[அர்ஜுனன் உலூபி]
ஜெ,
உங்கள்
நாவல்களில் உள்ள சிறப்பியல்புகளில் ஓன்று அதன் முடிவு, அத்தனை துல்லியமாக
எழுத திட்டமிட்டு எழுதும் பொழுது சாத்தியமில்லை. ஒவ்வொரு முறையும் அதுவாக
சென்று சேருமிடம் எத்தனை சரியாக இருக்கிறது.
அர்ஜுனன் இரண்டு
வழிகளில் செயல்படுகிறான். காமத்திலும் வீரத்திலும். அதிக பட்சம் அதை
உன்னதப்படுத்தினால் காதலும் செயலூக்கமும் என்று சென்று சேரும்.
காண்டீபத்தில் நிகழ்வது இன்னும் நுட்பம். அவன் இரண்டு ஆளுமைகளை எதிர் கொள்ள
முடியாமல் தவிக்கிறான். ஓன்று கர்ணன், மற்றது குந்தி. கர்ணனை வெல்வதுதான்
அவனுடைய காண்டீபத்தினுடனான உறவு, இளமையில் அவனுக்கு கிட்டாத குந்தியை
அடைவது அவனுடைய காதலின் தேடல். கர்ணனுக்கு குந்தி மீது இருக்கும் பாசமும்,
திரௌபதிக்கு கர்ணன் மீது இருக்கும் காதலும் அவனை இன்னும்
அலைக்கழிப்புக்குள்ளாக்குகிறது. இந்த அலைக்கழிப்பு வழியே துவங்குகிறது அவன்
தேடல்.
சீக்கிரமே
அவனுக்கு தெரிந்து விட்டது தன்னை வெல்வதே அவன் முன் உள்ள சவால், காண்டீபம்
அந்த நதியைக் கடக்க ஒரு படகு மட்டும்தான் என்று.
வெறும்
ரஜோ குணம் வன்முறைக்கே இட்டு செல்கிறது, சிறுவர்களிடம் கூட ஒற்றை
மாங்காய்க்கு தலையைக் கொய்வேன் என்று சொல்லும் அளவுக்கு, வீரத்தில் அறம்
இல்லையேல் அது வன்முறை மட்டுமே என்று சென்ற கடிதத்தில் எழுதி இருந்தேன். (
கர்மத்தின் நோக்கம் அறமாகும் பொழுதே அது கர்மயோகம் ஆகிறது ) அது உங்கள்
வரிதான், ஆனால் எங்கிருந்து எனக்குள் வந்தது என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
சித்ரரதன் கதையிலிருந்து என்று கண்டு கொண்டேன். அது அர்ஜுனன் தனக்கு தானே
சொலிக் கொண்டது போல.
பெண்களுடனான
அர்ஜுனன் உறவை பார்க்கும்போது எனக்கு தேவதச்சனின் இலைகளின் நடனம் கவிதையே
நினைக்கு வந்தது, ஒவ்வொரு முறை அவன் கைக்கொள்ளும் போது சிக்குவது இலைகளே,
அவற்றில் தப்பி விடும் நடனத்தை அவன் சுபகையில் காண்கிறான்.சுபத்ரையிடமும்
திரௌபதியிடமும் அவன் காதல் கொண்ட காலத்திற்கு பிறகு இன்று அவர்கள் உள்ளே
இருக்கும் சக்கரவர்த்தினிகள் வெளிப்பட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு
இவனும் காண்டீபமும் ஒரு கருவி மட்டுமேதான் இன்று. அதனால்தான் அவர்கள்
இப்பொழுது அன்னியமாக ஆகிவிட்டார்கள்.
//அவள்
என்ன சொல்கிறாள் என்பது சுபகைக்கு புரியவில்லை. “நீ இங்கிரு. அவன்
மீண்டும் வருவான்’’ என்றாள் மாலினி. “இல்லை அன்னையே, இனி ஒரு போதும் அவர்
முன் நான் சென்று நிற்க மாட்டேன்” என்று சுபகை சொன்னாள். “ஏன்?” என்றாள்
மாலினி. “இவ்வுடலல்ல நான். அன்று அவருக்கு நான் அளித்த உடலும் அல்ல இது.
இதை நோக்கி என்னை அறியாது அவர் உதறிச் சென்றால் பின்பு நான் வாழ்வதில்
பொருளில்லை. அவர் இங்கு வந்தால் அவரை அஞ்சி இக்குடில்களில் எங்கோ ஒன்றில்
ஒளிந்து கொள்வேன். அல்லது காட்டுக்குள் சென்றுவிடுவேன்.”
மாலினி நகைத்து “ஆனால் நான் அவன் உன்னை இவ்வுடலில் பார்க்கவேண்டுமென்று விழைகிறேன். அன்று அவன் கண்ட அந்த எயினியை இவ்வுடலில் மீண்டும் அவனால் காண முடிந்தால் மட்டுமே அன்று அவன் எதையாவது பெற்றிருக்கிறானென்று பொருள்”
என்றாள். சுபகை “இல்லை. ஆண்கள் பெண்களின் ஆன்மாவைக்கூட உடல் வழியாகத்தான்
அறிகிறார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றாள். மாலினி “அது
சூதர்களின் பொய். விராடபுராணம் உடல் அவர்கள் உள்ளே வருவதற்கான பாலம்
என்கிறது. உடல் வழியாக வந்து உடலுக்கு அப்பாலுள்ளதை அறிபவனே உண்மையில்
அறிபவன்” என்றாள்.
“இல்லை அன்னையே, ஆண்கள் எதையும் அறிய முடியாது” என்றாள் சுபகை. மாலினி “உன்
கண்களில் வைரமுனை போல ஒளிவிடும் அச்சிரிப்பை நிகழ்த்தும் ஒன்று உன்
ஆழத்தில் உள்ளது. அதை அவன் அறிகிறானா என்று பார்க்க விழைகிறேன்” என்றாள்//
அந்த
பக்கம் உலகை வெல்வது என்பது தன்னை வெல்வதில் முடிந்தால், இந்த பக்கம்
குந்தியை காமத்தில் தேடுவது என்பது தனக்குள் இருக்கும் சிறுவனை
கண்டடைவதில்தானே முடியும். அதை சுபகையிடம் கண்டுகொண்டான். இந்த பின்னணியில்
பார்த்தால் காண்டீபத்தை சுபகையிடம் அவன் காட்டும் தருணம், அவன் தன்னை
சுபகையிடம் திறந்து வைக்கும் தருணம்.
ஏவி மணிகண்டன்