அன்புள்ள ஜெ வணக்கம்.
பூப்போன்ற பெண் என்பார்கள். பூவே பூவாக நினைக்கும் பெண்கூட உள்ளார்கள். அந்த அக்கா பேரே பூங்குழலி. அந்த அக்காவைப்பார்த்து அந்த பெயர் வைத்தார்களா? அல்லது அந்த பேரை பெருவதற்கு அந்த அக்கா பிறந்ததா? என்று நினைத்திருக்கிறேன். அது அழகுதான் நான் இங்கு சொல்வது அதன் மனத்தை குணத்தை அதற்கும் மேலாக ஒன்று இருந்தால் அந்த ஒன்றை. அதற்கு ஒரு தங்கை இருந்தது இந்திரா. அதுவும் அழகுதான். ரோஜா செடியில் ஒரு ரோஜாவும் இன்னொன்று டிசம்பரம் பூக்க வாய்ப்பில்லை ஆனால் மனிதனில் அது சாத்தியம். இங்கு இரண்டுமே ரோஜாதான்.
சின்னக்கா ரோஜாதான் அழகில் ஆனால் மனத்தில் குணத்தில் தீ. தீ என்றதும் இது எரிக்கும் தீயல்ல, அந்த குடும்பத்தையே ஒளியாக்கி கொண்டு இருந்தது. ஒய்ந்தும், அசந்தும், அஞ்சியும், வருந்தியும் பார்த்தது இல்லை. அது எழுந்தது என்றால் பாதை உண்டாகிவிடும். மாடு முதல் மனிதர்கள்வரை சொல்லால் கட்டும். நான் கண்ட இந்த ரோஜாவில் ஒன்று பனித்துளி மற்றொன்று தீத்துளி. காலகையும், புலோமையும் இருக்கிறார்கள்.
அந்த அக்கா இருவரும் உயர்ந்த குணம் உடையவர்கள் அவர்களை இங்கு கும்பிட்டு இங்கேயே நிறுத்துவிட்டு நான் மட்டும் புலோமையுடன் செல்கின்றேன்.
புலோமை யார்? அவள் அக்கினி தடாகம் ஆனால் வாடாமலர் பூக்கும் வாவி. இவளை இருவர் காண்கின்றார்கள். ஒருவன் புலோமன் மற்றொருவன் பிருகு. புலோமனுக்கு காதல். பிருகுக்கு காமம். புலோமன் அவன் மேனிமலர் வாசத்தில் பித்தாகின்றான். பிருகு அவள் மேனி மலர் வெந்துபோகும் வாசம் கந்தகம் என்கின்றான். புலோமன் சுடரில் விட்டில் என்று ஆகின்றான். எதையும் எரிக்கும் பிருகு புலோமையுடன் சேர்ந்து பெரும் நெருப்பாகின்றான். புலோமன் அழிந்து இன்பம் காண்கின்றான். பிருகு பெரிகி இன்பம் காண்கின்றான்.
புலோமை தீ என்பதை மறந்து அவள் மேனி பூக்கும் வாடாமலர்களை மட்டும் கண்டு ஆணவம் இன்றி பித்தாகின்றான் புலோமன். அவள் காலடிப்பட்ட மண்ணெல்லாம் தன் உள்ளம் என்றே அறிகின்றான். இதைவிட பெரிய காதல் சராணகதி இருக்கமுடியுமா? தேவகன்னியரை பொன்னிற புகையாகவும. கந்தர்வ கன்னியரை நிழலாகவும், மானிட கன்னியரை எலும்பாகவும் ஆக்கும் பிருகு அவள் மாறாத உடலோடு இருப்பதை கண்டு ஆணென்னும் ஆணவம் கொள்கின்றான்.
.
தாசனாகிய புலோமனை காதல் செய்து காத்திருக்க வைத்து, ஆணவ பிருகை காமத்தால் கைப்பிடித்து கணவனாக்கி குழந்தை சுமக்கின்றாள் புலோமை. கருவில் குழந்தை இருக்கும் நேரத்திலும் உள்ளம் விழையும் புலோமன்மீதான காதல் கனவாகி நிற்கின்றது. புலோமை செய்தது சரியா? மானிட நீதி எப்போதும் பாதி முழுமைக்கொண்டததுதான். இயற்கை நீதி எப்போதும் பாதியும் மீதியும் கூடி முழுமைக்கொண்டது.
காதல் செய்தால் காதலே முழுமை என்பது மானிட நீதி. காமம் அங்கு அடக்கப்படுகின்றது அல்லது அழிக்கப்படுகின்றது. காதல் வேண்டாம் காமம் போதும் என்றால் அங்கு காதல் மறைக்கப்படுகின்றது அல்லது துறத்தப்படுகின்றது. ஆணோ பெண்ணோ வாழ்க்கை இப்படிதான் உள்ளது. புலோமை அதை உடைத்து எறின்றாள்.
காதல் என்றாள் முழு காதல். புலோமனிடம் புலோமை சொல்வது.//‘என்னை இக்காட்டுநகருக்கு அப்பால் கொண்டு செல்க!’ என்று அவள்சொன்னாள். ‘எங்கே?’ என்று அவன் கேட்டான். ‘அப்பால்… எல்லை எனநான் காணும் எதற்கும் அப்பால்’ என்று அவள் கைநீட்டினாள். அவளைதன் தோளிலேற்றி புலோமன் காடுகளுக்கு மேல் பறந்தான்.மலைகளை வளைத்து மக்கள் வாழும் பெருநகர்களை அடைந்தான்.தொடுவான் எல்லையிட்ட மண் விரிவை அவள் முழுமையாகக்கண்டாள்//
காமம் என்றால் முழு காமம். புலோமை பிருவிடம் சொல்வது. ‘இக்கங்கையையே அள்ளிச் சொரிந்தாலும் இத்தழல் அணையாதுஇளையவரே’ என்றாள். ‘அனலை அனலே அணைக்கமுடியும் எனஅறியாதவரா நீர்?’
காதல், காமம் என்ற இருபெரும் எல்லைகளை தொடும் புலோமை, காதல் பெரிதென்று காதலனோடு செல்லாமல், காமம் பெரிதென்று பிருகு என்றும் நில்லாமல், குழந்தையின் தாய் என்று தன்னை நிறுத்திக்கொள்வதுதான் பெண்மையின் அற்புதம். காதலும், காமமும் ஆணும் கொள்ளலாம் ஆனாலும் ஆண் பெண்ணாக ஆகாமல் குழந்தையோடு தன்னை பிணைத்துக்கொள்ளும் பெருவாழ்க்கை என்னும் அந்த அதிசயத்தை அற்புதத்தை நடத்த முடியாது.
பெண் பெரியவள்தான்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்