Saturday, November 8, 2014

விழா கடிதம் 4

பேரன்புக்கும், வணக்கங்களுக்கும் எப்போதும் உரித்தான ஜெ,

வெண்முரசு விழா ஏன்?’ என்ற மிக உணர்ச்சிகரமான இடுகையை இட்டிருக்கிறீர்கள். படித்தவுடன், உங்கள் மேல் இருக்கும் மதிப்பும் அன்பும் ஒரு வினாடி மீண்டும் பொங்கியது.

இன்னதென்று தெரியாத அச்சம் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். பல விளையாட்டு வீரர்கள், ஆடுகளனில் தோன்றுகின்ற அச்சம் பற்றியும், அதை எவ்வாறு வெல்ல முடியாது, ஆனால் அதையும் புலன்களைக் குவித்துச் செயலாற்றக்கூடிய ஒரு விசையாக மாற்றுவதன் அதிசயத்தைப் பற்றிச் சொன்ன எழுத்துகள் நினைவுக்கு வந்தன.

சமீபத்தில், என் குடும்பத்தோடு, எங்கள் அனைவருக்கும் மிக நெருக்கமான இன்னொரு நட்பு வீட்டிற்குச் சென்றிருந்தோம். குழந்தைகளும் பெரியவர்களும் சேர்ந்த கூட்டுக் குடும்பம். கல்வியும் ரசனையும் மிக்கவர்கள்.

என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?’ என நண்பன் கேட்டான். வெண்முரசு பற்றிச் சொன்னேன். ‘ஜெய்மோகனை இவ்வளவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதே, எதனால்?’ என்று நண்பரின் மருமகன் கேட்டான்.

உடனே என்னால் பதில் சொல்ல இயலவில்லை. பதிலுக்கு, நினைவிலிருந்து, துரோணர் மாணவர்களிடம், ‘அம்புஎன்ற சொல்லை விளக்குவது பற்றியும், எப்படி ஒரு வில்லாளி புறவயப் பார்வை இல்லாமலே போர்புரிதல் மற்றும் செயல்படுதல் காணமுடியும் என்பதை விளக்குமிடமும், உடனே அர்ச்சுனன், இருளில் பூச்சிகளை உணர்வதையும் பற்றிச் சொன்னேன். மற்றும், பிரயாகையில், துரோணர் குருகாணிக்கையாக துருபதனை வென்று தேர்க்காலில் இழுத்து வருமாறு கூறுகின்ற சில பத்திகளைப் படித்துக்காட்டினேன். அனைவரும் ஆர்வத்துடன் கேட்டனர்.

திரும்பி வரும்போது மனைவி சொன்னாள் (உங்கள் எழுத்துகள் படிக்கும் அளவுக்கு அவளுக்குத் தமிழ் சரியாகத் தெரியாது! வட இந்தியள்) ‘ஜெயமோகனைப் பற்றிக் கூறும்போதெல்லாம் ஏன் இவ்வளவு உணர்ச்சி வயப்படுகிறாய்? நீ வெண்முரசு பற்றிப் பேசத்தொடங்கியவுடனே அனைவரும் பேச்சை நிறுத்திவிட்டோம்! குழந்தைகள், பாட்டி உட்பட அனைவரும் உன்னையே கேட்டுக்கொண்டிருந்தோம்நீ அதைக் கூடப் பார்க்கவில்லைஎன்றாள். அவளுக்கும் வெண்முரசு பற்றித்தெரியும்அவ்வப்போது அட்டகாசமான பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுவேன். [உங்களையோ, உங்கள் நட்பு வட்டாரத்திலிருப்பவர்களையோ இன்னும் சந்தித்ததே இல்லை. கடலூர் சீனுவை முதல் முறையாக போன வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தபோது, என் மனைவிக்கு நான் இவ்வாறு நடத்தும் மொழிபெயர்ப்புப் படலம் பற்றிச் சொன்னேன்சிரிப்பை அடக்கியதாகத் தோன்றியது J] வெண்முரசு ஓவியங்களும் அவளுக்கு மிகப் பிடிக்கும்.

