Monday, January 1, 2018

அழிக்கமுடியாத அறப்பிழை (குருதிச்சாரல்- 6)



 திரௌபதி தான் கொண்டிருந்த வஞ்சினத்தை விட்டுவிட்டதாக கூறுகிறாள். தருமன் போரின் பேரழிவைக்  கருத்தில்கொண்டு நாட்டை மீட்கும் தன் எண்ணதை கைவிடுவதை ஏற்றுக்கொள்கிறார்.     அப்படியிருப்பின் போர் எதற்காக என தேவிகை வினவுகிறாள்.  அதற்கான    சகாதேவனின் பதில் சமூக நிறிஒன்றை ந்மக்கு உணர்த்துவதாக  இருக்கிறது.   இப்போர் திரௌபதியின் வஞ்சத்தைத் தீர்ப்பதற்கோ அல்லது தருமன் தன் நாட்டை மீட்டுக்கொள்ளவோ நடக்கவேண்டியதில்லை. அது நடக்க இருப்பது நடந்த ஒரு அறப்பிழையை  மனிதம் எதிர்க்கிறது என்பதற்கான வெளிப்பாடு.    அநீதி இழைத்தவரின் அறப்பழி என்றும் மறையாதிருக்கும்.   உலகில் தோன்றிய உயர்ந்த அறச்சன்றோருக்கு இணையாக அறப்பழி கொண்டவரின் பெயரும் உலகில் நிலைத்து நிற்கிறது. ஏனென்றால ஒரு அறப்பிழை என்பது தனி  மனிதனுக்கு அல்லது ஒரு குழுவிற்கு மட்டும் எற்படுத்தப்பட்ட பாதிப்பு அல்ல. அது சமூக கட்டமைப்புக்கு  ஏற்பட்ட பாதிப்பு.  சமூகம் எப்போதும் இருந்துகொண்டிருப்பது.   ஆகவே சமூகத்தின் ஒரு ஆறாக் காயமென அந்த அறப்பிழை இருந்துகொண்டு இருக்கும்.   இப்படி அறப் பிழையை ஏற்படுத்திய மனிதர்கள் புராணங்களில்,  வரலாறில்,  எதிர் நாயகர்களாக  நிலைத்த இடம் பெற்றிருக்கிறார்கள்.   அறப் பிழைக்கான தண்டனை கிடைக்காது போன ஒவ்வொரு நிகழ்வை எண்ணி சமூகம் எப்போதும் தலை குனிகிறது.  அல்லது அந்த அறப்பிழையாற்றியவரின் சந்ததியினர் அந்தப் பழியை தம்மிடமிருந்து தவிர்க்கமுடியாமல் தவிக்கிறார்கள். 


         தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருவர் பொறுத்துக்கொள்ளலாம்.  அவர்  அந்த அநீதி இழைத்தவரை மன்னித்து தண்டிக்காமல்கூட விட்டுவிடலாம். இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒருவர் கொண்ட வஞ்சம் மறந்துபோகலாம். உடலிலும் உள்ளத்திலும் பெறப்பட்ட காயங்கள் ஆறிப்போகலாம். காலப்போக்கில் அதன் வடுக்கள்கூட மாறிப்போகலாம்.அப்படி திரௌபதியின் வஞ்சம் அவளைவிட்டு நீங்கி விட்டது.   துரியோதனன் மேல் கொண்டிருந்த தன் வஞ்சம் முழுமையும் அழிந்துவிட்டது என்று திரௌபதி கூறுகிறாள். அதனால் அவள் துரியோதனனை தண்டிக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனக் கூறுகிறாள்.  அதற்கு சகாதேவனின் பதில் முக்கியமாகிறது.   மேலும் சகாதேவனின் கூற்று  என்பது எப்போதும்  வாய்மையின் கூற்றாக  இருப்பது.



“மூத்தவரே, அங்கே அவையில் நிகழ்ந்தது ஓர் நெறியழிவு. அந்த வஞ்சினம் மானுடரில் தெய்வமிறங்கி வந்து உரைப்பது. அதில் ஒரு நிறைவு இருந்தது. இன்று அரசி அதை கைவிடுகையில் அம்முழுமை அழிகிறது. அந்த நெறியழிதலுக்கு அளிக்கப்படும் ஒப்புதல் அது” என்றான் சகதேவன். “ஒவ்வொரு பிழையும் தண்டிக்கப்படவேண்டும். தண்டிக்கப்படாத பிழை என்பது மீண்டும் முளைத்தெழுந்து ஒன்றுநூறு ஆயிரமென தழைக்கும். நெறிநூல்கள் மீண்டும் மீண்டும் சொல்வது அதையே.”


