அறிவினான்
ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல்
போற்றாக் கடை-என்கிறார் வள்ளுவர். இந்தக்குறள் அறிவு இருப்பவர்களுக்கு உரைக்கப்பட்டது.
பிறவுயிர்களின் துன்பத்தை தன் துன்பம்போல் அறியமுடியாவிட்டால் அறிவு இருந்தும் அறிவினால்
ஆகுவது எதுவும் இல்லை.
அறிவே
இல்லாதவன் எப்படி இருப்பான் என்பதை கீர்மிகன் வழியாக காட்டி மானிடவகைகளை கண்முன் நிறுத்துகின்றீர்கள்
ஜெ. அற்புதம்.
ஏன் இவர்கள்
இப்படி இருக்கிறார்கள்?. கீழ்மையை மட்டும் சுவைக்கும் சுகம் எப்படி இவர்களுக்கு உள்ளது.
தந்நோய் அறியும் சக்தியற்றவர்கள். தந்நோய்கூட அறியும் சக்தியற்றவர்களுக்கு பிறிதின்நோய்
எப்படி அறியமுடியும். நீங்கள் சொல்வதுபோல் கற்பனை செய்யமுடியாத மனிதர்கள் அவர்கள்.
அவர்கள் மனிதவடிவில் இருக்கும் ஆயுதங்கள் மட்டும்.
அவர்களை பயன்படுத்தும் மனிதர்களால் அவர்கள் கருவிகள் ஆகமுடியாமல் கொலைக்கலங்களாக மட்டும்
ஆக்கப்பட்டவர்கள். அவர்கள் மரத்தையும் மனிதனையும் ஒரே மாதரியாகப்பிளப்பார்கள். நகைப்பார்கள்.
கல்மனிதர்கள்.
//அவனைப்போன்றவர்கள் கற்பனைசெய்ய முடியாதவர்கள். ஆகவே அவர்களுக்கு அச்சம் வளர்ந்து பெருகுவதன் பெருவலி இல்லை. கழுவிலேற்றப்படுவான் என்றால்கூட அந்தத் தருணத்தின் விலங்குத்துயரம் மட்டுமே. அவன் முற்றிலும் வெல்லப்படமுடியாதவன்போல் தோன்றினான். வடிவற்ற அசைவற்ற பாறை.//
அறிவிலார் தாந்தம்மைப் பீழைக்கும் பீழை
செறுவார்க்கும்
செய்தல் அரிது-என்கிறார் வள்ளுவர். என்ன ஒரு திருக்குறள் என்று அசந்து
நின்றுவிட்டேன். அந்த குறளுக்கான விளக்கம் இன்று கிடைத்தது.
அறிவில்லாதவன்
தனக்குத்தானே செய்துக்கொள்ளும் துன்பம்
எதிரிக்கும் செய்யமுடியாத அளவினதாகும் என்னும்போது, அவன் மற்றவர்க்கும்
செய்யும் துன்பம்
எத்தனை கொடுமையாக இருக்கும். இவனை வேலையாளாக வைத்திருக்கும் துச்சாதன்
எத்தனை பெரியகொடியவன். கீர்மிகன் செயல்களுக்கு பின்னால் எதுவுமே
நடக்கவில்லை என்பதுபோல் நடந்துக்கொள்ளும் பாண்டவர்களை்பபார்க்கும்போதுதா ன் இந்த குறள் அறையும் வலி உள்ளத்தில் இசைக்கிறது. கௌரவர்கள் தங்களுக்கு தாங்களே செய்துக்கொள்ளும் பீழை எத்தனை கொடியது.
கீர்மிகனைப்பற்றிச்சொல்லிக்கொண் டே வந்த சௌனகர் பீமனைப்பற்றி
நினைக்கும் இடத்தில்தான் பீமனின் உயரம் புரிகிறது. மனிதர்களின் வடிவங்கள் அர்த்தப்படுகிறது.
//பீமன் ஆயிரத்தவனை அறையக்கூடும் என்ற எண்ணம் சௌனகர் உள்ளத்தில் எழுந்தது. ஆனால் அவன் இயல்பாகத் திரும்பி உள்ளே சென்றபோதுதான் ஒருபோதும் களத்தில் நிகர்வல்லமை கொண்டவர்களை அல்லாது பிறரை பீமன் அடித்ததில்லை என்று நினைத்துக்கொண்டார். மறுகணமே அந்த எளிய காவலர்தலைவனை அவன் மறந்துவிடக்கூடும்//
அறிவினான்
ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல்
போற்றாக் கடை-இந்தக்குறள் பாண்டவர்களுக்கானது என்பது பாண்டவர்களுக்கு தெரியும்.
அன்புடன்
ராமராஜன்
மாணிக்கவேல்.