Monday, August 26, 2019

இருவர்அன்புள்ள ஜெ

வெண்முரசு வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு சந்தேகம் வந்தது. அதை கவனித்துக்கொண்டே வந்தேன். துர்யோதனனின் சாவு அந்த எண்ணத்தை மீண்டும் வலிமையாக உருவாக்கியது. துரியோதனன் அனைவரிடமும் அன்பானவனாக இருக்கிறான். அத்தனைபேரையும் நேசிக்கிறான். மற்றவர்களின் சின்னச்சின்ன பிரச்சினைகளைக்கூட அறிந்து அதை நிவர்த்தி செய்கிறான்

ஆனால் அந்த இயல்பே யுதிஷ்டிரனிடம் இல்லை. தன் உடன்பிறந்தவரைத்தவிர வேறு எவரிடமாவது அவன் அன்புகாட்டியதுபோல வெண்முரசிலே வரவே இல்லை. துரியோதனனின் அணைப்பையும் சமமாக அனைவரையும் நடத்துவதையும் பற்றி பலரும் சொல்கிறார்கள். ஆனால் எவருமே  அப்படி யுதிஷ்டிரனைப்பற்றிச் சொல்லவில்லை. இதை வேண்டுமென்றே நுட்பமாக உருவாக்கியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அதேபோல யுதிஷ்டிரனுக்கு எப்போதுமே பதற்றமும் என்ன ஆகுமோ ஏதோ என்ற எண்ணமும் இருந்துகொண்டே இருக்கிறது. “இப்பழியால் என் குலம் அழியுமா? என் குருதிவழி அறுபட்டுவிடுமா?”என்று அவன் கேட்கிறான். துர்யோதனனைக் கொன்றதுமே அந்தச் சந்தேகமும் வருகிறது. ஆனால் எதைப்பற்றியுமே கவலைப்படாத ஆளுமையாக துரியோதனன் இருக்கிறான்

அப்படியென்றால் யார் மேலானவர்? எவருக்கு அறத்தில் பற்று இருக்கிறது? ஒன்றுமே புரியாமலிருக்கிறது

மணி


அந்த வேடன்
ஜெ

நான் இப்போதுதான் ஜல்பன் வரை வந்திருக்கிறேன். ஒருவேடனால் தவம் கலைக்கப்படுவது இந்தியாவிலே நம் புராணங்களில் திரும்பத்திரும்ப வருகிறது. அந்த வேடன் காடு என்ற ஃபினாமினாவின் ஒரு சிறு பகுதியே என்று காட்டுகிறீர்கள். அவனை வால்மீகியுடனும் கிருஷ்ணனைக் கொன்ற வேடனுடனுமெல்லாம் சம்பந்தப்படுத்துகிறீர்கள் என நினைக்கிறேன். காடு எப்படியிருந்தாலும் வந்து தவம்கலைத்தே தீரும் என்பது ஒரு கவித்துவமான உருவகம். அதேபோல காமத்திலிருப்பவர்களை அம்புவிட்டு கொல்வதும் புராணங்களில் அடிக்கடி வருகிறது. பாண்டுவும் அதைச்செய்தான். ஆகவேதான் சாபம் பெற்றான். வால்மீகியும் செய்தார். இப்படி தாவித்தாவி இணைத்துச்செல்லும் அந்தப் பகுதி மிகவும் கிரியேட்டிவாக இருந்தது. நான் துரியோதனன் நீரில் மூழ்கிக்கிடக்கும் காட்சியை ஒரு வேடன் பார்த்து சொன்னான் என்ற இடத்தை கொஞ்சம் விரிவுபடுத்துகிறீர்கள் என்று மட்டும்தான் நினைத்தேன். அதை நீங்கள் இப்படி பெரிய கவிதையுருவகமாக ஆக்குவதை வால்மீகிராமாயணத்தின் முதல்வரியான மா நிஷாதவை வேடனே சொல்லும்போதுதான் புரிந்துகொண்டேன்.  நில் காட்டாளனே, காதல்கொண்ட இணைகளில் ஒன்றை வீழ்த்திய நீ முடிவிலாக் காலம் நிலைகொள்ளாமல் அலைவாய். அமைதியடையாமல் தவிப்பாய் என்று அவன் சொல்லும்போது ஆகா என்று ஒரு விழிப்பு ஏற்பட்டது

சுவாமி

தமியன்


அன்புள்ள ஜெ

என்னால் இன்னமும்கூட துரியோதனனின் சாவுக்காட்சியிலிருந்து வெளியே வர முடியவில்லை. மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த அத்தியாயங்களை இன்னும்கூட தாண்டவில்லை. தன்னந்தனிமையில் எரிகிறான் அரசன்…” என்று கிருபர் சொன்னார். “நூறு உடன்பிறந்தாரும் ஆயிரம் மைந்தரும் பல்லாயிரம் உற்றவரும் கொண்டவன்” என்ற வரி விம்ம வைத்தது. அந்த கௌரவப்படையில் அத்தனைபேருக்கும் அவன் கொள்ளிபோட்டான். ஆனால் அவன் அனாதையாக எரிகிறான். வெண்முரசில் இந்த உச்சம் நோக்கி ஆரம்பம் முதலே கொண்டுவந்தீர்கள் என நினைக்கிறேன். அவன் கடைசியாக தனிமையில் நின்று சாகும் காட்சிக்காகவே முந்தையநாளிலேயே கௌரவர்கள் அத்தனைபேரும் சாகும்படி எழுதினீர்கள். மூலத்தில் அப்படி இல்லை. கடைசிநாளில் ராவணனைப்போலவே அவனும் தம்பியர் எவரும் இல்லாமல் தமியன் ஒருவன் சென்றான் என்றபாணியில் தனியாகவே களத்திற்கு வருகிறான். தனியாகவே இறக்கிறான்.

லக்ஷ்மணன்

மூதேவி
அன்புள்ள ஜெ

நான் சில கோயில்களில் ஜ்யேஷ்டையின் சிலையைப் பார்த்திருக்கிறேன். வட இந்தியாவில் மையமாகவே கோயிலில் வைத்துக் கும்பிடுவார்கள். எப்படி இப்படி ஒரு அமங்கலமான தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். மனிதர்கள் அஞ்சி நடுங்கி நீ வராதே என்று சொல்லிக் கும்பிடுகிறார்கள் என நினைப்பேன். மத்தியப்பிரதேசத்தில் சில ஊர்களில் ஜ்யேஷ்டையை வாரியலால் வீசுவார்கள். வாரியலால் அடிக்கிறார்கள் என நினைத்தேன்

ஆனால் வெண்முரசை வாசிக்கையில் வேறு ஒரு சித்திரம் தோன்றுகிறது. இந்த சீதேவி மூதேவி வடிவங்களெல்லாம் நாம் அளிப்பவை. நம் லௌகீகத்திலே நின்று அளிப்பவை. அவை பிரபஞ்சத்திலே உள்ள இரண்டு சக்திகள். அவற்றுக்கு தங்களுக்குரிய பணிகள் உண்டு. ஒன்று நல்லது அதை கும்பிடுவேன் இன்னொன்றை வெறுப்பேன் என்று சொல்வது அறியாமை. ஆகவேதான் மூதாதையர் இரண்டையுமே தெய்வமென வைத்து வழிபட்டார்கள் என நினைக்கிறேன்