நடந்த நெறியழிவு அரசவையில் நடந்தது. இது தவறு என்றும் பெரும் பிழை என்றும் உலகின் கண் முன்னே நிறுவப்பட்டாக வேண்டும்.  இது தனிப்பட்ட திரௌபதிக்கு மட்டும் இழக்கப்பட்ட அநீதியல்ல. மனித குலத்திற்கு எதிரான செயல்.  ஆகையால்  திரௌபதியின் மற்றும் பாண்டவர்களின் மன்னிப்பு சமூக அறத்திற்கு இழைக்கப்பட்ட  பிழையை இல்லையென்று ஆக்கிவிடாது.  அது சமூகத்தில் ஒரு ஆறாத புண்ணென இருக்கும்.  மேலும் அது புற்றுநோயென சமூகம் முழுக்கப் பரவி பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறான்.  ஒரு மனிதனை அடிமையாக வைத்திருப்பது என்பது முதலில் ஒரு குற்றமாகத்தான் எங்கோ ஒரு இடத்தில் முதலில் தோன்றியிருக்கும். அப்பபோதே அது வன்மையாக கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி கண்டிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வே உலகமெங்கும் பரவி நூறு ஆண்டுகள் முன்புவரை அது சமூகத்தில்  ஒரு புற்றுநோயென  இருந்து வந்தது.    அதைப்போன்றே மனிதர்களில் பிறப்பின் காரணமாக நிலவும் உயர்வு தாழ்வுகள் எல்லாம் முதன் முதலில் எங்கோ நடந்த குற்றமென தோன்றி சமூகம் தண்டிக்காமல் விடப்பட்டவை. அவை  இப்போது  தீண்டாமை சாதிக்கொடுமைகள் என வளர்ந்து இருக்கிறது.  அதிலிருந்து இன்னும் முழுமையாக நம் இந்திய சமூகத்தால் வெளிவரமுடியவில்லை.   அதே நேரத்தில்    ஹிட்லர் ஒரு இன மக்களை அழித்தொழிப்பதை மேற்கொண்டபோது அதை உலகம் மிகக் கடுமையாக எதிர்த்தது.  ஹிட்லரின் பெயர் என்றும் தீராப்பழியுடன் உலகம் இருக்கும்வரை நிலைத்திருக்கும்.   அதன் காரணமாக ஒரு இனத்தைப்  பழி சொல்லி  அழிப்பது பெரும்பான்மையான மக்கள் சமூகம் தவறென நினைக்கிறது. 



     ஒருவன் செய்த அறப்பிழையை சமூகத்தின் பார்வைக்கு   கொண்டுவரவேண்டும். அவன் தண்டிக்கப்பட்டால்தான் அது அறப்பிழை என்று சமூகத்தில் உள்ளத்தில் நிறுவப்படும்.  அதுவும் பலர் அறிய நடந்த பிழை,  பொதுவிடத்தில் நடந்த பிழை, அரசின் கண்முன்னே நடந்த பிழை,  போன்றவை கண்டிக்கப்படுதலும் அதற்குரியவர்கள்  தண்டிக்கப்படுவதும்  மிக முக்கியமானது.  திரௌபதி அவமதிப்பு பலர் அறிய பொதுவிடத்தில், அரசின் கண்முன்னே நடந்தது.  ஒரு பெண் பேரரசியென இருந்தாலும் அவளை அவமதித்துவிட முடியும்  என்பது  சமூகத்தின் மனநிலையில் ஒரு பெரும் தவறெண்ணத்தை உருவாக்கும். 



