Tuesday, August 20, 2019

அரசநடை
அன்புள்ள ஜெ

அரசநடை பற்றிய பகுதிகள் இயல்பாக திரௌபதியின் கதையின் ஒருபகுதியாக வந்தன. அந்த நடையை பிறர் பயில்கிறார்கள். சிலர் இயல்பாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த நடை வேங்கையின் நடை. ஆரம்பத்திலிருந்தே அதை வெண்முரசு சொல்லிவந்திருக்கிறது. இப்போது மைந்தர் கொல்லப்படுவதற்கு முன்பு அது ஏன் ஞாபகப்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப்பார்த்தேன்.

திரௌபதியின் எண்ணங்களில் துருபர் வந்துகொண்டே இருக்கிறார். ஏன்? அவரை அவளால் நினைக்காமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் அவர் செத்ததை எண்ணி வருந்தவுமில்லை.இயல்பாக வருகிறார். இன்றைக்கு அவள் ஒரு பெரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறாள். அதற்கு வழிகோலியவர் துருபதர். அவருடைய வஞ்சமே திரௌபதியாகப் பிறந்தது. இன்று அவள் அந்த பெரிய இழப்பு நோக்கிச் செல்லும்போது அரசியாக அவளை ஆக்கிய அந்த அடிப்படையான வஞ்சம் நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது

எஸ்.குமரவேல்

குருதி
அன்புள்ள ஜெ,

இந்த அத்தியாயம் அதிர்ச்சியுறச் செய்தது. ஆனால் சென்ற இரண்டுநாட்களாகவே கதை நுட்பமாக இங்கேதான் வந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த இடத்தை வந்தடைந்தபின்னர்தான் உணர முடிந்தது. திரௌபதியிடம் தாய்மை கனிந்திருக்கிறது. அவளுக்கு நகரம் பிடிக்கவில்லை. காட்டில் வாழவே விரும்புகிறாள். போரில் அவளுக்கு ஆர்வமில்லை. ஆகவே பழிவாங்குவதிலும் அக்கறை இல்லை. குருதிப்பழி கொருபவள் அவளுக்குள் குடியேறிய மாயைதான். ஏனென்றால் மாயைதான் சபதம்போட்டாள். ஆனால் மாயை அவளுக்குள் இருப்பவள். அவளுடைய ஆல்டர் ஈகோ. அவளுக்குள் இருந்து எழுந்து வந்தவள். ஆகவே அவளும் மாயைதான்.மாயையில் திரௌபதி வரமுடியும் என்றால் திரௌபதியில் மாயையும் வரமுடியும். முதல்முறை துச்சாதனனின் ரத்தத்துடன் பீமன் வந்தபோது அவனை எதிர்கொண்டு அந்த ரத்தத்தை பூசிக்கொண்ட்வள் மாயைதானே ஒழிய திரௌபதி அல்ல.இப்போது துரியோதனனின் ரத்தம் படிந்த ஆடையை எடுத்துக்கொள்பவள் திரௌபதி. அல்லது அவளுக்குள் இருக்கும் மாயை. அவளுடைய ரத்த ஆசை ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. அந்த கதைதான் அபிமன்யூ வழியாக வந்து இந்த இடத்திலே உச்சமடைந்திருக்கிறது

மகேந்திரன்அம்பிமன்யூ
ஜெ,

வெண்முரசில் சில இடங்கள் கதையோட்டத்தில் எண்ணமாக வந்துசெல்லும். பலசமயம் அவை பெரிய ஒரு நிகழ்ச்சிக்கு முன்னாலும் பின்னாலும் வரும். நாம் அவற்றை கடந்துசென்றுவிடுவோம். ஆகவே நான் எப்போதுமே அப்படி வரும் பகுதிகளை தனியாக எடுத்து ஃபைல் போட்டு வைத்துவிடுவேன். குருக்ஷேத்திரப்போர் முடிந்து மேலே என்ன நடக்கும் என்ற பதற்றம் நிலவும் இடத்தில் திரௌபதிக்கும் அபிமன்யூவுக்குமான உறவு வருகிறது. அவளுக்கே ஐந்து மைந்தர்கள் இருந்தாலும் அவளுக்கு மனசுக்குள் பிடித்த மகனாக அபிமன்யூதான் இருக்கிறான். ஏனென்றால் அவன் இரண்டு பேரின் கலவை. அர்ஜுனனும் கிருஷ்ணனும். இரண்டுபேருமே அவளுக்குப் பிடித்தமானவர்கள்.

அபிமன்யூவுக்கும் திரௌபதிக்குமான உறவின் அவன் எப்படி அவளைப்பார்த்தான் என்பதும் முக்கியமானது. அவன் அவளைத்தான் தனக்குச் சமானமானவனாக பார்க்கிறான். அவளுடைய நிமிர்வு அவனுக்கு தன் அம்மாவாக இருக்கும் தகுதிகொண்டவளாக அவளைக் காட்டுகிறது. நுட்பமான ஒரு விஷயம் இது. இந்த உறவு மேலும் பல வரிகள் வழியாகத் தொட்டுத்தொட்டுச் சொல்லப்படுகிறது. அந்த வரிகளை தனியாக எடுத்து தொகுத்து வாசித்தால்தான் முழுமையான ஒரு சித்திரம் கிடைக்கிறது

ஆர்.லக்ஷ்மி

வதம்
அன்புள்ள ஜெ

நலம்தானே

வெண்முரசின் உச்சகட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதன் வீச்சை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். பல கொந்தளிப்பான தருணங்களை பேச்சிலும் சொன்னீர்கள். துரியோதனனின் இறப்புதான் வெண்முரசின் உச்சம். அப்படித்தான் இருக்க முடியும். ஏனென்றால் இந்தியா முழுக்க இந்த ‘வத’ங்கள்தான் புராணங்களின் மையமாக உள்ளன. விஷ்ணுவால் வீழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே சிவபக்தர்கள் என்பது ஓரு கவனிப்பிற்குரிய விஷயம். ராவணன் மட்டுமல்ல ஹிரண்யகசிபு உட்பட பலரும். இந்த நுட்பமான அம்சம் சங்கரரின் ஷன்மத சங்ரகத்திற்குப்பின்னர் மழுப்பப்பட்டது.

இந்தக்கோணத்தில்தான் பாண்டவர்களின் மகன்களைக்கொல்லப்போகும் அஸ்வத்தாமனை சிவபெருமான் நேரில் வந்து வாழ்த்தி அனுப்பும் காட்சி பொருள்கொள்கிறது. மிக எளிமையாக இதை சைவ வைணவப் பூசலாக நான் பார்க்க நினைக்கவில்லை. வெவ்வேறு பண்பாட்டுக் கலவைகளால் ஆன இந்த நாட்டின் தொன்மையான மரபைப் புரிந்துகொள்ள உதவும் குறிப்புகளகாவே இவற்றை நான் பார்க்கிறேன்.