ஜ்யேஷ்டையை போர்க்களத்திலே கௌரவர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அவள் அமுதம் அளிக்கிறாள். அது கசக்கிறது, நாற்றம் அடிக்கிறது. ஆனால் குடித்தபின் இனிக்கிறது. மணக்கிறது. ஏனென்றால் கௌரவர்களுக்கு விதி அளிக்கும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு அது இனியதுதான். அதுவும் தெய்வ அருள்தான். இதை சும்மா சொல்லிபார்க்கிறேன். இதை என்னால் சரியாகச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை

ஜெயராமன்

சிதைந்தவர்கள்
ன்புள்ள ஜெ


குந்தி சொல்லும் மேலே சொன்ன வரிகளிலிருந்து அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் ஆகியவர்களைப்பற்றி தெளிவாக வரையறை செய்துகொள்ள முடிகிறது. அவர்கள் வடிவம் சிதைந்த பொருள் போன்றவர்கள் என்கிறாள். அதாவது வடிவம் என்பது பத்துதிசையிலும் அழுத்திவைக்கப்பட்டு உருவாவது . வடிவம் சிதைந்தால் அது கட்டுப்பாடே இல்லாதது. அது அபாயகரமான பொருள். மனிதர்களும் அப்படித்தான் என்று குந்தி சொல்கிறாள். அந்த வரிகளை நான் தனியாக எடுத்து வாசித்தேன்.

நான் இதை முன்பே கண்டிருக்கிறேன். இதைச்சொல்லவே இதை எழுதினேன். கிரிமினல்கள் எல்லாருமே உடைந்த மனிதர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் நார்மலான மனிதர்களே அல்ல. அதேபோல விபச்சாரிகளும் உடைந்துபோனவர்கள். ஆகவே அவர்களை நாம் பிரிடிக்ட் செய்யவே முடியாது. எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள். அதேபோலத்தான் இப்போது கிருபரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் ஆகியிருக்கிறார்கள். அவர்கள் உடைந்த மனிதர்கள்.

உடைந்த மனிதர்களை நாம் சமாளிக்கவே முடியாது. ஏனென்றால் நாம் உடையாத மனிதர்கள். நாம் நம்மைப்போன்றவர்களிடமே பழக முடியும். நாம் நம்முடைய வடிவத்தை வைத்தே அவர்களிடம் பழகிக்கொண்டிருக்கிறோம். அந்த வடிவமில்லா மனிதர்கள் நம்மை அலட்சியம் செய்வார்கள். நம்மால் பேசவே முடியாது. பேசினால் நாம் புண்படுவோம்.

இது நான் எண்பதுகளின் தொடக்கத்திலே ஒரு சேவைநிறுவனத்திலே வேலைபார்த்தபோது உணர்ந்த உண்மை


  

செந்தில்குமரன்

 

Sunday, August 25, 2019

பிரஜாபதி
துரியோதனன் சிதையில் ஏற்றப்படும்போது வரும் காட்சி. கிருதவர்மன் கால்மடித்து அமர்ந்து கைகளை விரித்துவிண்புகுக தேவா! பெருந்தந்தையர் சென்றமையும் உலகில் வாழ்க! பிரஜாபதிகளுடன் அமர்க!” என்று கூவினான் என்ற வரியை வாசித்தபோது ஓர் உணர்வெழுச்சி ஏற்பட்டது. கிருதவர்மன் துருயோதனனை ஒரு பிரஜாபதியாக காண்கிறான். 

வெண்முரசில் பல பிரஜாபதிகள் வருகிறார்கள். ஆனால் முக்கியமான பிரஜாபதி தீர்க்கதமஸ்தான். அவரை காமம் நிறைந்தவர் என்கிறது வெண்முரசு. பிரஜாபதிகள் உலகைப் படைப்பவர்கள். ஏன் உலகை அவர்கள் படைக்கிறார்கள் என்றால் அந்தளவுக்கு அவர்களிடம் ஆசை இருக்கிறது. அது காமம், அல்லது மண்ணாசை அல்லது குழந்தைகள் மேல் ஆசை. அந்த ஆசைதான் அவ்ர்களிடம் அன்பாகவும் வெளிப்படுகிறது. அவர்களிடமிருந்து அதுதான் முளைத்துப் பெருகி வளர்கிறது.

துரியோதனன் இன்றுவரை மண்ணில் செய்யப்பட்டு வணங்கப்படும் பிரஜாபதியாகவே இருக்கிறான். காரணம் அவனுடைய மண்ணாசைதான் அவனை பிரஜாபதியாக ஆக்குகிறது. அவனைப்போன்ற தந்தையை நாமும் கண்டிருப்போம். என் தாத்தா அப்படித்தான். மண்மீது அவருக்கிருந்த வெறியை கற்பனையே செய்ய முடியாது. மண்ணுக்காகவே வாழ்ந்து செத்தார். அவரை பங்காளி வெட்டிக்கொன்றான். நான் அவரைப் பார்த்த ஞாபகமே மங்கலாகத்தான். அவரைப்போன்ற பிரஜாபதிகள் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஆகவேதான் அவன் சாகும்போது நமக்கு அத்தனை ஒரு வருத்தம் ஏற்படுகிறது.

உள்ளுணர்வு
அன்புள்ள ஜெ

குந்திக்கு ஆரம்பம் முதலே ஓர் உள்ளுணர்வு இருந்துகொண்டிருக்கிறது. ஆகவேதான் போர் முடிந்தது என்றதுமே முடியவில்லை என்று சந்தேகப்படுகிறாள். துரியோதனன் எங்கே என்று கேட்கிறாள். துரியோதனன் கொல்லப்பட்டான் என்றதுமே மற்றமூவரும் எங்கே என்கிறாள். அவர்கள் உயிருடன் இருக்கலாம் என்ற சந்தேகம்கூட மற்ற எவருக்கும் வரவில்லை. அனைவருமே அவர்கள் செத்துவிட்டார்கள் என்று வசதியாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு அவர்கள் அபாயகரமானவர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.  எஞ்சும் நஞ்சு அபாயமானது, அது வளர்வது என்கிறாள். அவர்கள் இருக்கிறார்கள் பிள்ளைகள் தனியாக இருக்கிறார்கள் என்றதுமே இரண்டயும் அவள் இணைத்துக்கொள்கிறாள். ஆகவேதான் கிளம்பு கிளம்பு என்கிறாள். செல்லும்வழியிலேயே எல்லாமே தெரிந்துவிடுகிறது. அந்த உள்ளுணர்வு உண்மை என அவளுக்குத்தெரியும் இடம் கொடுமையானது. அவளுடைய விதி முடியும் இடம் அது. ஆகவேதான் அந்த உள்ளுணர்வு ஏற்படுகிறது. இதை வாழ்க்கையிலும் நிறையவே கண்டிருக்கிறோம்

சாரதா

உடைவு
அன்புள்ள ஜெ

இந்த அத்தியாயம் குந்தியின் உடைவைப் பற்றியது. சிதைவு அழிவு எல்லாம் வேறு உடைவு என்பது வேறு. அந்த வரி மிகவும் பாதிக்கத்தக்கதாக இருந்தது. நான் அந்த வரியிலேயே நின்றுவிட்டேன். தனக்குள் ஒன்று உடைந்ததைப்பற்றி திரௌபதி சொல்கிறாள். ஆனால் அது ஏன் சொல்லப்பட்டது என்றால் குந்தியின் கடைசி உடைவைப்பற்றிச் சொல்வதற்காகத்தான். ஆனால் திரௌபதி வழியாக சொல்லப்படுகிறது. திரௌபதி உடையவில்லை. ஆனால் குந்தி உடைந்துவிடுகிறாள். முழுமையாகவே உடைகிறாள். இனி அவளுக்கு மீட்பென்பதே கிடையாது. அவ்வளவுதான். அந்த முடிவை உடைவு என்ற சொல்லைக்கொண்டுதான் சொல்லிவிடமுடியும்.


