Monday, November 20, 2017

மீண்டும் பீமன்அன்புள்ள ஜெ

பிரதிவிந்தியனுக்கும் சர்வதனுக்குமனா உரையாடல் புன்னகையை உண்டுபண்ணியது. மிக நுட்பமான சீண்டல். அதே போன்ற உரையாடல்தான் யுதிஷ்டிரனுக்கும் பீமனுக்கும் நடந்துகொண்டிருக்கும். குறிப்பாக பிரயாகையில் பல இடங்களில் அற்புதமான அங்கதங்கள் உண்டு. அந்தக்குரங்குகளும் ஞாபகம் வருகின்றன. அந்த சித்திரத்தை வெண்முரசில் மீண்டும் கண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இதுதான் உலகம். மீண்டும் மீண்டும் வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது. மாறாமல் மீண்டும் மீண்டும் ஒன்றையேதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்


செல்வராஜ்

அறம்ஜெ

வெண்முரசில் மக்களுக்கும் அரசனுக்கும் இடையே இருக்கும் உறவைப்பற்றி இன்றைய அத்தியாயம் மீண்டும் எண்ண வைத்தது. ஆரம்பத்திலேயே துரியோதனனை மக்களுக்கு பிடிக்காமலாகிவிட்டது. ஆகவே வெறுக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன என்று சொல்லமுடியது. அதேபோல யுதிஷ்டிரனை விரும்புகிறார்கள்.

அறத்தாறிதுவென வேண்டாம் சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

என்ற திருக்குறளை நினைத்துக்கொண்டேன். அதற்குஎன்ன காரணம் சொன்னாலும்  எனக்குத்தோன்றுவது இதுதான். அரசனுக்கும் மக்களுக்குமான உறவில் அறம் என்ன என்று சொல்லவே முடியாது


ராஜசேகர்

மைந்தர்அன்புள்ள ஜெ

உபபாண்டவர்களின் குணாதிசயங்கள் அப்படியே அவர்களின் தந்தையைப்போலவே உள்ளன என்று தோன்றியது. அவர்கள் தந்தையரிடமிருந்து நுட்பமான வேறுபாட்டை கொண்டிருப்பதை நான் சற்றுக்கழித்துத்தான் புரிந்துகொண்டேன். தந்தையரிடம் இருக்கும் ஆசையும் வன்மமும் அவர்களிடம் இல்லை. அவர்கள் வசதியாக வளர்ந்தவர்கள். ஆகவே உல்லாசமாக இருக்கிறார்கள். அரசு சூழ்தலைக்கூட விளையாட்டாகவே செய்கிறார்கள். அந்த விளையாட்டு தோற்றாலும் கவலைகொள்வதில்லை.

ஆனால் நுட்பமான வேறுபாடு யௌதேயனுக்கும் பிரதிவிந்தியனுக்கும் இடையே இருப்பதுதான். இருவருமே யுதிஷ்டிரனின் குணாதிசயத்தைத்தான் பொதுவாகக் கொண்டிருக்கிறார்கள். நூல்வாசிப்பது நெறிகளைப்பேசிக்கொண்டிருப்பது. ஆனால் அதேசமயம் அவர்களுக்கு மேலும் சில குணவேறுபாடுகள் உள்ளன. யௌதேயன் சூழ்ச்சிக்காரன். நிதானமானவன். அது குங்கனின் குணம். ஆனால் அதேசமயம் பிரதிவிந்தியன் சஞ்சலம் கொண்டவன். எரிச்சல் கொண்டவன். சதிகள் புரியாத அப்பாவி. அது இளவர்சனாகிய யுதிஷ்டிரனின் குணம். இருவருமே யுதிஷ்டிரனில்உள்ள இரண்டு இயல்புகளை சரியாக பிரதிபலிக்கிறார்கள்.


சாரங்கன்

கதை விரைவுஅன்புள்ள ஜெ


வெண்முரசு நாவல்களிலேயே விரைவான வாசிப்பனுபவம் அளிப்பது எழுதழல்தான். ஏனென்றால் மற்ற எல்லா நாவல்களுக்கும் ஒரு தொகுப்புவடிவம் உருவாகிவிட்டது. பலகதைகளை ஒன்றுடன் ஒன்று தொடுத்துக் கதைசொல்வது அவற்றின் பாணி. இந்நாவலிலும் உஷா பரிணயம் ஒரு துணைக்கதையாக வந்தாலும்கூட விரைவான ஒரே கதைப்போக்கு இருப்பதனால் அடுத்தது என்ன என்று காத்திருந்து வாசிக்கச்செய்கிறது. இப்படி பல ஆண்டுகள் ஒரு புனைவுக்குள் மூழ்கி வாழ்ந்துகொண்டிருப்பது மிகப்பெரிய அனுபவம் என்று தோன்றுகிறது. வெண்முரசு முடிந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் இல்லாமலில்லைசாரநாதன்

பித்தனாக்கும் பேருண்மை தரிசனம் (எழுதழல் - 53)
    உண்மை என்பது பேருருக்கொண்டது. அல்லது உருவே அற்றது. அதன் உருவென நாம் காண்பதெல்லாம் அதன் ஒரு சிறு துளியை மட்டுமே.  அந்த சிறு துளியை அறிந்த ஆணவத்தில்  அனைத்தையும் அறிந்தவராக நடந்துகொள்கிறோம். நம் அறிவு, கொள்கை,  தத்துவம்,  செயல் எல்லாம் அந்த சிற்றுண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை.  நம்மை சூழ்ந்திருக்கும் பற்றுகள் நம் அகங்காரம், ஆசைகள், வஞ்சங்கள்,  உண்மையைக்காணும் நம் பார்வையை குறுக்குகின்றன. மேலும் நம் பிறப்பு, சூழல், அனுபவம், திறன் காரணமாக நாம் காண இயலும் உண்மைகள்  ஒருவருக்கொருவர் மாறுபடுகின்றன.  ஆகவே ஒருவருக்கொருவர் முரண்கள் தோன்றுகின்றன.  அனைத்திலும் முழுதும் ஒத்துப்போகும் இருவரை நாம் இவ்வுலகில் காண முடியாமல் போகிறது.      

         அந்தப் பேருண்மையை முழுதாக காண ஒருவரால் முடியுமா என்து ஐயமாக இருக்கிறது.  நம் அகவிழியைக் கூசச்செய்யும் பேரொளிகொண்டது அந்த பேருண்மை.  அது நம் நம்பிக்கைகளைத் தகர்ப்பது, நம் நோக்கங்களை பொருளிழக்கச்செய்வது,  நாம் பற்றியிருப்பதை  பிய்த்தெறிவது,  நம் ஆடைகளை கிழித்தெறிந்து நம்மை நிர்வாணமாக்குவது,   நம்மைத்தவிர யாருமற்ற தனிமையில் நம்மைத் தள்ளுவது. நம் சூழலை காலத்தை இல்லாமலாக்குவது. அதை காண்பவன் அடைவது  ஒருவகையான  இறப்பு என்று கூறலாம். 

      ஒரு  ஆழ்ந்த கனவில்,  ஒரு பேராத்மாவின் முன்னிலையில், சிந்தையில் ஏற்பட்ட கண நேர  ஞானத் தெளிவில் அல்லது  தம்மை உலுக்கிய ஏதோ ஒரு அனுபவத்தில் அடைந்த அதீத உணர்வில்,  சிலர் அந்தப் பேருண்மையை அகக்கண்கொண்டு பார்த்துவிட நேரிடும்.  அப்போது அவர்களுக்கு இந்த உலகின் நடைமுறைகள், மேற்கொள்ளவேண்டிய கடமைகள்,  கொண்டிருக்கவெண்டிய பாவனைகள் எல்லாம்  பொருளற்று போகின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருக்கும் அந்த நிலையில் அவரைக்  காணும் நாம்  அவரைப் பித்துப்பிடித்தவராக எண்ணுவோம்.  

    அபிமன்யுவிற்கு கிருஷ்ணரின் அவை நிகழ்வு பேருண்மையின் ஒரு தரிசனமாக அமைகிறது.  அதை அவன் கண்ணால் மட்டும் பார்க்கவில்லை. வேணுகானமென 
காதால் கேட்டிருக்கிறான். நான் அந்த இசையிரவில் கண்ட கனவுகளை வழியெல்லாம் தொகுத்துக்கொண்டு வந்தேன். இசை இனியதென்று சொல்கிறார்கள். அது மெய்யல்ல. பேரிசை பெருவெளியின் காட்சி போலவே எண்ணத்தை மலைக்கச்செய்து அச்சத்தை எஞ்ச வைப்பது. தனிமையின் துயரை நிறைப்பது. அனைத்தையும் பொருளற்றதாக்கி முழுமையின் வெறுமையை அளிப்பது. அன்றிரவு நான் தேன்புழு என இனிமையில் திளைத்தேன், அனலில் என வெந்துருகவும் செய்தேன்” என அபிமன்யூ சொன்னான்.


இவ்வாறு  உணர்வின் தாக்கத்தில் இருக்கும் அவனைப் பித்தனெனக் காண்கிறான் பிரத்யும்னன். ஆம் இந்த உலகவாழ்வின் ஆசைகள்,  இன்பங்கள், நோக்கங்களால் கண்கள் மூடப்பட்டிருக்கும் பிரத்யும்னனால் அபிமன்யுவின் உணர்வுகளை பித்து என்றுதான் அறிய முடியும் .வந்த தருணம் முதல் அவன் அபிமன்யூவின் தோற்றத்தை விந்தையுடன் நோக்கிக்கொண்டிருந்தான். ஆசுர நிலத்திலும் உபப்பிலாவ்யத்திலும் அவன் கண்ட அபிமன்யூ முழுமையாகவே தன்னை உரித்து விலக்கி உள்ளிருந்து புதியவனாக எழுந்திருந்தான். கள்வெறிகொண்டவன்போல கண்கள் 

கலங்கியிருந்தன. முகம் பித்தர்களுக்கே உரிய கலையாப் புன்னகை கொண்டிருந்தது. சொற்கள் தெய்வமேறியவன் நாவிலிருந்து என ஒலித்தன. 
அதே நேரத்தில் அபிமன்யுவிடம் இருந்து வரும் சொற்களை வெறும் பித்தனின் சொற்கள் என்று தள்ளிவிட முடியவில்லை.  ஏனென்றால் பித்தனின் வாயிலிருந்து வருபவவை அந்தப் பித்தன் தான் முழு உண்மையென அறிவது. அதில் எவ்வித சூழ்ச்சியோ, உள்நோக்கமோ, கரவோ, சுயநலமோ இருப்பதில்லை. அவன் கூற்று  முற்றிலும் அர்த்தமற்று இருக்கவேண்டும் அல்லது முழுமையான உண்மையாக இருக்கவேண்டும்.  அபிமன்யு  சொல்வதை அவன் சட்டென்று புறந்தள்ளமுடியாமல் போகிறது.பிரத்யும்னன் உளம் அதிர்ந்தான். அதை விழிகூர்ந்து உளம் தெளிந்து சொல்லியிருந்தால் அந்த திடுக்கிடல் இருந்திருக்காது என தோன்றியது. பித்துவிழிகளுடன் சொல்லப்பட்டதனாலேயே அது மானுடம் கடந்த கூற்றென ஒலித்தது. 
   