சங்கர்

கிருதவர்மனும் அஸ்வத்தாமனும்
அன்புள்ள ஜெ

கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் துரியோதனனுக்காக பழிவாங்கும்பொருட்டு அடையும் வெறியை கூர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். அதை எப்படிப் புரிந்துகொள்வது? அதற்கு பல க்ளூக்களை முன்னாடியே வெண்முரசு வழங்கியிருக்கிறது. கிருதவர்மன் பேராசைகொண்டவன். ஆணவம் நிறைந்தவன். தன்னை இளைய யாதவருக்குச் சமானமானவராக நினைப்பவன். அதேபோல அஸ்வத்தாமனின் க்ரூரமும் சொல்லப்பட்டுள்ளது. பகனின் அரசனை அவன் அழிக்கும் காட்சியில் எல்லையற்ற மூர்க்கம் வெளிப்படுகிறது.

அவர்களின் ஆணவத்தைத்தான் இங்கே பழிவாங்கும் வெறியாக மாற்றிக்கொள்கிறார்கள். பழிவாங்குவேன் என்பதை விட நான் பழிவாங்குவேன் என்பதுதான் முக்கியமானதாக உள்ளது என்றுபடுகிறது. ஆனால் க்ருபர் கொஞ்சம் ஆச்சரியம். ஆனால் மேலும் ஆச்சரியங்கள் பின்னாடி வரவிருக்கின்றன. அதை விடுவோம்.

ஆனால் க்ருபரின் பிரச்சினை என்ன? மகாபாரதத்தில் அது சொல்லப்படவில்லை. அவர் ஏன் பழிவாங்கும் வெறியை அவ்வளவு அடைந்தார்? அவர் துரியோதனனுக்கு அவ்வளவு நெருக்கமானவர் அல்ல. அவர்தான் பாண்டவர்களுக்கும் ஆசிரியர். துரோணரைத் தொடர்ந்து அவரும் துரியோதனனை ஆதரித்தார் அவ்வளவுதான். ஆனால் அவருடைய குணச்சித்திரவார்ப்பில் எங்கேயுமே இவ்வளவு மூர்க்கம் இல்லை. அதை வெண்முரசு ஒருவகையாகச் சொல்ல முயல்கிறது. உள்ளே அடக்கி அடக்கி வைத்து வாழ்ந்தவர் இப்போது கடைசியில் ஒரேயடியாக வெடிக்கிறார். அதாவது இது ஒருவகையான உளச்சிக்கலின் வெளிப்பாடு. ஆகவேதான் அதிகமாகப்பேசாதவர் பேசித்தள்ளுகிறார். அவரை வகுத்துக்கொள்ள முழுமையாகவே அவரை ஆரம்பம் முதல் வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன்.

அர்விந்த்

Monday, August 19, 2019

இடமுலைஇடமுலையை தொட்டு அதைத் திருகி ஒரு குவளை என எடுத்து அவனிடம் நீட்டினாள். என்ற வரி எனக்கு ஒரு திடுக்கிடலை அளித்தது. அச்வத்தாமன் முன் வருபவள் மூதேவி என்னும் ஜ்யேஷ்டா தேவி. ஸ்ரீதேவியின் தமக்கை. சில இடங்களில் இவளை ஏழு அன்னையரில் ஒருவராக வழிபடுகிறார்கள். இந்நாவலில் வெவ்வேறு வகையில் வந்துகொண்டே இருக்கிறாள். துச்சாதனன் சுபாகு உள்ளிட்ட பலருக்கும் அவள் காட்சி கொடுக்கிறாள். அவர்களுக்கு அமுதத்தை அளிக்கிறாள்.

அஸ்வத்தாமனை எதிர்கொள்ளும்போது அவன் அந்த வஞ்சத்தின் ஆற்றலை முழுமையாக அடையவேண்டும் என்றால் அவன் அதன்பின் மங்கலம் அழகு சுவை எல்லாவற்றையும் துறந்துவிடவேண்டும் என்று சொல்கிறாள். அதன்பின் அவள் கைநீட்டும்போது நறுமணமும் நல்ல இசையும் எல்லாம் உருவாகின்றன. அதாவது அவளே தனக்கான மங்கலங்களை உருவாக்குகிறாள் அவள் அஸ்வத்தாமனுக்கு அமுது கொடுக்கும்போது இடமுலையை திருகி எடுத்து கிண்ணமாக்கிக் கொடுக்கிறாள்

இடமுலையை திருகியவள் கண்ணகி.அவள் மதுரையை எரித்தாள். அச்வத்தாமனும் அழிவுக்காகத்தான் சென்றுகொண்டிருக்கிரான். இந்த விசித்திரமான இணைப்பு ஒற்றை வரியில் கடந்துசெல்கிறது. இதற்கு நம் மரபில் ஏதேனும் தொடர்பு உண்டா? முலைகுறைத்தல் அமங்கலமாக கருதப்படுகிறதா?

செல்வக்குமார்

மகாருத்ரன்
ஜெ


அஸ்வத்தாமனை மகாருத்ரன் எதிர்கொள்ளும்போது சொல்லும் ஒரு விஷயம் என்னை தொந்தரவுசெய்துகொண்டே இருந்தது. மாமனிதர்கள் யார்? தெய்வமாகிறவர்கள் யார்? மண்ணில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் மட்டும்தானா? மானுட ஆற்றலை மீறிய பெருஞ்செயல்களை செய்பவர்கள் மட்டும்தான் தெய்வங்களாகிறார்கள். ஏனென்றால் நாம் நம்முடைய ஃபோக் மரபில் பார்த்தோமென்றால் தெய்வமாகி நிற்பவர்கள் பலர் மாவீரர்களே ஒழிய நற்செயல்களை மட்டுமே செய்த சான்றோர்கள் அல்ல. இதை நீங்களே தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் என்ர நூலில் விரிவாகப்பேசியிருக்கிறீர்கள்.

நான் இயற்றவிருப்பதை ஏன் இயற்றுகிறேன்? அச்செயலால் எவருக்கு என்ன பயன்? இக்கொடுஞ்செயலை இயற்றும் நான் எவ்வண்ணம் இங்கே நிலைகொள்ளுவேன்?”

