Tuesday, November 12, 2019

நீர்ச்சுடர் - 48 ஊழிற் பெருவலி யாதுள?



            அறிவது நன்று  என்றுதான் நமக்கு எப்போதும் தோன்றி  வந்திருக்கிறது.  அறிவதே நிகழும் செயல்களின் பொருளை விளக்குகிறது.   அறிவது நம்முள்ளத்திற்கு இன்பம் தருகிறது. உலக வாழ்வின் வெற்றிக்கு உதவுகிறது.    குழந்தையாய் இருக்கும்போதே அறிதலின் இன்பத்தை உணரத் தொடங்கிவிடுகிறோம்.  அறிதலின் பல்வேறு  வடிவங்களாக நம் கல்வி அமைப்பு இருக்கிறது. மனிதனின் அறிதலின்பத்திற்காகவே  பல்வேறு ஊடகங்கள் உருவாகி இருக்கின்றன. அறிதலின்பத்தைப் பெருக்கிகொள்ளவே இலக்கியங்கள் கலைகள் உதவுகின்றன.  நாம் பிறந்து வாழ்வின் பொருளை அறிவதன் முயற்சியே ஆன்மீகமென ஆகிறது. 

        ஆனால் அறிதல் எப்போதும் ஆனந்தத்தை தருவதில்லை. உண்மையில் பார்த்தால் சில அறியாமைகளே வாழ்வை பொருளடையதாக மாற்றுகிறது. சில உறவுகள நீடித்து இருக்க வைக்கிறது.     ஒருவர் நினைப்பதையெல்லாம் நாம் அறிவோம் என்றால் அந்த ஒருவரை நம்மால் நேசிக்கவே முடியாது.  நம் அறிதலை  விலக்கி வைத்து அனுபவிக்கும்போதுதான்  சில இன்பங்களை நம்மால் உணரமுடிகிறது. ஒரு ஓவியத்தை, திரையில்  இருக்கும் வண்ணதீற்றல்கள் என்று அறிவதைத் தவிர்த்து,  அதில்  பொருள்கொண்ட காட்சியை கற்பித்துக்கொள்வதால்தான் அது ஓவியம் என்று ஆகிறது.  மனிதர்கள் சிலர் வேடமிட்டு, ஒரு  புனையப்பட்ட கதையில்,  யாரோ எழுதிய வார்த்தைகளைப் பேசுகிறார்கள் என்ற அறிதலைத் தவிர்த்து  அதை உண்மை என்று நம்மை நாமே அறியாமையில் ஆழ்த்திக்கொண்டால்தான் நாடகத்தை ரசிக்க முடிகிறது.   

        உயிர்க்குலம் முழுதும் நடிகர்களென இருந்து,  எழுதப்படாத கதைகொண்டு,   நடத்துகொண்டிருக்கும் நாடகம்தான் வாழ்க்கை. அதில் நடிப்பவர்கள் அதற்கான கதையை அவர்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். காலம் என்ற மேடையில் அது நடக்கிறது.  அந்த நாடகமே  ஊழ்.   எந்த நேரத்தில் எந்தக் கதாப்பாத்திரத்தை எங்கு வைக்கவேண்டும் என்பதை அது முடிவு செய்கிறது.  அப்போது செயல்களின் தன்மைக்கு ஒருவன் ஒப்பு கொடுப்பதும் அல்லது அதை ஒத்துக்கொள்ளாமல் மனம் வெதும்புவதும் அந்நடிகனின் பொறுப்பில் விடப்படுகிறது.   ஊழில்  அடுத்து என்ன நிகழும் என்று  அறிதலில் மனிதனுக்கு எப்போதும் ஆவல் இருக்கிறது.    அப்படி ஒருவன் ஊழை அறிவதால் ஒருவன் என்னதான் செய்ய முடியும்?   அவனுக்கு உவக்காத ஒர் நிகழ்வை மாற்ற முயற்சி செய்வான். அப்படி மாற்றக்கூடியது அல்ல ஊழ். ஏனென்றால்  எது நடக்கிறதோ அதுவே ஊழ். 