அப்பேருண்மையின் மனித உருவென கிருஷ்ணர் இருக்கிறார். அவரை வெறும் தந்தையென, அரசனென, எதிரியென அல்லது தனக்கு உதவுபவனென  பார்ப்பது எல்லாம் குறைபட்ட பார்வையே. அவனை முழுதுமாக பார்க்க இயலாது.   எனினும் அவனை முழுமையாக நேசிப்பவர்களுக்கு அவனுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருக்கு  அவன் குழந்தையாக காதலானாக நண்பனாக தோன்றி பின்னர் பேருண்மை எனும் தன் விஸ்வரூபதைக்  காட்டுகிறான். அதைக் கண்டவர்கள் இனி எப்படி அவனை அகலமுடியும். தன் தனித்த இருப்பை இழந்துவிட்ட அவர்கள் வெளியுலக பற்றுக்களை நீங்கிய பித்தரென்று தமக்கென்று உண்ர்வு நோகமென ஏதுமற்ற அவரின் அடிமைகள் என்று  மட்டும்தான்இருக்க முடியும்.   அவனை மறுதளிக்காமல் பழிக்காமல், மனதில் அவன்பால் ஏதாவது விரோதம் கொள்ளாமல்   ஒருவர் தமக்கென ஒரு இருப்பை அடைய முடியாது  என்பதை வெண்முரசு நமக்கு இப்பகுதியில் கூறுகிறது.
தீ


ப்திமான் “பித்தனென்றே ஆகிவிட்டார்” என்றான். “ஆம்” என்றான் பிரத்யும்னன். “அவரால் மானுடரை அப்படி ஆக்க முடியும். அவர் அருகிருப்பவர்கள் அவருக்கு அடிமைகளே. அவரிடமிருந்து விலகி ஓடுபவர்கள் மட்டுமே தான் என்று உணர்ந்து தனிவழி காணமுடியும்…”

தண்டபாணி துரைவேல்

Sunday, November 19, 2017

பண்டவர்களும் மைந்தர்களும்

அன்புள்ள ஜெ,


உபபாண்டவர்கள் பாண்டவர்களின் அதே குணங்களைக்கொண்டிருக்கிறார்கள். தருமனின் மைந்தர் தருமனைப்போலவே இருக்கிறார்கள். ஆனால் கூர்மையான வேறுபாட்டையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் மேலும் சிரிப்பும் கற்பனையும் நெகிழ்வும் உள்ளது. சொல்லாமலேயே இந்த வேறுபாட்டை உணர்த்தி எழுதுவது ஒரு அரிய கலை.

இது ஏன் என்பதை நான் கூர்ந்து வாசித்தேன். எனக்கு தோன்றியது இதுதான். பாண்டவர்கள் அடைந்த துன்பம் அவமதிப்பு மோசடியாக நிலம் பிடுங்கப்பட்டது எதையுமே உபபாண்டவர்க்ள் பொருட்படுத்தவே இல்லை. அவர்களைப்பொறுத்தவரை அதெல்லாமே முந்தைய தலைமுறையின் பழங்கதைகள். ஒன்பதுபேருக்குமே பழிவாங்கும் எண்ணம் ஏதும் இல்லை. அவர்கள் அதைப்பற்றி பேசிக்கொள்ளவே இல்லை.இதுதான் ஆச்சரியமானது. அவர்கள் மிகவும் மனவிடுதலையுடன் இருக்கிறார்கள். இந்த அம்சம்தான் அவர்களை வேறுபடுத்துகிறது

மனோகரன்


ட்த்

நெறியமைப்பவன்அன்புள்ள ஜெ

ஓர் உச்சநிலைக்குப்பின்னர் மிக இயல்பாக அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கிறது. அதில் நடக்கும் நீதிவிவாதம் இயல்பாக ஒரு அத்தியாய வளர்ச்சிக்காக என்று தோன்றினாலும் ஆழமானது. அது முன்வைக்கும் கேள்விகள் இரண்டு

ஒன்று அரசாங்கம் ஒரு சமூகத்தை ‘செயல்பட வைக்கலாமா கூடாதா? அரசாங்கம் அதை நிர்வாகம் மட்டும்தான் செய்யவேண்டும். காவலும் கண்காணிப்பும் மட்டும்தான் அதன் வேலை. அதை உண்டுபண்ணுவதோ மாற்றியமைப்பதோ அதன் ஃப்ளோவில் தலையிடுவதோ அல்ல என்பது தான் பழைய முறை. அரசன் அறத்துக்கு கட்டுப்பட்டவன். அரசும் குடிமக்களும் எல்லாருமே அறத்திற்குள் இருப்பவர்கள். அரசன் அறத்தை கட்டுப்படுத்தவோ மாற்றவோ கூடாது. ஆகவே அவன் வழ்க்கைகளில் தலையிடக்கூடாது

இன்னொன்று ஒரு நீதியை மக்கல் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்கள். ஒருவன் எந்த நீதியில் பிறந்து வளர்ந்தானோ அதைத்தான் கடைப்பிடிப்பான். அவன் கற்றுக்கொண்டது அவனைக் கட்டுப்படுத்தாது. ஆகவே ஒரு புதிய நீதிநெறியை கொண்டுவர ஒரு புதிய சமூகத்தை ஆக்கியே ஆகவேண்டும். அதைத்தன கிருஷ்ணன் செய்கிறான்


எஸ். ஆர்.சீனிவாசன்

மாமலர் வருகை

ஜெமோ,
                   ஒரு நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு மாமலர், குழந்தைகள் தினத்திற்கு அடுத்த நாள் கையில் கிடைத்தது. 

கிழக்குப் பதிப்பகத்தார், பீமன் எனும் குழந்தையை  இத்தினத்தில் கிடைக்கச் செய்தது ஏதோ குறிப்பணர்த்துவது போலத் தோன்றியது.

இந்த அடுமனையாளனின் பெருங்காதலில் கரைய ஆரம்பித்திருக்கிறேன்.

அன்புடன்
முத்து

குறிப்பு: 

இதே நாளில் என்னுடைய இரு கடிதங்களும் உங்களுடைய இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது எனக்கு மேலும் உவகையளித்து காற்றில் மிதக்கச் செய்தது. அதை சிலாகித்து என்னுடைய தளத்திலும் ஒரு பதிவை எழுதியுள்ளேன். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.


முத்து

தன்னந்தனி நின்றதுதான் அறிதல் (எழுதழல் -53)


    
    “துவாரகையின் அவையைப்பற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசப்பேரவை அது. ஆறாயிரம் இருக்கைகள். வணிகர்கள், மாலுமிகள், அயல்தூதர்கள், குடித்தலைவர்கள், அந்தணர், முனிவர் என்று ஆறு பெரும்பிரிவுகள். ஒன்றிலும் இன்னமும் ஒருவர்கூட வந்தமரவில்லை” என்றார் சுதமர். அபிமன்யூ அதன்பின்னரே அதை முழுதுணர்ந்து “குடிகள் கூடவா?” என்றான். “எவருமே” என்றார் சுதமர். அத்தனை இருக்கைகளும் ஒழிந்துள்ளன. அந்தணரும் வணிகரும்கூட அவைபுகவில்லை.”
      

 ஆம்.  கிருஷ்ணர் தனிமை படுத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.  எதிரிக்கு அஞ்சி நாடோடிகளாக திரிந்து, வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கு  ஒரு நாட்டை  உருவாக்கித் தந்து, ஒரு பெரு நகரை கட்டமைத்து,  சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கான நெறிகளை ஏற்படுத்தி, வணிகம், தொழில்களைப் பெருக்கி, மற்ற நாடுகளின் அங்கீகாரத்தை பெறவைத்து எதிரிகள் மீண்டும் தொல்லை தராதவண்ணம் அவர்களை படையெடுத்து வென்று ஒரு நல்வாழ்வை உருவாக்கி தந்தவர் கிருஷ்ணர்.   இன்று அவரால் இவ்வாறு  பலன்பெற்ற அதே மக்கள் அவரை முற்றிலுமாக கைவிட்டு செல்கின்றனர்.    அந்த மக்களின்  உளநிலையை வெண்முரசு நுட்பமாக சொல்கிறது. 


துவாரகையின் முதன்மைக் குடித்தலைவர் அனைவரும் கிளம்பிச் சென்றனர். இரண்டாம் குடித்தலைவர்கள் அனைவரும் இங்கேயே இருந்தனர். அவர்கள் இங்கிருப்பது தயங்கியோ அஞ்சியோதான் என நினைத்தோம். இங்குள்ள எஞ்சிய யாதவர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் சென்றவர்களின் ஆணைகளை முறையாக கொண்டுசென்று சேர்ப்பதற்காகவும் என்று இப்போது தெரிகிறது” என்றார் ஸ்ரீதமர்.      
இளைய யாதவர் எவ்வகையிலும் யாதவக் குடிகளுக்கு தலைவரல்ல என்று அங்கே சொல் திரண்டிருக்கிறது. அதை அவருக்கு அறிவிக்கும் தருணமாக இதை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அத்தனை யாதவக் குடிகளும் அதற்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்.

       மிக உயர்ந்த நபரின் அருகில் இருப்பவர்களுக்கு  இயல்பாக ஏற்படும் உளவியல் சிக்கலாக இது இருக்கிறது. அவர்களுக்குள்  இருக்கும் ஆணவம் அந்த உயர்வை சகித்துக்கொள்வதில்லை. 


“அவர்களுக்குள் ஏதோ ஒன்று நிறைவு கொள்கிறது” என்றான் பிரலம்பன். “எது?” என்றான் அபிமன்யூ. “ஆணவம், கருவிலேயே உட்புகும் முதல் மலம்” என்றான் பிரலம்பன். “அதை எப்படி அறிந்தீர்?” என்றான் அபிமன்யூ. “நானும் மனிதனே என்பதனால்” என்று பிரலம்பன் சொன்னான்.

          யானை எப்போது இறந்து விழும் அதைத்  தின்னலாம் என காத்திருக்கும் சிறு நரிக்கூட்டம் போன்று அந்த உயர்ந்தவனின்  வீழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள்.  எப்போது அவர் ஒரு சிறிய தவறையாவது செய்வார்,  அதைப் பெரிதாக்கி அவரை வீழ்த்தலாம் என காத்துக்கொண்டிருதவர்களாக் அவர்கள் இருக்கின்றனர்.    அதற்கு காரணமாக கொள்கை என்றும் மக்கள் நலம் என்று தன்னையும் மற்றவர்களையும் பல சொற்கள்கொண்டு விளக்கி ஏமாற்றுகிறார்கள்.  அதையெல்லாம தாண்டி அவர்களுல் உறைவது ஓநாயின் பசிபோல் இருக்கும் அவர்களின் அகங்காரம்.   தனது சுயநல அற்ப நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள  இரகசிய வேட்கைகொண்டு காத்திருக்கிறார்கள். அதற்கான சூழல் அமைகையில்  அவர்கள் தன் கோரைப்பற்களைக்காட்டி சீறி எழுகிறார்கள்.  அந்த உயர்ந்தவரை பழித்து விலகி ஓடுகிறார்கள் அல்லது கூட்டாகச் சேர்ந்து பாய்ந்து தாக்குகிறார்கள்.  