என்று அஸ்வத்தாமன் கேட்கிறான். அதற்கு சிவன் பதில் சொல்கிறார்


அவர்கள் சரித்திர சக்தியை தாங்கள் கொண்டுசெல்கிறார்கள். அவர்களுக்கு என்று கடமை உள்ளது. அதை ஏன் அவர்கள் செய்கிறார்கள் என்ரு அவர்களுக்கே தெரிந்திருக்காது. அதை அவர்கள் செய்தே ஆகவேண்டும். ஆகவே செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வரலாறு அவர்களால் எதை செய்துகொள்கிறது என்பதை அவர்கள் அறியவே முடியாது. நன்மை தீமை என்பதெல்லாம் மனிதர்கள் அந்தந்த சந்தர்ப்பங்களைக்கொண்டு சொல்லிக்கொள்வதே ஒழிய அது பிரம்மத்துக்கு ஒரு பொருட்டே அல்ல. அதில் எல்லாமே நிகழ்வுகள்தான். எல்லா நிகழ்வுகளும் சமம்தான். இவ்வாறு பார்க்கும்போதுதான் துரியோதனன் ஏன் தெய்வமானான் என்பதைப்புரிந்துகொள்ள முடிகிறது

ராகவ்

கிளாஸிசம்
ஜெ

சர்வதனும் சுதசோமனும் பீமனின் செய்கையை ஏற்றுக்கொள்ளாமல் சொல்லும் வார்த்தைகளில் இருந்த பணிவும் தந்தைமீதான அன்பும் அதேசமயம் நியாயத்தைச் சொல்லும் உறுதியும் என்னை மிகவும் நெகிழச்செய்தன. அந்த இடத்திலிருந்த கிளாஸிக்கலான உணர்ச்சிகள் என்னை கண்ணீர் விட வைத்தன. நயம்படுசொல் என்பதுதான் கிளாஸிசத்தின் அடையாளம் என்று நான் கல்லூரியில் படித்தபோது இங்கிலீஷ் டிராமா நடத்திய நாயர்சார் சொல்வதுண்டு. அந்தவகையான சொற்கள் அவை

வழக்கமான நவீன இலக்கியம் எதிர்மறைச் செண்டிமெண்ட் வழியாகத்தான் வேலைசெய்கிறது. ஓர் இடத்தில் இன்ன உணர்ச்சி எழும் என்று நமக்கு தோன்றினால் நேர்மாறான உணர்ச்சியை உருவாக்கி நம்மை ஆச்சரியப்படுத்தும். அதன்வழியாக நம்மை அந்த உணர்ச்சி புதியது என்று நம்பசெய்யும். ஆகவே இன்றைய வாசகர்கள் எதிர்பாராதபடி ஒன்று சொல்லப்பட்டால்தான் அது நன்றாக இருக்கிறது என்று சொல்லப்பழகியிருக்கிறார்கள். ‘நான் முன்னாடியே ஊகிச்சிட்டேன்’ என்று இவர்களில் பலரும் சொல்வதைக் கண்டிருக்கிறேன் ஆனால் எதிர்பார்த்ததே சொல்லப்படும்போதும் அந்த உணர்வெழுச்சி உருவாவதுதான் கிளாஸிசம். அதில் அப்படி முரன்பாடான எதிர்பாராத விஷயங்கள் வரமுடியாது. அதில் நுட்பம் வழியாகவும், அதன் நம்பகத்தன்மை வழியாகவும் கிரான்டீர் வழியாகவும்தான் அது நம்மை உணர்ச்சிகரமாக ஆக்குகிறது.

சுதசோமனும் சர்வதனும் என்ன சொல்வார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும் அவர்கள் அதைச் சொல்லும்போது ஒரு பெரிய நெகிழ்ச்சியும் நிறைவும் உருவாகிறது. கிளாஸிக்கலான இலக்கியத்தை வாசிக்க வாசிக்க நவீன இலக்கியம் அர்த்தமில்லாத அறிவுப்பயிற்சியாகத் தெரியத்தொடங்கும் என நினைக்கிறேன்

ராஜசேகர்

தந்தை மகன் உறவுகள்


அன்புள்ள ஜெ

பீமன் துரியோதனனை தொடையில் அறைந்து கொன்றது சரியா என்ற கேள்வியை கேட்கும் சதானீகன் அதை பீமனின் மகன்களிடமே கேட்போம் என்று சொல்வது ஓர் ஆழமான விஷயம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இன்றைக்கு என்றால் சம்பந்தமில்லாத எவரிடமேனும் கேட்போம் என்றுதான் நியாயம் பேசுவோம். அன்று வேறுமாதிரி இருந்திருக்கிறது. சொந்த மகன்கள் தான் சரியான நியாயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்ப அவர்கள் இருவருமே பீமனின் செய்கையை நியாயப்படுத்தவில்லை. அப்படித்தான் நிகழ முடியும். ஏனென்றால் அவர்கள் பீமனின் மனசாட்சி. அவனுடைய வஞ்சம் அதைச் செய்தாலும் மனசாட்சி ஏற்றுக்கொள்ளாது.

வெண்முரசில் திரும்பத்திரும்ப ஒரு பழைய உளவியல் வந்துகொண்டே இருக்கிறது. அதாவது நம் மைந்தர்கள்தான் நம் மூதாதையர். நாம் நம் மைந்தருக்குச் செய்வது மூதாதையர்களுக்குச் செய்வதுதான்.மைந்தர்கள் நம்மை ஏற்றுக்கொண்டால் மூதாதையர் ஏற்றுக்கொண்டதுபோல. சர்வதனும் சுர்தசோமனும் பீமனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே பாண்டுவும் விசித்ரவீரியனும் சந்தனுவும் பிரதீபனும் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

வெண்முரசில் தந்தை மகன் உறவுகள் எப்படியெல்லாம் வருகின்றன என்று மட்டும் பார்த்து ஒரு முழுமையான வாசிப்பை நிகழ்த்தவேண்டும் என நினைக்கிறேன்.பாசமும் அதை மீறிய நியாய உணர்ச்சியும் எப்படியெல்லாம் வருகின்றன என்று எழுதிப்பார்க்கவேண்டும்

