Friday, August 12, 2016

கற்பு என்பதன் துவக்கம்


சொல்வளர்காடு இந்திய சமூகத்தில் பெண்களுக்குக்கென்று உரைக்கப்பட்ட ‘கற்பு’ என்னும் நெறியின் துவக்கத்தைப் பற்றிய ஒரு முக்கிய வரைவை நல்குகிறது. தொல்வேதங்களின் படி எவ்வண்ணமேனும் தங்கி வாழ விதிக்கப்பட்ட அரக்க, அசுர, நாக, மானுடர்களுக்கு பெண் என்பவள் படைப்பின் வாசல் என்ற வகையிலேயே முக்கியமானவளாக இருந்திருக்கிறாள். எனவே குழந்தை இல்லாத ஒருவர் விரும்பினால் எந்த பெண்ணும் அவருக்கு அளிக்கப்பட்டாக வேண்டியவளே. இதைத் தான் ஸ்வேதகேது எதிர்க்கிறார். இது இழிமுறை என்கிறார். அதற்கு மாற்றாக பெண்ணிற்கு மூன்று கற்புகளை அளிப்பதாகக் கூறுகிறார். ஏன் கற்பு? வேறு ஏதாவது ஒரு பெயர் கொடுத்திருக்கலாமே!

கற்பு – என்பது கற்றலின் படி நிற்பது. மெய்யறிதலை அடைந்த பெண், அவ்வறிதலின் படி நிற்பதும், தன் கொழுநனையும், மைந்தனையும் அதன் படி ஆற்றுப்படுத்துவதும் தான் கற்பு எனப்படுகிறது. எனவே தான் ஸ்வேதகேது பெண்களுக்கு வேதம் கற்றுக்கொடுக்கிறார். அவ்வேதம் கற்ற பெண்களுக்கே இந்த கற்பு என்பது விதிக்கப்படுகிறது. ஸ்வேதகேது மற்றும் அதைத் தொடர்ந்த காலகட்டத்தில் ரிஷி பத்தினியரும், வேதியர்களின் மனைவியரும், ஷத்ரிய மகளிரும் இவ்வேதக் கல்வி கற்பவர்களாக இருந்தனர். எனவே இவர்களுக்கு இந்த கற்பு என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆம், கல்வியடைந்த பெண்களே கற்புடையவர்கள், ஏனென்றால் அவர்களுக்கே கற்றதன் படி நின்றாக வேண்டிய நெறி இருக்கிறது. இக்கல்வி அடையப்பெறாத பிற குடி மகளிருக்கு இந்த கற்பு கட்டாயமாக்கப்படவில்லை என்பதை வெண்முரசில் பல இடங்களில் நாம் கண்டிருக்கிறோம். இது ஒரு வகை நெறியாக, விதியாக கட்டயாமாக பின்பற்றப்படவேண்டியது என்பதாலேயே குருதி கொண்டு நிலைநிறுத்தப்பட வேண்டியதாகியது. இப்பின்னணியில் வைத்து தான் நாம் பிருகு வம்ச மகளிரானான புலோமை, கியாதி, ரேணுகை யினரின் கதையைப் பார்க்க வேண்டும். “ஒன்றென இணைக்கும் ஒன்றை இவள் இழந்துவிட்டாள்” என ஜமதக்னி தன் மனைவி ரேணுகையைப் பார்த்துச் சொல்லும் ஒன்று இது தான்.

உண்மையில் ஸ்வேதகேது கொடுத்த இந்த கற்பு விதியில் அவர் விட்டது ஒன்று இருக்கிறது. அது அந்த கற்பை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுதலிக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது என்பது. நிச்சயமாக அவர் அவ்வுரிமையை பெண்களுக்குக் கொடுக்கவில்லை. ஆச்சரியகரமாக தொல்வேத நெறியான பெண் என்பவள் குல நீட்சிக்கு உரியவள் என்பதன் படி தன் மனைவியை தாரை வார்த்த உத்தாலகரும் அவள் கருத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. எவ்வேதம் வரினும் அதில் இருக்கும் சொல் மாறவில்லை, குறைபட்ட பொருள்களே விளையுமென்றால் அவை காலந்தோறும் மாறித்தானே ஆக வேண்டும். முழுமையான பொருள் என்ற ஒன்றை அடைந்த சொல் அதன் பிறகு காலத்தால் உச்சரிக்கப்படுவதில்லையோ? அவையே மறையோ?
அருணாச்சலம் மகாராஜன்