Monday, December 31, 2018

கதை




ஜெ

திருதராஷ்டிரர் பீஷ்மரை நினைவுகூர்ந்து சொல்லும் இடம் என்னை நெகிழச்செய்துவிட்டது. அவர் சிறுவனாகச் சென்று பீஷ்மரிடம் அடைக்கலம் கோருவதும் கடைசிவரை உன்னுடன் இருப்பேன் என்று பீஷ்மர் சொல்லுவதும் மழைப்பாடல்நாவலில் உச்சகட்ட உணர்ச்சிகரமான காட்சிகள். அந்தச் சொல்லை அவர் காப்பாற்றிவிட்டார். எவ்வளவு மகத்தான மனிதன் என்று தோன்றியது. இத்தனை நீண்ட ஒரு கதை. எங்கிருந்து எங்குவரை வாசித்து வந்திருக்கிறோம். ஒரு முழுமையான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறோம். நினைக்க நினைக்க மனம் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது

செல்வி

வருகை



அன்புள்ள ஜெ,

கார்கடலின் துவக்க அத்தியாயங்கள் பற்றித் தான் எழுத வேண்டும் என குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். இருப்பினும் இன்று துரியன் கொண்ட உளமகிழ்வு என்னைத் தொற்றிக் கொண்டது. ஆம், அங்கரின் வருகையைத் தான் சொல்கிறேன். உண்மையில் பெரும் ஆசுவாசம்.... ஏனென்று தெரியவில்லை. சகுனியின் சொற்களைத் தான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்... 'இந்த களத்தில் அவன் எதைச் செய்தாலும் தவறில்லை...' ஆம், அவன் சூரியன். தொட்டவற்றைப் பொன்னாக்கும் அவனே சுட்டெரிக்கவும் செய்கிறான்... எரிக்கட்டுமே!! சூழ்ந்த கருமேகங்கள் விட்டு ஒளி வீசி வரட்டுமே!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.

கதைகள்



அன்புள்ள ஜெ

கார்கடல் பல்வேறு கோணங்களில் சொல்லப்படும் கதைகளின் பெருந்தொகையாக இருக்கப்போகிறதென்று நினைக்கிறேன். இப்போதே கதைசொல்லிகள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். நிகழ்வது, நிகழ்வதைப்பற்றிய கதைகளும் பின்னி உருவாக்கப்படும் பெரிய பரப்பாக இந்த நாவல் அமையும் என்றால் குருக்ஷேதிரப்போரை விரிவாகச் சித்தரித்துவிடமுடியுமென தோன்றுகிறது

சரவணக்குமார்

Sunday, December 30, 2018

மதங்கநூல்




அன்பின் ஜெ,


நலம் விழைகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும். இது கார்கடல் -1 (தோற்றுவாய்) பற்றியது. கடந்த ஐந்து நாட்களாக தயங்கி பின்,  இன்று அனுப்புகிறேன் 


"நீண்ட துதிக்கையும் துருத்தியென ஒலிக்கும் மூச்சும் கொண்டது உயர்ந்த வேழம். பொறுமையே அதன் இயல்பு. அரக்கர்குலத்து தெய்வங்களின் நகைப்புபோல நிரையாக அமைந்த பதினெட்டு அல்லது இருபது நகங்கள் கொண்டதும், குளிர்காலத்தில் மலையூற்றென மதம்பெருகுவதும், வலதுகொம்பு சற்றே நீண்டு உயர்ந்திருப்பதும், "


ஆனால் நாங்கள் படித்தது

 1. ஆசிய யானைகளுக்கு மொத்தம் 18 நகங்களே இருக்கும் ( முன்னங்கால்களில் 5+5; பின்னங்கால்களில் 4+4). எந்நிலையிலும் இருபது இருக்க வாய்ப்பில்லை. ஆப்பிரிக்க யானைகளுக்கு 14-16. 

2. வேறேதும் பிரச்சினை இல்லாத வரை இரு தந்தங்களும் சமநீளம் கொண்டதாகவே இருக்கும். 

சைதன்யாவிற்கு எங்கள் அன்பு வாழ்த்துகள். 

அன்புடன்
தங்கபாண்டியன்


அன்புள்ள தங்கபாண்டியன்

மேலே சொன்ன பகுதி மலையாள மதங்க சாஸ்திரநூல் ஒன்றிலிருந்து அப்படியே பிரதிசெய்யப்பட்டது. அக்னிபுராணத்தை ஒட்டி இந்த மதங்கநூல் எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே வரிகள் அக்னிபுராணத்தில் உள்ளன.

மகபாரதக்குறிப்பு என்பதனால் அதை அப்படியே கொடுத்தேன். நீங்கள் எழுதியபின் ஒரு யானைப்பாகனிடம் கேட்டுச் சொல்ல மின்னஞ்சலில் ஒரு நண்பரிடம் சொன்னேன். மிக அரிதாக இருபது நகங்கள் இருப்பதுண்டு என்றும் அதை அரசர்களுக்குரிய யானையாகக் கருதினார்கள் என்றும் யானையின் ஒரு தந்தம் எப்போதுமே கொஞ்சம் நீளமானதாகவே இருக்கும் என்றும் அந்த யானை வலப்பக்கப் பழக்கம் கொண்டது என்றால் வலத்த்ந்தம் சற்றே பெரிதாக இருக்கும் என்றும் சொல்கிறார். நவீன ஆவணங்கள் என்ன சொல்கின்றன என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வதே சரியாக இருக்கலாம்

ஜெ

ஏகாக்ஷன்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் மூன்றாம் அத்தியாயத்தில் ஏகாக்ஷன் வந்துவிட்டார். "குகை" சிறுகதையில் வந்த கதைசொல்லி போல ஒற்றைக்கண் கொண்டு பூமியின் கீழ் இருந்து மேலே நடப்பவற்றை அல்லது பூமியின் ஒரு புறத்தில் இருந்து வேறொரு புறத்தில் நடப்பதை காணும் ஒரு யோகி. 