எம்.ஆர். சந்திரசேகர்

சோர்வு
அன்புள்ள ஜெ

மெல்லமெல்ல ஆழ்ந்த மன அழுத்தத்திற்கும் சோர்வுக்கும் கொண்டுசெல்லத் தொடங்கிவிட்டது வெண்முரசு. இதில் போர் தொடங்கி ஓர் ஆண்டு ஆகிறது. முதல்நாவல் முதலே கொடூரமான சாவுகளும் இழப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றன. நிகழ்வுகளுக்கு சமானமாக கனவுகளும் வருகின்றன. கிரேக்கத்தொன்மக்கதைகளைப் போல தெய்வங்களும் ஊடாடிப் போர் செய்துகொண்டிருந்தன. ஆனால் ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன அடுத்து என்ன என்றே நாவல் சென்றுகொண்டிருந்தது. ஆகவே ஏதோ ஒருவகையில் அதைக் கடந்து வரமுடிந்தது. 6னின் சாவுடன் நாவல் ஒருவகையில் முடிந்துவிட்டது. அந்த எண்ணம் வந்தபின் நாவல் அந்தை மீட்டி மீட்டி மேலேகொண்டுசென்றுகொண்டேஇருப்பது பெரிய சோர்வை அளித்தது. வாசிக்காமலும் இருக்கமுடியவில்லை. வாசிக்கும்போது வரும் சோர்வையும் தாங்கமுடியவில்லை. நூறு ஆண்டு வாழ்ந்துவிட்டதுபோன்றஓர் உனர்வையே அடைகிரேன் என்ரு தோன்றுகிறது. இனி ஒன்றுமே அறிவதற்கும் அனுபவிப்பதுக்கும் இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. கிராண்ட் என்ற சொல்லைத்தவிர ஒன்றுமே சொல்வதற்கில்லை

சுவாமி

Sunday, August 18, 2019

திரௌபதியின் குணச்சித்திரம்

]

அன்புள்ள ஜெ

திரௌபதியின் குணச்சித்திரம் ஆரம்பம் முதலே குருதியை தேடுபவளாகவே காட்டப்பட்டிருக்கிறது. எவ்வளவு காட்சிகள். குருதியில் நீராடும் காட்சி ஒன்று உள்ளது. குருதி பூசி அவள் குழலை ஐந்து புரிகளாக நீவிக்கட்டுகிற காட்சி ஒன்று உள்ளது. சுயம்வரத்தில்கூட குருதி அவள் முகத்தில் தெறிக்கிறது. அவள் குருதியையே முதன்மை மங்கலமாகக் காணும் பார்வை கொண்டிருக்கிறாள்

திரௌபதியிடம் அவள் அம்மா பேசும் காட்சி இப்போது வருகிறது. அது தீர்க்கதரிசனம் போல ஒலிக்கிறது. சாவு எவருடையதானாலும் நம்முடன் இருக்கிறது, சாவு சாவுதான் என்கிறாள். நீ மங்கலத்தையே கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் நீ ஒரு அம்மா என்கிறாள். இந்த இடம் முக்கியமானது. ஏனென்றால் ஐந்து மைந்தர்களும் சாகப்போகிறார்கள். அவளுடைய வயிற்றில் பிறந்த ஒருவர் கூட மிஞ்சப்போவதில்லை. அம்மா அதைத்தான் சொல்கிறாள்.ரத்தம் ரத்தம் என்று துள்ளாதே. உன் ரத்தமும்தான் சிந்தவேண்டியிருக்கும் என்கிறாள்

இது குலமகளின் தத்துவம். மங்கலம் ஒன்றே அவள் உள்ளத்தில் நிறைந்திருக்கவேண்டும். மங்கலத் தெய்வங்களை மட்டுமே அவள் வணங்க வேண்டும். மங்கலப் பொருட்களை அணிய வேண்டும். அவள் விழி தொடும் இடமெங்கும் மங்கலமே நிறைந்திருக்க வேண்டும். மங்கலச்சொல்லன்றி ஒன்று அவள் நாவில் எழலாகாது. எனில் அவளுள்ளும் மங்கலம் நிறைந்திருக்கும்


ஆனால் அந்த மங்கலத்தை திரௌபதி பாண்டவர்களுக்கு அளிக்கவேயில்லை. அவள் கொண்டுவந்தது குருதியையும் சாவையும்தான். அவளுக்கே அதுதான் மிஞ்சியது

ராஜசேகர்

காத்திருப்புஅன்புள்ள ஜெ

போர் நிகழ்ந்துகொண்டிருக்கையில் இங்கே குந்தியும் திரௌபதியும் காத்திருந்தார்கள். இரண்டுபேருமே போருக்காக காத்திருந்தவர்கள். இரண்டுபேருமே போருக்கான காரணங்களும் கூட. அவர்கள் எப்படிக் காத்திருந்தார்கள் என்பது ஒரு பெரிய கேள்வி. அதை முன்பு சொல்லவே இல்லை. போருக்கு நடுவே அதைச்சொன்னால் வேகம் குறையும். ஆனால் இப்போது அவர்களின் எதிர்வினைகள் சொல்லப்படுகின்றன. அதிலும் திரௌபதில் எழுந்து அமர்ந்து மீண்டும் படுத்து கதவில் தட்டுவதை எதிர்பார்த்துக் காத்துக்காத்து உண்ணாமலும் உறங்காமலும் பதினெட்டு நாட்களையும் நகர்த்தும் காட்சி அபாரமாக உள்ளது.அவளுடைய அந்தத்தவிப்பை காலமில்லாத தன்மையை முன்பு நடந்தது இப்போது நடப்பது எல்லாவற்றையும் குழப்பி ஒரே நெரேஷனாக ஆக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். அதன் வீச்சும் ஆழமும் மலைக்கச் செய்கின்றன

சாரங்கன்

நெருப்பு நீர் நிலம்அன்புள்ள ஜெ

குருக்ஷேத்திரத்தை வாசிக்கும்போது ஒரு விஷயம் சட்டென்று தட்டுபட்டது. அது முதலில் நெருப்பால் மூடப்படுகிறது. அதன்பின் நீரால் மூடப்படுகிறது. கடைசியாக மண்ணால் மூடப்படுகிறது.

முதற்கனலின் தொடக்கத்தில் குருக்ஷேத்திரம் வரும்போது பெரிய மண்புற்றுகளுக்குள் தேர்களும் யானை எலும்புக்கூடுகளும் மட்கிக்கொண்டிருக்கும் களமாகவே காட்டப்படுகிறது.

இந்தக்குருக்ஷேத்திரத்தை அப்போதே மனதில் உருவகித்து அதை எழுதினீர்களா அல்லது எழுதி எழுதி அந்தத் தொடர்ச்சியில் கொண்டுசென்று சேர்த்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் இந்த யூனிட்டி ஆச்சரியப்படச் செய்கிறது

ராஜேந்திரன் எம்

போர்க்களக்காட்சி
அன்புள்ள ஜெ,

குருக்ஷேத்திரத்தின் சித்திரத்தை ஆரம்பத்தில் பலப்பல அத்தியாயங்கள் வழியாக வர்ணித்துக்கொண்டே இருந்தீர்கள். போர் தொடங்குவதற்கு முன்பு அங்கே எப்படி இருந்தது, அங்கே எப்படி வண்டிகள் வந்தன, ஒரு நகரம் எப்படி அமைந்தது, எப்படி படைகள் நின்றன,எ எப்படி சமைத்தனர், என்னென்ன சாப்பிட்ட்டார்கள் என்றெல்லாம் சொன்னீர்கள். அப்போது கொஞ்சம் மிகையாகவே சொல்கிறீர்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. பக்க அளவு கணக்கில்லை என்பதனால் நீட்டிக்கொண்டே செல்கிறீர்கள் என்று தோன்றியது.