ஜெயராஜ்

குந்தியின் முடிவு

அன்புள்ள ஜெ

திரௌபதியின் வழியாகவே கதை சொல்லப்படுகிறது. அவளுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவின் ஆழமும் அவள் தன் பிள்ளைகளை எப்படிப்பார்க்கிறாள் என்பதும். ஆகவே அவள் மகன்கள் சாகும்போது எப்படி எதிர்கொள்வாள் என்றே அந்த அத்தியாயம் சென்றுகொண்டிருந்தது. ஆனால் கடைசியில் அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை. குந்தி உடைந்துபோகிறாள். குந்தி உடைவதுதான் கிளைமாக்ஸ். ஏனென்றால் குந்தியிலிருந்துதான் எல்லாம் ஆரம்பமாகிறது. யாதவப்பெண்ணாக இருந்து அவள் குந்திபோஜனின் மகளாகச் செல்வதிலிருந்து தொடங்கிய கதை இப்படி முடிவுக்கு வருகிறது. இந்த முடிவு இயல்பானதும் தவிர்க்கமுடியாததும். ஆனால் அதை திரௌபதி வழியாகக் காட்டியிருப்பதனால் ஒரு சிறுகதையின் கூர்மையான திருப்பம் போல அமைந்துள்ளது

சரவணக்குமார்

குந்தியும் திரௌபதியும்அன்புள்ள ஜெ

திரௌபதியின் கதாபாத்திரமும் குந்தியின் கதாபாத்திரமும் அருகருகே வைத்து மதிப்பிடப்படும் இடம் இதுவரை வெண்முரசிலே வந்ததில்லை. இப்போது வாசிக்கும்போது அந்த ஒற்றுமையும் வேறுபாடும் ஆச்சரியப்படுத்துகின்றன. திரௌபதி தோற்றத்திலேயே அரசி. ஷத்ரிய குலத்தவள். யாதவகுலத்தைச் சேர்ந்த குந்தி அவளுடைய மனநிலையால் அரசி. எந்த தோற்றமும் இல்லாவிட்டாலும் கம்பீரமானவள்.

குந்தி மிகவும் சூழ்ச்சித்திறன் கொண்டிருக்கிறாள். அவள் எப்போதுமே எச்சரிக்கையாக எல்லாவற்றையும் பார்க்கிறாள். திரௌபதிக்கு இலட்சியம் உண்டு. கனவு உண்டு. ஆனால் அதைவிட்டு விலகவும் தெரியும். 9க்கு அது எதுவுமே தெரியாது. அதிகாரம் நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறாள். கடைசியில் குந்தி அந்த உச்சகட்டத்தில் முறிந்துவிடுகிறாள்.

ஆனால் திரௌபதி அந்த உச்சகட்டத்தில் விலகி நின்று பார்க்கிறாள். அவளுக்கு அது பெரிய அடியை அளிப்பதில்லை. குந்தியால் எல்லாவற்றையும் கடந்துபோக முடிகிறது. அவளுடைய மொத்த வெற்றியையும் அர்த்தமில்லாமல் ஆக்கும் அந்த உச்சகட்ட அழிவை தாளமுடியவில்லை. குந்தி உடைந்துவிழுகிறாள். திரௌபதி மேலே எழுந்து செல்கிறாள்.

இருவருடைய குணாதிசயத்திலும் இந்த ஆழமான வேறுபாடும் உள்ளது. பல ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த வேறுபாடே அவர்களின் குணாதிசயத்தை வரையறைசெய்கிறது

மகாலிங்கம்

Saturday, August 24, 2019

தெய்வங்கள்


ஜெ

ஒரு சின்ன யோசனை வந்தது. சரியா என்று தெரியவில்லை. வெண்முரசில் ஒருவர் கூட “தெய்வமே” என்று கூவவில்லை. “தெய்வங்களே” என்றுதான் கூவுகிறார்கள். ஆனால் இன்றைக்கு தெய்வங்களே என்று யாரும் கூவுவதில்லை. க்டவுளே என்றுதான் சொல்வார்கள். அல்லது முருகா என்றோ பெருமாளே என்றோ கூவுவார்கள்.

அன்றைக்கு ஒருதெய்வக்கோட்பாடே இல்லை என நினைக்கிறேன். ஆகவே தெய்வங்கள் ஏராளமாக இருந்திருக்கிறார்கள். இன்றைக்குத்தான் ஓரிறை கோட்பாடு வந்துள்ளது. அதாவது பகவத்கீதைக்குப்பின்னாடிதான். மகாபாரதகாலகட்டத்தில் எல்லாருமே சமானமான தெய்வங்கள்தான். இன்றைக்கு பெருந்தெய்வமாக சிவனோ பெருமாளோ வந்தபின் மற்ற தெய்வங்களெல்லாம் பரிவாரதேவதைகள் ஆகிவிட்டார்கள்.

இன்றைக்கும் நாம் பலதெய்வ வழிபாடுதான் செய்கிறோம். ஆனால் அந்த பலதெய்வங்களையும் நீதான் முழுமுதல் ஒரேதெய்வம் என்று சொல்லி வழிபட்டுக்கொண்டிருக்கிறோம்

சிவராஜ்

மறுவருகைஜெ


உத்தர ராமாயணம் ஏன் எழுதப்பட்டது என்று ஒரு காரணம் சொல்வார்கள். அதாவது மூலராமாயணத்தில் ராவணன் ஒருஎளிமையான நெகெட்டிவ் கேரக்டர்தான். ஆகவேதான் உத்தர ராமாயணம் எழுதப்பட்டது. அதில் ராவணன் மிகப்பெரிய கதாபாத்திரமாக எழுகிறான். ராவணனைப்பற்றி பின்னாடி வந்த காவியங்களிலுள்ள எல்லா சித்திரங்களும் உத்தர ராமாயணத்திலே உள்ளவைதான். அதாவது வாரணம் பொருததோளும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவருக்கிணங்க நயம்பட உரைத்த நாவும் என்றெல்லாம் கம்பன் சொல்கிறானே அதெல்லாமே உத்தர ராமாயணத்திலுள்ள காட்சிகள்தான்.

அதேபோல சாவுக்குப்பின்னர் துர்யோதனன் ஆற்றலுடன் பெரிய வடிவம் எடுத்து மீண்டு வருவதைத்தான் வெண்முரசிலே பார்த்துக்கொண்டிருக்கிறோம். சதானீகனின் நினைவிலே வரும் பெருந்தந்தை அற்புதமான குணச்சித்திரம். நீ வீரன் ஆகையால் நீ என்னை வெறுக்கலாம். ஆனால் நீ துயரம் கொள்ளக்கூடாது. அது தந்தையாக என்னை துயரம்கொள்ளச் செய்கிறது என்று சொல்லும் துரியோதனன் ஒரு மகத்தான கதாபாத்திரமாக எழுகிறான். அதேபோல கிருதவர்மனின் கைகளைப் பற்றிக்கொள்ளும் துரியோதனன். கிருபரின் கண்களை நிறைக்கும் துரியோதனன். மகத்தான ஒரு பெருந்தந்தையாகவும் அரசனாகவும் அவன் தோன்றிக்கொண்டே இருக்கிறான். இன்னும் இன்னும் அவன் வளர்வான்


ராம்சந்தர்துரியோதனன் படுகளம்


இன்றல்ல, நாளையும் வரும்நாளைகள் அனைத்திலும் இங்கே மானுடர் இதை நடிப்பார்கள். இவ்வண்ணம் கௌரவ அரசர் மீண்டும் மீண்டும் தொடையுடைத்து கொல்லப்படுவார். கூத்துகளில், சிற்பங்களில், நூல்களில். அதன்பொருட்டே அவர் தெய்வமென அழியாமல் இங்கே நிறுத்தப்படுவார். 