துருபதனுக்கு பஞ்சாலியின் பிறப்பை அறிவிக்கும் அதர்வவேததவர் போலவே இவருக்கும் முரணான மனித உடல். ஆனால் இங்கு ஏகாக்ஷர் பானுமதியை சந்திக்கிறார். ஆரம்பமும் முடிவுமாய் இரு முனிவர்கள், ஓன்று எதிர்காலத்தை பிம்பமாய் காட்டுவது,இன்னொன்று நிகழ்காலத்தில் பருப்பொருளாய் நடப்பதை மட்டும் மற்றவர்களின் உள்ளத்தில் வழியே பார்க்க முடிந்து அப்படி பார்க்க முடியாதவர்களுக்கு வார்த்தைகளாய் காட்டுவது. அவர் தனது ஒற்றை கண் வழியாய் காண்பதை நாங்களும் காண ஒற்றை மனமாய் காத்திருக்கிறோம் சார்.


regards,
stephen raj kulasekaran.p

Saturday, December 29, 2018

படைப்பாளி



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் இரண்டாம் அத்தியாயத்தில் படைப்பவன் தனது படைப்பின் மீதான விமர்சனத்தை எதிர்பார்ப்பதும், விமர்சகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பார்வையில் படைப்பை மதிப்பிடுவதும் அதை ஆராய்ந்து அதற்கு ஒரு சொலுஷனை படைப்பாளி அறிவிப்பதும் நடக்கிறது. பிறகு அந்த சொலுஷன் வேறோரு சொலுஷனை அளிக்க இரண்டும் ஈகோவினால் பகை கொண்டு போரிட ஆரம்பிக்க படைப்பு அப்படியே இருக்க சொலுஷன் தோற்கடிக்க படுகிறது. சமுகத்தின் மாற்றங்கள், வேத,வேதாந்த  நூல்களின் மாற்றங்கள் அனைத்தையும் இப்படி புராதன கதைகளினால்,குறீயிடினால்  சொல்லவும் தொகுக்கவும் முடியும் என்பதே ஆச்சரியம் அளிக்கிறது.அதையும் அசுரர்களிடம் அல்லது பழங்குடிகளிடம் தோன்றிய மூல அறிதல்கள் முதலாகவும் அவற்றை வைதீகர்கள் எப்படி மறுபதிப்பு பண்ணுகிறார்கள் என்பதை இரண்டாவதாகவும் கூறி ஒரு பேரல்லல் நடையில் கதையை ஆரம்பித்தது அதை புரிந்து கொள்ள உதவியது.

regards,

stephen raj kulasekaran.p

Friday, December 28, 2018

உவமை



ஜெ வணக்கம்

கார்கடல்-2ல், படைத்தோனின் ஐந்து மகன்களும், புவி தோன்றி இளங் கன்றாக இருக்கும் தருணத்தில், புவியை எது அலை களிக்கிறது என்று பிரம்மனிடம் தாங்கள் உய்த்து வந்ததை கூறுகிறார்கள்.

யமன் "அகம் அசையாமல்" இருக்கும் ஓரு உயிரை கண்டு வரும் படி பணிக்க படுகிறான். யமனும் அகுபாரனை கண்டுடைகிறான்.

பிரம்மன் அவனிடம் “மைந்தா, சுழலும் கதவு நிலைபெற்றமைவது அசையாக் குடுமிக்குமிழியிலேயே".

அத்தருணத்தில் புவியில் மனிதர்களும் இல்லை கதவும் இல்லை, பிரமனின் இவுவமை எப்படி சரியாகும்? அப்படியே இருந்தாலும் குளிர் கால தேசங்களில் குளிரை கட்டித்திற்க்கு வெளியே நிறுத்தும் கட்டிட உத்தி, இந்திய புராணத்தில் எப்படி கையாள முடியும்?

உவமை நன்றாக இருக்கிறது. அதை தாண்டி எனது கேள்வி, புனைவில் தர்க்கத்தின் இடம் என்ன?

அன்புடன்

சதீஷ் கணேசன்

அன்புள்ள சதீஷ்


அந்தக்கதை ஒரு பாட்டியால் மகனுக்குச் சொல்லப்படுகிறது. அன்றுள்ள உவமைகளை பயன்படுத்தித்தான் சொல்லமுடியும். பிரபஞ்சம் உருவாவதற்கு முன்னால் என்ன இருந்தது? அதைவைத்து இன்று எதையாவது சொல்லமுடியுமா? இந்த மொழியில் எதையாவது சொல்லமுடியுமா?

குடுமி என்பது மரக்குமிழி. கோயில்களில் கல்லில் இருக்கும். அதில்தான் அன்றைய கதவின் முனை பதிந்திருக்கும். [கீல் என்னும் அமைப்பு அன்று இல்லை] அதில்தான் கதவு சுழலும்

வருவார் கொழுநர் எனத்திறந்தும் வாரார் கொழுநர் என அடைத்தும் திருகும் குடுமி விடியளவும் தேயும் 

என்று கலிங்கத்துப்பரணி சொல்கிறது

ஜெ


 

ஆமை



அன்புள்ள ஜெ

ஆமை,திசையானைகள் தொன்மத்தை நான் இளமைமுதலே கேட்டுவருகிறேன். அவற்றை வேறு ஒரு கோணத்தில் விளக்கியது கார்கடல். ஆமை என்பது தன்னுள் சுருண்டு அசைவிழந்த பாம்புதான் என்பது அற்புதமான உருவகம். ஆமையை அறுத்து பார்த்தால் உள்ளே இறுக்கமாக சுருட்டி வைத்த குடல்மாதிரிதான் இருக்கும்

சரவணன் 

படைப்பின் வழி



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் முதலாம் அத்தியாத்தில் "படைப்பு , வரம்" என்ற இரு விஷயங்கள் கூறபட்டிருக்கிறது.

