Saturday, October 27, 2018

ஒநாயின் நடனம்



ஜெ,

இன்றைய அத்தியாயம் ஒரு செவ்வியல் சிறுகதை. எனக்கு சிறு வயதிலிருந்து ஒலிகள் மற்றும் வார்த்தைகள் அனைத்தும் காட்சிகளாகவே பெரிதும் நினைவில் சேமிக்கப்பட்டு இருக்கிறது. அது உளமயக்கோ என நெடுநாள் எண்ணியிருக்கிறேன். புலன்களின் உள்ளீடுகள் குழம்பி வேறொன்றாகத் தெரிவதை நரம்பியல் சினஸ்தீஸியா என்கிறது. குறிப்பாக காட்சி மற்றும் ஒலிகளுக்கான உணரிகள் மூளையில் அருகருகே இருப்பதால் ஒலியும் காட்சியுமே இடம் மாற்றிக் கொள்ளும் சாத்தியம் அதிகம், வேறு எந்த புலன்களை விடவும். மொத்த வெண்முரசும் காட்சி சித்திரங்களாகவே என் நினைவில் இருக்கிறது.

இந்த அறிவியல் உண்மையை இன்றைய அத்தியாயம் கவிதையாக, அதன் வழி ஒரு விஷனாக ஆக்குகிறது. ஒவ்வொரு நாள் போர் முடிந்த பிறகும் களத்தை மேலிருந்து பார்த்தால் அது அந்த பாலைவனத்து ஓநாயின் ஊளையின் காட்சி வடிவம் போலத்தான் இருக்கும். களமெழுத்து ஆடியவனின் சன்னதம் வண்ணங்களில் எஞ்சியது போல. 

எதன் பொருட்டு இதெல்லாம் என்றால், எப்படி ஒரு யுகமாற்றத்திற்கு ஒரு யுக புருஷனின் காரியமோ அதே போல இது அனைத்தும் ஒரு ஓநாயின் குருதி இயல்பான நடனம் மட்டுமே என்பதுவும்தான். 

அந்த ஓநாய் அறுபது வருடங்களாக வரைந்தெடுத்த சித்திரம் இந்தக் களம். அந்த கட்டற்ற குருதி நடனத்தைதான் அது பிறப்பிலிருந்து ஒவ்வொரு கட்டமாக, காய் நகர்வாக மூளையால் பயின்று வந்திருக்கிறது.

ஏ வி மணிகண்டன்