        கிருஷ்ணர் யாதவர்களை ஷத்திரியர்களுக்கு இணையாக உயர்த்துகிறார். தாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை என நாம் கூறினால்  தம்மை விட தாழ்ந்தவர் யாரும் இல்லை என்பதையும் கொள்ளவேண்டும் அல்லவா?   ஆனால் யாதவர்கள் அசுர குடிகளை தம்மைவிட கீழானவர்களாக கருதுகிறார்கள். அவர்களை இதுவரை ஒடுக்கிவைத்திருந்த அதே வேதநெறியை தம் கையில் எடுத்துக்கொண்டு  தமக்கு கீழ்படியில் இருக்கும் மற்றவர்களை ஒடுக்க நினைக்கிறார்கள்.  எதிரியின் சிறுமையை இடித்துரைத்து  அதற்காக அவர்களை தண்டிக்கவேண்டும்.  ஆனால் என் சிறுமைகளை நான் அப்படியே வைத்துக்கொள்வேன் எனக்கொள்கின்றனர்.  அதையும் மாற்றிக்கொள்ளச் சொன்னால் அப்போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல்  குல மேன்மை,  நெறி, மரபு, பாரம்பரியம், போன்றவற்றை பேசுகிறார்கள். இதே காரணங்களைக் காட்டித்தான் அவர்கள் இதற்கு முன் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மக்களின் இந்த கீழான குணம் மாறவேயில்லை என்பதை நாம் கண்டுவருகிறோம்.  இதற்கு வாகான ஏதாவது ஒரு காரணமாக, இனம், மதம், குலம், சாதி, பதவி, செல்வம்  என எதையாவது கையில் எடுத்துக்கொள்கிறார்கள். தன்னைவிட பிறரை தாழ்த்திக்கருதும் சிறுமையை மக்கள் தம் மனங்களில் நிறைத்திருக்கிறார்கள்.     தம் சிறுமையான நோக்கங்களை மனதில்கொண்டு அவருடைய உயரிய நோக்கங்களை பழிக்கிறார்கள்.  அவரை தனிமை என்ற  சிலுவையில் அறைய முயல்கின்றனர்.  அவரை கொன்றொழிக்கவும் தயங்குவதில்லை


    ஒரு உயரிய மனிதர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காகவென இருக்கமுடியாது. அவரால் அனைத்து உயிர்க்குலத்தையும்  சமமானவராகவே கருதமுடியும்.  ஒட்டுமொத்த மக்களின் நன்மையை கருத்தில் கொண்டே அவர் செயல்படமுடியும்.   கிருஷ்ணர்  அப்படி ஒரு சமத்துவ சமூகத்தை எதிர் நோக்கியே தன் செயல்பாடுகளை மேற்கொள்கிறார். இது அவரின் யாதவ குடிகளுக்கு ஒவ்வாமல் போகிறது. அவருடைய பிள்ளைகளே எதிர்க்கிறார்கள்,  அவரின் தமையனே எதிர்க்கிறார் என்பதை எடுத்துக்காட்டாகக் காட்டி அவர்கள் அவர் தங்களுக்காக செய்த நன்மைகளையெலாம் கருதாமல் புறந்தள்ளி அவரை மறுதளித்து விலகிச் செல்கின்றனர்.


      இவையெல்லாம் அரசியல் காரணங்கள்.  அதற்கப்புறமும் தாண்டி கிருஷ்ணரின் தனிமைக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. கிருஷ்ணர் தன்னை பரம்பொருளாக அறிந்திருப்பவர். 
 “அங்கு அவரிடம் சொல்லாடிக் கொண்டிருக்கையில் அதை என்னால் உணரமுடியவில்லை. அறைவிட்டு வெளியே வந்ததுமே உள்ளே நான் கண்டதென்ன என்று என் உள்ளம் திடுக்கிட்டது. எட்டு மங்கலங்களுடன் கூடிய இறையுரு. பிறிதொன்றும் அல்ல.”
அவரே பிரம்மமென ஆகி நிற்பவர். 

  பிரம்மம் என்பது அனைத்தையும் தாண்டி உயர்ந்த சிகரத்தின் உச்சி. ஆகவே அது ஒன்றேயென ஆனது.
  பிரம்மம் என்பது முடிவிலி. அதன் அருகமைந்தவை என என எவையுமன்றி அமைந்திருப்பது.
  பிரம்மம் என்பது பிரபஞ்சம் அதிலிருந்து வேறுபட்டு என எதுவும் இருப்பதில்லை என்பதால் அது ஒற்றை இருப்பு.
  பிரம்மம் என்பது ஞானம்.  வேறெந்த அறிவும் அதனருகில் அஞ்ஞானாமென ஆவதால் அது தனித்துவமானது.
  பிரம்மம் என்பது பேரியற்கை. அதற்கன்னியமானது என எதுவும்  இல்லாததால் அது கொண்டிருப்பது தன்னந்தனிமை.

   மனிதன் தன் திறனென்று தன் நோக்கமென்று  தன் அறிவென்று  கொள்வதெல்லாம்  அப்பிரம்மத்தை அடைவதற்கு  தடையாக இருக்கின்றன.   தன் திறனெல்லாம்  தனதில்லை  எனதறியாமல், தனக்கான நோக்கமென தனித்தெதுவும் இல்லை என ஆகாமல், அறிவென இருப்பதெல்லாம் அறிவல்ல என உணர்ந்து அவையெல்லாம தன்னிடமிருந்து அறாமல்,  அந்தப்  பிரம்மத்தை அறிய, அதாகவே ஆகி நிற்க இயலாது. பிரம்மமென அவர்கொண்ட தனிமையையே அவர் இப்படிக் கூறுகிறார்.

 
“நான் எப்போதும் முற்றிலும் தனிமையில்தான் இருக்கிறேன், மைந்தா” என்று இளைய யாதவர் சொன்னார்.
  இதை எப்படி ஒருவரால் முழுதாக விளக்கமுடியும் என்று தோன்றவில்லை. கந்தர் அனுபூதியில் 'தன்னந்தனி நின்றதுதான் அறிய இன்னம் ஒருவருக்கிசைவிப்பதுவோ?' எனச் சொல்லப்பட்டிருப்பது இதைத்தான் அல்லவா?

     அதே நேரத்தில் அவனுடைய அவையை  நிறைப்பவர்களின் கூட்டம் ஒன்று எப்போதும் இருக்கிறது.
இன்றல்ல, என்றும் அவருடைய அவை அவருக்குரியவர்களால் நிறைந்திருக்கும், பிரலம்பரே. இப்புவி உள்ளவரை அவரது அவை ஒழியாது” என்றான் அபிமன்யூ.அவனுக்கு என்றென்றைக்கும்  உரியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவன்பால்  காதல் கொண்டவர்கள். அவனன்றி வேறு நோக்கமற்றவர்கள்.  அறிவொன்றொற நின்று அவனை அறிந்தவர்கள். அவன் அருகாமையில் எப்போதும் இருக்கும் திறனை நாடுபவர்கள். 


“நான் பிறிதொன்று எண்ணினேன், என் முழுதுளமும் என்ற சொல் என்னுள் எழுந்து அலையடிக்கிறது. இளவரசே, அவருக்கு அளிப்பதற்கு சில நம்மிடம் உள்ளதென்பதே எவ்வளவு பெரும்பேறு! கொள்க என அவர் காலடியில் படைப்பதற்கு நம் மூதாதையர் நமக்கு அளித்தது இந்தப் புன்தலை, நாம் அவருக்கெனத் திரட்டிய இவ்வுள்ளம்” என்றான் பிரலம்பன்.


.  இத்தகையவர்களாலல்லாமல் அந்த அவையில் வேறு யார் அமர்ந்தாலும் அது பொருத்தமற்று போகும் அல்லவா?

மீண்டும் ஒழிந்துகிடந்த பேரவையை நோக்கியபோது அதில் வெறுமை தெரியவில்லை. அங்கே மானுடரென எவர் அமரமுடியுமென்றே தோன்றியது. நாளை ஓர் அவையில் அங்கே மானுடர் அமர்ந்திருப்பார்களென்றால் உளம் சீற்றம் கொள்ளும் என எண்ணினான்.  


   கிருஷ்ணனின் பேரவை விரிந்து விரிந்து சென்றுகொண்டிருக்கிறது.   துவாரகை தன் எல்லைகளை வளர்த்துக்கொண்டே போகிறது. ஆனால் அது மண்ணில் நிகழவில்லை. பக்தர்களின் மனங்களில் விரிகிறது. 


தண்டபாணி துரைவேல்

Saturday, November 18, 2017

ஆயிரம்அன்புள்ள ஜெ,

மாமலர் செம்பதிப்பு, கூரியரில் அனுப்பப்பட்டு விட்டதாக நேற்று (15-Nov) காலை பதிப்பகத்தில் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. மாலையில் வீடு திரும்பும்போதே புத்தகம் வந்திருந்தது. சென்னையில் வசிப்பதன் அனுகூலம். செம்பதிப்பை முன்பதிவு செய்த பிறகு, பதிப்பகத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்பி ஆசிரியரின் கையெழுத்து வேண்டுமா, எனில் என்ன பெயருக்கு என்று சிரத்தையாக விசாரித்திருந்தார்கள். புத்தகத்தைப் பிரித்து, என் பெயரை குறிப்பிட்டு நீங்கள் போட்டிருந்த கையெழுத்தைப் பார்த்ததும் பெரும் மகிழ்ச்சி. நன்றி!

இம்முறை, அழகிய அட்டைப்படத்தைத் தவிர வேறு படங்கள் இல்லை. பேருருவனைப்பற்றிய வாசகர்களின் மனச்சித்திரங்களைக் குறுக்க வேண்டாம் என்பதனால் இருக்கலாம். அட்டையைப் பார்த்தவுடன் மாமலர் என்பதை மாமல்லர் என்றே படித்தேன். பொருத்தம்தானே?

கூரியர் பார்சலில் மாமலரோடு அலமாரி என்ற புத்தக விமர்சன மாத இதழும் இருந்தது. அதில் "கடல் தாண்டிய கதாநாயகன்" என்ற முனைவர் கு. ஞானசம்பந்தனுடைய நூலுக்கு "ராம தூதனாக கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றவர் அனுமார். சிரஞ்சீவி வரம் பெற்றவர். ராமாயணம், மஹாபாரதம் இரண்டிலும் இடம் பெற்ற ஒரே கதாபாத்திரம்" என்ற குறிப்பு வெளியாகியிருந்தது. சிரஞ்சீவியான அவர் மாமலரிலும் முண்டனாக பீமனுக்குத் தரிசனம் தருகிறார். உங்கள் சொற்களின் வழியாக வாசகர்களுக்கும்.

மாமலர் இணையத்தில் வெளியானபோது, ஒவ்வொரு நாளும் கதை கேட்கும் சிறுவர்களுக்கான உற்சாகத்துடன் படித்து வந்தேன். பீமனின் மாமலர் தேடும் பயணம் அவருக்கும் அவரது முன்னோர்களுக்கும் இடையேயான கனவு விழிப்பு விளையாட்டாக முண்டனால் அவருக்கே உரிய சேட்டைகளுடன் நடத்திச் செல்லப்படுகிறது. சந்திரனில் ஆரம்பித்து புரு வரையிலான பீமனின் முன்னோர்களின் வாழ்வு சுவாரசியமாக விரிகிறது.