முதற்கனலின் முதல் அத்தியாயத்தின் தொடக்கம் போல அல்லது வெண்முரசின் தொடக்கம் போல கார்கடல் ஆரம்பிக்கிறது. அதில் ஆஸ்திகனுக்கு கதை சொல்லும் மானசாதேவி இதில் கதை கேட்கும் சிறுமி. 

மானசாதேவி உலகு அல்லது உயிரினங்கள் படைக்கபட்டவிதத்தை தனது குலத்தோடு, தனது வாழ்க்கையோடு, தனது ஆசைகளோடு சம்பந்தபடுத்தி ஒரு கதையை கூறுகிறாள்.நித்யை உலகு அல்லது உயிரினங்கள் படைக்கபட்டவிதத்தை தனது குலத்தோடும், தனது ஆசைகளோடும் வேரோரு வடிவில் கதையை கூறுகிறாள். இதில் இருந்து வெண்முரசு இரண்டாக பகுக்கப்படுகிறது என நினைக்கிறேன்.

கார்கடலில் நித்யை கூறும் சொல்லாக வரும் உயிரினங்களின் பிறப்பை வாசிக்கும்போது கடவுள் உலகை உயிரினங்களை படைத்தாரோ இல்லையோ ஆனால் ஒரு எழுத்தாளன்தான் உலகை படைக்கிறான் என ஆணித்தரமாக நம்ப ஆரம்பித்தேன். அதாவது காற்றில் பொருளில்லாமல் நின்றிருக்கும் ஓசைகளை, நுண்ணிய சப்தங்களை பொருளாக்கும் எழுத்தாளனின் மனம். 
சாக்ரடிஸ், வியாசன்,வால்மீகி,ஹோமர், காரல்மார்க்ஸ், காந்தி, அயோத்திதாசபண்டிதர் என எழுதி குவித்தவர்கள் படைக்கும் உலகு.  தங்கள் இனத்தையும், மூதாதையர்களையும் பண்பாடுகளையும் பெருமிதத்தையும் கொண்டு உருவாக்கும் உலகின் பிறப்பு. அதை கொண்டுதான் பிறகு சண்டையும் நடக்கிறது என்பதுதான் முடிவு. அதாவது எழுத்தாளன் கூறியதை மறந்துவிட்டு தங்களின் அறியாமையையும் அகங்காரத்தையும் அரசியலையும் அதனுள் ஏற்றி அதற்காக சண்டை போட்டு தங்களை அழிப்பது. ஆனால் எழுத்தாளன் அழிவதே இல்லை, அவன் பத்து தலைமுறை தாண்டியாவது வேறொரு ரூபத்தில் முளைக்கிறான்.அது வேறு கதை.

வெண்முரசில் நிறைய இடங்களில் கடவுள் அல்லது முனிவர்கள் பெண்களிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்கிறார்கள். யாருமே பொன்னோ பொருளோ கேட்கவில்லை, தாங்கள் படைக்கும் தங்கள் கர்ப்பத்தின் படைப்பு வீரியமாய் இருக்கவேண்டும் காலகாலமாய் அது இங்கு அது நிலைபெற்று இருக்கவேண்டும் என்றே கேட்கிறார்கள். படைக்கிறவனுக்கு தெரியும் போல படைப்பின் வலி அறிந்தவர்களிடம் தான் வரம் வேணுமா? என்று கேட்க வேண்டும் என. 
இதை சிந்திக்கும் போது தோன்றிய ஒரு கேள்வி, இன்றைய பெண்களிடம் கடவுள் தோன்றி ஒரு வரம் வேணுமா? என்று கேட்டால்  பெண்கள் என்ன கேட்பார்கள்?  

regards,
stephen raj kulasekaran.p

Tuesday, December 18, 2018

வெண்முரசு வருகை



அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
        

வணக்கம் .தங்களின் இன்றைய அறிவிப்பான " வெண்முரசு நாவல்வரிசையின்
இருபதாவது நூலான கார்கடல் வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் இரவில் இருந்து
தொடர்ந்து  வெளிவரும் " - வெண்முரசு வாசகர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை
தருவதில் வியப்பேதும் இல்லை . வெண்முரசு நாவல்வரிசையின் நூல் பத்தொன்பது
– திசைதேர் வெள்ளம்  முடிவுற்ற நாளில் இருந்து ,அடுத்த நாவலுக்கான
தலைப்பு மற்றும் அது வெளியாகும் நாள் குறித்த செய்திகளின் அறிவிப்புக்காக
காத்து நின்றவர்கள் உங்கள் வெண்முரசு வாசகர்கள் .


ஒவ்வொரு நாவல் முடிவுற்றதும் அடுத்த நாவல் அறிவுப்பு செய்திக்காக
காத்துக்கிடக்கும்  வெண்முரசு வாசகர்களின் தவிப்பு அளவிடமுடியாதது
.‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39 - அர்ஜுனன் “உன் ஆற்றல்
அச்சுறுத்துகிறது யாதவனே” என்றான். பீமன் “ஆம், இருமுனையும்
கைப்பிடியும்கூட கூர்மையாக உள்ள வாள் போலிருக்கிறாய்” என்றான். கிருஷ்ணன்
புன்னகையுடன் “மூத்தவரே, பாலைநிலத்தின் விதைகள் நூறுமடங்கு வல்லமை
கொண்டவை. ஏனென்றால் ஒரு விதைக்குப்பின்னால் வாழ்வை விரும்பி நீர்
கிடைக்காமல் அழிந்த ஆயிரம்கோடி விதைகளின் துயரம் உள்ளது. துளிநீருக்குத்
தவம்செய்யும் பல்லாயிரம் விதைகளின் துடிப்பு உள்ளது.நான் நூற்றாண்டுகளாக
நிலம் நிலமாகத் துரத்தப்படும் யாதவர்களின் கண்ணீரில் இருந்து எழுந்து
வந்திருக்கிறேன்.” 

