அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம். சென்ற கடிதத்திற்கு தங்களுடைய மறுமொழியை வியப்பும் சிலிர்ப்புமாகவே உள் வாங்கிக்கொண்டேன். மிக்க நன்றி.
நாராயண தீர்த்தரின் ஒரு தரங்கத்தை (கிருஷ்ணம் கலய சகி சுந்தரம்) கேட்டுக்கொண்டு இருந்தேன். அந்த அலையும், உங்கள் சொல் அலையும் சேர்ந்து நானும் அலையாடினேன். பகிர வேண்டும் என்று தோன்றியது, பாடலை இத்துடன் இணைக்கிறேன். குறிப்பாக, கல்பனா ஸ்வரங்கள் நுட்பமாக அமைந்திருப்பதாக உணர்கிறேன். நேரம் இருந்தால் கேட்கவும்.
"உச்சவழு" என்ற சிறுகதையை கண்டெடுத்தேன். யானையின் ஆள்பிடி கண்களும், காட்டின் கரிய ஒளி ஈர்ப்பும், மேகமும், சிறகும், என்னைத் திரும்ப நீலத்துக்குள் கொண்டு சேர்த்தது. ஒரு தத்துவத்திற்காக ஒரு படிமமும், அந்த படிமத்தில் சாத்தியமாகும் ஓராயிரம் தத்துவங்களுமாக கதை விரிந்து கொண்டே இருக்கிறது. உங்கள் கைகளில் கண்ணன் ஒரு ஆழ்ந்து விரிந்த படிம ஒளியாகிறான்.
அன்புடன்,
பார்கவி.