“அரசி, அவைநடுவே பெண்ணை சிறுமைசெய்தல் எளிதாகக் கடந்துசெல்லப்பட்டதென்றால் இந்நிலத்தில் வேறு எதுதான் பிழையெனக் கொள்ளப்படும்? அரசி, நாம் அரசர்கள். எப்போதும் இன்றும் நாளையும் எதிர்காலம் முழுக்கவும் நிறைந்திருக்கும் பெருந்திரள் முன் நின்றிருக்கிறோம். நாம் செய்வன அனைத்தும் முன்நிகழ்வுகள், வழிகாட்டல்கள். எண்ணிப்பார், நாளை பிறிதொரு சிறுபிழைக்காக ஒருவனை அரசனின் கோல் தண்டிக்குமென்றால் அவன் கேட்கமாட்டானா, அவைநடுவே பெண்ணை ஆடைகளைதலைவிடவா பெரிய பிழையை நான் செய்துவிட்டேன் என்று?”
குற்றம் யார் செய்தார்கள் என்பது முக்கியமல்ல.  குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் யார் என்பதும் முக்கியமல்ல.  சமூக நெறிமீறல் நடந்ததா, மனித அறம் பிழைக்கப்பட்டதுள்ளதா என்பதே முக்கியம்.  சமூக நெறி என்பது உலகின் அனைத்து மனிதர்களை அணுக்களாகக் கொண்டிருக்கும் விராட புருஷனுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊறு ஆகும்  சகதேவன் கூறுகிறான். 


“குற்றம் குற்றமேதான், எச்சொல்லால் சொல்லப்பட்டாலும் எங்கு நின்று நோக்கினாலும் எதைக்கொண்டு நிகர்செய்தாலும். அது பருப்பொருட்களைப் போன்று நாமில்லை என்றாலும் நின்றிருப்பது” என்றான் சகதேவன். “தேவி, நெறிநூல்கள் சொல்லும் முதல் வரி ஒன்றே. குற்றமென்பது அதனால் பாதிக்கபட்டவருக்கு எதிரானது அல்ல. மானுடருக்கு எதிரானதும் அல்ல. விராடவடிவென நம்மைச் சூழ்ந்திருக்கும் பேரியற்கைக்கு எதிரானதுகூட அல்ல. இங்கே வாழ்வையும், வானில் அறிவையும், கடுவெளியில் அறியமுடியாமையையும் நிரப்பிவைத்திருக்கும் முதல்முழுமைக்கு எதிரானது.”
  தனிப்பட்ட முறையில் ஒருவர் தனக்கு இழக்கப்பட்ட அநீதியை மன்னித்து விடுவது அவர் சம்பத்தப்பட்டது. ஆனால் சமூகம் எக்காரணம் கொண்டும் யாரையும் மன்னிக்க முடியாது.  மன்னிக்கக் கூடாது.  இரக்கம் என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்டது. ஆனால் சமூகம்  குற்றம் புரிந்த ஒருவனிடம்  இரக்கம் காட்டக்கூடாது என்று சகாதேவன் கூறுகிறான்.  



“எனவேதான் குற்றம் பொறுக்க எவருக்கும் உரிமை இல்லை என்று நூல்கள் சொல்கின்றன. தெய்வங்கள்கூட குற்றத்தைப் பொறுத்தருளியதாக நம் தொல்கதைகள் சொல்லவில்லை. ஒருவருக்கு ஒன்றின்பொருட்டு தண்டனை விலக்கப்படுமென்றால் தண்டிக்கப்பட்ட அனைவருமே நெறிமறுக்கப்பட்டவர்களாகிறார்கள்.” தேவிகை “அப்படியென்றால் இரக்கத்திற்கு இப்புவியில் இடமே இல்லையா?” என்றாள். “உண்டு. தனிமனித உறவுகளில். இது உறவுக்குள் நிகழவில்லை, அவையில் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரம் பல்லாயிரம் பேரால் அறியப்பட்டிருக்கிறது.