ஆனால் இன்றைக்கு வாசிக்கும்போது அங்கிருந்து இன்று மண்மூடிக்கிடக்கும் களம் வரை ஒரு பெரிய கேன்வாஸ் என்ற எண்ணம் ஏற்படுகிறது. துளித்துளியான சித்திரங்கள் வழியாக குருக்ஷேத்திரம் ஒரு கதைப்பின்புலம் என்று இல்லாமல் நாமெல்லாம் சென்று வாழ்ந்த ஒரு மண்ணாக ஆகிவிட்டது. அன்றுமுதல் இன்றைக்கு வரை அது எப்படியெல்லாம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது என நினைக்கும்போது படபடப்பு எழுகிறது.

தொடர்ச்சியாக வாசித்ததனால் அந்த போர்க்களக்காட்சி எங்கேயோ நிற்கிறது. முழுசாக அமர்ந்து வாசித்தால் ஒரு பெரிய ஓவியத்தை வரைந்து அப்படியே அழித்துவிடும் அனுபவம் போலிருக்கும் என நினைக்கிறேன்

சாந்தகுமார்

உமித்தீ
அன்புள்ள ஜெ

குருக்ஷேத்திரப்போர் முடிந்தபின் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் எதிர்வினையாற்றுகிறார்கள். அர்ஜுனன்தான் கிட்டத்தட்ட செத்தவன் போலவே ஆகிவிட்டான். அவனுக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவன் கர்ணனைக் கொன்றதுமே தானும் செத்துவிட்டான். அதேபோல பீமனும் துரியோதனனை கொன்றதும் தானும் செய்த்துவிட்டான். நிறைவேறியவர்கள் எல்லாருமே அணைந்து கரியாக ஆகிவிட்டார்கள். நோக்கம் நிறைவேறாமல் அலைபவர்கள்தான் எரிந்துகொண்டே இருக்கிறார்கள். அஸ்வத்தாமம் உமித்தீ போல உள்ளூர எரிகிறான். கிருபர் பொறிகளாக கிளம்பி அலைபாய்ந்துகொண்டே இருக்கிறார். கிருதவர்மன் பொருமி எரிகிறான். போர் எல்லாரையுமே மாற்றிவிட்டது. போர்க்களத்தை முற்றிலும் புதிய ஒரு கோணத்திலே பார்க்கவைக்கிறது வெண்முரசு

சிவராஜ்

Saturday, August 17, 2019

நுதல்விழி


அன்புள்ள ஜெ

அஸ்வத்தாமனின் நெற்றிக்கண் ஒரு அற்புதமான படிமம். அவனுடைய மணியைப்பற்றி மகாபாரதத்தில் குறிப்பு உள்ளது. ஆனால் அதை பாம்பின் மணிக்கும் சிவனின் நெற்றிக்கண்ணுக்கும் சமானமான ஒன்றாக ஆக்கிக்கொண்டது ஒரு அருமையான கற்பனை.

பாம்பின் விஷம்தான் மூத்து மூத்து ஒளிகொண்டு கடைசியில் மணியாக ஆகிவிடுகிறது. சிவமே யாம் [சிவோஹம்] என்று மந்திரம் சொல்பவன் சிவனாகவே ஆகிவிடுகிறான். அவனுக்கு நெற்றிக்கண் முளைத்துவிடுகிறது. பலமுறை சிவன் வந்து அஸ்வத்தாமனை யோகமுழுமை நோக்கிக்கொண்டுசெல்ல முயல்வதாக வருகிறது. ஜல்பன் அவனை கடைசிக்கணத்தில் கலைத்துவிடுகிறான்.

அஸ்வத்தாமனை ஒரு ருத்ரன் என்று காட்டியதனால்தான் கடைசியில் அந்த ருத்ர தாண்டவம் அவ்வளவு பயங்கரமாக உள்ளது

ஜெயக்குமார்

அஸ்வத்தாமனின் வெறிஅன்புள்ள ஜெ

“ஆசிரியரே! ஷத்ரியன், ஆசிரியரே. நான் ஷத்ரியன், ஆசிரியரே!” என்ற திருஷ்டதுய்ம்னனின் குரல் செவிகளை விட்டு போகவில்லை. இந்நாவலில் மிகப்பரிதாபமான இடம் இதுதான். போர் தொடங்கிவ்ட்டால் மாறிமாறி குரூரம் அடைந்தப்டியே சென்று இப்படித்தான் சமானமே இல்லாத க்ரூரத்தில் சென்று முடியும். அதைச்செய்யும் அஸ்வத்தாமனின் வெறியை எண்ணிப்பார்க்க முடியவில்லை. அவன் தந்தை கொல்லப்பட்டபோது தெளிவாகத்தான் இருந்தான். அதன்பின்னர்தான் இப்படி ஆகிவிட்டன். அவனுக்குள் தான் நெறிநிற்பவன் என்ற நிமிர்வு இருந்தது. நெறிகளுக்கெல்லாம் பொருளே இல்லை என்ற எண்ணம் வந்ததுமே ஊஞ்சல்போல மறு எல்லைக்குச் சென்றுவிட்டான்.

அஸ்வத்தாமன் ஆரம்பம் முதலே பேசாதவனாகவும் உள்ளொடுங்கியவனாகவும் இருக்கிறான். அத்தகையவர்கள்தான் இந்தப்பெரிய க்ரூரத்தைச்ச் செய்யமுடியும் அவர்கள் பேசாமலிருப்பதே அவர்களுடைய எல்லா உணர்ச்சிகளையும் ஒன்றாகத் திரட்டிக்கொள்வதற்காகத்தான். அஸ்வத்தாமனின் குணச்சித்திரத்தை ஆரம்பம் முதலே தொட்டு வாசிக்கவேண்டும்

சாரங்கன் 

கொலைவெறிக்காட்சி
ஜெ,

தீயின் எடையில் அஸ்வத்தாமன் கொள்ளும் கொலைவெறிக்காட்சி பயங்கரமானது. மகாபாரதப் போரின் உச்சமான கொடூரம் இது. நோயுற்ற குழந்தைகளை வெட்டிக்கொல்கிறார். கிருபரும் கிருதவர்மனும் அதற்குத்துணை நிற்கிறார்கள். இவ்வளவுநாளும் அவர் கட்டிக்காத்த நெறிகள் எல்லாமே அழிந்துவிட்டன. அவருடைய குரோதத்தை நெற்றிக்கன் என்றே சொல்லிக்கொண்டிருந்ததும் அவர் வரும் வழியில் கலியையும் மூதேவியையும் அதன்பின் மகாருத்ரனையும் பார்த்ததும் எல்லாம் இந்தக் கொலைவெறியாட்டத்துடன் இணைந்து வாசிக்கவேண்டியவை. அவருடைய அந்த தாண்டவம் போர்த்தெய்வத்தின் கடைசி அடி என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது

பாண்டவர்கள் செய்த எல்லா பாவங்களுக்கும் இந்தச் செயல் மூலம் ஈடுகட்டப்பட்டது. பீஷ்மர் முதல் கர்ணன் துரியோதனன் வரை அத்தனைபேரையும் அவர்கல் கொன்றார்கள். அநீதி செய்தார்கள். இனி இந்த அநீதிக்கு அவர்கள் எவரையுமே பழிசொல்லமுடியாது. செய்தது திரும்பி வரும் என்பதற்கான சான்று இந்தச்செயல்

பாஸ்கர்

அசுரர்
அன்புள்ள ஜெ

துரியோதனன் இறந்த அந்தக்காட்டிலேயே அத்தனை அசுரமன்னர்களும் இருப்பதைப்பற்றிய காட்சி மனம்கலங்க வைத்தது. அந்தக்காட்சியை கன்ஸீவ் செய்திருந்த விதமே அழகாக இருந்தது. அது விதுரர் அடையும் மனப்பிரமையாகவும் இருக்கலாம். மின்மினிகளின் அசைவில் அவர் விரும்பியதை வாசித்திருக்கலாம். ஆனால் அந்தக்காட்சியின் அர்த்தமே வேறுதான். அங்கே பேசும்போது அசுர மன்னர்கள் நல்ல அரசரகள், நல்ல அரசர்களில் கொஞ்சம் அசுர ரத்தம் உண்டு என்று வந்தது.

அதைப்பற்றி நினைத்துக்கொண்டேன். நம் நினைவில் இந்த அசுர மன்னர்கள் எல்லாம் ஏன் இன்னும் வாழ்கிறார்கள்? அவர்களை நாம் கலைகளில் போற்றிக்கொண்டேதான் இருக்கிறோம். கேரளத்தில் மாபலி சக்கரவர்த்தியை கேரளத்தை ஆட்சிசெய்தவர் என்றே வழிபடுகிறார்கள். மகாபலி நாட்டை ஆட்சிசெய்யும்போது எல்லா மனிதர்களும் சமானமானவர்களாக இருந்தார்கள் என்று பாடுகிறார்கள். மகாபலி மேலே வரும்நாள்தான் திருவோணமாகக் கொண்டாடப்படுகிறது அசுரர்கள் ஏன் வழிபடப்பட்டார்கள் என்றால் இந்த ஆட்சியால்தான் என தோன்றுகிறது

ராஜ் அருண்

Friday, August 16, 2019

வெண் முரசு - கர்ண ரகசியம்அன்புள்ள ஜெ.

வெண்முரசு  அத்தியாயங்கள் படித்து வருகிறேன்.

கர்ணனின் பிறப்பு பற்றிய ரகசியம் பற்றிய என் சிந்தனை இது.

பொதுவாகப் பிற நூல்களிலும், திரைப்படங்களிலும் கர்ணனின் பிறப்பு பற்றிய ரகசியம் கண்ணன் போன்ற வெகு சிலருக்கு மட்டும் தெரிந்த ஒன்றாகவும், பின் குந்தியின் வரம் வாங்கும் சந்திப்பிற்குப் பின் கர்ணனுக்கும் தெரிவது போலவும் சித்தரிக்கக் கனண்டிருக்கிறேன்.கர்ணனின் மறைவுக்குப் பின் குந்தியே அதைப் பிரகடனப் படுத்துவது போலவும் , பாண்டவர்கள் அப்போது அதை முழுதுணர்ந்து வருந்துவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

வெண் முரசில் நான் கிரகித்தது, கர்ணனின் பிறப்பு ரகசியம் துரியோதனன் உட்பட பலருக்கும் (வெளிப்படையாகச் சொல்லாவிடினும்) தெரிந்த்திருக்கிறது எனும் தோற்றம். குந்தி கர்ணனை சந்தித்து பற்றி கௌரவர்களுக்குக் கிடைக்கும் செய்தியும் அதை ஒட்டிய உரையாடல்களிலும் இது வெளிப்படுகிறது.

பாண்டவர்கள் தரப்பிலோ அர்ஜுனனும், தருமரும் கர்ணனுக்குள் தங்கள் அம்சத்தை உணரும் அக வெளிப்பாடுகள் மட்டுமே நாம் காண்பது.

கர்ணனின் மறைவுக்குப் பின்னும் அவன் பிறப்பு பற்றிய வெளிப்படையான பிரகடனம் நிகழவில்லை.

இதில் ஏதோ ஓர் கண்ணி விடுபட்டது போல் தோன்றுகிறது. இது பற்றி தங்கள் கருத்தை  அறிய விரும்புகிறேன்.

மகாபாரதத்தை உங்கள் மகனின் சிறு வயதில் ஓர் இரவில் கதையாகச் சொல்லியதை ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். 

மகாபாரதம் நீங்கள் பல நேரம் குறிப்பிட்டது போல காலப்போக்கில் பல வடிவங்கள், மாறுபட்ட கற்பனை, சம்பவங்களுடன் வந்திருக்கலாம். 

ஆனால் மூலக்கூறான விஷயங்கள் மாறாமலிருப்பது அவசியமல்லவா.  வெண்முரசு எழுதும்போது இதற்கான எல்லைக்கோடு என ஏதும் நீங்கள் வகுத்துக்கொண்டீர்களா.