யௌதேயன் சொல்லும் இந்த வார்த்தைகளை நினைத்ததும் என் சொந்த ஊரில் ஆண்டுதோறும் நடக்கும் துரியோதனன் படுகளம் காட்சியை நினைவுகூர்ந்தேன். உண்மைதான் துரியோதனன் மூவாயிரம் ஆண்டுகளாக நாள்தோறும் கூத்துகளில் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் தொடையறைந்து கொல்லப்படுகிறார். யௌதேயன் சொன்னதுபோல பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான மிகப்பெரிய எச்சரிக்கையாகவே அவனுடைய கொலை நிலைகொள்கிறது


சத்யமூர்த்தி

அபிமன்யூ 5
ஜெ,

அபிமன்யூ பற்றிய கடிதங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். இது எனக்கு தோன்றியது. இது என்னுடைய வெறும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் இப்படியும் வாசிக்கலாம் என நினைக்கிறேன். அபிமன்யூ திரௌபதியின் கனவிலே வந்துகொண்டே இருக்கிறான். ஏன் வருகிறான்? அவன் அவளுக்கு நெருக்கமானவன் என்பது ஒரு பக்கம். அதைவிட முக்கியமானது அவன் அவள் கனவில் வருவது அவள் மைந்தர்களை அழைத்துச்செலவதற்கு. அவர்களை விளையாட கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவர்கள் வருவார்களா என்றே கேட்டுக்கொண்டிருக்கிறான். அப்படி ஏன் கனவு வருகிறதென்றால் அது அவளுடைய ஆழத்திலுள்ள ஆசை என்பதனால்தான். அவன் இறந்ததும் எப்படியோ தன் மகன்கள் வாழ்வதில் அறமில்லை என அவளுடைய ஆழத்தில் மனசாட்சிக்குத் தோன்றிவிட்டது. அவளுடைய சபதத்திற்காக அவன் செத்தான். அதன்பின் இந்த ஐந்துபேரும் வாழ்வதில் அர்த்தமில்லை. ஆகவேதான் அவளுக்கு அவன் வந்து அவர்களை அழைத்துச்செல்வதுபோல கனவு வந்துகொண்டே இருக்கிறது

ராமச்சந்திரன்

எரிஅன்புள்ள ஜெ


சில வசனங்கள் ஒருவகையான உலுக்கும் கூர்மை கொண்டிருக்கின்றன. நெறிபிறழாமல் போர் செய்த துரியோதனனுக்கு கிருபரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் தேடிக்கொடுத்தது மிகப்பெரிய பழியை. ஆனால் அவர்களின் உணர்வுகள் துரியோதனனுக்குப் பெருமைசேர்ப்பவை. அந்த முரண்பாட்டை சொல்லும் இடம் இது


ஒரு மானுடன் இன்னொருவருக்கு அளிப்பதில் உச்சமானது என்ன? செல்வமா? அரசா? குடியா? இல்லை, முழு வாழ்க்கையுமா? உயிரா? அனைத்தையும் அளித்துவிட்டனர் பல்லாயிரம் பல்லாயிரம்பேர். நாம் நமது ஆத்மாவை அளிப்போம். மூதாதையர் நமக்கு ஈட்டித்தந்த புண்ணியங்களை அவருக்கு அளிப்போம். பாஞ்சாலரே, ஆசிரியரே, நாம் நமது மீட்பையே அவருக்காக அளிப்போம். அவர் பொருட்டு நம் மூதாதையரை எள்ளும் நீருமின்றி மேலுலகில் வாடவிடுவோம். அதைவிட எவர் எதை அளித்துவிடமுடியும்?” 


கிருதவர்மன் பற்றி எரியும் தீ போல நின்று இதைச் சொல்கிறான் அவன் செய்தது எதுவென்றாலும் இந்த உச்சகட்ட உணர்ச்சிகளுக்கு தெய்வங்களுக்கு முன் ஒரு மதிப்பு இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அவன் தன்னுடைய எல்லாவற்றையுமே அளிக்கிறான். இனி அடையப்போகின்றவற்றையும் அளிக்கிறான். உச்சகட்டத் தியாகம்தான் இது

இத்தகைய இடம் ஒரு கிளாஸிக் மித்தாலஜிகல் நாவலில்தான் வரமுடியும் என நினைத்துக்கொண்டேன். யதார்த்தமாகப் பார்த்தால் பைத்தியக்காரத்தனம்


சாந்தகுமார்

Friday, August 23, 2019

பாண்டவர்களின் மைந்தர்கள்ஜெ

வெண்முரசில் போர் உருவாகும் போது வந்த நாவல்களில் பாண்டவர்களின் மைந்தர்களை விரிவாகச் சொல்லிக்கொண்டே சென்றீர்கள். ஏன் பாண்டவர்களைப்பற்றிச் சொல்லாமல் இவர்களைப்பற்றி இவ்வளவு சொல்கிறீர்கள் என நான் எண்ணியதுண்டு. ஏனென்றால் அவர்கள் மூலத்தில் மிகச்சின்ன கதாபாத்திரங்கள். அதாவது பெயர்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. குணச்சித்திரமே இல்லை.

ஆனால் இப்போது தெரிகிறது பாவபுண்ணியங்களைப் பற்றிப்பேசினால் பிதாமகர்களைப்பற்றி மட்டும் பேசினால் போதாது,. மைந்தர்களைப்பற்றியும் பேசியாகவேண்டும். பாண்டவர்களின் மைந்தர்கள் அபாரமான கதாபாத்திரங்களாக அமைந்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் துல்லியமான குணச்சித்திரத்தை மெல்லமெல்ல உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

இந்த எல்லா மைந்தன் கதாபாத்திரங்களும் அவர்களின் அப்பாக்களின் இயல்பைக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைகளும் உள்ளன. அவர்களை அவர்களின் அப்பாக்களின் நீட்சி என்று சொல்லலாம். ஆனால் அப்பாக்களை மீறிச்செல்லும் இடங்களும் முக்கியமானதாக உள்ளது


மகேஷ்

இருபுற அறம் 2

ஜெ


இருபுற அறம் என்னும் வாசகர் கடிதம் வாசித்தேன். வெண்முரசு அறத்தின் இந்த இரண்டு பக்கங்களையும் சொல்லிக்கொண்டேசெல்கிறது. ஒரு விரிந்த சரித்திரப்பார்வையிலே சொல்லப்படும் அறம் ஒன்று உண்டு. நியாயப்படுத்தக்கூடியது. பேசிப்பேசி நிறுவவும் முடியும். அதைத்தான் யௌதேயன் சொல்லிக்கொண்டிருக்கிறான். அதை அறிஞர்கள் சொல்வார்கள். யுதிஷ்டிரர் எப்போதும் அதைத்தான் சொல்கிறார்

