Sunday, February 8, 2015

வெண்முகில் நகரம்-3-அந்த சங்கிலியின் இந்த வளையம்.



அன்புள்ள ஜெ வணக்கம். 

நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் பெரியவர் ஒருவர் அவரின் நிலத்தின் சம்பந்தமான  விவரம் அறியும் நிமித்தம் அடிக்கடி அப்பாவை பார்க்கவருவார். அவருடன் அவரின் மனைவியும் வருவார்கள். அழகாக இருப்பார், அழகாக இருக்க முயற்சியும் எடுத்திருப்பார். அவர்கள் இடம் எனக்கு ஆச்சயம் அளித்தது இரண்டு விசயம். ஒன்று கிராமத்தில் மனைவியோடு ஒருவர் நிலநிர்வாக சம்பந்தமாக அப்பாவிடம் பேசவந்து இணையாக அமர்ந்து பேசியது. அந்த அம்மா அதிகமாக எதுவும் பேசவில்லை. அந்த ஐயாதான் அனைத்தையும் பேசினார். பின்னர் எதற்கு இந்த அம்மா? என்று நினைத்தேன். இது ஒரு எதிர்பாராத தவிர்க்க முடியாத பயணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.இரண்டாவது ஆச்சரியம் அவர் தீட்டிக்கொண்டு இருந்த கண்மை. அந்த வயதில் இது தேவையா? என்ற எண்ணத்தில் வந்தது. அந்த கண் மையின் மூலமாகவே அந்த முகத்தை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். 

அதன் பிறகும் பலமுறை அவரை எங்கள் ஊரில் வேவ்வேறு இடத்தில் வெவ்வேறு கணத்தில் வேவ்வேறு காட்சியாய் பார்த்திருக்கிறேன். தம்பதி சமேதராகத்தான் காட்சிக்கொடுப்பார்கள். அந்த கண்மையும் கண்ணோடு ஒட்டிப்பிறந்ததுபோல் அதே அளவில் இருந்தது. கண்மை கலையாமல் முகம் கழுவுவார்களோ என்றும் நினைத்துக்கொள்வேன்.

ஒருநாள் அப்பாவை சைக்கிளில் வைத்துமிதித்துக்கொண்டு பக்கத்துகிராமத்திற்கு போகும்போது அவர்கள் பஸ்நிருத்தத்தில் ஒரு கடைநிழலில் அமர்ந்திருப்பதைப்பார்த்தேன்.

கொஞ்சதூரம் சென்றதும் அப்பா “எதுக்கு இந்த மனுசன் எங்கபோனாலும் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டே அலையிறார்” என்றார்கள்.என்மனதில் ஓடிக்கொண்டு இருந்த சைக்கிள் பேரேக்போட்டு நின்று அப்புறம் அதன் வேகத்திலேயே ஓடியது.

ஒரு மின்னல் கணத்தில் எனக்குள் அந்த அம்மையாரின் கணவன் ஒரு பொண்டாட்டி தாசன் என்ற பிம்பம் தோன்றி மறைந்தது.  அப்பா அடுத்த காட்சிக்கு தாவி அடுத்த விசயங்களைப்பேசிக்கொண்டு வந்தார்கள். நானும் அப்பாவில் மூழ்கிப்போனேன்.

அப்பா?

பஸ் ஏறி பயணிக்கும் தூரத்தில் இருக்கும் எங்கள் வயலுக்கு அப்பாவும் அம்மாவும் சேர்ந்துதான் போவார்கள். அம்மா தனியாக சென்றது இல்லை. அப்பாவின் வேலை நெருக்கடியில் அம்மா தனியாக வயலுக்கு சென்றால்,அப்பா வேலையை முடித்துவிட்டு முன்னால் வீட்டுக்கு வந்தால் அம்மாவீட்டில் இருக்கவேண்டும் இல்லை என்றால் அப்பாவால் அமரமுடியாது. வீட்டில் நடப்பார்கள், அதன்பின் முன்வாசலில் நடப்பார்கள், மாலையாகிவிட்டால்  பஸ்நிறுத்தத்திற்கே சென்றுவிடுவார்கள்.

ஒருநாள் அம்மாவுடன் நான் வயலுக்கு சென்று திரும்பும்போது வயல் வேலைக்கு வரும் அம்மா ஒருவர் அம்மாவிடம் வந்து நலம் விசாரித்துவிட்டு. மகனா என்று கேட்டவர் “தம்பி, அய்யாவும் அம்மாவும் தனியா வந்து நான் பார்த்தது இல்ல, அம்மாவ நல்லா பார்த்துக்குங்க” என்றார். அம்மாவை நல்லா பார்த்துக்கொண்டேன் என்று நிறைவடையும் மகன் யாராவது மண்ணில் இருக்கின்றார்களா? இருந்தால் அவர்கள் பாதங்களுக்கு என் வணக்கம். நான் இன்னும் எத்தனை பிறவி எடுக்கவேண்டும் அம்மா? நீயே அறிவாய்.

