அன்புள்ள ஜெ. வணக்கம்.
அறம்
தாண்டமுடியாத அளவுக்கு மலைவேலி இல்லை, தாண்டியபின்பு திரும்பிவிடக்கூடிய
அளவுக்கு வாசல்வைத்த வயல்வேலி’யும் இல்லை. இந்த எளிமையும் வல்லமையும்தான்
அறத்தின் பலவீனமும் பலமும். அறத்தின் எளிமைதான் அறத்தின் பலவீனம் என்று
மானிடம் நினைக்கும்போது அது மானிடனின் பலவீனம் என்று எப்போதும் அறம்
வெண்முரசுக்கொட்டிச் சிரிக்கின்றது.
அறத்தை மறத்தல் என்பது எளிதானதாக இல்லை.
மறக்கக்கூடிய அளவுக்கு அறம் வலிமையற்றதாக இருப்பதுபதுபோல் தோன்றினாலும் அறம் மறப்பவருக்கு
அறத்தைவிட பெரும் வலிமையுடைய சுமை ஒன்று உலகில் இல்லை என்று எப்போதும் காட்டுகின்றது. காலின் எடையைவிட எளிதாக இருக்கும்
அறம் மறப்பவனுக்கு கல்லின் எடையைவிட வலிதாக ஆகிவிடுகின்றது. இது ஹுண்டன் கதை.
அசோகசுந்தரியை
அடைய நினைக்கும் ஹுண்டனுக்கு வாசமலராகத்தான் அசோகசுந்தரிக்கிடைக்கிறாள்.
அழகு இனிமை
சுவை அனைத்தும் நிறைந்த மலராகத்தான் ஹுண்டன் முன்பும் அசோகசுந்தரி
இருக்கிறாள். அவளை அவன் அன்னையாக தோழியாக மகளாக தேவதையாக நினைத்து
இருக்கலாம் அவளும் அவனுக்கு அப்படித்தான் கிடைத்தால் ஆனால் அறம்மீறும்
அவனுக்கு அவள் கல்லாக கணக்கத்தொடங்கிவிடுகின்றாள்.
அழகு இனிமை குழந்தமை
ஆனந்தமாக வந்துகிடைக்கும் அசோகசுந்தரி .நகுஷன் அறம்மீறும்போது காமமாக மயக்கமாக இருளாக முதுமையாக
நோயாக வந்து தாக்குகின்றாள்.
அறம் ஒன்றுதான்
அதை மீறுபவர்களை அது வேறுவேறாக உருமாற்றித்தாக்குகின்றது. கு ழந்தையாகிய நகுஷனை
கொன்று சமைத்து உணவாகக்கொண்டுவரச்சொல்லும் ஹுண்டனை எதிர்க்கமுடியாத அவன் இருமனைவியரும்
அறத்தின்பால் நிற்கமுடியாமல் சூழ்நிலைகைதியாகி அறம்மீறுபவன் பக்கத்தில் நின்று அவன்
உணவை உண்டு வாழத்தலைப்படும்போது, ஒரு மனைவி உண்டு உண்டு உருவழிந்து சாகின்றாள். ஒருவள்
உணவை உண்ணவே முடியாமல் தேய்ந்து அழிந்து அழித்துக்கொள்கிறாள். அறம் அறம்மீறுபவனை தண்டிக்க
ஒரு பாதையை தேர்ந்து எடுக்கிறது என்றால் அறம்மீறுபவன் உடன் வாழ்பவரை தண்டிக்க வேறு
வேறு வழியை தேர்ந்து எடுக்கிறது. அறம் உடல்மீது இல்லை உடலுக்குள் இருக்கிறது.
ஆணவக்கயிற்றில்
கட்டப்பட்டு ஆடும் மானிட பொம்மைகள் தங்கள் ஆணவக்கயிற்றின் நீளத்திற்கு ஓடி ஒடியாந்து
ஆடிக்களிக்கின்றன என்றாலும் அறம் சுவடே இல்லாமல் அவற்றின் மேல் தன் ஆட்டத்தை நிகழ்த்தி
நிறைவடைகின்றது.
ஹுண்டன்
நகுஷன் கதையில்
காமமும் ஆணவமம் இருபரும் ஆடிகளாக எதிர் எதிர் அமைந்து அவற்றுக்கு இடையில்
வந்து செல்லும் உருவங்களை முடிவிலி என்று பெருக்கிக்காட்டி
வியப்படைய வைக்கும்போதும் அதற்கு இடையில் அறம் உயிரில் ஏறி ஆடும் முடிவிலி
ஆட்டம் நுண்பிம்பங்களாய்
கதையை மலரவைக்கிறது.
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு –என்கிறார் திருவள்ளுவர்.
ஹுண்டன் காமத்தால்
ஏற்பட்ட தனது அறம்மீறிய செயலால் அனுபவிக்கும் கல்தன்மையை, தன்னால் யார் கன்னி என்று
நினைக்கப்பட்டாலோ அவளையே தாய் ஆக்கி அவளின் தாய்மையில் மூழ்கி
கரைப்பது அற்புதம்.
அறம் அறம்மீறியவனுக்கு அவன் உய்ய கரைய கனிய பிழைக்க மற்றும் ஒரு புதுவழியை காட்டுவதாலேயே
அறம் அனைத்திற்கும்மேலாக நிற்கின்றது.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்