Thursday, July 16, 2015

குலக் குழுக்களில் குறுகும் அறம்


துவாரகை மக்களிடம் திருஷ்டத்துய்மன் எதிர்கொள்ளும் வலுவான மௌன எதிர்ப்பு அவனை கலங்க வைத்ததில் சற்றும் வியப்பில்லை.  அவன் செய்தது வழக்கமாக மன்னருக்கு துரோகம் இழைப்பவர்க்கு அந்தக் காலத்தில் தரக்கூடிய தண்டனை.  ஆனால், அவனை அங்கிருப்பவர்கள்  எதிரியைப்போல் கருதுதுகிறார்கள்.  இதை அவன் முற்றிலும் எதிர்பார்த்திருக்கமாட்டான். துவாரகை மக்களின் அவ்வளவு அன்பை பெற்றவனா கிருதவர்மன் ? தன் மன்னருக்கும் அரசிக்கும் துரோகம் இழைத்தனை, அரசியின் தந்தையை கொன்றவனிடம் நட்பு கொண்டவனை மக்கள் அவ்வளவு எளிதாக மன்னித்துவிடுவார்களா?


    ஆனால்,  இதே கிருதவர்மனை ஒரு அந்தக குடியைச் சேர்ந்த ஏதோ ஒரு சிறுவன் தலையில் கால் வைத்து அவமதித்து அழைத்துவந்திருந்தால்கூட  ஒரு  சிறு சலசலப்பும் வந்திருக்காது. மாறாக அச்சிறுவனை வீதிதோறும் மலர்மாரி பெய்து வாழ்த்தியிருப்பார்கள். பின்னர் ஏன் திருஷ்டத்துய்மனை மட்டும் வெறுக்கிறார்கள்? ஏனென்றால் அவன்வேற்று குலத்தினன். மக்களின் இந்தப்போக்கு மிக விசித்திரமானது என்றாலும் இன்றைக்கும் தொடரக் கூடியது.  தன் குலத்தை சார்ந்த ஒருவன் மற்றொரு குலத்தைச் சார்ந்த ஒருவன் என வரும்போது எவ்வித நியாய தர்மங்களையும் பார்க்காமல் தன் குலத்தினனை  ஆதரிப்பார்கள். அதே சம்பத்தப்பட்ட இருவரும் ஒரே குலத்தினர் என்றால் மட்டுமே அவர்களுக்கு நியாயம் தர்மம் எல்லாம் ஞாபகத்திற்கு வரும்.  அறத்திற்கு மக்கள் அளிக்கும் மதிப்பு அவ்வளவுதான்.


இப்போதும் நாம் அப்படித்தான் நடந்துகொள்கிறோம். அண்டைய நாட்டில் நம் இனத்தவருக்கும் மற்ற இனத்தவருக்கும் ஒரு பிரச்சினை என்றால் எந்தக் கேள்வியும் கேட்காமல் நம் இனத்தவரை ஆதரிக்கிறோம். அவர்கள் செய்யும் அனைத்து காரியங்களும் சரியென்கிறோம். மற்ற இனத்தவரின் கருத்தை கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் அனைவரும் கொடியவர்கள் என கூறுகிறோம். தன் இனத்திற்கு  சொந்தமாக கருதும்  தண்ணீர், வீணாக கடலில் கலந்தாலும் பரவாயில்லை அதற்கு மற்ற இனத்தவன் சொந்தம் கொள்ளுவதை முற்றிலுமாக எதிர்க்கிறோம். தன் இனத்து ஆளை வேறு இனத்தை சேர்ந்த  போலிஸ் விசாரணையில் இறந்து விட்டால் வீதியில் இறங்கி கலவரம் செய்கிறோம். அதே அதிகாரி அதே இனத்தைச் சேர்ந்தவர் என்றால், அது பெரிய பிரச்சினை என இல்லாமல் ஆகிறது. 


நாடுகள் தன் நாட்டு குடிமகன் வேற்று நாட்டில் கைது செய்யப்பட்டால் எவ்வித தண்டனையுமின்றி தன்னிடம் திருப்பி அனுப்பவேண்டுமென்கின்றன.  தன் குலத்தைவிட அடுத்த குலம் சற்று  முன்னேறிவிட்டால் அக்குலத்தையே வெறுக்கிறோம். கூண்டோடு அழிக்கவும் முடிவு செய்கிறோம். இது நாம் பண்பாட்டு வளர்ச்சியில்  இன்னும் முன்னேறம் அடைய வேண்டியது அதிகம் உள்ளதையே காட்டுகிறது.

தண்டபாணி துரைவேல்