Thursday, October 25, 2018

களமெழுத்து



அன்புள்ள ஜெ,

                                                                                                                                                                                                                                         

வெண்முரசின் சிறப்பம்சங்களுள் ஒன்று ஒரு பெருஞ்செயல் நிகழ்ந்து கொண்டிருக்கையிலேயே அதை நிகழ்த்துபவரின் அகம் விலகி இருந்து அனுபவிக்கும், அறிந்து கொள்ளும், உணர்ந்து திகைக்கும், ஆகி அமையும் அறிதல்களையும், அதை நிகழ்த்தும் சொற்பெருக்கையும் விரிவாக எடுத்துச் சொல்லும் பகுதிகள். பன்னிரு படைக்களத்தில் விகர்ணனின் அகத்தின் வாயிலாக அங்கே நிகழ்ந்தேறிய நிகழ்வுகளின் வீச்சை நமக்குக் கடத்திய அதே மொழிபு, திசை தேர் வெள்ளத்தில் விஸ்வரூபம் கொண்டு நின்றிருக்கிறது. அதன் மிகச்சிறந்த வடிவாக இன்றைய (44 ஆம் அத்தியாயம்) பகுதியில் வரும் சகுனியின் அக வெளிப்பாடுகளைச் சொல்லலாம். சகுனியுடன் இணைத்து பேசப்படும் ஒரு படிமம் பசித்து தனித்தலையும் பாலைவன ஓநாய். இன்றைய அத்தியாயம் அந்த படிமத்தை முழுமை செய்துள்ளது. குறிப்பாக இதன் இறுதி இரு பத்திகள். உண்டு நிறைந்த ஓர் ஓநாய், அந்த நிறைவைக் கொண்டாட தன்னைத் தானே சுற்றி சுற்றி நடமிட, அந்த விசையாலேயே தூக்கி எறியப்பட வெறி கொண்டு பாலை மணலைக் கீறி கீறி எழுதிய ஒரு களமெழுத்து ஓவியம்!!! களமெழுத்து ஓவியம் என்பது மிக நுணுக்கமாக பல மணிநேரங்கள் செலவழித்து பலர் அமர்ந்து வரையும் ஓர் ஓவியம். பெரும்பாலும் ஒரு தெய்வ வடிவம். அதன் முழுமையின் இறுதியில் ஆட்டன், பூசகன், ஆட்டத்தி என ஒருவர் எழுந்து அதை முழுமையாகவே கமுகு அல்லது தென்னம்பாளையாலோ, கூந்தலாலோ அழித்து முடிப்பர். இதற்கிணையான ஒன்றை திபெத்திய பௌத்த மரபில் லாமாக்களும் செய்கிறார்கள். அவர்கள் நாட்கணக்கில், வாரக்கணக்கில் வரைவர். மணல் மண்டலங்கள் என்றழைக்கப்படும் இவையும் முழுமை பெற்ற பிறகு உருவாக்கப்பட்டமைக்கும் இணையான சடங்குகள் வழியாக முற்றிலுமாகக் கலைக்கப்படும். இம்மண்டலங்கள் அருவமான பொருளைச் சுட்டுபவை, கோலங்கள் போல.



