Tuesday, September 8, 2020

குலங்களின் கதை

 


அன்புள்ள ஜெ,

வெண்முரசில் நிலங்கள் மக்களினங்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்தன. வெவ்வேறு நிலங்கள். வெவ்வேறு மனிதக்குழுக்கள். அத்தனைபேரும் முட்டிக்கொண்டு உரசிக்கொண்டு மேலேறத்துடிப்பதன் சித்திரம்தான் வெண்முரசு. மலைப்பழங்குடிகளில் இருந்து சின்ன அரசுகள் வரைக்கும்.

ஆனால் வெண்முரசு தொடங்கும்போதே இந்த சிக்கல் இருந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே மச்சரினத்தைச் சேர்ந்த சத்யவதி அரசி ஆகிவிட்டாள். கங்கரினத்தைச் சேர்ந்த பீஷ்மர் மகனாக வந்துவிட்டார். அதன்பின் யாதவக்குலத்து குந்தி வருகிறார். அந்த கலப்பும் அதன் விளைவான சிக்கல்களும் முதற்கனல்முதலே வந்துகொண்டேதான் இருக்கின்றன

உண்மையில் அந்தச்சிக்கல் ஓரளவு ஓய்வது மகாபாரதப்போர் நடந்த பின்னாடிதான். குலக்கலப்பை எதிர்க்கு மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பிச் செல்கிறார்கள். புதியமனிதர்கள் வந்து சேர்கிறார்கள். அஸ்தினபுரி புதியதாக உருவாகி எழுகிறது

எஸ்.செல்வக்குமார்

Monday, September 7, 2020

வணிகமும் போரும்

 


 அன்புள்ள ஜெ

வெண்முரசிலே போர் நிகழ்வது அரசுகள் நடுவேதான். வணிகர்கள் அரசில் ஈடுபடுவதில்லை. அவர்கள் போர்களை உண்டுபண்ணுவதோ போரினால் லாபம் அடைவதோ இல்லை. அவர்கள் மிகமிக முக்கியமானவர்கள். ஆனால் சந்தைக்கான போர் அல்லது கொள்முதலுக்கான போரே இல்லை. இது ஆச்சரியமான விஷயமாக எனக்குப்பட்டது

இந்த வணிகப்போர்கள் எல்லாம் ஐரோப்பியப் பண்பாடு உருவானபிறகு வந்தது என்று நினைக்கிறேன். மார்க்ஸ் கூட அதை முதலாளித்துவத்தின் அடிப்படைப்பண்பாகச் சொல்கிறார். முதலாளித்துவத்தில் வணிகர்கள்தான் உண்மையான அரசர்கள். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் அரசர்கள் போரிட்டதுபோல இன்றைக்கும அம்பானியும் அதானியும் போரிட்டுக்கொள்கிறார்கள்.

கே.மாரிமுத்து

 

Sunday, September 6, 2020

வாழ்வு

 


அன்புள்ள ஜெ

எல்லாரும் தன் கம்ப்யூட்டரில் பாஸிட்டிவான விஷயங்களை எழுதி வைத்திருப்பார்கள். நான் ஒரு நெகெட்டிவான விஷயத்தை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அது எனக்கு மிகவும் பாஸிட்டிவான எனர்ஜியை அளிக்கிறது. என் ஒவ்வொரு நாளையும் ஊக்கத்துடன் வாழச்செய்கிறது

இறப்பு என்பது மீண்டெழல் இல்லாமை. திரும்பி வராத பயணங்களும் மீட்சியில்லாத உளவீழ்ச்சிகளும் சாவே.

இதெல்லாம் சாவென்றால் வாழ்வென்ற்ய் சொல்வது என்ன? எந்த பயணமும் மீள்வதற்கான வழியுடன் இருக்கவேண்டும். எந்த உளநிலையிலும் திரும்பிவரும் வழி திறந்திருக்கவேண்டும். வாழ்வேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்

சந்திரசேகர்

ஊர்களின் பரிணாமம்

 


  

அன்புள்ள ஜெ

வெண்முரசில் பழங்குடி ஊர்களும் பெரியநகரங்களும் வருவதைப்பற்றிய கடிதம் வாசித்தேன். சுவராசியமான கருத்துதான். ஆனால் அதையே பலவாறாக விரித்தும் பார்க்கலாமென நினைக்கிறேன். பழங்குடி ஊர்களிலேயே இடும்பபுரி போல பக்காவான பழங்குடி ஊர்கள் உள்ளன. சிலர் ஒரு படிமேலே சென்றுவிடுகிறார்கள். கங்கர்களைப்போல. இன்னும் சிலர் பெரிய அரசர்களாக ஆகிவிடுகிறார்கள். காந்தாரர்களைப் போல. இன்னும் சிலர் அதற்கான முயற்சியில் இருக்கிறார்கள். ஹிரண்யபுரி மாதிரி. இந்த எல்லாக்குடிகளுக்கும் நடுவே அவரவர் இடங்களுக்கான பூசல் இருந்துகொண்டே இருக்கிறது. மத்ரநாடுகூட பழங்குடிநாடுதான். பூரிசிரவஸ் பழங்குடி அடையாளத்திலிருந்து வெளியே செல்லத்தான் முயற்சி செய்கிறான். பழங்குடிகள் கீழ்ப்படியில் இருந்து பேரரசுகள் வரை எல்லாம் படிநிலைகளிலும் வெண்முரசில் இருக்கிறார்கள். படிக்கட்டில் எந்த இடத்திலே இருக்கிறார்கள் என்பதுதான் அரசியலைத் தீர்மானிக்கிறது

சாரங்கன்

Saturday, September 5, 2020

வணிகர்கள்

 


அன்புள்ள ஜெ,

வெண்முரசில் நிலம் பற்றிய சர்ச்சையை பார்த்தேன். அந்நிலங்களை இணைப்பவர்களாக இந்நாவல்களில் வரும் வணிகர்கள் மிகமுக்கியமானவர்கள். அவர்கள் மொத்த நாவலிலும் எந்தப்பங்களிப்பையும் ஆற்றவில்லை. அவர்களுக்கு போரில்கூட எந்த இடமும் இல்லை. ஆனால் காற்றுபோல அவர்கள் உலாவியபடியே இருந்திருக்கிறார்கள். இது ஓர் ஆச்சரியமான விஷயம் என நினைக்கிறேன்

வணிகர்கள் அரசியலை கவனிப்பதே இல்லை. அவர்கள் அரசியலில் ஒரு கண்வைத்திருக்கிறார்கள். அரசியல் எக்கேடு கெட்டாலென்ன என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் எல்லாவற்றையும் இணைக்கிறார்கள். ஒரு காட்டுப்பழங்குடி கொஞ்சம் நகாரீகத்துக்கு வந்துவிட்டால் வணிகர்கள் உடனே வந்து இணைந்துகொள்கிறார்கள். பாரதவர்ஷத்துடன் அவர்களை இனைத்துவிடுகிறார்கள். முதற்கனலில் கங்கர்குடி அப்படி இணைகிறது. இடும்பர்கள் இணைகிறார்கள். அப்படி இணைப்பு நடந்துகொண்டே இருக்கிறது

எஸ்.சரவணக்குமார்