மாமலரில், வெண்முரசு வாசகர்களுக்கு ஒரு கொண்டாட்டத் தருணம் உள்ளது. மாமலரோடு வெண்முரசு ஆயிரம் அத்தியாயங்களைக் கடந்து செல்கிறது. மாமலரின் வேர்விளையாடல் என்ற 89ஆவது அத்தியாயம், வெண்முரசின் ஆயிரமாவது அத்தியாயம். வாசித்துக் கொண்டாடுவோம். நன்றி!

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை

பலராமர்ஜெ,
பலராமரின் கதாபாத்திரம் மூலபாரதத்திலேயே பெருங்கோபமும் கருணையும் கள்ளமற்றதன்மையும் கொண்டதாகவேஉள்ளது. அதை நீங்கள் நாடகீயமாக விரித்திருக்கிறீர்கள். அதை வாசிக்கையில் பலவகையான பெரிய கதாபாத்திரங்கள் நடுவே அர்த்தமில்லாமல் வந்து சென்ற கதாபாத்திரம் என்று பலராமரை நினைத்துவிட்டோமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. அதோடு அவர் கௌரவர்தரப்பில் நின்றார் என்பதை சின்னவயசில் எப்போதோ கதைகளில் கேட்டிருக்கிறேன். அதிலிருந்தே அவரை பீஷ்மர் துரோணர் வரிசையிலே மனம் வைத்துவிட்டது. அவரை ஒரு பெரிய கதாபாத்திரமாக எண்ண முடியவில்லை.

அவர் எல்லா சொற்களையும் மனப்பாடம் செய்துகொள்வதும் கணிகர் சொன்ன ஒரு சிறுமை அதை உணராமல் சொன்ன கௌரவர்கள் வாய் வழியாக வந்தபோது அனைத்தையும் மறந்து மூர்க்கம் கொள்வதும் அபாரமான ஒரு சித்தரிப்பு. அவருக்கும் யௌதேயனுக்குமான உரையாடலே அருமை. அவர் யௌதேயன் சொன்ன எதையும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் மைந்தன் இப்படி எல்லாம் பேசுகிறானே என்று மகிழ்ச்சி அடைகிறார்.

பெருந்தன்மை ஒரு அரிய குணம்தான். ஆனால் பெருந்தன்மையைப்புரிந்துகொள்வதும் அதன் முன்னால் கருணையுடன் கசிந்து உருகி அதைவிடப்பெருந்தன்மையை வெளிப்படுத்துவதும்தான் மேலும் பெரியாரள் செய்யும் செயல். அதை அவர் செய்கிறார். அந்த உயர்வு விழிகளில் நீரை வரவழைத்தது


ஜெயராமன்

மதம்ஜெ,

தொடர்ந்து துரியோதனன் தன் பெருந்தன்மையால் ஜெயித்துக்கொண்டே வருகிறான். கர்ணனை அவன் தன் பெருந்தன்மையால் வென்றது மகாபாரதக் கதை. பூரிசிரவஸையும் சல்ய்ரையும் அப்படித்தான் ஜெயிக்கிறான் என்று வெண்முரசு காட்டுகிறது. இப்போது பலராமரையும். அவனுடைய கதாபாத்திரம் இந்த அறநிலை கொண்டதாக உள்ளது. ஆனால் அவனுக்க்ள் இருக்கும் மண்ணாசை அவனை பிடிவாதக்காரனாகவும் எல்லா தீமைகளையும் உருவாக்குபவனாகவும் ஆக்குகிறது

அதேபோல தருமன் அறச்செல்வன். ஆனால் அவனுக்குள் ஒரு தந்திரபுத்தி உறைகிறான். அவனுக்கும் மண்ணாசை உண்டு அதை அடக்கி வைக்கிறான். அடக்கி வைத்தது வெவ்வேறு வடிவங்களில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அவனுடைய அலங்காரம் செய்துகொள்ளும் ஆசையே கூட இதன் குறியீடுதான்

அதைத்தான் யௌதேயன் சொல்கிறான். யானையின் மொத்த உடலின் ஆற்றலும் அதன் மதமூறும் சிறு துளைக்குச் சமம். அந்தத்துளை இத்தனை ஆற்றலையும் இல்லாமலாக்கி அதை வேறு ஒன்றாக ஆக்கிவிடக்கூடும். ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது அப்படி ஒரு மதமூறும் வழி


சீனிவாசன்

அணிகொண்டெழுதல் (எழுதழல் - 51)


      அழகு   என்ற கருத்தாக்கத்தை  தத்துவ ரீதியாக அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களைப்  பார்த்திருக்கிறோம்.  அழகு என்பது நம் மனதைக் கவர்ந்து உலகியலில் இறுத்திக்கொள்ளக்கூடியது அது ஞானத் தேடலுக்கு எதிராக அமையும் என்று கூறப்படுகிறது.  உலகில் எவ்வளவோ துன்பங்களும் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளும் இருக்கும்போது அழகு என்பதே ஆடம்பரமான ஒன்று  என சொல்பவர்கள் அதிகம்.  ஆனால் அழகாய் இருக்க விழைதலும்   அணிகளைக்கொண்டு அழகுபடுத்துதலும் எப்போதும் இயற்கையின் ஒரு கூறாகவே இருந்துகொண்டிருக்கிறது.  மனிதர்கள் அனைவருக்கும் அழகுணர்ச்சி எப்போதும் இருக்கிறது.  சிறு பிள்ளைகள்கூட அணிசெய்துகொள்ள விரும்புகின்றன. ஆடைகளும் அணிகளில் ஒன்றாகிப்போகிறது.   விழாக்கள்  அனைத்திலும் அலங்கரித்தல் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.  துன்ப நிகழ்வுகளிலும் கூட  அலங்கரித்தல் என்பது இல்லாமல் இல்லை.   விழாக்கள் இல்லாத சமயத்தில்கூட தம்மை அலங்கரித்துக்கொள்வதை யாரும் நிறுத்திவிடுவதில்லை. அழகாய் இருக்க விழைதலும், அழகால் கவரப்படுதலுமான உணர்வுகள் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் கூட இருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம். 

   அணிசெய்வது என்பது உயிர்களைத் தாண்டி இயற்கையில் அனைத்து கூறுகளிலும் இருக்கிறது.  மரங்கள் தன்னை பூக்களால்,  கனிகளால், அவற்றை நாடிவரும்  பூச்சிகளால், பறவைகளால்   அழகு செய்துகொள்கின்றன.  நதிகள் தன்னை தாவரங்கள் அடர்ந்த கரைகளால் அணிசெய்துகொள்கிறது.   நீர் நிலைகள்,  வண்ண மலர்செடிகளால், துள்ளி விளையாடும் மீன்களால்  அணிசெய்யப்படுகின்றன.   பூமி  தன்னை மலைகளாலும் வனங்களாலும் பனிபோர்வைகளாலும் அணி செய்துகொள்கிறது. வானம் தன்னை விதவிதமான மேகக் கூட்டங்களால், சுடர் வீசும் சூரியனால், குளிரொளி பொழியும் நிலவால் மினுமினுக்கும் விண்மீன்களால், அவ்வப்போது ஆரமென சூடிக்கொள்ளூம் வானவிற்களால் அலங்கரித்துக்கொள்கிறது.  நிலம் நதிகளால் அணிசெய்யப்படுகின்றது.  பெரும் சமுத்திரங்களை, காற்று அலைகளை, சுழல்களை உருவாக்கி அணிசெய்கிறது.  காற்றை நெருப்பு தன் தனலிதழ்களால் அணி செய்கிறது.  பெருகி எரியும் தீக்கு  அணி முடியென ஆகாயம் திகழ்கிறது. அந்த ஆகாயம்  பிரபஞ்சத்தின் பல்வேறு கூறுகளால் அணிசெய்யப்பட்டிருக்கிறது.   இப்பிரபஞ்சமே அந்தப் பரப்பிரம்மம் தனக்கு அணியென சூடிக்கொண்ட ஒன்றென ஆகி  நிற்கிறது.  
  நம் எண்ணங்களை  சொற்களால் அணிசெய்துகொள்கிறோம்.  சொற்களை மொழியும், மொழியை சொற்களும் ஒன்றை ஒன்று அணிசெய்துகொள்கின்றன.   அன்றாட செயல்களை பாவனைகளால் அழகுபடுத்துகிறோம். உலகில்  நம் இருப்பை வாழ்வதன் மூலம் அணிசெய்துகொள்கிறோம்.  வாழ்வதின் அணிகளென நம் செயல்களால் ஈட்டும்  புகழ்கள் விளங்குகின்றன.  அதன் இறுதிஅணியென   இறப்பு அமைகிறது.  அந்த இறப்பின்  அணியாக இல்லாமை விளங்குகிறது.

     நாம் அணி செய்துகொள்வது நம் மேல் நாம் கொண்டிருக்கும் அன்பைக் காட்டுகிறது. சில சமயம் நாம் பிறர் மேல் காட்டும் அன்பை அவர்களுக்கு அணிசெய்வதன் மூலமாக காட்டிக்கொள்கிறோம்.  ஒரு குழந்தையை பெற்றெடுத்து பேணி வளர்ப்பது ஒரு கடமை.  ஆனால் நம் கடமையைத் தாண்டி அக்குழந்தைக்கு நாம் ஏதாவது செய்ய விரும்புகிறோம்.  அக்குழந்தையை அணிகளால் அழகு செய்கிறோம். குழந்தை எவ்வளவு அழகுவாய்ந்தது. இருப்பினும் நாம் அதற்கு அணிசெய்வது நம் அன்பைக் காட்டுவற்காக  மட்டுமல்லவா?  அணிகள் என்பவை அழகை கூட்டுபவை. ஆகவே அணிகள் அழகில் நுண்மை கொண்டவையாக இருக்கின்றன.  மலரில் பார்த்த நுண்மையை, வானில் பார்த்த விண்மீன்களில் ஒளிச் சிதறல்களை, வண்ணக் கோலங்களை, எல்லாம் நாம் அணிகலன்களில் நிகழ்த்துகிறோம். 


    "அணிகளால் குழந்தை மலர்கிறது. கன்னியர் கனிகிறார்கள். அன்னையர் நிறைவுறுகிறார்கள். அரசர்கள் மாண்புறுகிறார்கள். தெய்வங்கள் விழியுருக் கொள்கின்றன. அணிகளன்றி அவர்களுக்கு அளிக்க மானுடனிடம் ஏதுமில்லை. அணிகள் அழகென மானுடன் அறிந்தவற்றின் நுண்செறிவு. அவன் விழிகொண்ட தவத்தை கைகள் அறிந்ததன் சான்று. ஆக்கி அழிக்கும் தெய்வங்களுக்கு முன் பணிந்து அவன் காட்டும் ஆணவம்."