சகுனி ஓநாயின் அந்த கீறல்களால் உருவாக்கப் பட்ட வடிவை, அதன் ஊளையிடும் ஓசையின் காட்சி வடிவாகக் காண்கிறார். அதாவது அந்த காட்சி முன்பே எழுதப் பட்டு விட்டது. ஊளை அதன் பிறகே துவங்குகிறது. சகுனியின் வாழ்வை ஒட்டுமொத்தமாக சுட்டி நிற்கும் வரிகள் என கடைசி இரு பத்திகளையும் சந்தேகமின்றி கூறலாம். உண்டு நிறைந்த ஒரு ஓநாயென, வணிகம் கொணர்ந்த அளப்பரிய செல்வத்தின் அதிகார, ஆணவத்தில் மகதத்திற்கு மணத்தூது விட்ட சகுனியே நமக்கு முதலில் அறிமுகமாகிறார், மழைப்பாடலில். அந்த அதிகாரப் போட்டியின் சுழல் அவரைச் சுழற்றி வீசுகிறது, அவமானப் படுத்துகிறது. அதில் வெறிகொண்டவர் அமைத்து ஆடிய நாற்களம் அவரே எழுதிய களமெழுத்து ஓவியம் தான். இதோ இன்று கண்முன் நிகழும் போரென்ற கொலைவெறியாட்டை, போரின் ஓலமென ஒலிக்கும் ஊளையை முன்பே கரவாக பன்னிரு படைக்களத்தில் நிகழ்த்தியவர் அவரே. அங்கு எழுந்த ஓவியம் இங்கு, இக்குருஷேத்ரத்தில் வெறியாட்டெழுந்த பூசகனால், அவிழ்த்து முடியப்படாமல் காத்திருந்த ஒரு கூந்தலாளால் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருப்பவரும் அவரே. பகடையைத் தூக்கி அடுமனைத் தீயில் இடுகையில் அவர் உணர்ந்த ஒன்று உண்டு, அப்பகடைகளில் அவர் உடலும், கைகளும் அறிந்த ஒன்று பன்னிரு படைக்கள நிகழ்வுக்குப் பின்னர் விலகிவிட்டிருந்தது. அன்று அப்பகடைகள் எரிகையில் அவர் உணர்ந்த சிதை மணத்தை இன்று அவர் கணந்தோறும் முகர்ந்து கொண்டிருக்கிறார். அவ்வாடலைத் துவக்கி ஆடத் துவங்குகையிலேயே அதன் எந்த எல்லை வரைக்கும் செல்லத் தயாராகத் தான் அவர் இருந்தார். ஆயினும் அந்த எல்லை என்பது கரு வடிவில் சிறுத்து இருந்த வரையில் அதை ஒரு எளிய ஒன்றாகவே அறிந்திருந்தார். இப்போது உண்மையிலேயே அந்த எல்லையைக் கண்முன் காண்கையில் இதுவா அது, இதையா நாம் நாடினோம், இதற்காகவா இவ்வாடல் என்ற அதிர்ச்சி, அதன் பிறகு உறைக்கும் நிதர்சனத்தின் உண்மை, தானென்று நினைத்திருந்தவையின் பரு வடிவத்தின் கோரம், அறிந்தவை எவையாயினும் அதன் கரு வடிவுக்கும், பரு வடிவுக்குமான முகத்திலறையும் வேறுபாடு, அவை தனக்குள் எழுப்பும் கேள்விகள், பதில்கள், அறிதல்கள், அது தரும் சோர்வு, பின்பு அதைக் கடந்து அறிந்து அமைவது என அவரது அகம் செல்லும் பாதைகளை விரிவாகக் காட்டுகிறது இந்த அத்தியாயம்.



சொல்லப் போனால் பாரதக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தாம் எனக் கருதிக் கொண்ட ஒன்றை, தமது வஞ்சமாக, இலக்காக, வாழ்நாள் தவமாக, தன்னறமாகக் கொண்ட ஒன்றின் உண்மையான முகத்தைக் காண்கையில் கொள்ளும் திகைப்பும், அதிலிருந்து மீள்வதுமே இந்த நாவலின் மையம் எனலாம். மற்றொரு மிகச் சிறந்த உதாரணம் சாத்யகி. இளைய யாதவருக்கு தானும், தன் குருதி வரிசையும் தொழும்பர்களாக இருப்போம் என உறுதி எடுத்த அவன் அந்த பூரண சமர்ப்பணத்தின் எல்லையை, உண்மையை தன் மைந்தர்கள் மரணத்தில் அறிகிறான். ஒரு கணம் அவனில் தோன்றும் வஞ்சம் இளைய யாதவரை நோக்கிக் குறி வைக்கிறது. அன்று இரவு அவன் கொண்ட உலைதல்கள் அனைத்துமே அவனது இந்த அறிதலால் தான். தானே தன் மைந்தர்களின் மரணத்திற்குக் காரணம் என்ற அறிதல் ஒரு தந்தையை எப்படி அலைகழிக்கும்!! அதை அணு அணுவாக, தன் உடலின் கணு கணுவாக தழலாடும் அனலென நின்றெரிந்து உணரும் அவன் அதைக் கடந்து மீண்டும் பூரண சரணாகதி என்பதின் முழுப் பொருளையும் உணர்ந்து மீண்டும் இளைய  யாதவர் முன் அவரிடம் ஆணை பெற வருகிறான். அது வரை படைத் தலைமையின் ஆணையை நிறைவேற்றிய ஒருவனாக வந்த அவன், இப்போது மீண்டும் தன்னிலை உணர்ந்து இளைய யாதவருக்கு தன்னை பூரண சரணாகதி அளித்த ஒருவனாக, தொழும்பனாக அவரது ஆணை ஏற்க வருகிறான்.



இதோ பீஷ்மரும் அந்த உண்மையை எட்டு விதமாக அறிந்து மீளப் போகிறார்.... பதினாறு நாவல்களாக வரையப்பட்ட களமெழுத்துக் கோலம் அல்லது மண் மண்டலம் இதோ அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆம், உருவானவை அழிந்தும் ஆக வேண்டுமல்லவா!!! புடவி நெறியை மாற்ற யாரால் இயலும்?!



அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்