு துளியிலும் ஆணவத்தின் பேருருவையே வடிவமாய் கொண்டுள்ளது. ஆணவம் கொள்ளும் மிருகங்கள், தாவரங்கள் தங்கள் உடலின் எல்லையை மீறுவதன் மூலமே ஆணவம் கொள்கின்றன.

பேருருக் கொண்ட பல்லிகள், கழுகுக்கால்களும் புலிமுகமும் கொண்ட வெளவால்கள், வெண்கரடித்தோல் கொண்ட பேருரு யானைகள், கால்பெற்று நடக்கும் நாகங்கள், இடியோசை எழுப்பும் ஆமைகள், சிறகுகொண்ட சிம்மங்கள், நாக உடல் கொண்ட புலிகள், நடக்கும் மீன்கள், விளங்குகளை உன்னும் பெருமரங்கள், யானையை தூக்கி செல்லும் கருவண்டுகள், நண்டுக்கால்களுடன் நடக்கும் பேருருவ எறும்புகள், பறக்கும் முதலைகள் என எவ்வகையிலும் நெறிகளில்லா இவ்வுலகம் நடுங்க செய்கிறது.

இதை வாசித்து வருகையில் ஆணவம் கொண்ட மனிதன் தன் உடலை எவ்வாறு வகுத்துக் கொள்வான் எனும் சிறிய குறுகுறுப்பு ஏற்பட்டது. இதோ பெரும் சிறகும், கூர்நகங்களும், சிம்மமுகமும் கொண்ட பேருருவ மனிதர்கள் தோன்றப் போகிறார்கள் என கற்பனை செய்தேன். ஆனால் நிகருலகில் மனிதர்கள் வரவேயில்லை. ஏன் மனிதர்களுக்கு மட்டும் மாற்றுரு தரவில்லை என்ற கேள்வி எழுந்தது.

பிறகு யோசித்தபோதுதான் புரிந்தது, மனிதர்கள் கொள்ளும் ஆணவம் என்பது எளிய உடல்மீறல்களை கொண்டு அமைவதல்ல என்று. ஆம், விண்முட்டுமளவு வளர்ந்தாலும் மனிதனின் ஆணவம் நிறைவுறப் போவதில்லை. எனவேதான் புறஎல்லைகளை விடுத்து அகத்தில் தன் ஆணவத்தை வளர்க்கிறான் மனிதன். மனிதர்கள் ஏன் நிகருலகில் தோன்றவில்லை என்பதற்கான காரணமும் இதுவே. இக்கதை ஆரம்பிக்கும் அத்ரி முனிவர் முதல் இந்நிலத்தில் பிறந்தமைந்த அனைவரும் ஏதோவொரு கணத்தில் ஆணவம் கொண்ட மனிதனுக்கான சாட்சியங்களே. எனவே அதற்கு தனியாக உருவம் கொடுக்க வேண்டியதில்லை என தெளிவடைந்தேன்.

அன்பின் ஜெ. இவ்வத்தியாயத்தில் நான் மிகவும் ரசித்த முரணியக்கம், படைப்பு நிகழும் விதம் குறித்து வரும் வரிகள்:
நெறியிருக்கும் இடத்தில் களியாட்டமில்லை. களியாட்டில்லாது படைப்பெழுச்சியும் இல்லைஎன்றாள் மேதை.
ஆம், நெறியுடன் இயையா பேரறிவென்பது வெறும் பித்தே. இனி என்றும் நீ அவ்வாறே ஆகுக!” என்றது சிவம்.
இவ்வரிகளை வாசிக்கையில், எழுதும்போது தங்களில் கூடும் கடிவாளமிடப்பட்ட மிருகத்தைதான் நினைத்துக் கொண்டேன்.

பைரசிவத்தின் ஆணவத்தை முதற்சிவம் கண்டுசொல்வது பிறிதொரு அபாரமான இடம். பொதுவாக காலபைரவர் போன்ற உக்கிர தெய்வங்களின் தாண்டவத்தின்முன் திகைத்து நிற்பதே என்னை போன்ற எளியோரின் வழி. ஆனால் அந்நிலையிலும் பைரவனின் பிழையை கண்டு சொல்வதற்கு அபாரமான சமநிலை வேண்டும்.
முதற்சிவம் தன்முன் நிற்கும் தன்வடிவனிடம் தெய்வமே என்றாலும் ஆணவம் இழிவே என உறைப்பது அந்த சமநிலையும் தன்னுணர்வும் கொண்டதாலேயே.

பேருருக் கொண்டு நிற்கும் ஆணவத்தின் இழிவை அறிவதற்கு தன்னை விலகிநின்று பார்ப்பதே சிறந்த வழி. இறுதியில் பைரவசிவம் கப்பரையில் நிறைந்த தன்குருதியின் வாயிலாக தன்னுள் கரந்த ஆணவமெனும் நஞ்சை காண்கிறான். தன் ஆணவத்தை காண்பதே அதை வெல்வதற்கான முதற்படி. அதை உண்டு செறித்து அமைவதன் மூலம் காலபைரவன் விடுதலை பெறுகிறான்.

இப்படிக்கு அன்புடன்,
தே..பாரி