Tuesday, December 1, 2015

நாயக வழிபாடு (காண்டீபம் 73-74)


   

ஒரு பெரிய நாயகன் ஒருவன்  ஆற்றல் பொருந்தியவன், மிகப் பெரும் ஆளுமையை உடையவன் என இருந்தால், அவனால் பலர் கவரப்படுகிறார்கள். அவர்கள் அவன் ரசிகர்கள், தொண்டர்கள் என ஆகிறார்கள்.  அவர்கள் அவனை எந்தப் பிரதிபலனும் கருதாது நேசிப்பவர்கள். அவனுக்காக நேரம், பொருள், எல்லாம் தியாகம் செய்யத் தயங்காதவர்கள்,  அவனுக்காக சிரிப்பார்கள், அவனுக்காக அழுவார்கள், அவன் நலத்தில் மகிழ்வார்கள், அவனை எதிர்ப்பவர்களின்மேல் கோபம் கொள்வார்கள்.

ஆனால் அந்த நாயகன் எவ்வளவு மனிதாபிமானம் கொண்டவனாக இருந்தாலும் அவர்களில் தன் அருகாமையில் இருக்கும் மிகச்சிலரைத்தான்  நினைவில் வைத்திருக்க முடியும். அந்தத் தலைவன் தன் எதிரிகளை அறிந்திருப்பதில்கூட  ஆயிரத்தில் ஒரு பங்கு தன்னை நேசிப்பவர்களை அறிந்திருக்கமுடியாது.  தன் ரசிகர்களில் சிலரைத்தான் நேரில் முகங்கொடுத்து பேசியிருக்க முடியும். சிலருடன் போகிறபோக்கில் கைகொடுத்திருக்கலாம், புன்னகைத்திருக்கலாம்,  ஓரிரு வார்த்தை பேசியிருக்கலாம்.

ஆனால் அவை அந்த நாயகன்  கவனத்திலிருந்து ஒரு நொடிப்பொழுதில் மறைந்திருக்கும். அது அந்தத் நாயகனின் தவறில்லைதான். ஆனால் அந்த நொடிப்பொழுது கவனம் பெற்ற தொண்டனுக்கு, ரசிகனுக்கு,  அது பெரும் அனுபவம். அது  தன் வாழ்நாள் முழுதும் தன் மனதுக்குள் பொத்தி பொத்தி வைத்துப்பார்க்கும் புதையலாகிவிடும். அவன் இன்னும் அந்தத் தலைவன் மேல் பித்து கொண்டவனாக ஆகிவிடுவான். என்னுடைய நாயகரும் என்றாவது என்னை அணைத்து என் தோள் தட்டுவார். அல்லது அப்படி இல்லமால் போனால்கூட என்ன?  இந்த எதிர்ப்பார்ப்பையும் தாண்டி இருந்தால் அல்லவா அது உண்மையான உணர்வாக இருக்க முடியும்?
 

     இன்று நாயக வழிபாடு என்றால் நட்சத்திர நடிகர்களுக்கு மட்டும் இருப்பது எனக் கருதுவது தவறு.    அரசியல தலைவர்கள்,  விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், அறிவியல் அறிஞர்கள், துறவிகள், சாதித்தலைவர்கள்,  உள்ளூர் சமூகத்தலைவர்கள்,  போன்றவர்களுக்கும், அவர்களை நாயகர்களாகக் கொண்டு நேசிக்கும் மக்கள் இருக்கிறார்கள். சிலர் ஏதாவது ஒருமதத்தை,  தத்துவத்தை, கோட்பாட்டை, வாழ்ககைமுறையை  நேசித்து அதற்கு தொண்டர்களாக இருப்பவர்களும் உண்டு.

 ஒரு சமூகத்தீங்கை, ஒரு புலனின்பத்தை, போதைப்பொருளை நாயகர்களாக கொண்டவர்களும் மனித சமூகத்தில் இருக்கிறார்கள். என்னைப்போன்ற சிலர் யாராவது ஒரு  எழுத்தாளரை  நாயகர்களாகக் கொள்வதுண்டு.  இரமணர் அனைத்தையும் துறந்தவர் என்றாலும் அவர் அண்ணாமலையை தன் நாயகனாகக்கொண்டவர். அங்கு வந்த நாள்முதல் அவர் இறக்கும் வரை அந்த மலையைவிட்டு அவர் நகர்ந்ததேயில்லை. உடலாலும் மனதாலும் அந்த மலையை வலம் வந்துகொண்டே இருந்தார். 