ஆனால் இன்னொரு அறம் உண்டு என்பது வெண்முரசிலே வருவது. அது கற்காதவர்கள் சாமானியர்கள் சொல்லும் அறம். அவர்கள் யோசிப்பதே இல்லை. அவர்களுக்குத்தோன்றியதை அப்படியே சொல்கிறார்கள். அந்தந்தக் கணத்திலே மனசிலே தோன்றுவது. சின்னவயசிலேயே கற்பிக்கப்பட்டது. அதை குடியறம் என்று சொல்கிறது வெண்முரசு. அதை நம் அப்பா அம்மாக்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறர்கள். நாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க்கிறோம். அது நம் வழியாகச் செல்கிறது

முதலில் உள்ளது மூளையின் அறம். இரண்டாவது இருப்பது மனசின் அறம். யுதிஷ்டிரர் மூளையின் அறம் பேசும்போது பீமன் எப்போதுமே மனசில் அறமே பேசுகிறான். ஆகவேதான் பீமனின் மகன்களிடம் கேட்கலாம் என்று சதானிகன் சொல்கிறான். அவர்களும் அவர்களின் நியாயத்தை எந்த யோசனையும் செய்யாமல் சொல்லிவிடுகிறார்கல். அதை எந்த வகையிலும் பேசி நிறுவவும் அவர்கல் முயற்சி செய்யவில்லைஆர்.எஸ்.கணேஷ்

கடிதங்கள்அன்புள்ள ஜெ

வெண்முரசில் நடுவே கடிதங்கள் போடாமலாகிவிட்டீர்கள். நான் எழுதிய சிலகடிதங்களை படித்தீர்கலா என்ற சந்தேகம் வந்தது. நான் கடிதங்களை இங்கே பார்ப்பதுதான் நீங்கள் அவற்றை படிக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரம். அதுதான் நான் அவற்றை எழுதுவதற்கும் காரண, நான் வாசித்ததுமே உங்களிடம் பேச ஆரம்பிக்கிறேன். அதைத்தான் அவ்வப்போது எழுதுகிறேன். இங்கே கடிதமாக எழுதவேண்டும் என்றால் ஒரு முக்கியமான விஷயம் அதிலே இருக்கவென்டும் என நினைபெபென். அதை எழுதியதும் எனக்கே அந்த பரபரப்பு போய்விடும். ஆனால் பல விஷயங்களை நானே கையில் வைத்திருக்கிறேன். ஒரு நீண்ட கட்டுரையாக எழுதவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் என்னால் அதை எழுதமுடியுமா அதற்கான சந்தர்ப்பம் வருமா என்று தெரியவில்லை. என்னுடைய மொழியும் அந்தளவுக்கு நல்லது அல்ல. நான் வெண்முரசை மட்டுமே தீவிரமாகப் படிக்கிறேன். ஆகவேதான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

வெண்முரசுக்குக் கடிதம் எழுதியவர்கள் சிலர் நின்றுவிடுகிறார்கல். தண்டபாணி துரைவேல் அவர்களின் கடிதத்தை நீண்ட இடைவேளைக்குப்பின் பார்த்தேன். சிலர் எழுதி நின்றுவிட்டு திரும்பி வராமலேயே போய்விடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து வாசிக்காமலாகிவிடுகிறார்கல் என நினைக்கிறேன். எனக்கு எழுதுவதில் ஒரு சந்தேகம் வந்து நான் நிறைய எழுதாமல் நிறுத்திவிட்டேன். மீண்டும் எழுதுகிறேன்

மகேஷ் 

அபிமன்யூ 4
அன்புள்ள ஜெ

அபிமன்யூ பற்றிய கடிதங்களைக் கண்டேன். ஆரம்பம் முதலே அபிமன்யூ உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டே இருப்பவனாகவே இருக்கிறான். அவனுடைய குணச்சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட தற்கொலைதான் செய்துகொள்கிறான். அவனுடைய கிரைஸிஸை பலவாறாக விளக்கலாம். ஆனால் அவனுடைய சிக்கலை வெண்முரசில் வரும் ஒரு வரி ஆழமாகச் சொல்லிவிடுகிறது. அவனுக்குள் கிருஷ்ணார்ஜுன யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது. அதுவே அவனுடைய பிரச்சினை

அருணாச்சலம்

அநீதி


அன்புள்ள ஜெ,

திருஷ்டதுய்ம்னனை அஸ்வத்தாமன் கொல்லும் இடம் மிகக்குரூரமானது மிதித்து மிதித்தே கொல்லும் காட்சியை வாசிக்கவே பயங்கரமாக இருந்தது. ஆனால் அதை மறக்கவும் முடியவில்லை. தன் ஆசிரியரின் தலையையே வெட்டி வீழ்த்திய திருஷ்டதுய்ம்னன் அப்படிக்கொல்லப்படுவது நியாயம்தான். ஆனால் இதே அத்தியாயத்தில் கிருபர் வந்து தன் மாணவர்களைக் கொடூரமாகக் கொலைசெய்கிறார். இதை எப்படிப்புரிந்துகொள்வது? கிருபரின் மனநிலை ஒருபக்கம் இருக்க ஒரு அநீதியை சமானமான அநீதியாக் சமன்படுத்த முடியுமா என்ன? இங்கே எட்டுமடங்கு அநீதி அல்லவா நிகழ்கிறது? அநீதி அநீதியை வளர்க்கும் என்பார்கள் அதைத்தான் சொல்லத்தோன்றுகிறது

சுவாமி

Thursday, August 22, 2019

அறமெழும் சொல்


ஜெ


சுதசோமன் தனக்குத்தானே சாபம் கொடுக்கிறான். தன் தந்தைக்கே சாபம் கொடுக்கிறான், வெண்முரசில் தொடர்ச்சியான உச்சங்கள். அதில் மிகவும் கொந்தளிக்கச் செய்த இடம் இது. எவ்வளவோ உச்சங்கள் வந்துவிட்டன. ஆனால் இதுவே என் மனதில் இனி என்றென்றுமாக நிலைகொள்ளும்


நெறிமீறி தொடையறைந்து கொன்ற என் தந்தைக்கு நான் அளிக்க விழையும் தண்டனை ஒன்றே. எஞ்சிய வாழ்நாள் முழுக்க தந்தையென்றிருப்பது என்றால் என்னவென்று அவர் உணரவேண்டும்… ஓர் இரவுகூட அவர் விழி நனைந்து வழியாமல் துயிலக்கூடாது. அதற்குரிய வழி நாங்கள் இம்மஞ்சத்திலேயே இறப்பதுதான்… இங்கிருந்து எழுந்து நாங்கள் இயற்றுவதற்கு ஒன்றும் இல்லை. பழிசுமந்து வாழ்வதன்றி எங்களுக்காகக் காத்திருப்பதும் பிறிதில்லை… இம்மஞ்சமே சிதையென்றாகட்டும்… தெய்வங்களிடம் கோருவது அதைமட்டுமே.


