Thursday, December 3, 2015

மாளிகைகள்



ஓரிரு நாட்களாகப் பெரியபெரிய மாளிகைகள் கனவில் வரத்தொடங்கியிருக்கின்றன. சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட முகப்பு, கல் பாவப்பட்ட சாலையில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்பது, கவிழ்க்கப்பட்ட தாமரை முகடு போன்ற மேற்கூரை, வெண்பளிங்காலான‌ தூண்கள், படிகளில் வெண்கலக் கைப்பிடிகள், நீண்ட இடைநாழி, அதில் குறடுகள் ஒலிக்க நடக்கும் ஒலி ‍‍‍‍--- இதுபோன்ற ஏதோவொன்று மீண்டும் மீண்டும் கனவுகளில் வருகிறது. பாஞ்சாலி தன் கனவை எனக்கும் கடத்திவிட்டாள் போலிருக்கிறது.

எழுந்தபிறகு இதைத்தான் சிந்தித்தேன். இதுவரை வெண்முரசில் எத்தனை எத்தனை மாளிகைகள் வருணிக்கப்பட்டிருக்கின்றன? ஒவ்வொன்றும் எவரோ ஒருவரின் கனவில் எழுந்தது. காண்டீபத்தில் மட்டும் எத்தனை? மிதக்கும் தீவில் அமைந்த மாளிகைகள், ரைவத மலையில் அமைந்த கதவில்லா மாளிகைகள், பின்பு துவாரகை, இறுதியாக இந்திரப்பிரஸ்தம், இவை தவிர நாகருலகின் சிதல்புற்று [கரையான் மாளிகைகள்?] அயோத்தியில் வணிகர் தங்கிப்பேசும் கல்மண்டபம் என எத்தனை கட்டுமானங்கள்? ஒவ்வொரு கட்டுமானத்திலும் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் முதல் வடிவநேர்த்தி வரை துல்லியமான விவரிப்பு. எந்தவொரு architect-ஆவது தன் கனவிலேனும் இத்தனை மாளிகைகளை இத்தனை விதங்களில் எழுப்பியிருப்பாரா?

கம்பராமாயணத்தில் (அயோத்தியா காண்டம் சித்திரகூடப்படலத்தில்) இலக்குவன் பர்ணசாலை அமைக்கும் காட்சி நான்கு பாடல்களில் விவரிக்கப்பட்டிருக்கும். அடித்தளம் அமைப்பதுமுதல் மயிற்பீலிகள் கொண்டு அழகுபடுத்துதல்வரை இலக்குவன் காட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே அந்தப் பர்ணசாலையைக் கட்டிமுடிப்பதைக் கம்பர் வருணித்திருப்பார். அதை விழிகள் விரிய வியப்போடு வாசித்தது நினைவுக்கு வருகிறது. இதைவைத்து "கம்பர் ஒரு கட்டுமானப் பொறியாளர்" என்று கட்டுரை எழுதலாமா என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆசானைப் பற்றியும் அத்தகைய கட்டுரைகள் பின்பு எழுதப்படுமோ?

திருமூலநாதன்