Wednesday, September 3, 2014

மழையும் இசையும்

அன்புள்ள ஜெ

உடனே வாசித்துவிட்டு சுடச்சுட கடிதம்.

கண்ணன் கால் எடுத்துவைப்பதே ராதையால்தான். அவன் குழல் கைகொண்டதே அவளுக்காகத்தான். பிரேமைக்கு இன்னொரு விளக்கம் எவரும் அளித்ததில்லை. உலகளந்த காலை அவன் தூக்கிவைக்கும் அழகை நீங்கள் கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.

ஒவ்வொரு வரியும் காரம் காய் போல் ஒன்றை அடித்து இன்னொன்றை வீழ்த்துகிறது.  இலையில்லாமல் மலர் மட்டும் பூத்தமரம் ராதை.அவள் பிரேமையை அறிய கண்ணனேயானாலும் இயலாது. அது கடலிறைக்கும் ஏற்றம். அவனோ  அவனாகிய தேனை விரும்பிவரும் சிற்றுயிர்களை விழுங்க வரும் கருநாகம்

உடலெங்கும் பூத்து நூறுநாழிகை மணமெழுந்தாலும் ஒரு சொல் எழுவதற்கு நாணுகிறாள் ராதை.  அவன் வீற்றிருக்கும் கோயில்களுக்கு அளவே இல்லை. நூறாயிரம் அம்புகள் துளைப்பதுபோல நெஞ்சு துளைத்துச்செல்லும் கருவண்டு அல்லவா? மூங்கில் காடறியும் இசையெல்லாம் அவனுடியவை அல்லவா?

எத்தனை உவமைகள். ஒன்றுடன் ஒன்று ஒட்டி ஒன்றைத்தொட்டால் ஒன்பது கையில் வருகிறது.

தொடங்கும் இடம் முதல் கடைசிவரை உள்ள ஒத்திசைவு இந்த ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகு.   இரவு மழை ஓயாத அழைப்பு. மன்றாடல். மறுக்கப்பட்ட பேரன்பின் சினம் என்று தொடங்கும் அத்தியாயம் மழையில் நனைந்து வரும் ராதையை காட்டி முடிகிறது

சுவாமி