        ஒரு  பட்டுப்புடைவை தன்னுள்ளே  பல சித்திர வடிவங்களைக் கொண்டிருக்கிறது. அவை  பொன்னிற இழைகள் மூலம்  தோற்றம் கொண்டிருக்கின்றன.   பொன்னிற இழைகள்  எந்த இடத்தில். எப்போது வெளிப்படவேண்டும் என்பதை  அவை ஊடாடிச்செல்லும் பட்டு நூல்கள் வழி  நிலைப்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது பட்டாடையின் சித்திரத்திற்கு  அதில் வெளிப்படும் பொன்னிழைகள் மற்றும் காரணமல்ல. நாம் காணாது அதன் பின்னணியில் இருக்கும் பட்டு நூல்களும் காரணம். இவை எல்லாவாற்றுக்கும் மேலாக அந்த ஆடை நெய்யப்பட்டப்போது எங்கு, எப்போது அந்த  பொன்னிழைகள் வெளிப்படவேண்டும் என்று முடிவு செய்த நாமறியாத நெசவாளியே காரணம்.  இப்படியே ஒரு செயல் என்பது காலத்தின் மேல் வெளிப்படும் ஒரு சித்திரம். அந்தச் செயலும்,  செயலைச் செய்தவனாகக் கூறப்படுபவனும்  பொன்னிழையைப்போன்று  வெளியே தெரிபவை.   ஆனால் அந்தச் செயலுக்கு அவனோ பிறரோ அறியாத பல காரணிகள் இருக்கின்றன.     இப்படி  காலவெளியில் நெய்யப்படும் இந்த ஆடையயே நாம் ஊழ் என்று சொல்கிறோம்.     நூல்களால் நெய்யப்பட்டாலும் நூல் அந்த ஆடையின் சித்திரங்களை தீர்மாணிப்பதில்லை.  இன்னும் நெய்யப்படாத ஆடையை எப்படி நாம் காணமுடியாதோ அப்படியே  ஊழும் அறிவதற்கு அப்பாற்பட்டதாக  இருக்கிறது.  பாதி நெய்யப்பட்ட சித்திரத்திலிருந்து மீதிச்  சித்திரத்தை யூகிக்க ஒரு சிலர் முனைகிறார்கள். அவர்களை நாம் நிமித்தர்கள் என்று  கூறுகிறோம். ஆனால அவர்கள் ஊழை அறிந்துவிட்டனர் என்று கூற முடியாது.  ஊழைப்பற்றி ஏற்கெனவே வெண்முரசில் பின்வரும்  பொன்னான வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.
 
 "துணி தைப்பவனைப் பார்க்காமல், அத்துணியையும், அவன் கையிலிருந்து ஓடும் ஊசியை மட்டும் பார்த்தால் அதன் ஓயாச்செயல்பாடு திகைப்பூட்டும் பொருளின்மை அல்லவா? இங்கு நாம் ஆற்றுவது நாமறியாப் பெருஞ்செயலை என்று அறிந்தவனே அத்திகைப்பிலிருந்து விடுபடமுடியும். துணியை நாம் காண இயலாது. அதை ஊழ் என்கின்றார்கள். தைப்பவனை நாம் அறியமுடியாது. அதை அது என்று மட்டுமே சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால் ஊசியைக்கொண்டு துணியையும் தைப்பவனையும் உய்த்துணர்பவன் விடுபடுகிறான். "
   
   சுபத்திரை தன் அபிமன்யூவின் ஊழை மாற்றலாம்  என  நினைக்கிறாள்.  அதற்காக இறந்த தன் மகனைத் தொடர்புகொண்டு அவன் பிறவிச்சுழலில் இருந்து விடுபடுவதற்கானவழியைக் காண்பிக்கலாம்  என விரும்புகிறாள்.  ஆனால் பிறவிச்சுழல் வினைப்பயன்களால் விளைவது.

இளைய யாதவர் “விரும்பியும் விரும்பாமலும் இங்கு அனைவரும் ஊழில்தான் அமர்ந்திருக்கிறார்கள். ஊழென்பது முன்னைவினை நிகழ்வினை பின்னைவினை என்று மும்முகம் கொண்டு நம்மை வந்து அடைகிறது. ஆனால் ஊழ் என்பது முன்னரே வகுத்துவைக்கப்பட்ட பாதை அல்ல. நிகழ்வன எழுதப்பட்ட நூலுமல்ல. அது ஒரு பயிற்சி. அதில் வென்று கடந்த உயிர்கள் முன் செல்கின்றன” என்றார்.

ஒருவரின் ஊழ்வினையை மாற்ற வேறொருவர்  எவ்விதத்திலும் உதவ முடியாது. ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தமுடியாது.  ஒருவரின்  வாழ்வு என்பது அவர் எழுதும் ஒரு பள்ளித் தேர்வு போன்றது. அதில் கிடைக்கும் மதிப்பெண்கள்தான் வினைப்பயன்.  அந்த மதிப்பெண்களை  வேறொருவர் உட்புகுந்து மாற்றமுடியாது.
இளைய யாதவர் “விரும்பியும் விரும்பாமலும் இங்கு அனைவரும் ஊழில்தான் அமர்ந்திருக்கிறார்கள். ஊழென்பது முன்னைவினை நிகழ்வினை பின்னைவினை என்று மும்முகம் கொண்டு நம்மை வந்து அடைகிறது. ஆனால் ஊழ் என்பது முன்னரே வகுத்துவைக்கப்பட்ட பாதை அல்ல. நிகழ்வன எழுதப்பட்ட நூலுமல்ல. அது ஒரு பயிற்சி. அதில் வென்று கடந்த உயிர்கள் முன் செல்கின்றன” என்றார்.
தன் அறியாமையால்  ஒருவன்  நான் ஊழை அறிவேன்,  அதை மாற்றுவேன் என்று கூறுகிறான்.  அப்படி அவன் முயன்று  அவன் செய்யும் செயல்களும் அதன் விளைவுகளும் ஊழ்தான். ஏனென்றால் ஊழின் எளிய வரையறை முன்னர் சொன்னதுபோல் 'எது நடக்கிறதோ அதுவே ஊழ்'.   நம் செயல்களை வைத்தே நம்மை ஆட்டுவிக்கிறது ஊழ்.   நாம் எப்போதும் செய்யவேண்டியது நமக்கான கடமைகளை.  விளைவுளை  ஊழ் தீர்மாணிக்கிறது.   அதனால்தான்  கீதை பலன்களின் மேல் பற்று  கொள்ளாதே என்கிறது செடிக்கு நீரை ஊற்றுவது நம் செயல் ஆனால் அதில் கனியை கொணர்வது ஊழ்.  அதை உணராமல் நான்தான் அந்தக் கனியை உருவாக்கினேன் என்று ஒருவன் தருக்குவது மடமை. அதைப்போன்று ஊழை தனக்கு சாதகமான முறையில் மாற்ற முயல்வேன் என்பதும் மடமைதான்.

