Monday, September 1, 2014

கிருஷ்ணன் கம்சன் பீஷ்மர்

அன்பு ஆசிரியருக்கு,

இடைவெளி கிடைத்தால் பதில் தரவும். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

என்றுமே எனக்கு இருக்கும் ஐயம். வெண்முரசின் இந்த தருணமே அதை தங்களிடம் கேட்க சரியானது.

தன் அன்புக்குரிய தமையன் சிறையில் தான் பெற்ற குழந்தைகளை கம்சன் பலியிடுவது கண்டு மனம் வருந்தி வாடுவதை கண்டும், அஸ்தினாபுர அரசி குந்தி, ஏன் வசுதேவருக்கு உதவ படைகளுக்கோ பீஷ்மருக்கோ ஆணையிடவில்லை? 
மேலும் இவ்வளவு பெரிய அறப்பிழை செய்யும் கம்சனை அழிக்க பீஷ்மர் ஏன் முயலவில்லை. மகதத்தின் துணை கொண்டு அஸ்தினாபுரிக்கு பெரும் சேதம் விளைவித்துவிடுவான் கம்சன் என்பதை ஊகித்து பீஷ்மர் தாக்குதல் நடத்தாமல் இருந்து இருக்கலாம்.ஆனால் அது பிழை அல்லவா?

மீண்டும் தொல்லை படுத்தியதற்கு மன்னிக்கவும்.

தாழ்மையுடன்,
சரவணகுமார் 
துபாய்.



அன்புள்ள சரவணக்குமார்

மகாபாரதத்தில் கிருஷ்ணனின் இளமைப்பருவக் கதை நாம் இன்று அறியும் வடிவில் இல்லை. மாமனைக் கொன்று மதுரையை மீட்டான் என்றும் துவாரகைக்குச் சென்று தலைநகர் அமைத்தான் என்றும் மட்டுமே உள்ளது. குந்தியின் உதவிகோரி அவன் வருமிடமே அதில் தொடக்கம்

ஆயிரம் வருடம் கழித்து எழுதப்பட்ட பாகவதமே கண்ணனின் இளமை பற்றிய இன்றைய கதையைச் சொல்கிறது. அதில் ராதை இல்லை. பாகவதம் பக்தியை முன்வைப்பது. பக்திக்குரிய ஒரு வடிவை அது சொல்கிறது. அதற்கும் மகாபாரதம் உருவாக்கிய அரசியல் யதார்த்தத்துக்கும் சம்பந்தம் இல்லை

ராதா கிருஷ்ண கதை அதன்பின்னர் ராசலீலா என்றும் ராஸயோகம் என்றும் சொல்லப்படும் ஒரு யோகமரபு உருவானபின் அதற்கான குறியீடாக உருவாக்கப்பட்டது

வெண்முரசில் நீலம் தனியான கதையாக , தனி நூலாக சொல்லப்படுவது அதனால்தான்.

ஜெ