ஆம் ஜெயமோகன் அவர்களே வெண்முரசு நாவலை தினமும்
அதிகாலையிலே வாசிக்கும் வாசகர்களின் தவிப்பும் ,ஏக்கமும் ,காத்திருப்பும்
,துடிப்பும் பாலை நில விதைகளின் துளி நீர் வேண்டி செய்யும் தவத்திற்கு
நிகர் .

கார் கடல் - இதுதான் மஹாபாரத போரில் பத்தாவது நாள் நிகழ்ந்த பிதாமக
பீஷ்மரின் வீழ்வுக்கு பின்பு நடக்கும் யுத்த நிகழ்வுகளை விளக்கமாக சொல்ல
வருகிறது .அகண்ட பாரத கண்டத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போர்களின் உச்சமென

இன்றுவரை திகழ்வது குருவம்ச பாண்டவ கௌரவரிடையே நடந்த குருஷேத்ர யுத்தம்தான் .அதனை நிகழ்த்தியவர் இளைய யாதவர் கிருஷ்ணன் .இது அவர் திட்டமிட்டது

.‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40  “நீ ஒரு பேரழிவைப்பற்றி
பேசிக்கொண்டே இருக்கிறாய் யாதவனே” என்றான் அர்ஜுனன். “அதை இங்குள்ள
அத்தனை அரசு சூழ்பவர்களும் அறிவார்கள். பாரதவர்ஷம் என்னும் ஆலமரம்
ஷத்ரியர்கள் என்ற பீடத்தில் வளர்ந்தது. இன்று அது அந்தப்பீடத்தை உடைத்து
எறிந்தாகவேண்டியிருக்கிறது. அந்தப் பெரும் அழிவைத் தடுக்கவே பீஷ்மரும்
விதுரரும் முயல்கிறார்கள். மாறாக நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்”
என்றான் கிருஷ்ணன்.ஆம் அந்த அழிவை தான் குருஷேத்திர யுத்தத்தின் மூலமாக
கிருஷ்ணர் நடத்தி காண்பித்து கொண்டிருக்கிறார் 
.
குருதி உடலில் உள்ள போதும் ,உடலில் இருந்து சிந்திய பின்பு சில
கணங்களுக்கு மட்டுமே அது செந்நிறம் .சிவப்பு வர்ணம் .ஆனால் உலர்ந்த
குருதி சென்றடைவது கருமை நிறம் தான் . கோவில் திருவிழாக்களில் ஆடுகள்
வெட்டப்படும்  இடங்களில்   சிறுகுளமென  தேங்கி  நிற்கும்  குருதி , சேறென
உலர்ந்த  பின்பு  அடையும்  வர்ணம் /நிறம் கருமை தான் .ஆம் ஆயிரக்கணக்கான
வீர்கள் சிந்தும் செந்நிற ரத்தமும் கடலென திரண்டு பின்பு  கார் கடலென
உலர்ந்த நிலம் தான் குருஷேத்திர யுத்தம் .பதினொன்றாவது நாள் தொடங்கி
,பதினெட்டாம் நாள் இரவில் அசுவத்தாமன் நிகழ்த்தும் இரவு அநீதி யுத்தம்
வரை குருஷேத்திர  போர்க்களம் வீர்களின் சிந்திய செந்நிற குருதி ,உலர்ந்த
பின்பு - உறைந்த ரத்தம் வந்தடையும் நிறம் கருமை .அதன் அளவில் பெரிதென
கார் கடலென இனிவரும் நாட்களும் குருஷேத்திர யுத்த களத்தை
நிறைக்கப்போகிறது .ஆம் ஒவ்வொரு நாளும் நிகழும் குருஷேத்திர யுத்த
பேரழிவின் எச்சமென எஞ்சுவது கார் கடலே . ஆகவே கார் கடல் தலைப்பு
பொருத்தமான தேர்வு தான் .உங்களின் உள்ளுணர்வு கண்டடைந்ததுவும் அதை தான்என எண்ணுகிறேன்

நன்றி ஜெயமோகன் அவர்களே !
தி .செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்

மொழியாக்கம்



அன்பு ஜெமோ 

உங்கள் வாசகர் வெண்முரசு மொழி பெயர்ப்பு பற்றி கேட்ட கேள்விக்கு நீங்கள் முடிஞ்சால் மலையாளத்தில் நீங்களே முயட்சிப்பீர்கள் என்று சொன்னது என் ஆவலை தூண்டுகிறது. எனது இரு மகன்களுக்கும் மனைவிக்கும் அது வரப்ரசாதமாக அமையும். நன்றியும் எதிர்பார்ப்புமுடன் 

பாலா திருச்சூர் 


வெண்முரசு முடிந்தபின் ஒருவேளை மலையாளத்தில் நானே மொழியாக்கம் செய்யலாம் 

அந்தரீயம்



ன்பு ஜெயமோகன் அவர்களுக்கு



மேலாடை பற்றிய உங்கள் விளக்கம் படித்தேன்மேலாடை பழக்கம் பழங்காலத்தில் இருந்ததா என்றால் இருந்தது என்றே சொல்வேன். அதற்கு சமஸ்கிருதத்தில் உத்தரியம் (உத்தர – மேல்தரியம் – ஆடை) என்று வழங்கப்படும்.


அந்தரீயம் என்பது உள்ளாடையாக இருக்கக் கூடும். அந்தர் என்பது உள்ளே என்பதைக் குறிப்பிடக் கூடியது. அந்தரங்கம் என்று நாம் சொல்வது கூட இந்தப் பொருளில்தான்.


பூணூல் கூட ஒரு வகை உத்தரீயமே. திருமணம் நடக்கும் பொழுது இதை பிராமண புரோகிதர் விளக்கி இருக்கிறார்.


