அன்புள்ள ஜெ,
ஜராசந்தனின் இரட்டைநிலை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த இரட்டைநிலை ஏன்? அவன் நாகவேதத்தை நோக்கிச் சென்றதே அதைக் களைவதற்காகத்தானா? அவன் ஓர் அரக்கமன்னன். பழங்குடி அரசன். அவனுக்குரியது நாகவேதம். ஆனால் அவன் மகதத்தின் அரசனாக ஆகிறான். நால்வேதத்தை பராமரிக்கும் பொறுப்புக்கு வருகிறான். அந்த பொறுப்புதான் அவனை இரண்டாகப்பிளக்கிறதா?
வேதம் வேதமறுப்பு என்னும் கோணத்திலே வாசித்தால் வெண்முரசில் வரும் இந்த இரட்டைத்தன்மை மிகமிக விரிவான அர்த்தங்களை அளிக்கிறது. ஒவ்வொருவரும் ஏன் இரண்டாகப்பிரிகிறார்கள் என்பது ஒரு கேள்வி. இரண்டாக இருப்பதெல்லாம் கிருஷ்ணனின் கையில் ஒன்றாகஆகின்றன என்பது இன்னொரு முக்கியமான விஷயம். இரண்டும் வாசிப்பை கூர்மையாக்குகின்றன
ஜெயராமன்