Tuesday, February 10, 2015

தருமனின் தயக்கம்.




தருமன் திரௌபதியுடன் உறவுகொள்ள தயங்குகிறான். அவ்விடத்தை விட்டுவிட்டு தப்பி ஓடும் அளவிற்கு துணிகிறான். அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். 


           பிரம்மச்சரியத்தில் இருக்கும் ஒருவன் அதன் கட்டுகளில் இருக்கும்போதும் உணரும் விடுதலையுணர்வு ஒன்றுண்டு. நாம் இந்த உடல் கொண்டிருப்பதால் இந்த பூமியில் கட்டப்பட்டிருக்கிறோம். இந்தக்கட்டிலிருந்து விடுபட்டு பறப்பதற்கான  ஆன்மீக சிறகுகள் நமக்கு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.  ஒருவன் பிறப்பெடுத்ததன் நோக்கம் ஆன்மீக விடுதலையை அடைவதே என நான் கருதுகிறேன்.   ஆனால் காமம் நம்மை நாம் வெறும் உடலாய் நம்மை கருதவைக்கும். அது  நம்மை மேலே எழ விடாமல்  தரையில் கட்டிவைத்திருக்கும் முளை.   அதுவும் திருமண பந்தம் அவனுக்கு மேலும் மேலும் இல்லறக் கடமைகளை சேர்த்து ஒருவனின் ஆன்மீக முன்னேற்றத்தை வெகுகாலத்திற்கு தள்ளிப்போடுவது.  அதே சமயம் ஆன்மீகத்தில் நாட்டம் எழாதவர்களுக்கு திருமண உறவும் குழந்தைகளும் உலக வாழ்க்கையில் பெறும் வெற்றிகளும் தான்  அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு பொருள் அளிப்பதாகும் என்பதும் உண்மையே. ஆனால் ஆன்மீகத்திற்கு,  எவ்வளவு சிறந்த மண வாழ்க்கை அமைந்திருந்தாலும் அது தடையேயாகும். ஏனென்றால் ஆன்மீகம்  என்பது எல்லா பந்தங்களையும் இரக்கமில்லாமல் அறுத்தெரிந்து தன்னந்தனியே செல்லவேண்டிய கடுமையான பயணம்.  


    தருமன் தன் இயல்பால் ஆன்மீக நாட்டம் உடையவன். அவனுக்கு விரும்பியோ விரும்பாமலோ திருமணமும் நடந்துவிட்டது. இருந்தும் அவன் திரௌபதியுடனான இல்லற வாழ்வை தன் தம்பியரிடம் விட்டுவிட்டு தான் இந்த தளையிலிருந்து விடுபட்டுவிடலாம்  என்றொரு எண்ணம் அவனுக்கு இருந்திருக்கும். அதனால் திரௌபதியுடனான உறவை அவன் தவிர்க்க எண்ணுகிறான் என்று நினக்கிறேன். அதேநேரம் தருமன் காம உணர்வை துறந்தவன் என்றோ திரௌபதியின்மேல் மோகமற்றவன் என்றோ கூறவில்லை. இவற்றிலிருந்து தான் விடுபடவேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்திருக்கும். அந்த தடுமாற்றத்தில் இருக்கும் அவனை காமத்தில் தள்ளிவிட  ஒரு மெல்லிய பூங்காற்றே போதுமானதாகிவிடுகிறது. அதுவே காமத்தின் பலம். காமம் மாயா சக்தி. உலகை அதன் பாதையில் சுழலவைப்பது. உயிர்களை பிறப்பித்து உலகை நிறைப்பது. அதன் மாபெரும் சக்திக்கு தருமன் இறுதியில் தலைவணங்குவதும் நிகழக்கூடியதே.

தண்டபாணி துரைவேல்