இது பீமனின் இரண்டு மைந்தர்களின் குணச்சித்திரமக போரிலும் அதற்கு முன்பும் சொல்லப்பட்டுவிட்டது. ஆகவே இதை அவர்கல் சொல்லும்போது அவர்கள் வேறு ஒன்றுமே சொல்லமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது  அவர்களின் கதாபாத்திரங்கள் அவ்வளவு துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஆகவேதான் அவர்களை எண்ணி எண்ணி மனம் பொருமிக்கொண்டே இருக்கிறது


ராஜ்

திரௌபதியின் மயக்கம்

அன்புள்ள ஜெ
திரௌபதியின் மனத்தைச் சித்தரித்த மூன்று அத்தியாயங்களுமே ஒரே வீச்சில் அவளை முழுக்கவே நமக்குக் காட்டிவிடுகின்றன. இதில்தான் அவள் ஓர் அம்மா என்பது அழுத்தமாக நிறுவப்படுகிறது. அவளுக்குத் தன் பிள்ளைகளிடமிருந்த அன்பு, அபிமன்யூ மேல் இருந்த பாசம் எல்லாமே வருகிறது. துருபதரின் மகளாக இருந்து அம்மாவாக ஆனதுவரையிலான பரிணாமம் காட்டப்படுகிறது

இந்த அத்தியாயங்கள் குறுக்கும் நெடுக்குமாக பின்னப்பட்டுள்ளன. கடந்தகாலமும் நிகழ்காலமும் மாறிமாறி வருகிறது. குறுக்காக கனவும் நனவும் மாறி மாறி வருகிறது. இவ்வாறு பின்னியிருப்பதனால் இதை வாசிப்பது ஒரு சிக்கலான அனுபவம். அதேபோல போதையானதாகவும் இருக்கிறது. மொத்த போர்க்காலத்தையும் மீண்டும் சுருக்கமாகப் பார்த்ததுபோலவும் இருக்கிறது. அதேசமயம் சாப்பாடும் தூக்கமும் இல்லாமல் அவர்கள் இருந்த அந்த மயக்கநிலையையும் இந்தச் சிக்கலான கதைசொல்லும் முறை காட்டிவிடுகிறது.

வெண்முரசின் பொதுவான அத்தியாயங்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது

சரவணக்குமார்

அபிமன்யூ 3
ஜெ

அபிமன்யூவுக்கும் திரௌபதிக்குமான உறவைப்பற்றிய இடம் மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது. நான் அதை தனியாகவே வாசித்தேன். திரைபதியின் குருதி ஆசையைச் சொல்லி வந்த அத்தியாயம் அவளைப்போலவே ரத்ததில் விளையாடும் அபிமன்யூவை காட்டுகிரது. இருவரும் சேர்ந்தே ரத்தத்தில் கால்நனைத்து விளையாடுகிறார்கள். அபிமன்யூவும் அவளைப்போலவே ரத்தப்பிரியனாக இருக்கிறான். அபிமன்யூ திரௌபதியின் ஆண்வடிவம் மாதிரி இருக்கிறான். அந்தக்காட்சி சுருக்கமாகக் கடந்துசென்றாலும் வெண்முரசில் இதுவரை வெளிவந்த இருவரின் குணச்சித்திரங்களை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் முக்கியமான கீ என்று சொல்லமுடியும்

மகாதேவன்

வேங்கை
அன்புள்ள ஜெ

வெண்முரசில் சில விஷயங்கள் விரிவாகச் சொல்லப்படுகின்றன. சில விஷயங்கள் தொட்டுத்தொட்டு கடந்துசெல்லப்படுகின்றன. அந்த வகையான கடந்துபோகும் விஷயங்களில் ஒன்று என்னை அதிர்ச்சியடைய வைத்தது. கிருபரின் மாணவர்கள்தான் பாண்டவமைந்தர்கள் என்பது. குட்டிகளைத் தின்றுவிட்டுச் செல்லும் வேங்கைபோல் அவர் சென்றார் என்று பாஞ்சாலி சொல்லும் இடம். இந்தக்கோணத்தில் நான் யோசித்ததே இல்லை. ஆனால் இதை முன்பு புராணிகர் சொல்லியிருக்கிறார்கள். எங்கே இந்த விஷயம் மனித மனதில் வருகிறது? வெண்முரசில் தன் மைந்தர்களைக் கொல்லும் தந்தைபோல இருந்தார் பீஷ்மர் என்று போரின் ஆரம்பத்திலேயே வருகிறது..அதைத்தான் இந்த இடத்துடன் இணைத்துப்பார்க்கவேண்டியிருக்கிறது

சாரங்கன்

இருபுற அறம்
ஜெ


வெண்முரசின் கிளாஸிக்கலான அழகு என்பது அது எல்லா தரப்பையும் ஏறத்தாழ சரி என்றே சொல்கிறது என்பதுதான். நான் துரியோதனன் அறைம் மீறியேனும் கொல்லப்படவேண்டியவனே என்று வாதிடும் பகுதியை வாசித்தபோது அந்தச் சொற்பெருக்கை உண்மை என்றே நம்பினேன். நானும் உணர்ச்சி வசப்பட்டேன். அறத்தின் குரலாக நின்று யௌதேயன் அதைச் சொல்கிறான் என்றும் வெண்முரசு அதையே வலியுறுத்துகிறது என்றும் நினைத்தேன். ஆகவே தர்மனின் மகன் அதைச் சொல்கிறன் என்று என் அம்மாவிடம் சொன்னேன்.[அம்மா வெண்முரசின் தீவிர வாசகி. ஆனால் புத்தகமாகவே வாசிப்பார்கல்]


பாரதவர்ஷத்தில் பலகோடிப் பெண்கள் இதை எதிர்பார்ப்பார்கள். பிறந்து பிறந்து வந்துகொண்டே இருப்பார்கள். எங்களுக்கு என்ன அறம் அளிக்கப்பட்டது என்று கேட்பார்கள். ஏளனம்செய்து சிரிக்கும் அவைநடுவே தன்னந்தனிப் பெண் நின்று கண்ணீர்விட்டு உரைத்த சொல் முளைத்தெழுந்ததா என்று அவர்கள் உசாவுவார்கள்.


என்று அவன் கேட்கிறான். அந்தக் கேள்வி முக்கியமானது. அதற்கு பதிலே இல்லை. ஆனால் அதற்கு அவனே ஆணித்தரமாக பதில் சொல்கிறான்


அவர் புவிமுதன்மைகொண்ட பேரரசர் என்றாலும், பல்லாயிரம் கைகள் கொண்ட பெருந்தந்தை என்றாலும், அனைத்துப் பண்புநலன்களும் கொண்ட மானுடர் என்றாலும், அவருக்கு பாரதவர்ஷத்து ஷத்ரியப் பேரரசர்கள் அனைவரும் ஒருங்கு திரண்டு துணைநின்றாலும், பிதாமகர்களும் ஆசிரியர்களும் அவரை ஆதரித்தாலும், தெய்வங்களே உடன்நின்றாலும் அவர் வீழ்வார் என்று. அதன்பொருட்டு அனைத்துப் போர்நெறிகளும் மீறப்படும் என்றும் அனைத்து அறங்களும் வீசப்படும் என்றும் நாம் அவர்களிடம் சொல்கிறோம். எழுந்துவரும் மகளிர்நிரைகள் அறியட்டும் இதை, கடன்முடிக்க கொழுநர் எழுவர். மைந்தர் எழுவர். அவர்கள் அதன்பொருட்டு தீராப் பெரும்பழி கொள்ளவும் ஒருங்குவர்.

அந்தப்பதில் அவ்வளவு சிறப்பாக இருந்தது. இனி இதைப்பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை என்று தோன்றியது. ஆனால் அதற்குமேல் சதானீகன் சொல்கிறான் இதை மைந்தர் ஏற்றுக்கொள்வார்களா என்று. இவ்வளவு அழகாக நியாயப்படுத்த முடியாது ஆனால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்கிறான் பீமனின் மகன்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் காட்சி மீண்டும் என் கண்களைக் கலங்க வைத்தது. உண்மையிலேயே இரண்டில் எது சரி என்று என்னால் சொல்லவே முடியவில்லை. வேறுபாடேஎனக்குத்தெரியவில்லை


சாரதி.