வெண்முரசு எனக்கு இப்போது ஒரு காதலி! வண்டி ஒட்டும்போது கூட, ‘எப்போதுதான் சீக்கிரம் ஜெ கீதையைப் பற்றிய கதையோட்டத்துக்குச் செல்வார்? கண்ணன் தூது எப்படியெல்லாம் எழுதப் போகிறார்?’ என்ற சம்பந்தமில்லாத நினைவுத்திரிகள் ஓடும். இதை எழுதுவதால் உங்களுக்கு உண்டான பின்னுடல் வலி பற்றிப் படித்தபின் ஒரு வாரம் ஒரு பதட்டமாகவே இருந்தது.

வெண்முரசு செம்பதிப்புகள் கையில் கிடைக்கின்ற ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் தீபாவளியே! அதன் ஓவியங்களை என் மூன்று வயது மகனுக்குப் பலமுறைகள் அமர்ந்து காட்டுகிறோம். கதை சொல்கிறோம். என் 73 வயது அம்மாவைப் படிக்கத் தூண்டிக் கொண்டேயிருக்கிறேன். (அவரால் முடியும்போனவருடம்காவல் கோட்ட’த்தை உட்கார்ந்து படித்து முடித்தார்).

இவ்வாறு பல முகந்தெரியாதவர்களின் அன்புக்கும், தினந்தர சிந்தனையோட்டங்களுக்கும், படிப்பு உவகைக்கும் நீங்கள் பாத்திரமாகியிருக்கிறீர்கள். ஒரு சராசரி முகந்தெரியாத மனிதனைப்போல, உங்களிடம் அவர்கள் தங்களை வெளிக்காட்டுவதில்லைஅவ்வளவே.

பல காலமாக உங்களுடன் எனக்கொரு ஊடல் உண்டுதெரியாதவர்களின், மூடர்களின் சொற்களைப் படித்துவிட்டு அதைத் தேவையில்லாமல் பொருட்படுத்துகிறீர்கள் / எதிர்வினையாற்றுகிறீர்கள் என்று. அதுவே மீண்டும் தோன்றுகிறது. நீங்கள் இமயமலை ஏறிக்கொண்டிருகிறீர்கள்! அஸ்தினாபுரத்தைத் தூரிகையில் தீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! திரிசூல மலையைக் கூடக் காணாதவர்களை, கையால் ஒரு நேர்கோடு இழுக்க முடியாதவர்களைக் கண்டுகொள்ள வேண்டுமோ!?

அன்பு ஜெ! தெரிந்தவர்களுக்கெல்லாம், தமிழ் ஆர்வம் மிகுந்தவர்களுக்கெல்லாம், அறிவு வேட்கை மிகுந்தவர்களுக்கெல்லாம், ‘வெண்முரசுஒரு பேருவகை அளிக்கும் விருந்து! காணாத ஒரு கனவின் நனவாக்கம்! ஒரு இதிகாசத்தைப் பற்றிய வரலாறு, தற்காலத்தில் கண்முன்னால் நடந்தேறுகின்ற செயலாக்கத்தின் அதிசயம்! உங்கள் எழுத்து, உங்கள் செயலூக்கம், கால காலமாக இப்பூமியில் இனி நிலைத்திருக்கும்!

இப்பேராக்கத்தின் கட்டிய ஒலி, இங்கு காற்றில் பரவும் பேரோசையாக உருவெடுத்து அனைத்துத்தமிழர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும். ஆர்வமுற வைக்கும்; அணைந்து களிப்புற வைக்கும்கண்டிப்பாக. என்னோக்கில், காலமும், பொறுமையும் வேண்டும். அவ்வளவே.

பாதையில் சென்று கொண்டேயிருங்கள்பலப் பலர் உங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறோம்; பாதையின் இருபுறமும் பலரும் கரவொலி எழுப்பியும், முகமன் கூறியும் உங்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்; கண்படாத தூரத்தில் இருபுற மலைத்தொடர்களின் இடுக்குகளின் இடையிலும் பலரும் உங்கள் பாதையையும் பயணத்தையுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரின் முகங்களிலுமே புன்சிரிப்புகளே உள்ளன! அனைவரின் மனங்களிலும் உங்களைப் பற்றிய போற்றுதலும், நல்வேண்டுதலும், அன்பும், உவகையுமே நிறைந்துள்ளன. ஒருகாலத்தில் இப்பயணத்தின் வரலாறு எழுதப் படும்போது அதில் சாந்தியைத் தவிர எந்த மற்ற எண்ணவோட்டங்களும் எழாது.


மிக்க அன்புடன், உங்களுக்கு நல்வாழ்த்துக்களுடன்,


சரவணன்
சென்னை