இந்தக் கேள்வியை நாம் நம் வாழ்வினில் கேட்டுக்கொண்டு எத்தனை முறை வியந்திருப்பேன் என எண்ணிப்பார்க்கிறேன். நாம் நம் எண்ணத்தில் உயரத்தில் வைத்திருந்த ஒருவர் சட்டென்று குப்புற கீழேவிழுந்துவிடுவதை அடிக்கடி பார்த்திருக்கிறோம். சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்த எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் சிறு வயது பெண்ணுடன் பாலுறவில் ஈடுபட்டதற்காக இப்போது சிறையில் இருக்கிறார். ஒருவருக்கு, அவருடைய குடும்ப நண்பரே ஒரு அற்பனமான சிறிய பலனுக்காக பெரிய துரோகத்தை செய்வதை சமீபத்தில் பார்த்தேன். ஏன் ஒரு மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்கிறான். இது அவனின் இறப்பை விட வேதனை மிக்கதல்லவா? எது அவனை வீழ்த்துகிறது?
கீதையில் கண்ணன் கூறுகிறான், "ஒன்றை உணர்ச்சி பூர்வமாக நினைக்கையில் அதில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் ஆசை பிறக்கிறது. ஆசையால் அறிவு மயங்குகிறது. அறிவு மயங்குவதால் அவன் அழிந்து போகிறான்." ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறுகிறார். ஆசை என்பது இன்பத்தை அடைவதற்கான் நோக்கம். ஆனால் அதுதான் துன்பத்திற்கு காரணமாகிறது. ஏதோ ஒரு பொருளை ஒருவர் பார்க்கிறார். அதில் அவர் தன் உணர்ச்சியை சேர்க்கும் போது அதன் மேல் பற்றுதல் உண்டாகிறது அப்போது ஆசை ஒரு பனிப்போர்வை போல் கவிழ்ந்து அவர் அறிவை மூடிவிடுகிறது. அதன் காரணமாக செய்யக்கூடாத செயல்களை செய்து வீழ்ந்துபோகிறார். தான் ஆசைபடும் பொருள் எப்போதும் சியமந்தக மணிபோல கவர்ச்சியானது. சியமந்தக மணி அனைவருக்கும் ஒருபோலத்தான் காட்சியளிக்கிறது. மற்றவரை கவர்ந்திழுப்பது அதன் இயல்பு. அதை காணாமல் தவிர்க்கமுடியாது என்ற போதிலும் அதன் மேல் தன் உணர்ச்சியை சேர்க்காமல் இருக்க வேண்டும். அதுவே தன் கையில் வந்து விழுந்தாலும் அதன் மேல் பற்றுதலை உண்டாக்கி ஆசைவழிப்பட்டு தனதாக்கிகொள்ளும் மமகாரம் அற்று இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர் என்றும் வீழ்வதில்லை. அவ்வாறில்லாமல் ஆசைவழி செல்லும் ஒருவர் எவ்வளவு பெரியவராய் இருந்தாலும் வீழ்ந்துவிடுகிறார். வெறும் உலகியல் ரீதியான வீழ்ச்சி மட்டுமல்ல. ஆன்மீக ரீதியிலும் அவர் தாழ்ந்துவிடுகிறார்.
அக்ரூரர், அறிஞர், அனுபவம் மிக்கவர், தேவைகள் எல்லாம் அடைந்து நிறைந்திருப்பவர், கடவுளைப்போல் விருப்பு வெறுப்பு தவிர்த்த ஓர் பேரான்மாவின் அருகிருக்கும் பேறு பெற்றவர். ஆனால் சியமந்தக மணிமேல் அவர் கொண்ட பற்றுதல் அவரை ஆசைவழியில் செலுத்தி நெறி தவறி செல்லவைத்துவிடுகிறது. மேற்கொண்டு என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. அவரின் வீழ்ச்சி எனக்கு அச்சத்தை தருகிறது.
இப்படி ஆசைழியில் வீழ்த்தும் பற்றை ஒழிக்க பற்றற்றானின் திருவடியை பற்றிக்கொள்வோமாக.
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.
-கந்தர் அனுபூதி

துரைவேல்