    இதோ அந்தப் பேரிறை நம் பொருட்டு கனிவுகொண்டு ஒரு திருவுருக்கொண்டு சிலையென கோயிலில் எழுந்தருளுகிறது.  அதன் பெருங்கருணையின் காரணமாக நம்முள் பெருகும் பக்தியெனும் அன்பால் நாம் அதை அலங்கரிக்கிறோம். தூய ஆடைகள் கொண்டு, பொன்னால். மணிகளால், பலவண்ன மலர்களால், சந்தனம் போன்ற நறுமணப்பூச்சுகளால் அலங்கரிக்கின்றோம். அவ்வளவு செய்தும் மனம் இன்னும்  எதைக்கொண்டு அணி செய்யலாம் என ஏக்கம் கொள்கின்றது.   

   அந்தப் பரப்பிரம்மம் ஒரு மனித உருக்கொண்டு  கிருஷ்ணனென உயிர்கொண்டு எழுந்து வந்திருக்கிறது.    உலகில் இதுவரை உருவாகிவந்த அணிகளெல்லாம்  அவனை அணிசெய்ய துடிக்கின்றன. ஆணுக்கென இருக்கும் அணிகள் அதிகம் இல்லை. ஆனால் அவன் ஆணென எழுந்திருந்தாலும் ஆலிலையில் துயிலும் குழந்தையும் அல்லவா?  ஆகவே எவ்வளவு அணிகளைப் போட்டபின்னும் நம் மனம் நிறைவுகொள்வதில்லை. நாம்  அவனை அணிசெய்வது அவனை நம்மவன் என இருத்திக்கொள்ளும் நம் ஆவலின் காரணமாகத்தானே?   அவனை எப்படியெல்லாம் அணிசெய்யலாம் என வெண்முரசு ஏங்குகிறது. 

      " உயர்ந்த அறைக்கதவினூடாக இளைய யாதவர் அரசணிக்கோலத்தில் வெளிவந்தார். பச்சை மரகதங்கள் பதிக்கப்பட்டு தளிரென்று ஒளிவிட்ட பொற்குறடு. இளநீல அருமணிகள் சுடர்ந்த கழல். உருகிவழிந்த பொன் என நெளிவுகள் அமைந்த அரையாடை. அனலொளி கொண்ட வைரங்கள் செறிந்த பொற்கச்சை. அதில் செருகப்பட்ட உடைவாளின் பிடியில் கருடன் செவ்விழி திறந்திருந்தது. பொற்கவசமிட்ட மார்பு. தோளிலையும் புயவளைகளும் கங்கணங்களும் கணையாழிகளும். அணியிலாத ஓர் இடமில்லை. பூத்த மரங்களில் நிகழும் நிறைவு. "
 

    ஆதியிலிருந்தே கிருஷ்ணனின் பிறப்புக்காக இயற்கையன்னை தன்னை ஒருங்கு செய்துகொண்டாள். அவன் சூழலை விதவிதமாக அலங்கரித்துவைத்தாள்.    அவன் நடக்கப்போகும் வழியெல்லாம பசும்புல் கம்பளங்களை விரித்திருந்தாள். அதன் ஓரங்களில் செடிகளை நட்டு அவற்றில் வண்ண வண்ண மலர்களை சூடி வைத்திருந்தாள்.  அவன் செல்லும் பாதையெங்கும் பச்சைக்குடைகளாக கவிழும்படி மரங்களை வளர்த்து வைத்தாள். அவன் காதுகளில் இனிய ஓசைகளை விழச்செய்ய சிறு பறவைகளை பறக்கும் இசைக்கருவிகளென ஆக்கி வைத்திருந்தாள்.  அவனோடு கூடியும் மோதியும் விளையாட  விதவிதமான விலங்குகளை படைத்து வைத்திருந்தாள்.  இவ்வளவு செய்தும் அவள் நிறைவுகொள்ளாமல் தானே  ராதை என்ற பெண்ணுருக்கொண்டு அந்தக் களத்தில் திகழ்ந்தாள். சிறு குழந்தையாய் அவனை தோளில் சுமந்துகொண்டாள்.    சிறு கன்னியாய் அவனை சேர்த்தணைத்து இதம் தந்தாள்.  அவள் அவனுக்கென அத்தனை அணிகளுக்கப்பால் அவன் என்றும் சூட ஒரு அணிகலனை சிந்தித்தாள்.  அது பொன்னால், மணிகளால் ஆனதாக இருந்தால் அவன் உடலை சற்றேனும் உறுத்தும்.  மலர்கள் என்றால் சிறிது நேரத்தில் அவை வாடிவிடும். பட்டாடை என்றால் தன் தூய்மையை சிறிது காலத்தில் இழந்துவிடும்.  ஆகவே    வான்நீலமும்,  அந்திச்சிவப்பும்,  புவிமூடும் பசுமையும் கலந்தமைந்து  தென்றலின் மென்மையை தன்னுள்கொண்டு   என்றும் பொலிவோடமையும்  மயிற்பீலியை  அவனுக்கு அணியென சூட்டி மகிழ்ந்தாள்.  அன்றிலிருந்து எப்போதும் அந்த மயிற்பீலி  அவன் பூணும்  அத்தனை அணிகளுக்கும் மேலாக அவன் சிரத்தின்மேல் அமைந்து  வான் சுட்டி நிற்கிறது.  


   "செம்பட்டு சுழற்றி அதன்மேல் முத்தாரம் சுற்றி வைரமலர்கள் பதித்து இப்புவியின் முதன்மைப்பெருஞ்செல்வம் என்று அமைத்த மூன்றடுக்கு மணிமுடியின் மீது வானிலிருந்து மிதந்து வந்து விழுந்து மெல்ல தைத்து நிற்பதுபோல் மயிற்பீலி காற்றில் அசைந்தது." 
     

அந்த மயிற்பீலி குழலுடன் இணைந்து தோன்றும் கணமெல்லாம் நம் உள்ளத்தில் உறையும் அந்த மாயவனின்  இருப்பை உணர்த்திவருகிறது.

தண்டபாணி துரைவேல் 

Friday, November 17, 2017

அருள்அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

பலராமர் பெருமூச்சுடன் “நான் எவரிடமும் இதுவரை பிழைபொறுக்கும்படி கோரியதில்லை” என்கிறார்.  அதற்கு யௌதேயன் “மைந்தர்பொருட்டே பெரும்பாலான தந்தையர் முதல்முறையாக கைகூப்பி மன்றாடுகிறார்கள், மாதுலரே” என்கிறான் - இந்த இடத்தில் யௌதேயனுக்கு பளார் என்று ஒரு அறை "செய்வதெல்லாம் செய்து விட்டு வியாக்கினமா பேசுகிறாய்?" என்று மனதில் சட்டென்று ஒரு எதிர்பார்ப்பு.  பலராமர் உடனே அதை நிறைவேற்றவில்லை ஆனால் யௌதேயனுக்கு கிடைக்கிறது.

மனம் ஆவலுடன் தாவி மேல் செல்ல அலை கீழே இருக்கிறது.  மனம் தாழ அலை எழுந்து பெரிதுயர்ந்து நிற்கிறது.  ஒன்றை ஒன்று விஞ்சும் ஓங்கில்கள் அடுத்தடுத்து வியப்பில் ஆழ்த்த கணிப்பிற்கு இடம் தராமல் கணத்தில் திசை மாற்றியவாறு செல்கிறது எழுதழலின் விளையாட்டு.  தேர்ந்த சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சு - இவ்வாறென்று கருதி முழுவிசையுடன் மட்டை ஓங்கி வர அங்கொன்றுமில்லை என்று திசை திருப்பிக்கொள்கிறது பந்து.

மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, உருகி பக்தி கொண்டு, கண்களில் நீர் மல்கி, ஆவேசப்பட்டு, சாகசம் எனத் தாவி, காதல் வசப்பட்டு (மாமலர் வாசித்துக் கொண்டு இருந்தபோது தேவயானியை மனப்பூர்வமாக காதலித்தேன்.  உனக்கு என்ன தகுதி என்று நண்பர்கள் யாரும் எண்ணிவிடக் கூடாது.  எப்படியும் நிறைவேறவே வாய்ப்பில்லாத ஒரு தரப்பு காதல் தானே? யாது பிழை?), தத்துவ வசப்பட்டு, தியானம் என்று உவகை பெருகி சொல்லின்றி அமைந்திருந்து, இழை என ஓடும் நகைச்சுவையில் அவ்வப்போது சிரித்து (சில சமயம் பற்கள் காட்டிக்கொண்டு இருக்க "என்ன சிரிச்சிட்டே இருக்க? எனக்கும் சொல்லேன்" என்பாள் அம்மா) ஏகப்பட்ட கடிதங்கள் எழுதி ஒரு சிலது அனுப்பி நிறைய கடிதங்கள் அனுப்பாமல் என்னிடமே வைத்திருக்கிறேன் (அரைக்கிறுக்கென சிலர் அறிவர், முழு கிறுக்கென பலர் அறியவேண்டாம் என எண்ணி.  புஷ்கரனின் சீஷர் மீதான கமெண்ட்டை "அறிவின்மையின் கூர்மையினாலேயே ஒரு தெளிவை அடைகிறார்" எனக்கென வரித்துக் கொண்டு).    

நவம்பர் 1-ஆம் தேதி முதல் வேலையை விட்டுவிட்டேன்.  இனி ஜனவரிக்கு பிறகு தான் வேறு வேலை செல்வேன்.  இரவு பணி, குறைந்த உறக்கம், வாசிப்பதை கிரகிக்க சிரமம், சோர்வு இவையில்லாமல் பதினைந்து நாட்களாக இரவு உறக்கம், வெண்முரசு, நீண்ட நடை என்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.  இனி இரண்டு-மூன்று மாதங்கள் இப்படித்தான்.  இளையோன் பாரியுடன் பாலமலை அரங்கநாதர் கோவிலுக்குச் சென்றேன், மலை மீது உள்ளது - மலைகளும் காடும் சூழ்ந்தது.  வழியில் ஒரு பாட்டியைக் கண்டவுடன் "மூதன்னை" என்றார் பாரி.  கண்ணனை தரிசித்து முடித்தவுடன் அன்னதானக் கூடம் சென்றோம்.  முன்னதாக பாரி "ஊன் உணவு ஒருங்கி விட்டதா?" எனக் கேட்க "ஆம் ஒருங்கி இருக்கும்.  ஆனால் ஊன் இல்லாத உணவு" என்றேன்.  உணவு உண்டு திருப்பினோம்.

இளையோன் யோகேஸ்வரன் ராமநாதனை உவக்கிறேன்.  வெண்முரசின் நாவல்கள் எல்லாவற்றையும் வாசித்து முடிக்க வேண்டும்.


அன்புடன்
விக்ரம்
கோவை

அதிமானுடம்அன்புள்ள ஜெ,

வெண்முரசு வாசிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும், அதன் முதன்மையான ஒன்றாக எனக்குத் தோன்றுவது அதன் அதிமானுட தருணங்களே! அதிமானுடம் என்பது சாகசமோ, வீரமோ அல்ல. ஒரு மானுடன் தன் விழைவை, தான் அரிதென்று கருதிய ஒன்றை ஒரு நியதிக்காக முழு மனதோடு விட்டுக்கொடுக்கையில் விழியில் நிறையும் நீர் தான். அதை நல்கியதாலேயே தந்தையும் மகனும் என் பிரியத்துக்குரியவர்கள் ஆனார்கள். இன்று துரியனும், பலராமரும் சந்திக்கும் தருணம் அத்தகைய ஒன்றே!! நிறைந்த கண்களுடன் எழுதுகிறேன்..