    நாம் ஊழை தெரிந்துகொள்ள முயல்கிறோம். ஊழை நம் விழைவுக்கேற்ப வளைத்துக்கொள்ள விரும்புகிறோம்.  ஆனால் அது காலத்தில் ஒழுகிச் செல்லும் உலகை திசை திருப்புவதற்கு சமம். 
         
 ஊழை அறிந்துகொள்ள முயல்வது என்பது அதை எதிர்த்து நிற்பதற்கு நிகர்தான். அந்த அத்துமீறலை ஊழ் சமைத்த ஆற்றல்கள் விரும்புவதில்லை. எதிர்த்து நிற்பவர்களுக்கு ஊழ் மேலும் ஆற்றல் கொண்டதாகிறது” என்றார். 

நடக்க இருப்பதை நாம் மாற்றலாம் என எண்ணுவது தவறானது அதற்குபொருள் ஒருவன் செயலற்று இருந்துவிடு  என்பதல்ல.  அவன் தன் கடமைகளை ஊக்கத்துடன் செய்யவேண்டும். ஆனால் விளைவுகளை ஊழ் தீர்மாணிக்கிறது.  அடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை நாமே உறுதியாகக் கூற முடியாது. ஏனென்றால் நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் மாறுகின்றன. அதற்கு காரணம்காரணம் கணத்திற்கு கணம் மாறும் சூழல். அம்மாற்றங்களை நெய்துகொண்டு போகிறது ஊழ். இப்படி தன்னையே கணிக்க முடியாத ஒருவர் எப்படி ஊழின் வசத்திலிருந்து மற்றொருவரை, விடுவிக்க முடியும்? 

நீ உன் உள்ளத்தில் செறிந்திருக்கும் ஆணவத்தால் ஊழை எதிர்க்கலாம் என்னும் எண்ணத்தை அடைகிறாய். உன்னால் எதுவும் முடியுமென்று எண்ணுகிறாய். நீ உன்னையே கூட இன்னும் அறியவில்லை. உன்னைச் சூழ்ந்தவற்றை கூட இன்னும் கடக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்கைகளுக்குள் சென்றுகொண்டிருக்கையில் பிறருக்கு வழிகாட்டுபவர் என எவருமில்லை.
 
நாம் மற்றவருக்காக ஆற்றும் உதவிகள் செய்யும் கடமைகள் எல்லாம் அவர்களின்  ஊழை மாற்றுகிறோம் என்பதில்லை. உண்மையில் அப்போது நாம் நம்முடைய ஊழின் வழிப்படி நடக்கிறோம்.  உண்மையில் நம் கடமைகளை  நாம் ஒழுங்காகச் செய்வது பிறர் பொருட்டு அல்ல.  நாம் அகப்பட்டிருக்கும் பிறவிச் சுழலிருந்து விடுவித்துக்கொள்வதற்காகவே.  
 
மைந்தருக்கும், சுற்றத்திற்கும், எளியவருக்கும், கற்றோருக்கும், சான்றோருக்கும், அந்தணருக்கும், முனிவருக்கும், தெய்வங்களுக்கும் நாம் அளிக்கும் அனைத்து கடமைகளும் நாம் வெளியேறும் பொருட்டு நாம் செய்வது மட்டுமே” என்றார் இளைய யாதவர்.
    
       வெண்முரசில்  கண்ணைனின் குழலோசை நெடுநாட்களுக்குப்பிறகு இப்போதுதான் ஒலிக்கக் கேட்கிறோம். குருஷேத்திரப் போரில் வெறும் சாட்சி மாத்திரமாக இருந்தான்.  எப்போதாவது ஓரிரு சொற்களில் தம் எண்னத்தை வெளிபடுத்துவதுமட்டும்தான் இருந்தது. இப்போது தன் சொற்கள் வழி வெளிப்படும் கண்ணனை காண்பதில் பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தண்டபாணி துரைவேல்