   நிறைய தொண்டர்கள் தன் நாயகனை நேரில் காண்பதே அரிது. ஆகவே அவர்கள் தன் வாழ்நாளில் ஓரு தடவைக்குமேல் நாயகனை நேரில்  சந்தித்திருக்க மாட்டார்கள். அப்படி  ஒரு  தொண்டன் எப்போதாவது நாயகனை  மீண்டும் சந்திக்கும்தருணத்தில் அந்தத் தலைவன் அவனை நினைவு கூர்ந்தால் எப்படிப்பட்ட இன்ப அனுபவமாக இருக்கும் என்பதை நாம் யூகித்துப்பார்க்கலாம்.  அப்போது அவன் கிட்டத்தட்ட மூர்ச்சித்துவிடுவான்.  அந்த நேரத்தில் தன் பிறவிப்பயனையே அடைந்ததாக மகிழ்வான்.     அது அவன் வாழ்வில் மறக்கமுடியாத  மிகப்பெரும் இன்பமாக நிலைத்து இருக்கும்.

   இந்த நாயக வழிபாடு என்பது வெறும் மூடத்தனம் என்று நாம் பெரும்பாலும் புறந்தள்ளிவிடுகிறோம்.   அந்த நாயக பிம்பம் ஒரு தொண்டன் தன் ஆழ்மனதில் வணங்கும் ஒரு தெய்வத்தின் வடிவம். ஒருவேளை அந்த நாயகன் அதற்கு தகுதி இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் தொண்டர்கள் கொள்ளும் உணர்ச்சி உண்மையானது, ஆழமானது, உன்னதமானது, சுயநலமற்றது.  அந்த உயரிய உணர்ச்சியில் மூழ்கி  இருக்கும் சுபகையை வெண்முரசு விவரிக்கிறது. அர்ச்சுனனை அவள் நாயகனாக கொண்டிருக்கிறாள்.

என்றோ அவன் அவளை சத்தித்திருக்கிறான்.  அர்ச்சுனன் அவளை நினைவில் கொண்டிருக்க வேண்டும், என்றாவது நேரில் சந்திக்கையில் அவன் அவளை அடையாளம் காண வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் அற்றவள் அவள். ஆனால் அவளுக்கு அந்த வரம் கிடைக்கிறது. வெண்முரசில் அந்தத் தருணம் இவ்வாறு கூறப்படுகிறது.

நிமிர்ந்து பார்த்தபோது தொலைவில் நின்ற சுபகையை பார்த்தான். ஒரு கணம் அவன் உதடுகள் சுருங்கின. “உன் பெயர் சுபகை அல்லவா?” என்றான். சுபகை கால் தளர்ந்தவள் போல் சுவருடன் உடலை சேர்த்து நின்றபடி “ஆம்” என்று தலை அசைத்தாள். “உன்னை நினைவுறுகிறேன்” என்றான் அர்ஜுனன். அவள் தொண்டை அசைந்தது. இருமுறை உதடுகள் அசைந்தும் சொல்லெழவில்லை. பின்னர் அடைத்த குரலில் “என்னை நினைவுகூர மாட்டீர்கள் என்று நினைத்தேன்” என்றாள்.
 
அர்ச்சுனன் அவளை நினைவுகூர்ந்து அவளிடம் கனிவோடு பேசுகிறான். அவள் இனி இந்த இன்பத்தை வாழ்வின் பயனாக கொண்டு  தியானிப்பாள். ஒருவேளை அதுவே அவளுக்கு நற்கதிக்கான வழியாக அமையலாம்.
அந்த நாயகன் அர்ச்சுனனுக்கே ஒரு நாயகன் இருக்கிறான். அவன் சுபத்திரையின் நாயகனும்கூட.  வெண்முரசில்:

“அவரை சொன்னதும் உன் முகம் மலர்கிறது” என்றான். “ஆம், அதில் என்ன? ஒவ்வொரு நாளும் காலையில் அவர் முகத்தை எண்ணிக்கொண்டுதான் விழிக்கிறேன். அவர் முகத்தை நெஞ்சில் நிறுத்தியபின்புதான் துயில்கிறேன் இங்கிருந்தாலும் இல்லையென்றாலும் அவர் எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்.” அவன் “ஆம், நானும்தான்” என்றான்.
   அவன்,  கண்டவர்கள் மயங்கிடும் பேரழகன், பெரும் கவர்ச்சி வாய்ந்த நடிகன், மக்கள் தலைவன், பேராற்றல் கொண்ட வீரன், குழலூதும் கலைஞன், பிரபஞ்சத்தின் நுட்பங்கள் அறிந்த அறிஞன், முழுமைகொண்ட ஞானி, மக்கள் தெளிவு பெற கீதை போன்ற நூல்களை படைக்கும் எழுத்தாளன், சிந்தையை வசியம் பண்ணும் பேச்சாளன், ஆன்மீக வழிகாட்டி. இப்படி மக்கள் நாயகர்கள் தனித்தனியே கொள்ளும் சிறப்புகளையெல்லாம் ஒருங்கே தன்னிடம் கொண்ட அவன் நாயகர்க்கெல்லாம் நாயகன் அல்லவா?

தண்டபாணி துரைவேல்