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

மற்போர் கலைஅன்பின் ஜெ,

கிருஷ்ணையின் பொருட்டு படகில் நடந்த மற்போரில் விருஷசேனனிடம் சர்வதன்
தோற்றுபோனான் என்ற செய்தியை  ஜீரணிக்க இயலாமல் கவலையுற்றிருந்தேன். 

{
“மானுடரின் பொதுவான கைகால் நீளம் இவ்வளவுதான் இருக்குமென்று வகுத்து மற்போர் கலை அமைந்துள்ளது. அக்கலை வகுக்காத உயரமும் நீளமும் உடையவர்கள் மண்ணில் பிறக்கையில் இப்படித்தான் ஆகிறது”.
}

இவ்வரிகளினூடாய் சற்றே சமாதானமடைந்தேன்.

பீமசேனன் வசுஷேணனிடம் தோள்கோத்து தோற்கும் சூழல் வந்தாலும்
 "மூத்தவனிடம் தானே தோற்றான்" என்பதை தாண்டி என்னை 
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
இதுவும் ஒரு  காரணமாக இருக்கும்.


- யோகேஸ்வரன் ராமநாதன்.

Thursday, November 16, 2017

காண்டீபம்


அன்புள்ள ஆசானுக்கு ,  
      

நலம் தானே , நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு கடிதம். இப்போது  தான்  காண்டீபம்    படித்து  முடித்தேன். அர்ஜுனனின்  புற  பயணத்தின் வாயிலாக  அவனின்  அகத்தின்   எல்லையை அவன் மீறி  சென்று  தன்னை  கண்டடைந்துகொள்கிறான். ஒவ்வொரு மணங்களின்  மூலமாகவும்  தன்  எல்லையை  அவன்  தாண்டிய  படியே உள்ளான். குந்தியிடம்  தனக்கு கிடைக்காத  ஒன்றை பிற பெண்களிடம்  தேடுகிறான். 
        
உலூபியிடம்  தன்  ஆண்மையின்   எல்லையை கடந்து  நிற்கிறான் .  தன்னுள்  உறையும் பெண்மையையும் அவன் தீண்டி விட்டான் . அதன்  எல்லையையும்  அவன்  கடக்க என்னுகிறான். அதை  சித்ராங்கதனிடம்  கண்டு கடக்கிறான். 
   
      
 உலூபியும்  சித்ராங்கதையும்  இரு வேறு  நிலைகள் இருவரிடமும்  தன் உள்ளம்  ஆணாகவும் பெண்ணாகவும்  மாறி மாறி நடித்து  தன்னை நிறைத்து கொள்கிறான் . 
      
இதே  போல தன்  ஆணவத்தை  சுபத்திரையிடம்   மட்டுமே          மண்டியிட  வைக்கிறான். திரௌபதிக்கு நேர்  எதிர்  நிலையில்  அவளை அவன்  பார்கிறான். திரௌபதியிடம்  தன்  ஆணவத்தை  காட்டி  அவளை  வெற்றி கொள்கிறான். ஆனால் சுபத்திரையிடம்  தன் ஆணவத்தை   மண்ணாக்கி அவளை  வெற்றி  கொள்கிறான்.சுபகை அவன்  அடைந்த  பிற பெண்களின் முகமாக இங்கு வருகிறாள். ஒவ்வொரு பெண்ணிளும் தன்  எல்லையை  கடந்தே  அவன்  முன்  செல்கிறான். 
    
இதில்  அருகர் நேறி குறித்த இடங்களும்  சரி , அரிஷ்டநேமி  குறித்த இடங்களிளும் போர்  பற்றியும்  உயிர் கொலை  குறித்தும்  படிப்பவர்  அகத்தையே  மாற்றிவிட  கூடியது . பார்த்தன்  அந்த  இடத்தில்  தன்னையும் ஒரு  யோகியின்  நிலையில் நிறுத்தி  பார்க்கிறான் ,ஆனால்  இன்னும்  அந்த நிலையை அடையவில்லை ,அந்த  எல்லையை  கடந்து  சென்று  கர்மயோகியாக  அவன்  ஆக இது  ஒரு முதல்  தொடக்கம் . இதுவே  காண்டீபத்தில்  நான்  கண்டடைந்தது. 


   
   இப்படிக்கு ,
உங்கள் மாணவன் ,
பா. சுகதேவ்.
மேட்டூர். 

சாம்பனும் கண்ணனும்அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

சாம்பன் தன்னுள் இளைய யதாவர் எழுதும் தருணம் என சிறுமைகள் கடந்து வீறு கொள்வது எதிர்பார்த்திராததாக இருந்தது.  ப்ரத்யும்னனும் சாம்பனும் மட்டுமே உபயாதவர்களில் போர் புரியக் கூடியவர்கள் என்றாலும் சர்வதனின் முன்பு சாம்பன் தாழ்வுணர்ச்சி கொள்கிறான்.  தன்னை திறன் அற்றவன் என்று உணர்கிறான்.  தக்க சூழ்நிலையில் தன் எண்ணங்களை மீறி வெளிப்படும் திறன் கொண்டு இளைய யாதவரின் நினைவு கொள்கிறான்.  மிகுந்த சுவாரசியம் கொண்டது இந்த அத்தியாயம் என்றால் அடுத்த அத்தியாயம் (எழுதழல் 60) மேலும் சுவை கொள்கிறது.  சாகசங்களின் தொடர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்க பலராமர் - யௌதேவன் உரையாடல்.  வில் திறன் சாகசத்தைப் போல தன் சொல் திறன் சாகசம் காட்டுகிறான் யௌதேவன்.  உபபாண்டவர் அனைவருமே தங்கள் தந்தையர் திறத்தின் கூர்முனை போன்றவர்கள், அதேசமயம் தங்கள் ஊழ் பற்றி, வரும் காலம் பற்றி உள்ளுணர்வு கொண்டு அதன் காரணமாகவே ஒரு சமநிலை கொண்டவர்கள்.

"சொல்லில் ஒரு புனைவு இருந்தே தீரும். ஏனென்றால் சொல் என்பது புறவயமானது. ஆகவே வகுத்துரைக்கப்பட்ட பொருள் அதற்கு இருந்தாகவேண்டும். வகுக்கப்பட்டவை எல்லையும் அளவும் கொண்டவை. உண்மைக்கு அவ்விரண்டும் இருக்க இயலாது. எனவே சொல்லப்பட்ட அனைத்தும் குறையுண்மைகளே.”

சொற்களைப் பயன்படுத்துவதில் வல்லவரும் சொற்களை வழங்குவதில் வள்ளலும் சொற்களின் பேரரசர் போன்ற ஒருவராலேயே இப்படி சொற்களின் எல்லையையும் குறையையும் உண்மையிலேயே உணர்ந்திருக்க முடியும்.          

சொல்லே புனைவுதான் என்று தோன்றுகிறது.  பெற்றோர் இவ்வுடலுக்கு ஒரு பெயர் புனைந்து தர சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்கனவே புனையப்பட்ட பெயர்கள் இருக்க ஒரு புனைவு உலகத்தில் நுழைந்து புனைப்பெயருடன் வாழ்கிறோம் என்றுதான் தோன்றுகிறது.    

சர்வதனும் யௌதேயனும் ஊழுடன் இணைந்து ஒழுக மனம் கொண்டவர்கள்.  தங்கள் திறன்களின் எல்லை உணர்ந்தவர்கள்.

ப்ரத்யும்னனின் மரணம் பற்றி அபிமன்பு அவனிடம் பேசும் போது "பூர்ஜன்" என்று சொல்கிறான்.  அடுத்த அத்தியாயத்தில் "பூர்ஜ மரப்பட்டைகள்" என்றும் போஜர் குடியினன் சவிதன் என்றும் வந்தபோது அதில் ப்ரத்யும்ன் கொல்லப்படும் விதம் பற்றிய குறிப்பு உள்ளது என்று கருதினேன்.  பிறகு எதற்கு அந்த ஆராய்ச்சி என்று உவகை தரும் இத்தருணங்களின் பெருக்கில் அவ்வாறே செல்கிறேன்.  இன்று பலராமரின் வெண்ணிற உடல் "பூர்ஜமரத்தின் அடிபோல" என்று ஓர் உவமை.