மனதில்  தோன்றியதை அப்படியே எழுதி விட்டேன்.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்

தேனாபிஷேகம்
போர்க்களக் காட்சிகளை வாசித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று பழைய நினைவு. மழைப்பாடலில் பாண்டு தன் மைந்தர்களை உடலெங்கும் சுமந்துகொண்டு தலையில் தேன்தட்டுகளைச் சுமந்து வந்துகொண்டிருக்கும் காட்சியை நினைவுகொண்டு தேடிப்பார்த்து கண்டுபிடித்து வாசித்தேன். அவன் மனசில் இருந்த இனிப்புதான் அந்த தேன் என்று எனக்கு இப்போதுதான் புரிந்தது. தேனாபிஷேகம் என்பார்களே அதுதான். அப்போது அவன் அடைந்த அந்த மகிழ்ச்சிக்கு இணையே இல்லை. அத்தகைய ஒரு மகிழ்ச்சியிலிருந்து இன்றைக்கு இவ்வளவு பெரிய அழிவு வரை வந்துசேர்ந்திருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க்கையின் இந்த ஓட்டம்

சக்தி

Thursday, August 15, 2019

துரியனின் மறைவு


அன்புள்ள ஜெ

துரியனின் மறைவும் தொடந்து வரும் காட்சிகளும் உள்ளத்தை இறுகச்செய்தன. அவனை ஒரு பேரரசன் என்ரு மட்டும்தான் என் மனம் வாங்கிக்கொண்டது. மண்ணாசை இருந்தாலென்ன என்றுதான் தோன்றியது. நன்மைதீமைகளை கணிக்க நாம் யார் என்றெல்லாம் நினைத்தேன். துரியோதனனின் சாவும் சரி அவன் அனாதைபோல எரிவதும் சரி நெஞ்சை அறுக்கும் காட்சிகள். ஆனால் அதில் ஒரு காவியத்தன்மையும் உள்ளது. கம்பராமாயணத்தில் ராவணன் கடைசியாகச் சாகும் காட்சியில் அவன் அவ்வளவு தனிமையாக இருப்பான். என் தமையன் தனியாக மாண்டுகிடக்கக்கூடாது என்று கும்பகர்ணன் சொல்வான். ஆனால் உண்மையில் தனியாகத்தான் கிடப்பான். அந்தத்தனிமை. மொத்த வெண்முரசிலும் எங்கேயும் துரியோதனன் தனிமையாக இருந்ததில்லை. ஆனால் இப்போது அந்த தனிமையை அடைந்துவிட்டான். இதுதான் முடிவு என்பது. கேவலஸத்வம் என்று இதைத்தான் சொல்கிறார்கள்

ஸ்ரீனிவாஸ்,.

தீ
அன்புள்ள ஜெ

துரியோதனனின் சிதையில் இருந்து எடுக்கப்பட்ட தீயுடன் அஸ்வத்தாமன் செல்லும் காட்சி கொந்தளிப்பை உருவாக்கியது. மூன்றுபேரும் மூன்று நிலையில் இருக்கிறார்கள். கிருபர் சமநிலை இழந்து கொந்தளிக்கிறார். கிருதவர்மன் குரூரமான வெறியுடன் இருக்கிறார். ஆனால் மூவரிலும் அஸ்வத்தாமன் தான் உச்சகட்டமாக அமைதியுடன் இருக்கிறார். அவர்தான் அத்தனைபெரிய அழிவைச் செய்யப்போகிறார். அவருடைய அந்த அமைதிதான் பயங்கரமாக உள்ளது. அவரை சாஸ்வதமாக ஆக்குவது அந்த அழியாத வன்மம்தான்

செந்தில்குமார்

மாற்றம்
அன்புள்ள ஜெ

எல்லா சடங்குகளும் உண்மையிலேயே நிகழ்ந்து அதன்பின்னர் குறியீடாக ஆக்கிக்கொள்ளப்பட்டவை. அப்படியென்றால் போரும் அப்படித்தான். உண்மையில் போர்தான் மிகப்பெரிய மனிதக்குறியீடு. வாழ்க்கையை, மனித மனதை, நன்மை தீமைகளின் மோதலை எல்லாமே அது குறிப்பால் உணர்த்துகிறது. அதன்படிப்பார்த்தால் போரை குறியீடாக ஆக்குவதென்பது மகாபாரத காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது என நினைக்கிறேன். இந்தப்போர் நேரடியானது. ஆனால் அதை கதைவழியாகக் குறியீடாக ஆக்கியிருக்கிறார்கள். நான் வெண்முரசின் கலர் ஸ்கீமாவை கவனிக்கிறேன். செந்நாவேங்கை என்று அது சிவப்பையே சொல்லிக்கொண்டிருந்தது. அதன்பின் கடைசியில் கருமையைச் சொல்லி முடிக்கிறது. சிவப்பு ரஜோ குணம். அங்கே ஆரம்பித்து தமோ குணத்தில் வந்து நின்றிருக்கிறது. ஒரு மாபெரும் ஓவியம்போலிருக்கிறது வெண்முரசு

எஸ்.ராஜேஷ்

குரூர அழகியல்
அன்புள்ள ஜெ

வெண்முரசின் குரூரம் மெல்ல அதன் உச்சத்தை அடைந்துவிட்டது. குரூர அழகியல் என்று சொல்கிறோம். அதெல்லாம் இந்தவகையான பழைய எபிக் களில் இருப்பதற்கு அருகே கூட வராது. ஏனென்றால் இதெல்லாம் அடிப்படையில் டிரைபல். அதன்பின்னாடிதான் கிளாஸிக். ஆகவே அதிகுரூரமான விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொருவரும் குரூரத்தில் தங்களுக்கு தாங்களே விதித்துக்கொண்ட எல்லைகளை எல்லாம் கடந்துசெல்கிறார்கள். அதன் உச்சம்தான் அஸ்வத்தாமன் உபபாண்டவர்களைக் கொல்வது. அதுவரை இந்தக்கதை சென்று சேரும் என்று நினைக்கிறேன். ஒரு பதற்றத்துடனேயே இதை வாசிக்கிறேன்

ராஜேந்திரன்/.

Wednesday, August 14, 2019

அழிவுஆசிரியருக்கு,

வெகுவானோர் கூறியுள்ளது போல் கர்ணனின் இறப்பைவிடவும் துரியோதனரின் இறப்பு பாதித்தது உண்மை தான். அங்கரின் இறப்பிற்கு, நீங்கள் எங்களைத் தயார் செய்தீர்கள் என்பதே உண்மை. போக, நிகழ்வதை ஊகித்துமிருந்தோம். மூத்த கௌரவரின் இறப்பில் நீங்கள் நிகழ்த்தப்போவதை எண்ணியறிய இயலவில்லை. கிருதவர்மனின் சொற்களைக் கடக்கையில் விழிநீர் கசிந்து கொண்டிருந்தது. "இப்பழிக்கு நிகராக இவ்வுலகை ஏழு முறை எரித்தாலும் முத்தெய்வங்களின் முகத்தில் காறி உமிழ்ந்தாலும் தான் தீருமோ என்று நிலத்திலறைந்து கதறுகிறான்".

இவர்கள் (பாண்டவர்கள்) தங்களை மேன்மக்கள் என்கிறார்கள்,  கீழ்மக்கள் எனத் தங்களைக் கருதுவோர்கள் சற்றேனும் மேம்பட எண்ணுகையில் இவர்கள் கீழிறங்குகிறார்கள், வீணர்கள் என்று காறி உமிழ்கிறான் அஸ்வத்தாமன். 

