Sunday, July 10, 2016

அறமுரைப்போன்



அன்புள்ள ஜெ,

வெண்முரசின் நோக்கமும் , இதுவரை வந்தவற்றின் ஒட்டுமொத்தமான யூனிட்டியும் இப்போதுதான் தெளிவாகி வருகின்றன. ஆகவே இதுவரை வாசித்தவற்றை வைத்துச் சொன்ன ஒட்டுமொத்தக் கருத்துக்கள் அனைத்துமே குறையுடையவை ஆகிவிட்டன

முக்கியமான கேள்விகள் சில உண்டு. கிருஷ்ணன் ஏன் இத்தனை பெரிய போரை நிகழச்செய்தான்? ஏன் சகோதரச்சண்டையை தடுக்க அத்தனைபெரிய அரசதந்திரியும் தெய்வாத்மாவுமான அவரால் முடியவில்லை?

சில பௌராணிகர் அவன் பூமியின் பாரததைக்குறைக்க அதைச்செய்தான் என்பார்கள். [அதற்கு ஒரு கொள்ளைநோயை கொண்டுவந்தால்போதாதா? அதென்ன பூமியின் பாரத்தை குறைப்பது?] சிலர் அதெல்லாம் கிருஷ்ணலீலை நமக்குப்புரியாது என்பார்கள். சிலர் எல்லாம் விதி கிருஷ்ணனும் அதற்குக் கட்டுப்பட்டவன் என்பார்கள்

சிலர் அவன் யாதவர்களுக்கு ஓர் அரசை உருவாக்கவே அதெல்லாம் செய்தான் என்பார்கல். அப்படிச்செய்தால் அவன் என்ன ஞானி? கொடூரமான அரசன் மட்டும்தானே?

வெண்முரசு மிகப்பிரம்மாண்டமான ஒரு சித்திரத்தை அளிக்கிறது. அவன் புதிய வேதத்தை, புதிய ஞானத்தை, புதிய அறத்தை நிலைநாட்ட வந்தவன். பெரும்புரட்சிக்காரன். ரத்தம் வழியாக அவன் அதை நிலைநிறுத்தினான். ஏனென்றால் அறத்தின் வழி அதுதான்.

அனைத்தும் சட்டென்று விளங்கிவிட்டதுபோலிருக்கிறது. முதல்காட்சியில் அவன் வந்து குந்தியிடம் பேசும் தருணம் முதல் அனைத்தும் தெளிவாகிவிட்டன. ஒரே இடம் நோக்கிச் செல்கின்றன. இந்த ஒத்திசைவை நீங்கள் திட்டமிட்டு உருவாக்கினீர்களா? அப்படி என்றால் இது பெரிய சாதனை. ஒரு மகத்தான கனவு

சிவராம்