அன்புடன்
விக்ரம்
கோவை

வெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்


நட்டாஷா என்ற பெயரை போரும் வாழ்வும் நாவல் படித்தவர்கள் மறந்து விட முடியாது. மிக நுட்பமாக உருவகிக்கப்படும் கதாப்பாத்திரம் அவள். அறிந்தசிறுமியுடன் இளம்பெண்ணுடன் அன்னையுடன் என ஏதோவொரு வகையில் அவளை ஒப்பிடாமல் வியக்காமல் ஏங்காமல் அந்நாவலை படித்து முடித்து விட முடியாது. அத்தனை அணுக்கமானவள் என்பதாலேயே பெரு வாழ்வென எல்லாப் பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் அந்நாவலில் நட்டாஷாவின் முடிவுகளும் குழப்பங்களும் வாசிப்பவர்களை பாதிக்கும். ஒரு நாடக அரங்கில் அனடோல் என்ற ஒழுக்கமற்ற பேரழகனிடம் நட்டாஷா மனமிழப்பதை மிக நுண்மையாக நாடகத்தின் காட்சி மாற்றங்களைக் கொண்டே சித்தரித்திருப்பார் டால்ஸ்டாய். பரிதவிக்கச் செய்யும் அத்தியாயம் அது. ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் தவிக்கும். அதே தவிப்பினை பன்மடங்குத் தீவிரத்துடன் வெண்முகில் நகரத்தின் முதல் பத்தொன்பது அத்தியாயங்கள் அளித்தன.
பாண்டவர்களை திரௌபதி மணந்ததிலிருந்து அஸ்தினபுரி இரண்டாகப் பிரிவது வரையிலான நாவல் வெண்முகில் நகரம். அறத்துணைவியாகவும் இல்லத் துணைவியாகவும் திரௌபதியை பாண்டவர்கள் ஏற்பதற்கான நியாயங்களுடனும் உளம் காட்டும் ஆடியென ஒவ்வொரு பாண்டவனுடனும் திரௌபதி வெளிப்படுவதை சொல்கின்றன முதல் ஆறு பகுதிகள். சகதேவனுடனான அவள் நாட்கள் இடம்பெறும் அத்தியாயங்கள் ஒருவித தீவிரமான அமைதியின்மையை ஏற்படுத்தின. ஆனால் ஒரு தீவிரமான படைப்பினை முதன்முறை வாசிக்கும்போது ஏற்படும் நிலையின்மையே அப்படைப்பை நெருங்க நம்மைத் தூண்டுகிறது என்பது என் எண்ணம். யுதிஷ்டிரனிடம் இணை அரசியென பீமனிடம் விளையாட்டுப் பெண்ணென அர்ஜுனனிடம் ஆணவம் சீண்டப்பட்டவளென நகுலனிடம் இணைத் தோழியென சகதேவனிடம் கனிந்தவளென அவள் தோற்றம் கொள்வதாகத் தெரிகிறது. ஒவ்வொரு பாண்டவனிடமும் சொல்லப்படும் சூதர் கதைகளும் சமையர்கள் என்றழைக்கப்படும் இருபாலினத்தவர்களான ஒப்பணையாளர்கள் பாண்டவர்களுடன் உரையாடுவதும் முதல் ஆறு பகுதிகளை அடர்வு மிக்கதாகவும் அந்தரங்கமானதாகவும் மாற்றி விடுகின்றன.
மலைகளின் மடி எனத் தொடங்குகிறது ஏழாவது பகுதி. வெண்முரசின் முதல் ஐந்து நாவல்களை வாசித்தவர்கள் மகாபாரத காலகட்டத்தில் பாரதவர்ஷம் என்றழைக்கப்பட்ட இப்பெருநிலத்தின் வணிகம் கலை வாழ்வுமுறை குறித்து ஒரு சித்திரத்தை அடைந்திருக்க முடியும். வளம் மிக்க தென் நிலத்தையும் வணிகம் செழித்த கடல் நகரங்களையும் வெண்முரசு முன்னரே அறிமுகம் செய்திருக்கிறது. இமயமலைத் தொடரின் அடிவார நிலங்களின் அரசியலை அறிமுகம் செய்கிறது வெண்முகில் நகரம். பத்து நாடுகளாக பிரிந்து கிடக்கும் நாடுகளை ஒன்றிணைக்க நினைக்கிறார் மத்ர நாட்டின் அரசரான சல்லியர். மைய நிலத்தின் அரசியல் நிலைகள் மாறுவது விளிம்பினரை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை விரிவாகவே சொல்கிறது பத்து மலை நாடுகளில் ஒன்றான பால்ஹிகத்தின் இளவரசனான பூரிசிரவஸை அறிமுகம் செய்யும் அத்தியாயங்கள். கடுங்குளிர் கொண்ட பால்ஹிக நாட்டிலிருந்து அஸ்தினபுரியின் மைந்தனான பால்ஹிகர்களின் குல மூதாதை பால்ஹிகரை அழைக்க பாலை நிலமான சிபி நாடு செல்கிறான் பூரிசிரவஸ். நிலத்தின் தன்மை அதன் மக்களை பாதிக்கும் விதமும் வெண்முகில் நகரத்தில் விளக்கப்படுகிறது. பெருங்கனவுகள் கொண்டவனாக போர் வீரனாக தன் குடிமக்களின் குணங்களுக்கு வெளியே நிற்பவனாக பூரிசிரவஸ் அறிமுகமாகிறான். சிபி நாட்டின் தேவிகையிடமும் மத்ர நாட்டின் விஜயயையிடமும் அவன் மனம் கொள்ளும் நுட்பமான உணர்வுகளும் அதனுடன் இணைந்துள்ள அரசியலும் அன்புக்கும் அமைப்புக்குமான சிக்கலான உறவினை தெளிவிக்கின்றன. தொன்மமாகவே அறியப்பட்டு அத்தொன்மத் தன்மையுடனே வாழ்கிறார் பால்ஹிகர். பால்ஹிகரை தேடிச் செல்லும் பூரிசிரவஸ் மலையில் பிரேமையை மணக்கிறான். மலைக்குடியினர் குறித்து அறியாத என் போன்ற யாரும் அவ்வத்தியாயங்களை நெருடலுடனே கடந்து செல்ல முடியும். அன்பும் காதலும் உறுதியற்றதாகவே இருக்க இயலும். உறுதியின்மையே அவ்வுணர்வுகளை பேரழகு கொள்ளச் செய்கின்றன என்று வகுத்துக் கொண்டே மலையை விட்டிறங்க முடிகிறது. பத்து அரசுகளும் ஒன்றிணைந்து பூரிசிரவஸை துரியோதனனைப் பார்க்கத் தூதனுப்புகின்றன. பாண்டவர்கள் பாஞ்சாலத் தலைநகர் காம்பில்யத்திலேயே இருக்கின்றனர். கர்ணனும் துரியோதனனும் அவர்களை போரிட்டு வெல்ல நினைக்கின்றனர். பூரிசிரவஸ் துரியோதனனை அணுகும் கணத்தில் அவன் தன் மீது கொண்டிருக்கும் மதிப்பே வெளிப்படுகிறது. பூரிசிரவஸால் கர்ணன் மனம் குழம்பும் அத்தியாயம் மீண்டும் அமைதியின்மையை உருவாக்குகிறது. மூன்று பக்கமும் சூழ்ந்து கொண்டு தாக்கியும் கௌரவர்களும் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் தோற்கின்றனர்.
துவாரகை மேற்கு கடற்கரையின் தவிர்க்க முடியாத பெருநகராக வளர்ந்து வருவதை சித்தரிக்கிறது வெண்முகில் நகரம். துவாரகையில் தொழும்பன் எனும் வாழ்நாள் அடிமையாகவும் சித்தமாகிறான் சாத்யகி என்ற யாதவ இளைஞன். தொழும்பக் குறி பெற்றவன் கிருஷ்ணனின் அணுக்கனாகிறான். நாவலில் பெரும்பகுதி கிருஷ்ணனின் சித்திரம் சாத்யகியின் விழி வழியே வருகிறது. வெண்முகில் நகரம் மறு வாசிப்பு செய்த அதே நேரத்தில் வெண்முரசின் பதினோறாவது நாவலான "சொல் வளர் காட்டிலும்" கிருஷ்ணன் அறிமுகமாகிறான். இரண்டையும் ஒரே நேரம் படித்தது கிருஷ்ணன் குறித்த பல புரிதல்களை அளித்தது. ஒவ்வொன்றையும் முற்றறிந்தவனாக எதையும் பொருட்படுத்தாதவனாக அனைத்தையும் பொருட்படுத்துபவனாக கிருஷ்ணன் விரிந்து கொண்டே செல்கிறான். காம்பில்யத்திலிருந்து அஸ்தினபுரியை தலைநகராகக் கொண்ட குரு நாட்டினை இரண்டாகப் பிரிப்பதற்கான தூதுடன் புறப்படுகிறான் கிருஷ்ணன். புறப்படுவதற்கு முன் திரௌபதியுடனான கிருஷ்ணனின் உரையாடல் கூர்மையானது. பெருங்கனவுகளை ஏந்தியவளாகவும் ஆணை மட்டுமே இடத் தெரிந்தவளாகவும் வெளிப்படுகிறாள் திரௌபதி.
கிருஷ்ணன் சாத்யகியுடன் அஸ்தினபுரி வருகிறான். ஒவ்வொருவரின் மன விழைவையும் கனவினையும் தெளிவாக உணர்கிறான். சகுனியின் அமைச்சரான கணிகரை அவன் சமாளிக்கும் இடமும் தன் முடிவினை நோக்கி மெல்ல மெல்ல அவையினை நகர்த்துவதும் பலராமரின் வெகுளித்தனமான சொற்களை துல்லியமாகப் பயன்படுத்துவதும் என அவன் மதிசூழ்கை திகைக்கச் செய்கிறது. திருதராஷ்டிர் காந்தாரி பீஷ்மர் என ஒவ்வொருவரையும் அவன் சந்திக்கிறான். ஒவ்வொருவருக்குமான வாய்ப்பாகவே அது தெரிகிறது. மனம் பிறழ்ந்த இளைய காந்தாரியான சம்படையுடனும் உரையாடுகிறான் கிருஷ்ணன். அவன் நகர் நீங்கியதும் அவள் இறக்கிறாள். விடுபடுதல் என்றே எண்ணச் செய்கிறது அவ்விறப்பு.
பூரிசிரவஸின் கனவுகள் சிதைகின்றன. தேவிகையை பீமன் சிறையெடுக்கிறான். தருமன் அவளை மணக்கிறான். விஜயை சகதேவனுக்கு மணமுடிக்கின்றனர். ஒவ்வொரு திருமணத்திற்கும் பின்னிருக்கும் அரசியல் கணக்குகளால் வேகமெடுக்கிறது நாவல். பானுமதியை துரியோதனன் மணக்கிறான். அவள் தங்கை பலந்தரையை பீமன் மணக்கிறான். பானுமதியால் துரியோதனனின் அகத்தில் நிகழும் மாற்றங்கள் திருதராஷ்டிரரை நோக்கி அவனை நகர்த்துகின்றன. துரியோதனனிடம் திருதராஷ்டிரின் மூர்க்கமான வெளிப்பாடு பிழையீடென சுயவதையென முதலில் தோன்றினாலும் அச்செயலே நாவலை ஒருமையை நோக்கி நகர்த்துகிறது.
சேதிநாட்டு இளவரசியரை பீமனும் நகுலனும் மணக்கின்றனர். சாத்யகி பீமனின் மனைவியான பலந்தரையையும் சேதி நாட்டு இளவரசிகளையும் சந்திக்கும் இடத்தின் வழியாக திரௌபதி பேருருக் கொள்கிறாள். ஒரு விதத்தில் வெண்முகில் நகரத்தில் பேராளுமைகளுடன் மோதி தங்கள் எல்லைகளையும் வலிமைகளையும் வலுவின்மைகளையும் பிறர் கண்டு கொள்ளும் சித்திரங்கள் எழுந்தபடியே உள்ளன. குந்தியின் இடம் முக்கியத்துவமிழந்து திரௌபதி இயல்பாகவே மேலும் பெரிய ஆளுமையாக அங்கு நிறைகிறாள். திரௌபதியின் மண நிகழ்வு பூரிசிரவஸை சாத்யகியை இலக்குகளை நோக்கி நகர்த்துகிறது. அத்தனை பேராளுமைகளும் வெல்லப்பட தூற்றப்பட வெறுக்கப்பட காத்திருக்கிறார்கள். கிருஷ்ணனும் திரௌபதியும் அவ்வெறுப்பினை பொறாமையை சூழ்ச்சியை தத்தமது வழிகளில் எதிர்கொள்கின்றனர்.
துச்சளையையும் மணக்க முடியாமல் ஆகும் போது பானுமதி பூரிசிரவஸிடம் சொல்பவை கூரிய எதார்த்தங்கள்.
மக்களிடம் தமக்கு சாதகமான உளநிலையை உருவாக்க கௌரவர்கள் பக்கம் கணிகரும் கர்ணமும் பாண்டவர்கள் பக்கம் குந்தியும் முயல்கின்றனர். அனைத்தையும் ஒற்றை சமரசப் புள்ளியை நோக்கி நகர்த்துகிறான் கிருஷ்ணன். கௌரவ நூற்றுவர்களும் மணம் கொண்ட பின் திரௌபதி நகர் நுழைவதோடு முடிகிறது வெண்முகில் நகரம்.
வாசித்து முடித்ததும் மிக இறுக்கமான நாவல் என்ற எண்ணமே எழுந்தது. பாண்டவ கௌரவர்களின் பிறப்புடன் நிறைவடையும் மழைப்பாடலை விட இறுக்கமான நாவல் வெண்முகில் நகரம். பூரிசிரவஸ் சாத்யகி என இருவரின் பார்வையிலேயே நாவல் பெரும்பாலும் செல்கிறது. முன்னவனுக்கு வாள். பின்னவனுக்கு தழும்பு. பெரு விழைவுகளால் இயக்கப்படுகிறான் பூரிசிரவஸ். சிறுமை தீண்டாதவனாக தன்னை நிறுத்திக் கொள்ளும் துரியோதனுடன் இயல்பாகவே பொருந்தி விடுகிறான். கிருஷ்ணனுக்கு தன்னை முழுதாகவே அர்ப்பணிக்கிறான் சாத்யகி. விழைவினால் இயக்கப்பட்டு அத்தனை துயரையும் அடைந்தவனாக பூரிசிரவஸும் முழுதாக விடுபட்டவனாக சாத்யகியும் சந்தித்துக் கொள்கின்றனர்.கொந்தளிப்பான நாடகம் முடிந்து திரும்பும் நிறைவே மனதில் பரவுகிறது உடன் ஒரு மெல்லிய வலியும்.