இன்னொரு இடம், யுதிஷ்டிரன்; இளைய யாதவரிடம் , என் கொடி வழி அழிந்துவிடும் என எண்ணுகிறாயா யாதவனே என்று கேட்பது.

குந்தி, யுதிஷ்டிரனிடம் தன் மூத்தோனுக்கு நீரள்ளிவிடச் சொல்வதைக் கோடி காட்டீனீர்கள் முன்பு.

தீயின் எடை எவ்வண்ணம் என்பதை உணர முடிந்தாலும், தாங்கள் நிகழ்த்தும் மேஜிக் எப்பொழுதும் எட்டாத் தொலைவிலிலேயே இருக்கிறது. இதோ தீர்ந்துவிடப் போகிறதே எனும் பதட்டதுடனேயே படிப்பதும் உங்களின் வெற்றியே.

நன்றி
சிவா

கலி
அன்புள்ள ஜெ

பலரும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள், துரியோதனனின் சாவைப்பற்றி. அந்தச்சாவு நாம் எதிர்பார்த்தது. ஆனால் அது எவ்வாறோ ஒரு கல்யாணச்சாவாக ஆகிவிடும் என்று நாம் எண்ணினோம். சகுனி முதல் அனைவருடைய சாவும் முடிந்துபோகிறது. ஆனால் துரியோதனனின் சாவு தொடர்கிறது, வளர்கிறது. ஆகவேதான் அது அத்தனை கச்சிதமாக நிகழ்கிறது

மகாபாரதத்தில் பீமன் துரியனை அடித்துவீழ்த்திவிட்டுச் செல்கிறான். அங்கேயே கிடக்கும் துரியோதனன் அஸ்வத்தாமனை தளபதியாக நியமிக்கிறான். அதன்பின்னர் சாகிறான். அவ்வளவு கொடூரமாக கொல்லப்படுகிறான். அவன் தலையை உதைத்து பீமன் ஏளனம் செய்கிறான்.

மகாபாரதத்தில் வரும் துரியனின் குணச்சித்திரத்திற்கு அது ஏற்புடையது அல்ல. அவனை சக்கரவர்த்தியாகவே நீங்கள் காட்டுகிறீர்கள். ஆகவே ஒரே அடியில் அவன் விழுந்து மண்ணில் அமிழ்வதே உரிய சாவாக இருக்கும் என நினைக்கிறேன்

துரியனின் சாவு கலிகாலத்தின் தொடக்கம் அல்லவா

செல்வக்குமார்

போரில்...

வணக்கம் ஜெமோ,

நான் 2016 மே மாதம் தான் வெண்முரசு படிக்காத தொடங்கினேன். நீங்கள் அதற்க்கு இரண்டரை ஆண்டுகள் முன்னரே தொடங்கி விட்டீர்கள். ஒரு வேள்வி போல தொடர்ந்து வாசித்து, கிட்டத்தட்ட "மாமலர்" பாதியில் வந்து சேர்ந்தேன். அதிலிருந்து தினமும் படிக்காமல் இருந்ததில்லை. சமயங்களில் சில நாட்கள் விடுபடும், சேர்த்துப் படிப்பேன். சமயங்களில் நள்ளிரவு வரை விழித்திருந்து அடுத்த அத்தியாயத்தை டித்ததும் உண்டு. ஒன்றும் அதிசயமல்ல, பல வாசகர்கள் செய்வது தான்.

ஆனால், இந்த ஜனவரி மாதம் ஒரு தொய்வு. விருந்தினர் வருகை, வெளியூர் பயணம் என்று ஒரு வாரம் வாசிப்பு விடுபட்டு போனது. மீண்டும் தொடங்க முடியவில்லை. ஒரு விதமான மன தொய்வு, சோர்வு. ஓரிரு முறை விட்ட இடத்தில் இருந்து படிக்கலாம் என்று தொடங்கி அதே இடத்தில் தேங்கினேன்.

பின்னர் கடந்த 7 மாதங்களாக படிக்கவில்லை. அவ்வப்போது என்னவாயிற்றோ என்ற பதைப்பு ஏற்படும். ஆனால் வாசிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கினேன். அப்போது தான் எனக்கு ஒன்று தோன்றியது.

குந்தியும் கர்ணனும் சந்தித்த இரவோடு என் வாசிப்பு நின்று விட்டது. அடுத்த அத்தியாயத்தையே சில முறை மீண்டும் மீண்டும் தொடங்கி நிறுத்தி இருக்கிறேன்.


கர்ணன் படத்தில் பார்த்தது மனதை நெகிழ வைக்கும் ஆனால் சற்று நாடகத்தன்மையான காட்சி. தாங்கள் 'கலைக்கணத்தில்' விவரித்திருந்தது ஒரு கிளாசிக்.

ஆனால் வெண்முரசிலோ நடந்தது வேறொன்று. அதை என் மனம் தாளவில்லை என்றே சொல்ல வேண்டும். அதனால் தானோ  படிக்க முடியவில்லை.

ஒரு அன்னையால் இப்படி நடந்துக் கொள்ள முடியுமா... அவள் அவனுக்கும் தானே அன்னை. Cold & calculated. என் ஆழ்மனம் அவள் கர்ணனிடம் அழுது கதற வேண்டும் என்று எதிர்பார்த்ததா. இல்லை பிருதையால் அது முடியாது. பாஞ்சாலி ஒரு சொட்டு கண்ணீராவது சிந்த வேண்டிம் என்று தேவிகை உபப்பிலாவியத்தில் எதிர்பார்த்து பின்னர் சீற்றம் கொண்டாளே ,அப்படி தான் நானும் சீற்றம் கொண்டேனா... 

ஆனாலும் குந்தியின் செயலை வெறுக்க முடியவில்லையே. அது தான் தாய்மையோ. குஞ்சுகளை காக்கும் தாய்ப் பறவையாக அசலை அலைந்தாள். அதையே தான் குந்தியும் செய்கிறாள். கொடுப்பதை மட்டுமே அறிந்தவனிடம் அப்படி தானே பெற முடியும்.

பிள்ளையை பெற்றால் கண்ணீர் என்றார்களே, இது தானோ?

என் வினாக்கள் முடியாது. சில நாட்கள் கழித்து மீள் வாசிப்பு செய்கையில் ஏற்படும் திறப்புகளை பார்க்கலாம்

ஆனால், வேறொரு சந்தேகம்

அபிமன்யு மடிந்து கிடக்கிறான். (அது தனி பஞ்சாயத்து
அது சற்று முன்புவரைஇனிமேல் நான் இறந்தால் அருகே இறந்துகிடக்கும் உடல் உம்முடையது.”
பிரலம்பன் எங்கே...

சுவேதா