பிரம்மச்சாரிகள் ஒரு முடி (மூன்று இழைகள்) கொண்ட பூணூலை அணிவர்திருமணத்தின் போது இரண்டாம் முடி அணிவிக்கப்படும். அப்பொழுது அணிந்திருக்கும் உத்தரீயம் அதாவது மேல் துண்டு மூன்றாவது முடியாக கருதப்படும். திருமணத்தின் பின்பு மூன்று முடிகள் கொண்ட பூணூல் அணிய வேண்டும்.


பூநூல் இன்றி வேத காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அறம் பயிலாமல் எந்தவிதக் கர்ம கார்யங்களையும் செய்யக் கூடாது என்பதற்காக பூநூல் அணிவித்து வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்படுகிறது. காயத்ரி மஹா மந்திரத்தை மணமகனின் வலது காதில், அவன் தகப்பனார் உபதேசம் செய்ய வேண்டும். உபதேசம் செய்யும் போது அவர் தமது வலது கையை மகனின் சிரசில் வைத்து இருக்க வேண்டும். பூஜிக்கப்பட்ட ஒற்றை முடிப் பூ நூலை மாப்பிள்ளைக்கு அணிவிக்க வேண்டும்.


இம் முதற் பூநூல் (ஒற்றை முடி) தாய் தந்தையரால் அணிவிக்கப்பட வேண்டும். இது “பிரம்மோபதேசம்“ எனப்படும். இதன் பின்னரே மணமகன் விவாகத்திற்கான பூஜையாகங்களில் பங்கேற்க இயலும்.கன்யாதானம் செய்த பின் பெண்ணின் பெற்றோர் ஒற்றைமுடி உள்ள ஒரு பூநூலை மணமகனுக்கு அணிவிக்க வேண்டும். இத்துடன் மணமகன் இரண்டு முடியுடன் கூடிய பூநூல் அணிகின்றான்.


மூன்றாம் முடி உத்தரீயத்திற்குப் (மேல் துண்டுக்குப்) பதிலாக அணிவது என்பது சாஸ்திரம்.”


ஒரு மனிதன் எக்காலத்திலும் நிர்வாணமாகவோ அல்லது ஒற்றை ஆடையுடனோ இருத்தல் கூடாது என்பதால் உத்தரியமாக பூணூலும் அந்தரியமாக அரைஞாணும் பூண்டே இருப்பான்.ஆகவே வைதீக நெறி பின்பற்றிய அனைவருமே இந்த ஈராடைகளை அணிந்தே வந்திருக்கலாம். திரௌபதி தர்பாருக்கு இழுத்து வரப்பட்டபோது ஒற்றை ஆடை அணிந்து வீட்டு விலக்காக இருந்தாள் என்பதையும்ஒற்றையாடையுடன் சபைக்கு செல்வது இழிவு என்பதையும் வியாசர் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார்.

மேலாடை அணியா பழக்கம் வேதம் அறியா மக்களிடம் இருந்திருக்கலாம். ஆனால் அந்தரீயம் எனப்படும் இடைக்கச்சையும்

மேலாடை அணியா பழக்கம் வேதம் அறியா மக்களிடம் இருந்திருக்கலாம். ஆனால் அந்தரீயம் எனப்படும் இடைக்கச்சையும்மேலாடை அணியா பழக்கம் வேதம் அறியா மக்களிடம் இருந்திருக்கலாம். ஆனால் அந்தரீயம் எனப்படும் இடைக்கச்சையும்உத்தரீயம் என்னும் மேலாடையும் இன்றி வைதீக மக்கள் இருந்ததில்லை என்பதே உண்மை.

தாமரை செல்வன்


தாமரை செல்வன்

தாமரை செல்வன்

எதிர்வினை



       

நான்   சிறுவனாக இருக்கும்போது ஒருவன்  பள்ளியில் ஒரு கதைப்புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தால்  அவன் பின்னால் ஒட்டி நின்று எட்டிப்பார்த்து இன்னும் இரண்டு மூன்று மாணவர்கள் படித்துக்ககொண்டிருப்போம்.  வெண்முரசு என்ற பெருங்காவியத்தை படிப்பதும் அதைப்போன்றே இருக்கிறது.  ஆனால் இங்கு ஒருவர் கதையை எழுதிக்கொண்டிருக்க அவரை சூழ நின்று நாங்கள் வாசித்து வருகிறோம்.  
        
அனைவரும் ஒன்றிணைந்து எழுதும்போதே  படிக்கும் இதைப்போன்ற வாய்ப்பு மற்ற எந்த ஒரு நாவலுக்கும் ஏற்பட்டிருக்காது.  உலகில் இது ஒரு முதன் முதலில் நடக்கும் அரிய நிகழ்வு என்று கருதுகிறேன்.  ஒரு பெருங்கதைசொல்லி அமர்ந்து கதை சொல்ல அவர் எதிரமர்ந்து கூட்டமாக கதை கேட்டுக்கொண்டிருக்கும் இனிய பரவச உணர்வை நான் ஒவ்வொருநாளும் அடைகிறேன்.  (இதில் கதை என்பது  தத்துவம், இலக்கியம், உளவியல்,  வரலாறு இந்திய தேசத்தின் புவியமைப்பு தொழில்நுட்பம், வணிகவியல், அரசியல் போன்ற பல நுணுக்கங்களை உள்ளடக்கிய ஒரு தொடர் பேருரை)  சென்னை வெண்முரசு வாசகர் வட்டம், புதுவை வெண்முரசு வாசகர் வட்டம் போன்றவை மிகத் தீவிரமாக வெண்முரசைப் படித்துக்கொண்டு அதை விவாதித்து புரிந்துகொள்ள முயல்பவர்களால் நிறைந்தவை.  அவர்கள் மட்டுமல்லாமல் வெண்முரசை  தினமும் விடாது வாசித்துக்கொண்டிருக்கும் பலரை நான் அறிவேன்.   என்னைப்போன்றோர் பலர் காலையில் கண்விழிப்பதே வெண்முரசில் தான்.  இதை ஜெயமோகன்.இன் தளத்தை படிப்பவர்கள் கணக்கைக் கண்டும் சரி பார்த்துக்கொள்ளலாம்.
   

