Wednesday, February 18, 2015

நஞ்சின் சுவைகள் ((வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்து)



அன்பு ஜெயமோகன்,
          
    பீமன், திரெளபதி இருவருடைய நதிப்பயணத்தில் சிறுஓய்வைப் பத்தாம் அத்தியாயம் காட்சிப்படுத்தி இருந்தது. கரியநதி, நாகம், கூந்தல், விண்மீன்கள், மீன்கள், பாம்புகள், ஆந்தை, கொக்கு, ஆமை என நதிக்கும் இருளுக்கும் தொடர்புடைய பெயர்களால் அவ்வத்தியாயம் நிரம்பி வழிந்தது.

நதியின் நீர்ப்பரப்பால் சூழப்பட்ட சிறுமணல்திட்டு என்பது கிட்டத்தட்ட தனித்தீவைப்போன்றதுதான். தனித்தீவில் இருக்கும் ஒருவனால் வானத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது; இரவுப்பொழுதென்றால் வானத்திலுள்ள விண்மீன்களை. ”இரவில் தனித்திருக்கையில் விண்மீன்கள் மிக அருகே வந்துவிடுகின்றன” எனும் திரெளபதியின் மனநிலை அதை உறுதிப்படுத்தியது. ஏகாந்தமாய் தனித்திருக்கும் சமயங்களில் வானமும், பூமியும் மிக அருகே இருப்பது போன்ற சித்திரம் மனதுகுள் தானாகவே முளைத்து விடுகிறது. அச்சித்திரமே “இன்று நான் உணர்ந்த விடுதலையை என்றும் உணர்ந்ததில்லை” என்றும் பேச வைக்கிறது.

விடுதலை எனச்சொல்பவன் சிறையை அறிந்தவனாகவே இருக்க முடியும். தருமன் தன்னைச் சிந்தனைகளால் சிறைப்படுத்தி இருந்ததாகவும், பீமன் காட்சிகளால் விடுவித்தது போன்று திரெளபதியின் பேச்சு முதலில் தொனிக்கிறது. பிற்பாடே அவ்வுலகமும் பிடித்திருந்தது, இவ்வுலகமும் பிடித்திருக்கிறது என்று சொல்கிறாள். காற்றடிக்கும் திசையில் இறகு நகர்வது போல அகம் நகர்த்தும் திசைகளில் எல்லாம் அவள் அலைபாய்ந்து கொண்டிருந்த்தாகவே பட்டது. அச்சமயத்தில் திரெளபதியை பிடிகொடுக்காமல் நழுவிச்செல்லும் நாகமாகவே நான் கண்டேன். தனித்திருக்கும் பொழுதுகளில் நாம் நாகங்களாகவே மாறிவிடுகிறோமோ என்றும் தோன்றியது.

நாகத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே நஞ்சைக்குறித்த உரையாடலும் துவங்கிவிடுகிறது. நஞ்சின் சுவையைக் கசப்பு என்கிறான் பீமன். இனிப்பு என்கிறாள் திரெளபதி. “அதை நாடிச்செல்பவர்களுக்கு இனிக்கக்கூடும்” என்று பீமன சொல்ல உரையாடல் மானுடக்குருதியின் பக்கம் திரும்புகிறது. நஞ்சுக்கு புதிய மானுடக்குருதி மருந்தாவதை தான் அறிந்ததில்லை எனப் பீமன் சொல்கிறான். நாகமாக பீமனும், நஞ்சாக அவன் வலிமையும்.. நாகமாக திரெளபதியும், மருந்தாக அவள் காம்மும்.. நாகமாக பீமனும், மருந்தாக அவன் வலிமையும்.. நாகமாக திரெளபதியும், நஞ்சாக அவள் காமமும்.. நஞ்சின் அனல், அமுத்ததின் அனல், தேடலின் அனல் எனும் சுடர்களை உள்ளடக்கியதாக அவர்களின் உரையாடல் எம் மானுடக்குருதியில் புதிய அனலை மூட்டியது.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.