Monday, July 17, 2017

புகைமூட்டம்.







ஜெ,
கரவுக்காட்டில் ஒவ்வொன்றும் உருமாறுவதில் பல விந்தைகள் இருந்தாலும் உச்சகட்டம் என்பது முக்தனின் மாற்றம்தான்.அவன் அர்ஜுனன் மேல் பிரேமைகொள்கிறான். அப்படி பிரேமைகொள்வதற்கு அர்ஜுனனிடமிருக்கும் பெண்மைதான் காரணமா? இல்லை இவனிடமிருக்கும் பெண்மை அர்ஜுனன் என்ற ஆணை காதலித்ததா? அவன் கடைசியில் சுபாஷிணியைக் கண்டடைகிறான். அதில் என்ன நிகழ்கிறது? ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய புகைமூட்டம். ஆங்காங்கே உருவங்கள் தெரிகின்றன

மனோகர்

சுபாஷிணி






அன்புள்ள ஜெ

சுபாஷிணி மிக எளிமையான சேடிப்பெண்ணாக வருகிறாள். ஆனால் அவள் ஆசைப்படுவது பாஞ்சாலியாக ஆவதற்காக. அவள் படியிறங்கி விளையாடும்போது மனசுக்குள் பாஞ்சாலியாக ஆகிவிட்டிருக்கிறாள். பாஞ்சாலியாக அவள் அக்கனவுக்காட்டுக்குள் வருகிறாள். அந்த உருமாற்றம் அற்புதமானது. அவள் ஒரு தங்கப்பாம்பாக ஆகிவிடுகிறாள்

அதில் அவளுக்கு 3 கணவர்கள். முதல்வன் முக்தன். அவன் அர்ஜுனன். அவனுக்குள் பெண் இருக்கிறாள். இரண்டாவது நகுலசகதேவர்கள். அவர்கள் அவள் குழந்தைகள். அவள் ஏற்றுக்கொண்டு மேலே செல்வது பீமன். அதாவது சம்பவன். தர்மன் அவள் கணக்கிலேயே இல்லை. சரியா? நான் சரியாகத்தான் வாசிக்கிறேனா?

மகேஷ்

விளையாட்டு.





அன்புள்ள ஜெ

கரவுக்காட்டிலுள்ள விளையாட்டுக்களை நீவி எடுத்துப்புரிந்துகொள்வது ஒரு அற்புதமான மனோவியல்விளையாட்டு. இது இந்நாவலில் அதிகமாக வருகிறது. இது நாவலை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ள உதவுகிறது. வெய்யோன் நாவலில் பளிக்கறைக்குள் பார்ப்பது உதாரணம். அர்ஜுனன் பார்க்கும் மாயக்காட்சிகள் இன்னொரு உதாரணம். இவை மகபாரதத்தில் நடந்தவை நடக்கவிருப்பவை அனைத்தையும் ஒன்றாக்கி ஒரே இடத்தில் காட்சிகளாகக் காட்டிவிடுகின்றன

அருண்குமார்

உள்ளே இருக்கும் காடு






ஜெ

ஒவ்வொருவரும் அவர்களின் கனவில் எப்படி இருக்கிறார்களோ அப்படி எழுகிறார்கள் நீர்க்கோலத்தின் இந்த அத்தியாயத்தில் என நினைக்கிறேன். அது அற்புதமான ஒரு யூனிட்டியை உருவாக்குகிறது. எடைமிக்கவனாகவே கீசகன் சொல்லப்படுகிறான். அவன் மிதந்து புகைபோலச் செல்கிறான். ஆணிலி போல எப்போது பெண்கள்சூழ இருக்கும் உத்தரன் ஆண்மையான தனிமையானவனாக இருக்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் இருக்கிறது. அந்த முகத்துக்கு அடியில் அறியப்படாத இன்னொரு முகம் உள்ளது. அந்த அறியாத முகங்களால் ஆனது கரவுக்காடு என நினைக்கிறேன்

செல்வா

தென்னக அரசியல்






அன்புள்ள ஜெமோ,

இப்போது நீர்க்கோலத்தில் வந்துகொண்டிருக்கும் தக்காண அரசியலின் ஒரு சித்திரம் முன்பு வண்ணக்கடலில் வந்தது. ஆனால் அதில் இளநாகன் கிளம்பிச்செல்லும் காலம் எது என்பதே தெளிவாக இல்லை. மிக முந்தையகாலம். அன்று தென்மதுரை இருக்கிற்து. ஆனால் மகாபாரதம் நிகழ்ந்துமுடிந்திருக்கிறது. கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. 

அவன் சென்றுசேர்வது அஸ்தினபுரியும் அல்ல. ஆனாலும் அந்த அரசியலும் இப்போது சொல்லப்படுவதற்கும் ஒரு தொடர்ச்சியும் இருக்கிறது என நினைக்கிறேன்

மகாபாரதத்தின் அரசியலுக்கும் மகாபாரதத் தொன்மத்துக்கும் நடுவே ஓர் ஊடாட்டம் உருவாக்கப்படுகிறது வெண்முரசுநாவல்களில் என நினைக்கிறேன். ஒருபக்கம் அங்கும் இன்னொருபக்கம் இங்குமாகக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது

மகாதேவன்

Sunday, July 16, 2017

அலையடித்தல்



ஜெ

வெண்முரசின் நீர்க்கோலப்பகுதி மிக அபூர்வமான ஒன்று. நீர்க்கோலம் என்ற தலைப்பே இப்போதுதான் புரிகிறது. நீர்ப்பாவை போல அத்தனை பேரும் அலையடிக்கிறார்கள். பாண்டவர்கள் உருமாற்றம் அடைந்ததைப்பற்றித்தான் இந்தக்கதை பேசுகிறது என நினைத்தேன். ஒவ்வொருவரும் உள்ளே ஒவ்வொருமுறையில் உருமாற்றம் அடைவதைப்பற்றி உள்ளும் புறமுமாக அலையடிப்பதைப்பற்றித்தான் பேசுகிறது என புரிந்தது. இந்தப் பகுதி இதுவரை வந்த பகுதிகளுக்கே வேறு அர்த்தங்களை அளித்துவிட்டது

சாரங்கன்

நீரில் மீனெழுவது



"அவள் அவனை நீரில் மீனெழுவதுபோன்ற விழியசைவால் நோக்கிவிட்டு"

ஜெ, இது போன்ற பார்வையை பார்க்க நேர்ந்தவர்களுக்கே இந்த உவமை சட்டென்று பிடிக்கும் என்று நினைக்கிறேன்! வெண்முரசு abstract நினைவுகளுக்கு சொற்களை அளிக்கிறது!

வெண்முரசில் வரும் உருவகங்களில் நீரில் மீன் எழுவது என்பது எண்ணம் சொல் என்பவையோடு தொடர்புள்ளது. இங்கு புறவயமாக சுபாஷிணியின் குறுகுறுப்பையும் நாணத்தையும் அழகாக காட்டினாலும் முக்தன் பார்வையில் சற்றே அவள் slowness-யும் காட்டுகிறது.

நீரில் மீனெழும் வேறொரு காட்சியும் நினைவுக்கு வந்தது: குருஷேத்திரத்திற்கு  பின் பல ஆண்டுகள் தன் சொற்களை இழந்து  அலைந்து திரியும் வியாசர் பின் யமுனையில் எழுந்து விழும் மீனை பார்த்து தன் முதல் எண்ணத்தை மீண்டும் அடைகிறார்.
 
 வமதுசூதனன் சம்பத்