ஆனால் மாறாக சுதாகர் என்பவர் எழுதி  வெண்முரசு விவாத தளத்தில் ஊக்கம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள பதிவு மிகவும் தவறான  கருத்தைக்கொண்டிருக்கிறது.  அவர் எப்படி இந்த கருத்தை அடைந்தார் எனத் தெரியவில்லை. எதாவது இணைய வம்புச் செய்தியின் மூலம்  இதை அவர் அடைந்திருக்கலாம்.  
    

மேலும் வெண்முரசு பற்றி எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. நமக்கு மிகவும் பிடித்த செயலைச் செய்வதற்கான சூழல் அமைவது ஒரு வரம். சிலசமயம் அது கிடைக்காமல் போய்விடுவது  வருத்தமளிக்கும் ஒன்று. பலர்  வெண்முரசு விவாதள் தளத்தில்  மிக அருமையாக எழுதிவருவதை படிக்கையில் என் வருத்தத்தைத் தேற்றிக்கொள்கிறேன். ஆனால் இப்படி எழுத இயலாமல் போனவர்கள் வெண்முரசு வாசிப்பை நிறுத்திவிட்டார்கள் என்று கருதுவது சரியானதல்ல.
  

தண்டபானி துரைவேல்

Monday, December 17, 2018

ஓங்கியவன்




அன்புள்ள ஜெ,

கார்கடலின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பழைய கார்ட்டூன் உண்டு. ஒரு சர்ச். அதில் பலவகையான பூச்சிகள் அமந்து வழிபாடு செய்கின்றன. தெய்வமாக அங்கே மாட்டப்பட்டிருப்பது ஒரு மனிதனின் உள்ளங்கால். அவர்களை மிதித்துச்செல்லும் ஆம்னிபொட்டண்ட் ஆன ஆற்றல் அது. அறியவோ விளக்கவொ முடியாதது

அதேதான் இங்கேயும் நிகழ்கிறது இல்லையா? அந்த மாபெரும் காலை என்னால் கற்பனைசெய்துகொள்ள முடிகிறது. ஓங்கி உலகளந்தவனின் கால் அது

சாரங்கன்

குகை




அன்புள்ள ஜெ

குகை கதையை வாசித்தபோது இந்த கார்கடல் நாவலை நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் மனநிலையை ஒருவாறாக ஊகிக்க முடிந்தது. ஒரு ஆழத்துக் குகைப்பாதையில் அனைத்துக்கும் அடியில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். மனக்கொந்தளிப்பும் தனிமையும் இருக்கும். அந்த ஆழத்தில் நீங்கள் துரோணரையும் கர்ணனையும் எல்லாம் சந்திக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் அந்த மனநிலையை செந்நாவேங்கை வாசித்தபோதே உணர்ந்திருந்தேன்

ஜெயராஜ்

கார்கடல்




எழுத்தாளர் அவர்களுக்கு

கார்கடல் மிக்க எதிர்பார்ப்புடன் உள்ளேன்.


இந்த நாட்களில் எனக்குள் ஒரு excitement எதோ இருக்கிறது எதணால் என்று அறியமுடியவில்லை. ஆர்வகோளாராக சில படங்கள் இனத்துள்ளேன்.

கார்கடல்



அன்புள்ள ஜெ,

அடுத்த நாவல் துரோண பருவம். எனவே இயல்பாக வண்ணக்கடலின் நீட்சியாக அமையவே வாய்ப்புகள் அதிகம் என நினைத்தேன். இதோ பெயர் அதைத் தாங்கி வந்து விட்டது. வண்ணங்கள் அடர்த்தியானால் கருமை தானே!! ஒடுக்கப்பட்டவர்களின் குரோதம் தொகுக்கப்பட்ட கடல்!!! துரோணர், எகலவ்யன், கர்ணன்... ஒவ்வொருவரும் சஞ்சயன், பார்பாரிகன் மற்றும் அரவான் பார்வையில். அறம் என வகுக்கப்பட்டவற்றை மீறிப் பாயும் திசையைத் தேர்ந்தெடுத்த வெள்ளம் சென்று சேரும் கார்கடல்!! பேரமைதியும், பேரலையுமாக பொங்கி சூழட்டும்!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

Sunday, December 16, 2018

மொழியாக்கம்



அன்புள்ள ஜெ,

புத்தகங்கள் பற்றி எனது வட்டத்தில் விவாதிக்கும் போது, எப்படியும் வெண்முரசு பற்றிய பேச்சு எழாமல் போவதில்லை. அதில் ஒவ்வொரு முறையும், தமிழ் படிக்க தெரியாதவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டா என்பது.

உங்களது சிறுகதைகள் சிலவற்றிற்கு மொழிப்பெயர்ப்பு உண்டென்று அறிவேன், ஆனால் வெண்முரசை மொழிப்பெயர்ப்பு செய்ய எண்ணம் உள்ளதா என்று தெரியவில்லை. உள்ளதா?

இதைப்பற்றி நீங்கள் முன்பே எதுவும் எழுதி உள்ளீர்களா?

அன்புடன்,
மதுமிதா.