Wednesday, August 21, 2019

கீழ்மைஜெ


சில உதிரி வரிகளில் மகாபாரதக் கதாபாத்திரங்களின் ஒட்டுமொத்த மன ஆழமும் அதிலுள்ள எல்லா நாற்றங்களும் வெளிவருவதை வெண்முரசிலே காணலாம். அதற்குச் சிறந்த உதாரணம் கிருதவர்மன். அவன் ஒரு நல்ல கதாபாத்திரமாக வந்ததே இல்லை. அவனுடைய பிரச்சினை அவனுக்கும் யாதவர்களுக்கும் நடுவே நடந்ததுதான்

ஆனால் அவன் திரௌபதியின் மைந்தரைக்கொல்வதுபற்றிச் சொல்லும்போது

மைந்தர்கள் எரிவதை பாஞ்சாலத்தாள் காணட்டும்… குருதிபடிந்த குழலை புகையிட்டு உலர்த்தட்டும்

என்று சொல்கிறான், அவனுக்கு அங்கே திரௌபதியின் மைந்தர் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் நோயுற்றிருக்கிறார்கள் என்றும் தெரியும். அவர்களைக் கொல்வதில் எந்த தயக்கமும் இல்லை.வெண்முரசில் முதலில் அவர்கள் பாண்டவர்களைக் கொல்லத்தான் கிளம்பினார்கள் என வரும். ஆனால் கிருதவர்மனுக்கு தெரியும் என்பது இந்த வரிகளிலிருந்து தெரிகிறது

ஆகவே கடைசியாகஅ ஸ்வத்தாமனுக்கும் தெரியும். இந்த வரியில் தெரிவதுகிருதவர்மனுக்கு பாஞ்சாலிமீது இருக்கும் வன்மம், அல்ல பாண்டவர்கள்மீதான கோபமோ துரியோதனன் மீதான பற்றொ அல்ல. ஒரு கொடூரச்செயலைச் செய்யப்போகும் கொண்டாட்டம்தான். அவனுடைய அந்த இளிப்பு கொடூரமானது

எஸ்.சிவக்குமார்திரௌபதியின் மன அமைப்பு
அன்புள்ள ஜெ,

திரௌபதியின் மன அமைப்பும் சிந்தனை ஓட்டமும் பெரிதாக வெண்முரசிலே வரவேயில்லை. ஒரு கோயில்சிற்பம்போலத்தான் அவள் அறிமுகமாகிறாள். அவளுடைய சிந்தனைகள் வரும்போதெல்லாம் அது அவளுடைய இளமைப்பருவம் பற்றியதாகவே உள்ளது. அவளுடைய மொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மனநிலைகள் அவளுக்குச் சின்னவயசிலேயே வந்துவிட்டன என்று இந்த நாவல் காட்டிக்கொண்டே இருக்கிறது. நாவல் முழுக்க பல முக்கியமான இடங்களில் அவள் மனம் நேரடியாகச் சொல்லப்படவில்லை. துகிலுரிதல் நடக்கும்போதுகூட காட்டப்படவில்லை. ஆனால் இப்போது அவள் தன் பிள்ளைகளை இழப்பதற்கு முன்னால் அவளுடைய மனநிலை ஒரேவீச்சில் ஒட்டுமொத்தமாகக் காட்டப்படுகிறது. இது ஏன் என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் இது என்ன ஆகப்போகிறது, இவள் எப்படி எதிர்வினை புரிவாள் என்று ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. எதிர்பார்ப்பதே நிகழ்வதும் ஒரு அழகு. எதிர்பாராத நுட்பங்கள் இன்னொரு அழகு. திரௌபதியின் குணாதிசயம் எப்படி வேண்டுமென்றாலும் மாறக்கூடியது என்பதனால் உருவாகும் எதிர்பார்ப்பு இது.

மகாலிங்கம்

கிராதம்ஜெமோ,
                  

நீங்கள் அடிக்கடி சொல்வதைப்போல, ஒரு நாவலை தொகுத்து எழுதும் பொழுது அந்நாவலின் வாசிப்பனுவத்தை பெருக்கிக் கொள்ள முடிகிறது.

மாநாகத்திலிருந்து  மகாவஜ்ரம் வரையிலான தொல்வேதங்களின் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியையும் உள்ளடக்கியுள்ள இந்நாவலை  அவ்வளவு எளிதாக தொகுத்து எழுதி விடமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இன்னும் பரந்துபட்ட வாசிப்பு எனக்குத் தேவையென்ற  ஞானம்தான் கிராதம் பற்றிய இந்த அவதானிப்பை எழுதும் போது கிட்டியது.

காடுகளுக்கு சென்று மீளும்  தர்மனின்  சொல்வளர்காட்டுப் பயணத்தை Dharman's Sabbatical Leave என்று உருவகித்துக்  கொண்டேன். திசைகளுக்குச்  சென்று மீளும்  அர்ஜுனனின் கிராதப் பயணத்தை On the Job Training for Arjuna என்று உருவகித்திருக்கிறேன்.

அன்புடன்
முத்து

குந்தி
அன்புள்ள ஜெ

குந்தியின் குணச்சித்திரம் அத்தனை வேறுபாடுகளுடன் அடிப்படையில் மாறாமலேயே இருந்துகொண்டிருக்கிறது. அவள் துரியோதனனின் சாவு பற்றிய செய்தியையும் போரின் வெற்றி பற்றிய செய்தியையும் கவனிக்கும்போது கொள்ளும் உணர்ச்சிகளைக் கவனித்தால் சின்னப்பெண்ணாக குந்திபோஜனுக்கு தத்துமகளாகப்போனால் அரசி ஆகிவிடலாம் என்று கணித்து அதை முடிவாக எடுத்த அந்த நாள்முதல் அவளுடைய ஆசையெல்லாம் அதிகாரம் மட்டும்தான் என்பது தெரியவருகிறது. அவள் எஞ்சியிருக்கும் பகையைப்பற்றி மட்டுமே கவலைப்படுகிறாள். கர்ணனின் சாவுதான் அவளைக் கொஞ்சம் கவலைபப்ட வைக்கிறது. ஆனால் அதையும் மறுநாளே கடந்துவிடுகிறாள். அவளுடைய அந்த கணக்குபார்ப்பதும் அவள் ஒவ்வொன்றையும் உள்ளே புகுந்து யோசிப்பதும் இயல்பாக வந்துள்ளன. அவளைப்போன்ற அம்மாக்களை இப்போதுகூட பார்க்கலாம் என தோன்றுகிறது. பெண்களுக்கே உரியது அந்த அதீதமான எச்சரிக்கை என்று தோன்றுகிறது.

செல்வக்குமார்

அபிமன்யு2
அன்புள்ள ஜெ

அபிமன்யூ பற்றி ஒரு கடிதம் வந்திருந்தது. நானும் அதைக் கவனித்தேன். அதில் நுட்பமான ஒரு சின்ன விஷயத்தை வாசித்து குறித்து வைத்திருந்தேன்.


