திருதராஷ்டிரர் பீமன் உருவில் இருக்கும் பதுமையை பீமன் என்று எண்ணி கொல்ல முயற்சிக்கையில் அது உடைந்து சிதறுகிறது. கிருஷ்ணன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பீமன் உயிர் தப்பிக்கிறான். அப்பதுமையை உடைத்தபிறகு தாம் பீமனை கொன்றுவிட்டோம் என்றெண்ணி துயரப்பட்டு கதறுகிறார். தன் பிள்ளைகள் அனைவரையும் கொன்றவன் என்று அவர் மனதில் பீமன் மேல் வஞ்சம் கொண்டிருந்தார். அது தந்தையின் வஞ்சம். ஆயிரம் விளக்கம் சொல்லிக்கொண்டாலும். அந்த தந்தைமையின் காரணமாக அதைப் போக்கிகொண்டிருக்க அவரால் முடிந்திருக்காது. ஏனென்றால் அந்தப் பாசம் மிக வலுவானது. பெற்றோரின் பாசம் என்பது குருதியிலேயே இருப்பது. மற்ற பாசமெல்லாம் நாம் நமக்கு கற்பித்துக்கொள்வது. தான் உயிரென நேசித்த தம் சகோதரன் பாண்டுவின் பிள்ளைகளை துரியோதனன் தீயிட்டு கொல்ல முயன்றதை காணாமல் விட வைத்தது, அவர்களிடமிருந்த நாட்டைக் கவர்ந்து வனத்திற்கு அனுப்பியதையோ, திரும்ப வந்தபோது நாட்டை கொடுக்க மறுத்ததையோ அவரால் தடுக்கமுடியாமல் செய்தது. இவையெல்லாம் தவறு என்று கருதினாலும் அவர் பேரரசர் என்ற முறையிலோ குடும்பத்தின் மூத்தவர் என்ற முறையிலோ அவர் செய்யவேண்டியதைச் செய்யவில்லை. துரியோதனனை மன்றாடி கேட்டுக்கொள்வதுமட்டுமே அவர் செய்தார். அதற்கு மேலாக கடிந்து கொண்டால் அவன் தன் உயிரை மாய்த்துக்கொள்வாவோனோ என அஞ்சி ஏதும் செய்யாமல் விட்டு விட்டவர். அவர் துரியோதனன் மேல் வைத்திருந்த பாசம் அவர் அற உணர்வை மழுங்க வைத்துவிட்டது. அனைவரையும் தம் உறவென அணைத்துக்கொள்ளும் அவர் பேருள்ளத்தை குறுக்கிவிட்டது. பாண்டுவின் பிள்ளைகளை தம் பிள்ளைகள் என அவர் கொண்டிருந்த பாசத்தை மறக்கவைத்துவிட்டது. அத்தகைய பாசம் துரியோதனனைக் கொன்றவன் மேல் வஞ்சமென திரண்டெழுவது இயல்பானது. அவர் பீஷ்மரை தந்தையென்று கருதி பாசம் வைத்தவர்தான். ஆனால் பீஷ்மரை நெறி மீறி வீழ்த்திய பார்த்தனை மன்னிக்க அவரால் முடிகிறது. ஆனால் பீமனை அவரால் மன்னிக்க முடியவில்லை.
அதே நேரத்தில் அவருடைய பேருள்ளத்திற்கு இப்படி வஞ்சம் கொள்வது என்பது எதிரானது. இதுவரை அவர் வாழ்வில் பல ஏமாற்றங்களை எதிர்கொண்டிருந்தாலும் அவர் நெஞ்சில் வஞ்சமென ஒன்று எழுந்ததில்லை. எவர் மேலும் பகையோ வெறுப்போ இன்றி இருந்தவர். தனக்கு கிடைக்க வேண்டிய அரியணையை பாண்டுவிற்கு தரவேண்டி வந்தபோதும் தன் மகன் துரியோதனனுக்கு என எண்ணி இருந்த அரியணையை தருமனுக்கு கொடுக்கவேண்டி வந்தபோது சிறிதும் தயக்கம் காட்டாதவர் அவர். மேலும் பீமன் துரியோதனனுக்கு அடுத்தபடியாக அவர் மனதிற்கு உகந்தவனாய் இருந்திருப்பான். பீமனின் உடல் பலமும், குழந்தைபோன்ற வஞ்சனையற்ற உள்ளமும் அவனை தன் பிள்ளையென அவருக்கு உணரவைத்திருக்கும். பீமனே துரியோதனனைவிட திருதராஷ்டிரருக்கு மகனாக இருக்க தகுதிகொண்டவன் என்று எனக்கு தோன்றுகிறது. ஆகவே திருதராஷ்டிரர் துரியோதனன் மேல் காட்டிய பாசத்திற்கு இணையாக பீமன்மேலும் கொண்டிருப்பார். ஆனால் காலத்தின் நிகழ்வுகள் இப்படி பீமன் மேல் அவரை வஞ்சம் கொள்ள வைத்திருக்கிறது. அந்த வஞ்சத்திற்கு எதிராக அவர் மனதிற்குள் போராடிக்கொண்டிருந்திருப்பார். அதன் காரணமான மன அழுத்தத்தோடு இருக்கும்போதுதான் பாண்டவர்களுடனான இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
துரியோதனன் பீமன்மேல் கொண்டிருந்த வஞ்சத்தின் பருவடிவுதான் அந்தப் பதுமை. இப்போது அது திருதராஷ்டிரர் என்ற தந்தையின் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சத்தையும் பிரதிபலிக்கிறது. அவர் அதை பீமன் என்று அணைத்து கொல்ல முயற்சிக்கையில் உடைந்து சிதறுவது அந்த பதுமை மட்டுமல்ல, அவர் பீமன்பால் கொண்டிருந்த வஞ்சமும்தான். ( அப்பதுமை உடைந்தபோது வானுலகில் இருக்கும் துரியோதனனின், பீமன் மேலான வஞ்சமும் உடைந்து சிதறியிருக்கும் என நினைக்கிறேன். ) அதனால்தான் அவர் கதறி அழுகிறார். கிருஷ்ணன் பீமனை மட்டுமல்ல வஞ்ச நெருப்பில் கருகிவிடாதபடி திருதராஷ்டிரரையும் காப்பாற்றியருள்கிறான் என்பதுதான் உண்மை.
பின்னர் துரியோதனனும் காந்தாரியும் அந்தப்பதுமையை படுக்கையில் கிடத்தி ஒரு குழந்தையென அதை வருடிக்கொண்டிருக்கும் காட்சி வெண்முரசின் தலை சிறந்த காட்சிகளில் ஒன்றாக அமையும் என்று நினைக்கிறேன். இப்போது அந்தப் பதுமை தன்னுள் ஏற்றப்பட்டிருந்த வஞ்சமெல்லாம் அகன்ற ஒன்று. அவர்கள், தம் இளங் குழவியாய் இருந்த துரியோதனனை அந்தப் பதுமையில் உணர்ந்து நெகிழ்வது மனதை உருக்குவதாக அமைகிறது.
தண்டபாணி துரைவேல்