அன்புள்ள மதுமிதா

பொதுவாக மொழியாக்கங்களில் நானும் கூடவே அமர்வதில் எனக்கு நாட்டமில்லை, நேரமும் இல்லை. ஆகவே மொழியாக்கங்களை தவிர்க்கவே விரும்புகிறேன். எனக்கு நம்பிக்கை உள்ள மொழியாக்கம் செய்பவர் சுசித்ரா. அவரிடம் மட்டுமே கொஞ்சமேனும் ஒத்துழைக்கிறேன் 

வெண்முரசு முடிந்தபின் ஒருவேளை மலையாளத்தில் நானே மொழியாக்கம் செய்யலாம்

ஜெ

மாமலர்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

வெண்முரசை திரும்ப திரும்ப படிப்பதற்காக நான் கையாளும் ஒரு வழி ஒவ்வொரு நூலிலும் ஒரு கதையை படிப்பது என வகுத்துகொண்டது.அதிலிருத்து முன்னோ பின்னோ சென்று படிப்பது. 

முதற்கனலுக்கு பீஷ்மர்-அம்பை கதை [எவ்வளவு பெரிய ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பெண்ணின்மீதோ ஆணின் உடம்பின் மீதோ நேசமும் பாசமும் காமமும் வருகிறது. ஆனால் அவர்கள் அதை சந்திக்கும் புள்ளிக்கு கொண்டுசெல்லும்போது அங்கு அகங்காரமோ நெறிகளோ எழுவது அவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையை அழிக்க கூடியது. பீஷ்மனின் காமநோன்பு இன்னொரு பெண்ணின் காமத்தையும் வாழ்வையும் அழித்தது. காமம் மறுக்கபட்ட ஆண் மட்டும் அல்ல பெண்ணும் கர்ப்பப்பை நிறையாமலே பேயாக மாறுவாள். ] 

மழைப்பாடலுக்கு குந்தி-கம்சன்-கர்ணன் [ஒவ்வொரு குலத்திற்கும் இனத்திற்கும் ஒரு பண்பாடு,கலாச்சாரம் இருக்கிறது. ஆனால் ஒரு குல,இனத்தில் இருந்து வேறொன்றுக்கு உறவாய் சென்றவர்களை சுதந்திரமாக இருக்க விடாமல் தங்களின்  கருத்துகளை, பண்பாடுகளை அள்ளி திணித்தால் அந்த உறவு சென்ற இனத்துக்கு அழிவையே கொண்டு வர நினைக்கும்.ஏனென்றால் தனிமனிதராக யாருக்கும் எந்த அளவுகோலும் இல்லை. இங்கு குழந்தைக்கு தாயான ஒரு பெண் தனது கணவனுக்கும் தாயாகிறாள்.அவனின் விருப்பபடி வேறு ஆட்களிடம் குழந்தை பேறுகளை வாங்கிகொன்டாலும் தான் விரும்பிய ஒருவன் மூலம் தனக்கு ஒரு குழந்தை உண்டு என்பதை அவன் இறக்கும் வரை அவளால் கூறவே முடியவில்லை. என்ன ஒரு இக்கட்டு?.ஆனாலும் அவனுக்காகதான் தனது மகன்களுக்கு அனைத்தையும் செய்வதாக சொல்லிகொள்கிறாள்.ஆனால் அது அவளின் வஞ்சம் தான்.முக்கியமாக இன்னொரு இனத்திற்கு ராணியாக செல்லவேண்டும் என்று அவள்தான் முடிவெடுத்து தனது காதலில் விளைந்த ஒரு குழந்தையை உதறி செல்கிறாள். கர்ப்பபை நிறைந்த ஒரு பெண் அந்த கனியை ருசிக்காவிட்டால் பேயாக மாறுவாள்]

வண்ணக்கடலுக்கு துரோணரிடம் அர்ஜுனன்- அஸ்வத்தாமன் கல்வி பயில்வது, ஒருவன் உண்மையான கல்வி என்றால் என்ன என்பதற்கு  இதை படித்தால் போதும். பிறகு ஒட்டு மொத்த வித்தையையும் தனது துறையில் காட்டலாம். இதில் கல்வி பயிலும் மாணவனாகிய அர்ஜுனன் காண்டீபத்தில் ஆசிரியராக மாறி சித்ராங்கதனுக்கு ஆற்றின்கரையில் அமர்ந்து நாரைகளை கொண்டு கல்வி சொல்லிகொடுப்பதையும் கணக்கில் கொண்டால் கல்வியின் வீச்சு புரியும்.[ இது ஒரு ஆசிரியன் அல்லது ஒரு ஆண் தனது கர்ப்பத்தின் கனியின் மீது வைக்கும் பற்று மாணவனுக்கும் மகனுக்கும் மோதலை வஞ்சத்தை உண்டாக்குகிறது. மகனின் முடிவுக்கும் காரணமாய் அமைகிறது. ஆசிரியன் யார்மீதோ கொண்ட தனது தனிப்பட்ட வஞ்சத்தை தனது மகன் மீது இறக்காமல் தனது மாணவன் மீது இறக்கிவைப்பது எவ்வளவு பெரிய விளைவுகளை உண்டாக்கும் என்பதும் முக்கியமான அம்சம்]

மாமலருக்கு வைத்திருக்கும் கதை கசன்-தேவயானி- யயாதியின் கதை.முதற்கனலில் தண்டகர் என்ற நாகசூதன் கரியநிற தைலத்துக்குள் தன்னை பார்க்க விரும்பும் பீஷ்மருக்கு யயாதியை காட்டுவார். மாமலரில் முண்டனாகி வந்த அனுமன் பீமனுக்கு ஒட்டுமொத்த கதையையும் கூறுவார். யயாதி-தேவயானி-சர்மிஷ்டை கதைகூறலுகுள்ளே ஒட்டுமொத்த மகாபாரதம் வேறொருவடிவில் சொல்லபட்டிருக்கும். [ ஈகோ கொண்ட  ஒரு மாணவன்[சுக்ரர்]-ஆசிரியன்[பிரகஸ்பதி] உறவில் ஆரம்பிக்கிறது. பிறகு தனது மாணவனிடம் தனது மகனை[கசனை] கல்வி கற்க அல்ல கல்வியை திருட அனுப்பும் ஒரு தந்தையினால்[பிரகஸ்பதி] நீள்கிறது.வண்ணகடலில் வந்த  ஆசிரியர்[துரோணர்] தாழ்வு மனப்பான்மையினாலும் வஞ்சத்தாலும் மாணவனுக்கு கற்றுகொடுக்கும்போது இதில் அன்பில் கனிந்த ஆசிரியர் வஞ்சமாய் வந்தவனுக்கு தனது கடைசி வித்தையை கற்றுகொடுக்க அவரது கர்ப்பத்தின் கனி பாதிக்க படுகிறது. அது வஞ்சம் கொண்டு தனது வாழ்கையை ஒரு நேர்கோட்டில் வாழ்ந்து தான் தொடங்கிய இடமான வனத்தில் குடிலுக்குள்ளே போய் முடங்கிகொள்கிறது. கறை படிந்த மனங்களினாலும் கனிந்த அன்பினாலும் சுழல்கிறது வெண்முரசு.