Wednesday, November 15, 2017

சாம்பனின் குணம்


அன்புள்ள ஜெ

கிருஷ்ணையை சாம்பன் திருமணம் செய்துகொண்டான் என்னும் செய்தியே ஆச்சரியமானது. இதெல்லாம் வழக்கமான புராணகதைகளில் இல்லாதது. ஜாம்பவர்களில் ஒருவன். அவன் ஷத்ரியகுடியில் பிறந்தவளை திருமணம் செய்துகொள்கிறான். இந்தவகையான ஏராளமான ஊடுபாவுகள் வழியாகத்தான் மகாபாரதக்கதை செல்கிறது. இந்த சாம்பனால்தான் யாதவக்குலமே அழிந்தது என்ற செய்தியை நினைவுபடுத்திக்கொள்கையில் திகைப்பாகத்தான் இருக்கிறது. அந்த அழிவைச்செய்யக்கூடியவனாகவே சாம்பன் இந்த நாவலில் வந்துகொண்டிருக்கிறான். அதை செய்யவைப்பவன் காளிதியின் மகன் என்பதும் தெரிகிறது

மகாதேவன்

குலமுறைஅன்புள்ள ஜெ

வெண்முரசில் திரும்பத்திரும்ப வரும் ஒரு விஷயம் குலமுறை, குல அறம் ஆகியவை. ஒரு மூத்தவர் சொன்னால் அதைக் கடைப்பிடிக்கிறார்கள். மூத்தவருக்கு எந்நிலையிலும் மரியாதை செய்கிறார்கள். கடுமையாக மோதிக்கொள்கையில்கூட பொய் சொல்வதில்லை. குல எதிரியானாலும் குழந்தைகளைக் கொஞ்சுகிறார்கள். இன்றைக்கு இதெல்லாமே ஒருவகையான அரிய குணமாக உள்ளன. புனைவாகத்தான் தெரிகின்றன. ஆனால் நான் சின்னக்குழந்தையாக இருந்த காலகட்டத்தில் இது இருந்தது. ஜென்மவிரோதிகள்கூட சாவுக்கு ஒன்றாகச் சேர்வர்கள். விரோதிகளின் பிள்ளைகளை கொஞ்சுவார்கள். குலம்சேர்ந்து வாழும் வாழ்க்கையின் அம்சங்கள் இவை. இவையெல்லாமே இன்றைக்கு இல்லாமலாகிவிட்டன என நினைக்கிறேன்


வி.எஸ்.வாசன்

சாம்பன்அன்புள்ள ஜெ

சர்வதன் யௌதேயன் சுருதசோமன் சுருதகீர்த்தி என பெரும்பாலான இளைஞர்களின் கதாபாத்திரம் well defined  ஆக உள்ளது. அபிமன்யூவின் கதாபாத்திரம் வளர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால் சாம்பனின் கதாபாத்திரம் தொடர்ச்சியாக ஊசலாட்டத்திலேயே இருக்கிறது. ஆணவமும் தாழ்வுணர்ச்சியுமாக அலைமோதுகிறது. ஒரே ஒரு அத்தியாயத்திலேயே அவன் மனநிலை இருமுறை தலைகீழாக மாறுகிறது. ஆகவே அவன் நிலையற்றும் நம்பமுடியாதவனாகவும் இருக்கிறான். அவனுக்கு சர்வதன் மேல் அன்பும் பகையும் மாறிமாறி வருகிறது. இதுவரை வெண்முரசில் பல கதாபாத்திரங்கள் வந்தாலும் சாம்பன் முற்றிலும் வேறுபட்டவனாக இருக்கிறான்


ஜெயராமன்

சர்வதன்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

சர்வதன் - பீமனைப் போன்றவன்.  உணவை மிக விருப்புபவன்.  உடல் வலிமை மிக்கவன்.  அவன் யானையே தான்.  மனதில் தோன்றுபவை மறைக்காதவன்.  யௌதேயனுக்கு அவ்வப்போது எரிச்சல் தோன்றக் காரணமாக இருப்பவன்.  யௌதேயனிடமும் சாம்பனிடமும் அவன் பேசுவது அவனது இயல்பை விளக்குகிறது.  ஊழ் பெருவிசை கொள்ளும் போது அதற்கு எதிரான தந்திரங்களும் முந்துதலும் பெரும் சாமர்த்தியம் எனக் காண்பவன் அல்ல அவன்.  அவனுள் ஒரு அசையாமை இருக்கிறது.  நீர்வழிப் படூஉம் புணை எனச் செல்வது வாழ்வு என்று செயல்களின் எல்லை பற்றி விழிப்புடையவன், எனினும் தன் முழு விசையுடன் செயல் புரிபவன்.  அவ்வகையில் மற்றவரைப் பற்றும் கவலைகளின் தீ அவனைப் பற்றுவது இல்லை.  ஒருவேளை காட்டுத் தீயில் கருகும் யானை என்று ஆனாலும் புத்தன் என்று மற்றொரு பிறவி கொள்வான்.  கண்ணனை சரணுரல் பலரது வழி. ஊழை உணர்ந்து மனதைப் பிரித்துக்கொள்ளல் அவனது வழி.  அவன் வைணவன் அல்ல, ஆனால் விவேகம் உடையவன்.  அவனது வலிமை அகந்தைக்கு வழி ஆவது அன்று -அது ஊழின் வழி வந்து இயற்கையின் போக்கில் அமைந்தது.  மத்தகம் நினைவுக்கு வருகிறது.  யானை மலையின் குழந்தை, அவ்வாறே அவனும் இயற்கையின் வலிமையின் ஒரு வெளிப்பாடே.  ஊழிற் பெருவலி யாவுள?.  அவ்வாறாயின் மனிதனின் பெருமுயற்சிகள் பயன் அற்றவையா? அப்படி ஒன்றும் இல்லை.  நமக்கு எது சுவாரசியமோ அதை பிரம்மம் ஒருபோதும் தடை செய்வது இல்லை.  பாதி வழி ஓடி வந்த ஆற்றின் நீர் கூறலாம் "நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.  பாருங்கள் நான் விருப்பட்ட வழியிலேயே சென்று கொண்டு இருக்கிறேன்.  இப்போது கூட இடது பக்கம் வளையப் போகிறேன்" என்று.  ஆனால் இதுவரை கடந்து வந்த பாதையும் இனி போக வேண்டிய வழியும் அவற்றின் விசையும் ஏற்கனவே மேடு பள்ளங்களாலும் புவி ஈர்ப்பு விசையாலும் தீர்மானித்து வகுக்கப்பட்டு இருக்கிறது.  வகுக்கப்பட்ட பாதையை மீறி மேடேற வேண்டுமெனில் தோற்றுவித்த விசும்பே தன் கருணை முகில்கள் கொண்டு பெருமழையும் பெருவிசையும் தந்து எல்லைகளை உடைக்க வேண்டும் என்று ஒன்று மௌனமாக புன்முறுவல் பூத்தவாறு இருக்கிறது. 

சாம்பன் தன் தந்தையின் பால் அன்பு மிக்கவன் அல்ல.  மாறாக சர்வதனும் உபபாண்டவர் அனைவருமே தம் தந்தையர் மீது அன்பும் பெரும் மதிப்பும் கொண்டோர்.         

“யோகி என்றும் ஞானி என்றும் இறைவடிவன் என்றும் மண்ணில் எவருமில்லை” - இது கண்ணனை மனதில் வைத்து சர்வதன் சாம்பனிடம் கூறுவது என்று எண்ணுகிறேன்.  மேலும் "பிரம்மவடிவமான ஊழ்" - இது வேறுவகை சமயக் கொள்கை அல்லது வேறு ஒரு வழி என்று தோன்றுகிறது.   


அன்புடன்
விக்ரம்
கோவை

Tuesday, November 14, 2017

யௌதேயனின் உத்திஅன்புள்ள ஜெ

யௌதேயன் முன்வைக்கும் ஒவ்வொரு உத்தியும் பிரமிக்கச்செய்கிறது. அப்படியென்றால் பெண்ணைக்கொடுக்கவேண்டியதுதானே, அதுதானே சரியான வாக்குறுதி என்ற கேள்வியும் சரி, அந்த உத்தி முறியடிக்கப்பட்டபோது அவன் எடுத்துக்கொள்ளும் அடுத்த தந்திரமும் சரி மிகக்கூர்மையானவை. இந்த அம்சம் யுதிஷ்டிரனுக்குள் இருப்பதாக முன்பு காட்டப்படவில்லை. ஆனால் விராடபர்வத்தில் குங்கர் அப்படித்தான் இருக்கிறார். அந்த அம்சமே யௌதேயனாகப்பிறந்துள்ளது என நினைக்கிறேன். அதை சர்வதன் நன்குணர்ந்திருக்கிறான். இந்தத்திறமையெல்லாம் கணிகர் முன் ஒன்றுமே அல்ல என்றும் சர்வதனுக்குத்தான் தெரிந்திருக்கிறது


செல்வராஜ்

கோபிகைமனநிலைபெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய அத்தியாயத்தில் யௌதேயனுக்கும்,சர்வதனுக்கும் நடக்கும் உரையாடலில் ...: அசுரரும் நிஷாதரும்கூட மணத்தன்னேற்பில் அவைபுகுந்து அமரலாம் என முன்காட்டு(முன்மாதிரி?!) உள்ளது. ஆகவே ஷத்ரியர்கள் உளக்குறை கொள்ள முடியாது” என்று யௌதேயன் சொன்னான்.என்ற   வரி வருகிறது.யாதவர்கள் உளக்குறை கொள்ள முடியாது” என்று வரவேண்டும் எனக் கருதுகிறேன்.மேலும் துரியனின் மகள் லக்ஷ்மணையைப் பற்றி சொல்லும்போது அவள் இளைய யாதவனை நினைவிலிருத்தி வாழும் ஒரு ''கோபமானசை''(கோப மானசை என்று பிரிக்க வேண்டுமா?) என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.இதன் பொருளென்னவென்று விளக்கமுடியுமா? 

அன்புடன்,
அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

அது சரியானதுதான். யாதவர்கள் ஏன் அமர்த்தபட்டார்கள் என ஷத்ரியர் கோபம் கொள்ளமுடியாது என்பது அதன்பொருள்.

கோபகுலப் பெண்களின் மனநிலை

ஜெ