நான் அந்த நெய்வேலி தம்பதியையும், அம்மா அப்பாவையும் நினைத்துக்கொண்டேன். அந்த தம்பதியர், எனது பெற்றோர் மட்டும் இல்லை நான்கூட அந்த சங்கிலியின் அதே போன்ற வளையம்தான். அவர் இவர் எவர் என்று உருவங்கள் தான் வேறு வேறு அகம் ஒரு புள்ளியில் ஒன்று என்றே நிற்கின்றது. நான் உன்னைபோல் இல்லை என்று எளிதாக சொல்லி தப்பித்துவிடுகின்றோம். பாண்டவர்கள் அனைவரும் நான் உன்னைப்போல் இல்லை என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஐவரும் பாஞ்சாலி விசயத்தில் ஒன்றுபோல்தான் இருக்கிறார்கள். இந்த எல்லையை அழகாக பிரித்துக்காட்டி பரவசப்படுத்துகின்றீர்கள் ஜெ.

நமது நிர்வாணம் இயற்கையானது, அடுத்தவர் நிர்வாணம் செயற்கையானது என்று நினைக்கின்றோம். அடுத்தவர் நிர்வாணம் எங்கோ நம்மை சீண்டுகின்றது. அடுத்தவர் நிர்வாணத்தில் தெரிவது நமது நிர்வாணத்தின் மேடு பள்ளங்கள். மனம் அதிர்கின்றது. அதை புறக்கணித்து திமிரிமேலே ஏற நினைக்கின்றோம். விருப்பில் இருந்து வெறுப்பின் எல்லையை கவனிக்கின்றோம் அதனால் அடுத்தவனின் இயற்கையை செயற்கை என்று சொல்லிவிட்டு நமது மேல்குணத்தை குலைந்துவிடாமல் வைக்க முயல்கின்றோம். அர்ஜுனனும் தருமணும் விட்டுக்கொடுப்பதன் மூலம் விட்டுக்கொடுக்காமல் இருக்கவே முயல்கின்றார்கள். முயல்கின்றார்கள் என்பதை விட முடியாமல் தவிக்கின்றார்கள் என்றும் சொல்லலாம். 

பாண்டவர்கள் ஐவருக்கும் ஒரே மனைவி என்பது உடம்பால் பார்த்தால் விரசமாக தெரிகின்றது. அகத்தால் பார்த்தால் ஐவரும் ஒன்றுதான். இதை பாண்டவர்களால் கண்டுக்கொள்ள முடியவில்லை பாணனும் விறலியும் கண்டு கொண்டு விளக்குவது அருமை. ஒராண்டின் ஆறு பருவம் என்பது பிரிவுப்போல்தான் தோன்றுகின்றது. ஆறு பருவமும் சேர்ந்ததுதான் ஒரு ஆண்டு என்பதுதான் நிஜம். ஆறுவிதமான உணர்வுகளின் ஒரு அகம் என்பதுதான் திரௌபதி அதை ஆறாகவும் பிரித்துப்பார்க்கலாம் ஒன்றென்றும் கொள்ளலாம். வெள்ளொளியும் நிறமாலையும்போன்று.
தெரியாததை சொல்வதுதான் பேரறிவு என்று நினைக்கின்றோம், தெரிந்ததில் உள்ள தெரியாததை சொல்வதுதான் பேரறிவு என்று காட்டிப்போகும் விறலியின் பாதத்திற்கு கீழ்தான் உலகமும் அதில் உள்ள உயிர்களும் என்று வரைப்பட்ட படம் அற்புதம். அந்த பாதத்திற்கு உரிய விறலி ஜெ அன்றி வேறு யார்? அதைக்கண்டுகொண்டு படம் வரைந் ஓவியர் ஷண்முகவேலுக்கு நன்றி.

வாழ்க்கைகூட தெரிந்ததில் உள்ள தெரியாததைத்தான் அறிய சொல்கின்றது. இன்று பாணனும் விறலியும் பாண்டவர்கள் இடம் சொல்வது தெரிந்த பாஞ்சாலாயிடம் உள்ள தெரியாததை அறியுங்கள் அது வாழ்க்கை என்று காட்டி செல்கின்றனர். இதையே வேறுமாதரி சொல்வது என்றால் உங்களில் இருந்து பாஞ்சாலியைப்பார்க்காதீர்கள், பாஞ்சாலியில் இருந்து உங்களைப்பார் என்கின்றார்கள். கதையின் இந்த இடம் அருமை.

இன்றைய பதிவு பார்வையை மாற்றிப்போடுகின்றது ஜெ. நன்றி. 

உலகத்தை நம்மிலிருந்து பார்ப்பதிலிருந்து, உலகில் இருந்து நம்மை பார்க்க பழக்குகின்றது. 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.