ஸ்டீபன் ராஜ்

Saturday, December 15, 2018

மேலாடை



ஐயா, 

வான்மீன்கள் போல உங்கள் பல  வாசகமீன்களில் ஒரு துளி நான். வெண்முரசு நடைபெறும் காலம் 5ம் நூற்றாண்டு எனக் கொள்கிறேன். மகாபாரதம் அப்போது நடந்ததாகவே கூறுகிறார்கள். 



முதற்கனலில் முதல் பகுதியிலேயே மானசாதேவி வருகிறாள். ஓவியர் சண்முகவேல் அவளை கச்சையுடன் வரைந்துள்ளார். வட இந்திய சமூகத்தில் 5ம் நூற்றாண்டு வாக்கிலேயே கச்சையணியும் வழக்கம் வந்துவிட்டதா? இலங்கை மன்னர்கள் மக்களை வரையும் பிரசனா பெண்களை மேலாடையின்றி வரைகிறார். நிறைய பண்டைய ஓவியங்களும் அவ்வாறே மேலாடையின்றி, கச்சையின்றி உள்ளன. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்புதான் இந்திய பெண்களுக்கு மேலாடை அணிவது வழக்கத்திற்கு வந்தது என்கிறார்கள். 

ஓவியங்களிலும், எழுத்துகளிலும் அந்த காலக்கட்டத்தின் ஆடையலங்காரமும் முக்கியமானதன்றோ? 

- ஈஸ்வர மூர்த்தி

அன்புள்ள ஈஸ்வர மூர்த்தி,

பழங்காலத்தில் பெண்கள் மேலாடை அணிந்திருக்கவில்லை என்பது சில ஆய்வாளர்களால் சொல்லப்படுவது. தமிழக வரலாற்றை ஆய்வுசெய்த வெள்ளையர் அப்படி எழுதியிருக்கிறார்கள். ஆனால் கச்சு, வம்பு என பெண்கள் அணியும் மேலாடைக்கு மட்டுமான பல பெயர்கள் நம் தொல்மரபில் உள்ளன

மகாபாரதத்தில் பல இடங்களில் பெண்களின் மேலாடை பற்றிய குறிப்புகள் உள்ளன. உத்தரீயம் என்னும் சொல் மேலாடைக்குப் பொதுவானது. அந்தரீயம் கீழாடை. கண்ணீரில் மார்புகளின்மேல் ஆடை நனைந்தது பற்றியும் மேலாடை விலகியது பற்றியும் பல குறிப்புகள் உள்ளன

மேலாடை அனைவரும் அணிந்திருக்கவில்லை என்று வேண்டுமென்றால் கொள்ளலாம். ஆனால் அதற்குக்கூட சான்றுகள் இல்லை. 

ஜெ

ஓவிய முகங்க்ள்




ஆசானுக்கு வணக்கம். 


என்னையோத்த வாசகர்கள் வெண்முரசை வாசிக்கும் பொழுது, உங்கள் எழுத்தின் வீரியத்தில் திறக்கும் புத்துலகை காண்கிறோம். கற்பனைக்கு எட்டாத உவமைகளும், உயிர் கொண்டிருக்கும் கதை மாந்தர்களும் உலவும் உலகம் அது. 



இடையிடையே சிற்சில ஐயப்பாடுகள் எழுகின்றன. அதனை கடந்து சென்றுவிட எத்தனிக்கும் பொழுது,. வாசகனின் சொற்களுக்கும் செவிமடுக்கும் உங்கள் குணம் கேள்விகளை உங்கள் பார்வைக்கு  அனுப்பி விடைபெற விளைகிறது.

வெண்முரசின் ஓவியர்கள் ஏன் எந்த மனிதருக்கும் முகத்தினை தருவதில்லை. பொங்கும் இருளில் முகம் புதைத்தோ, பின்பக்க அழகை காட்டியோ அனைத்து கதாபாத்திரங்களும் இருக்கின்றன. மாடமாளிகைகள், விலங்குகள், அணிகள், ஆடைகள் என எல்லாவற்றையும் காண இயன்றாலும் முகங்களை காண இயலாதது வருத்தம் அளிக்கிறது. 


இதன்பின்னால் ஏதேனும் உளவியல் உத்தி உள்ளதா? ஆசானே
- அன்புடன்

 மதுமிதா

அன்புள்ள மதுமிதா

மகாபாரதக் கதாபாத்திரங்களின் முகங்களை நாமே கற்பனைசெய்து வளர்த்துக்கொள்வதே நல்லது. முகங்கள் வரையப்பட்டால் நம் மனம் அந்த முகத்தை நமக்கு தெரிந்த முகங்களுடன் ஒப்பிக்கொள்ளும். அந்தக்கதாபாத்திரங்களின் ஆழம் இல்லாமலாகும். ஆகவே ஓவியர் திட்டமிட்டே அந்த முகங்களைத் தவிர்த்திருக்கிறார்

ஜெ