இந்த வரி மகனுக்கும் அம்மாவுக்குமான உறவைச் சொல்லும் இடம். பல உயிரினங்கள் ஒரு வயசுக்குமேல்தான் ஆணோ பெண்ணோ ஆகும் என்று படித்திருக்கிறேன். அதைப்போலத்தான் இது. மகனில் பெண்மை அம்சம் இருக்கும் வரை அம்மாவுக்கு அவன் மிக நெருக்கமானவன். ஆகவேதான் நனறாக வளர்ந்தபின்னரும் அம்மாவுக்கு செல்லமாக இருக்கும் பையன்கள் கொஞ்சம் பெண்போலவே இருக்கிறார்கள். இந்த இடம் இப்படி சரியாக நின்று வாசிக்கமுடியாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு அத்தியாயத்தில் வருவது ஆச்சரியமான விஷயம்

ராஜி

Tuesday, August 20, 2019

அரசநடை
அன்புள்ள ஜெ

அரசநடை பற்றிய பகுதிகள் இயல்பாக திரௌபதியின் கதையின் ஒருபகுதியாக வந்தன. அந்த நடையை பிறர் பயில்கிறார்கள். சிலர் இயல்பாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த நடை வேங்கையின் நடை. ஆரம்பத்திலிருந்தே அதை வெண்முரசு சொல்லிவந்திருக்கிறது. இப்போது மைந்தர் கொல்லப்படுவதற்கு முன்பு அது ஏன் ஞாபகப்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப்பார்த்தேன்.

திரௌபதியின் எண்ணங்களில் துருபர் வந்துகொண்டே இருக்கிறார். ஏன்? அவரை அவளால் நினைக்காமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் அவர் செத்ததை எண்ணி வருந்தவுமில்லை.இயல்பாக வருகிறார். இன்றைக்கு அவள் ஒரு பெரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறாள். அதற்கு வழிகோலியவர் துருபதர். அவருடைய வஞ்சமே திரௌபதியாகப் பிறந்தது. இன்று அவள் அந்த பெரிய இழப்பு நோக்கிச் செல்லும்போது அரசியாக அவளை ஆக்கிய அந்த அடிப்படையான வஞ்சம் நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது

எஸ்.குமரவேல்

குருதி
அன்புள்ள ஜெ,

இந்த அத்தியாயம் அதிர்ச்சியுறச் செய்தது. ஆனால் சென்ற இரண்டுநாட்களாகவே கதை நுட்பமாக இங்கேதான் வந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த இடத்தை வந்தடைந்தபின்னர்தான் உணர முடிந்தது. திரௌபதியிடம் தாய்மை கனிந்திருக்கிறது. அவளுக்கு நகரம் பிடிக்கவில்லை. காட்டில் வாழவே விரும்புகிறாள். போரில் அவளுக்கு ஆர்வமில்லை. ஆகவே பழிவாங்குவதிலும் அக்கறை இல்லை. குருதிப்பழி கொருபவள் அவளுக்குள் குடியேறிய மாயைதான். ஏனென்றால் மாயைதான் சபதம்போட்டாள். ஆனால் மாயை அவளுக்குள் இருப்பவள். அவளுடைய ஆல்டர் ஈகோ. அவளுக்குள் இருந்து எழுந்து வந்தவள். ஆகவே அவளும் மாயைதான்.மாயையில் திரௌபதி வரமுடியும் என்றால் திரௌபதியில் மாயையும் வரமுடியும். முதல்முறை துச்சாதனனின் ரத்தத்துடன் பீமன் வந்தபோது அவனை எதிர்கொண்டு அந்த ரத்தத்தை பூசிக்கொண்ட்வள் மாயைதானே ஒழிய திரௌபதி அல்ல.இப்போது துரியோதனனின் ரத்தம் படிந்த ஆடையை எடுத்துக்கொள்பவள் திரௌபதி. அல்லது அவளுக்குள் இருக்கும் மாயை. அவளுடைய ரத்த ஆசை ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. அந்த கதைதான் அபிமன்யூ வழியாக வந்து இந்த இடத்திலே உச்சமடைந்திருக்கிறது

மகேந்திரன்அம்பிமன்யூ
ஜெ,

வெண்முரசில் சில இடங்கள் கதையோட்டத்தில் எண்ணமாக வந்துசெல்லும். பலசமயம் அவை பெரிய ஒரு நிகழ்ச்சிக்கு முன்னாலும் பின்னாலும் வரும். நாம் அவற்றை கடந்துசென்றுவிடுவோம். ஆகவே நான் எப்போதுமே அப்படி வரும் பகுதிகளை தனியாக எடுத்து ஃபைல் போட்டு வைத்துவிடுவேன். குருக்ஷேத்திரப்போர் முடிந்து மேலே என்ன நடக்கும் என்ற பதற்றம் நிலவும் இடத்தில் திரௌபதிக்கும் அபிமன்யூவுக்குமான உறவு வருகிறது. அவளுக்கே ஐந்து மைந்தர்கள் இருந்தாலும் அவளுக்கு மனசுக்குள் பிடித்த மகனாக அபிமன்யூதான் இருக்கிறான். ஏனென்றால் அவன் இரண்டு பேரின் கலவை. அர்ஜுனனும் கிருஷ்ணனும். இரண்டுபேருமே அவளுக்குப் பிடித்தமானவர்கள்.

அபிமன்யூவுக்கும் திரௌபதிக்குமான உறவின் அவன் எப்படி அவளைப்பார்த்தான் என்பதும் முக்கியமானது. அவன் அவளைத்தான் தனக்குச் சமானமானவனாக பார்க்கிறான். அவளுடைய நிமிர்வு அவனுக்கு தன் அம்மாவாக இருக்கும் தகுதிகொண்டவளாக அவளைக் காட்டுகிறது. நுட்பமான ஒரு விஷயம் இது. இந்த உறவு மேலும் பல வரிகள் வழியாகத் தொட்டுத்தொட்டுச் சொல்லப்படுகிறது. அந்த வரிகளை தனியாக எடுத்து தொகுத்து வாசித்தால்தான் முழுமையான ஒரு சித்திரம் கிடைக்கிறது

ஆர்.லக்ஷ்மி

வதம்
அன்புள்ள ஜெ

நலம்தானே

வெண்முரசின் உச்சகட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதன் வீச்சை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். பல கொந்தளிப்பான தருணங்களை பேச்சிலும் சொன்னீர்கள். துரியோதனனின் இறப்புதான் வெண்முரசின் உச்சம். அப்படித்தான் இருக்க முடியும். ஏனென்றால் இந்தியா முழுக்க இந்த ‘வத’ங்கள்தான் புராணங்களின் மையமாக உள்ளன. விஷ்ணுவால் வீழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே சிவபக்தர்கள் என்பது ஓரு கவனிப்பிற்குரிய விஷயம். ராவணன் மட்டுமல்ல ஹிரண்யகசிபு உட்பட பலரும். இந்த நுட்பமான அம்சம் சங்கரரின் ஷன்மத சங்ரகத்திற்குப்பின்னர் மழுப்பப்பட்டது.

இந்தக்கோணத்தில்தான் பாண்டவர்களின் மகன்களைக்கொல்லப்போகும் அஸ்வத்தாமனை சிவபெருமான் நேரில் வந்து வாழ்த்தி அனுப்பும் காட்சி பொருள்கொள்கிறது. மிக எளிமையாக இதை சைவ வைணவப் பூசலாக நான் பார்க்க நினைக்கவில்லை. வெவ்வேறு பண்பாட்டுக் கலவைகளால் ஆன இந்த நாட்டின் தொன்மையான மரபைப் புரிந்துகொள்ள உதவும் குறிப்புகளகாவே இவற்றை நான் பார்க்கிறேன்.

சங்கர்