Thursday, January 4, 2018

வெறும் முதியவர்



குருதிச் சாரல் ஒவ்வொரு அத்தியாயமும் உச்சத்திலேயே இருக்கிறது. உச்சத்திலிருந்து உச்சத்திற்கு என்று செல்கிறது. மொத்த பாரதமும் கூர் கொள்ளும் முனையாக இருப்பதால் இருக்கலாம்.

சங்குலன் உடலுக்கு என்ன செய்தானோ அதை உயிருக்கு செய்திருக்கிறாள் பிரகதி. அது வரை தன் மீதான குற்ற உணர்ச்சியால் தன் பெருமைக்கு உண்டான இழிவால் என தன்னை பெரு ஆணாக மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த திருதாவுக்கு பெருவெளியில் தந்தையென நிற்கும் தருணத்தைக் காட்டுகிறாள் பிரகதி. அதன் பின் அவர் வெறும் தந்தை மட்டுமே. அப்படி மீட்டுக் கொண்டு வருவதற்கு மட்டும் ஒரு வழி இருந்தால் பிதாமகரே கூட மீட்படைந்திருப்பார். அவருக்கு இசையுமில்லை, பிரகதியுமில்லை. அதுவே அன்பில்லாமையில், தன்னை ஆணென்றும், வரலாற்று நாயகெனென்றும் மட்டுமே வைத்து விட்டது. 

காந்தாரியரிடம் அவர் முன் வைத்த திருதா, ஆணென்று மட்டுமே ஆனவர், பிரகதியிடம் மட்டுமே காட்டிய ஒன்றின் எஞ்சிய மறு பாதி, அதை அழித்தே அவர் பெரும் தந்தை என்றாகிறார். அது இல்லாமல் வெறும் முதியவர் என நிற்பதை சொல்ல நேர்ந்தால் அவருக்கென்று அங்கு ஏதும் எஞ்சாது என்பதால் கூட தன் தூதை காந்தாரியிடம் சொல்ல வேண்டாம் என்றிருக்கலாம். கௌரவரை எந்தக் காரணத்தால் மனைவியர் வெறுக்கிறார்களோ அதுவாகவே மட்டும் தன்னை முன் வைப்பது என்று அவர் கருதியிருக்கக் கூடும். 

அதை எப்படி பானுமதி உணர்ந்தாள் என்று யோசித்தால்… இத்தனை உளவியல் நுட்பங்கள் பீதியை உண்டாக்குகின்றன.


ஏ.வி.மணிகண்டன்