அன்புள்ள ஜெ
அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்குமான போரை ஆர்வத்துடன் வாசித்தேன். அவ்வளவு போரை எழுதியபின்னரும் போர் பற்றி என்னதான் எழுதமுடியும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் முழுக்க முழுக்க குறியிடாகவே அந்தபோர் நடந்து முடிந்தது. ஒரு நீள்கவிதையைப்போல
அஸ்வத்தாமன் சிவன். அதாவது யோகேஸ்வரன். காமம் அறுத்தவன் . முக்கண்ணன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். முக்கண்ணனே வேடனாக வந்து அவனிடம் பேசியிருக்கிறான். நேரில் எழுந்து அவனுக்கு ஞானமும் அருளியிருக்கிறான்
அர்ஜுனன் காமத்தின் தெய்வமான இந்திரனின் மகன். அங்கே அவன் மன்மதனாக எழுந்து மலரம்பை தொடுக்கிறான். அதை ஏற்று அஸ்வத்தாமன் தலையில் குளிர்நிலா எழுகிறது. உடலில் பாதி பெண்ணாகிறது. ஆனால் அர்ஜுனன் எரிந்து யோகேஸ்வரனாகி காமத்தை கடந்துவிடுகிறான்
தவம் செய்பவன் தெய்வத்தை மனிதனாக்கி அதனிடம் வரம் கேட்டு தான் தெய்வமாகிவிடுகிறான் என்பது யுயுத்சு எழுத எண்ணும் நூலின் முதல் வரி. அந்த வரியின் காவிய சித்திரம் இது.
வெண்முரசில் வந்த கவித்துவமான இடங்களிலேயே இதுதான் அழகானது
மகாதேவன்