    ஆணும் பெண்ணும் நிகரென்று சொல்கிறோம்.   அதே நேரத்தில் ஆணுக்கு மட்டுமென்று,  பெண்ணுக்கு மட்டுமென்று தனித்த சில சிறப்புகள், தனித்த சில சலுகைகள்,  தனித்த சில பெருமைகளை சமூகம் அவ்வப்போது கொண்டிருக்கிறது.  இது  சரி தவறு  என்பது அந்தந்த காலத்தின் நெறிகளுக்கேற்ப இனங்களுக்கு ஏற்ப மாறும்.  பெண் இழிவு செய்யப்படுதல் என்பது எந்த ஒரு சமூகத்திலும்  எக்காலத்திலும் ஒரு பெரிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது.  ஆகவே எதிரியை இழிவு செய்ய நினைப்பவர்கள் எதிரியைச் சார்ந்த பெண்களை இழிவு செய்வது எங்கும் நிகழ்கிறது.  ஆகவே ஒரு பெண் இழிவு என்பது கொலைக்குற்றத்திற்கு ஈடாக அல்லது அதற்கும் பெரிதாக  பார்க்கப்படுகிறது.  திரௌபதிதான் என இல்லாமல் வேறு எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் இது அதேயளவு பெருங்குற்றம்தான்.  திரௌபதி போன்ற பேரரசியை வஞ்சம் தீர்க்க ஒன்று போரில் தோற்கடித்து சிறைபிடித்திருக்கலாம்.  மரண தண்டனைக்கு உட்படுத்தியிருக்கலாம். அது இருவரின் தனிப்பட்ட விரோதத்தில் விளைந்தது என்று ஆகிவிட்டிருக்கும்.   ஆனால் திரௌபதியை வஞ்சம் தீர்க்க அவள் பெண்மையை இழிவு செய்ய முயன்றது ஒரு பெருங்குற்றமென ஆகிவிடுகிறது.  இதற்கான விலையை துரியோதனன் கொடுத்தே ஆகவேண்டும். துரியோதனன் மற்றபடி  பேருள்ளம் கொண்டவனாக இருக்கலாம்.  சிறந்த மன்னனாக இருக்கலாம்.   ஆனால் இது எதுவும் அவன் குற்றத்தின் அளவை குறைத்துவிடுவதில்லை. மேலும் பேரரசனென பெரும் வீரனென இருந்த அவனின் பேருரு அவன் குற்றத்தின் வீரியத்தை இன்னும் பெரிதாக்குகிறது.    அந்நிகழ்வை நிகழ்வதை  தடுக்க முற்படாத, எதிர்த்து நிற்காத அனைவரும் அதில் குற்றமிழைத்தவர்கள் என  ஆகிறார்கள்.   அன்று அவையில் எழுந்த வஞ்சினம்  திரௌபதியின்பொருட்டுமட்டுமல்ல.  அது மனித  சமூகத்தின் பொருட்ட்டாகவும்தான்.   அந்த வஞ்சினத்தை நிறைவேற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடமையென்று ஆகிறது.  



“அன்று நிகழ்ந்தது என்ன என்று நீங்கள் முழுதறியவில்லை, தேவி. ஒவ்வொரு நிகழ்வும் ஒன்று ஓராயிரமென உள்ளங்களில் எழுகின்றன. ஆகவே நிகழ்வை அவை கொள்ளும் விரிவையும் கருத்தில்கொண்டே அணுகவேண்டும். அன்று நீங்கள் ஓர் அரசி என அவைநடுவே சிறுமைகொள்ளவில்லை, அங்கு நின்றவள் பெண். இங்கே இல்லந்தோறும் பெண் இருக்கிறாள். அவளை இழித்துநடத்தும் கீழ்மக்களும் இருக்கிறார்கள். அன்றுரைத்த வஞ்சினம் அவர்கள் அனைவருக்கும் எதிராகவே. கைகட்டி அமர்ந்திருந்த மூத்தோரும் கற்றோரும்கூட அதற்கு ஈடு அளித்தாகவேண்டும்.” “நாளை ஒருவன் பெண்ணை சிறுமைசெய்ய கையெடுத்தான் என்றால் அந்தக் கை அச்சத்தில் குளிர்ந்தமைய வேண்டாமா? அவன் கால்கள் கல்லாக வேண்டாமா? பெண்சிறுமைசெய்வதென்றால் என்ன விளைவென்று பாரதம் அறியவேண்டும். துலாவின் இத்தட்டில் வைக்கப்பட்டது குலமகளின் விழிநீர் என்றால் மறுதட்டில் நூறாயிரம் தலைகள் வைக்கப்பட்டு அது நிகர் செய்யப்படட்டும். அரசி பொறுத்தருளலாம், அவள் அன்னை. நாங்கள் பொறுத்துக்கொள்ளமுடியாது. நாங்கள் இங்கு அவள் மைந்தரின் தந்தையென நின்றிருக்கிறோம்” என்றான் சகதேவன்.



