Saturday, December 5, 2015

புதிய அர்ஜுனன்எத்தனை நாள்தான் மகளுக்கு பாட்டி வடை சுட்ட கதையை சொல்வது?
வெண்முரசு வந்தநாள்முதல் அந்த கதையையே மாற்றி மாற்றி சொல்லி வருகிறேன். 


பீமன் எவ்வளவு சாப்பிடுவான்? வாஷங் மிஷின் ஃபுல்லா சாதம், தண்ணி புடிச்சு வைக்கிற அண்டா ஃபுல்லா குழம்பு என்று சொல்லும்போது எனக்கே பசியெடுத்துவிடும். பீமன் ஆத்துல விழுந்த கதை சொல்லுப்பா.. பீமன்  பகாசுரனை வண்டிசாதம் சாப்பிட்டு அடிச்ச கதை சொல்லுப்பா... கடோத்கஜன் பறந்தகதை சொல்லுப்பா என நேயர் விருப்பமும் உண்டு. அனுமனின் வாலை சிங்கம் கவ்விக்கொண்டு பட்ட அவஸ்தையை மட்டும் ஆரம்பித்தால் ஒன்ஸ்மோர் கேட்டு கேட்டு இறுதியில் நானே அந்த  சிங்கமாகி கதறும் வரை விடுவதில்லை. ஆரம்பத்தில் பீமன் அளவிற்கு அர்ச்சுனனை பிடிக்கவில்லை. கான்ஸன்ட்ரேஷன் பண்ணி அந்த மரத்துல இருந்த பறவையை அடிப்பதைவிட மரத்துக்கு மரம் தாவி குரங்கோடு பேசுபவன் ரொம்ப பிரியம்.
காண்டீபம் ஆரம்பித்ததும் வேறு கதை.  யானையை தூக்கி வரும் கழுகை அர்ச்சுன்ன் அம்பு விட்டு துரத்துவதாக சொல்லிவைத்தேன். அர்ஜுனன் எப்படி சண்டை போடுவான் எப்படி எய்ம் பண்ணி அடிக்காறான் என விளக்க ஆரம்பித்தால் அதிலருந்து ஆயிரம் கேள்விகள் வரும். உடனே வண்ணக்கடலில் இருந்து துரோணோபதேசம் ஒரு பத்தியை எடுத்துவிட்டால் புரிந்த்து போல் தலையாட்டுவாள்.. வீட்டிலிருப்பவர்களுக்கே அது புரியாது ( என்னையும் சேர்த்துதான்).. 

சில பகுதிகளை மாற்ற வேண்டியிருந்த்து. ஏழு பாம்பு வளையத்துக்குள்ள மாட்டிகிட்டான்.. ஒரு பாம்பு கிட்கேட் கேட்டது.. இன்னொரு பாம்பு பேல்புரி கேட்டது என்று சொல்லுவது எனக்கும் வசதியாக இருந்த்து. அர்ச்சுனன் அம்பு எப்படி விடுவான் என காட்ட யூட்யூப் மகா பாரத வீடியோக்களை காட்டிய வகையில் VAS download என Aircel காரர்கள் தீட்டிவிட்டார்கள்..அப்புறம் ஒரு நாள் வில் அம்பு வாங்கி கொடுத்தேன். அந்த ப்ளாஸ்டிக் அம்பு முன்னால் vacuum ரப்பரால் ஆனது. டார்கெட்டில் அப்படியே ஒட்டிக்கொள்ளும். அதனால்  வேறு சில பிரச்சனைகள் வந்தன.. சீனி டப்பா கவிழ்ந்திருந்த்து ஒருநாள்.. கல்யாண போட்டோ கீழே விழுந்து கிடந்தது. அம்மா ஒருநாள் பிரிட்ஜில் கூல்ஸோன் உள்ளிருந்து வெண்ணை பாக்கெட்டை எடுக்க ஒரு அம்பு அந்த பாக்கெட்டை தட்டிவட்டு கையையும் பதம் பார்த்தது. ஆகவே எந்த பருப்பொருளையும் குறி பார்க்கலாகாது என ஒப்பந்தம் போடப்பட்டது. வாரம் ஒரு ஐஸ்கிரீமும் தஹிபூரியும் ஈடாக அளிக்கப்பட்டது. 

அர்ச்சுனன் அம்பு விட்டால் மட்டும் எப்படி மழைவரும் நான் விட்டால் வராதா என ஒருநாள் வானை நோக்கி ஒரு அம்பு ஐன்னல் வழியாக போனது. சொன்னால் நம்பமாட்டீர்கள்.. சென்னையில் இப்படி ஒரு மழை பொழிந்து 20 வருஷமாகுதாம். ரமணனே சொல்றார்.

காளிப்பிரசாத்