    வஞ்சம் கொள்ளுதலும் அதன்பொருட்டு பழிவாங்க நினைப்பதும் தவறு  என்று நமக்கு பொதுவாக கூறப்படுகிறது. ஆனால்  சமூகம் குற்றம் செய்யும் ஒருவனை தடுப்பதும் அவனை சமூக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெறச்செய்வதும் அந்த அநீதிக்கு பழிவாங்குதல்தான் அல்லவா.  இழைக்கப்பட அநீதிக்கு பழிவாங்கும் உரிமை ஒருவனுக்கு இருப்பது என்பது அவன் சமூகத்தின் பொருட்டு அநீதிக்கு தண்டனையளிக்கிறான் என்பதனால்தான்.  உண்மையில் சொல்லப்போனால அவன்பொருட்டு சமூகமே அக்குற்றம் செய்தவனை பழிவாங்கவேண்டும். அவ்வாறு சமூகம் செய்யத்தவறியதை ஒருவன் செய்யும்போது அவனைத் தண்டிப்பதற்கான தார்மீக உரிமையை சமூகம் இழந்துவிடுகிறது.   



“பழிவாங்குதல் குறித்து சொல்கிறீர்கள்” என்றாள் தேவிகை சலிப்புடன். “ஆண்களின் உள்ளம் அதிலிருந்து விலகவே முடியாதா என்ன?” சகதேவன் “பழிவாங்குதல் என்றால் இழிவா என்ன? நெறியின் வரலாற்றை அறிந்தோர் அதை சொல்லமாட்டார்கள். விலங்குகள் பழி வாங்குவதில்லை. ஏனென்றால் அவை ஒன்றுடனொன்று இயற்கையின் நெறியாலன்றி எந்த அறத்தாலும் கட்டுண்டிருக்கவில்லை. மானுடன் தனக்கென அறத்தை உருவாக்கி அதற்கு ஒப்புக்கொண்டதனால்தான் பழிவாங்குகிறான். தன் குருதியினனுக்காக, தன் குலத்தோனுக்காக பழிவாங்க வஞ்சினம் உரைப்பவன் முன்வைப்பது எதை? வஞ்சமெனும் கீழ்மையை அல்ல. அவன் கொண்டிருக்கும் அறப்பற்று எனும் மேன்மையை. அவன் தன் நலத்திற்காக வாளேந்தவில்லை, தன்னை ஆளும் பெருநெறி ஒன்றுக்காகவே தன்னை அழிக்கவும் சித்தமாகிறான்” என்றான்.
“அரசி, மானுடத்தில் நீதி என்பது பழிவாங்குதல் வழியாகவே நிலைகொண்டது என்று உணர்க! இன்று நீதி என்றும் நெறி என்றும் அறம் என்றும் நாம் எதைப் பேசினாலும் ஆழத்தில் உறைவது பழிக்குப்பழி என்னும் முறையே. பழிதீர்ப்பதை தன்னிடமிருந்து தன் குலத்திற்கு அளிக்கிறான் மானுடன். குலம் அதை அரசனுக்கு அளிக்கிறது. அறத்தில் கனிந்தோர் அதை தெய்வத்திற்கு அளித்து அகல்கிறார்கள். வேறுபாடு அவ்வளவே. நீதி என்பது பாகுபாடில்லாமல், நலம்நாடிச் செய்யப்படும் பழிவாங்குதல்” என்றான் சகதேவன்.

          


சிலர் சிறைச்சாலை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடம் என்று கூறுகிறார்கள். அது அவ்வாறல்ல. அங்கு வருபவர்கள் தம் குற்றத்துக்கான தண்டனையாக வருபவர்கள். சிறைவாழ்வு என்பது முதன்மையாக தண்டனைதான்.  குற்றம்புரிந்தவன் உடன் மனம் வருந்தி திருந்திகூட இருக்கலாம்.  திருந்தியவனுக்கு  தண்டனை எதற்கு எனக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசுக்கோ, நீதிபதிக்கோ, அநீதியால் பாதிக்கப்பட்டவர்க்கோ அல்லது மனித சமூகத்திற்கோ யவருக்கும்  அவனுக்கு மன்னிப்பு அளிக்க உரிமையில்லை.  ஆகவே துரியொதனன் செய்த அநீதிக்கு அவன் தண்டிக்கப்படவேண்டியவனாகவே இருக்கிறான். வெண்முரசில்  சகதேவனின் இந்தக் உரை இன்றைய சமூகத்திற்கு அதன் கடமை ஒன்றை மீண்டும் நினைவுறுத்தி உறுதிபடுத்துவதாக உள்ளது.

தண்டபாணி துரைவேல்