Wednesday, August 3, 2016

பாண்டுவின் பாதங்கள்

 
 
 
இன்றைய சொல்வளர்காடின் சிறப்பான பகுதி என்றால் அது தருமன் நீருக்குள் பார்க்கும் சகதேவனின் ஆம்பல் பூ பாதங்கள் தான். அது பாண்டுவினுடையது. சகாதேவனை தருமன் பாண்டுவின் குரலாகவே எண்ணுகிறான். எனவே தான் ஒவ்வொரு முறை தடுமாறுகையிலும் அவனிடமே சொல் தேர்கிறான். ஒரு வகையில் சரணடைகிறான். சகதேவனின் கடைசிச் சொற்களைப் பாருங்கள் - "அரசாட்சி உங்கள் ஆற்றலால் வெல்லப்படுவதல்ல. படையாலோ நூலாலோ நிலைநிற்பதுமல்ல. அது மக்கள் உங்களுக்கு அளிக்கும் உறுதியால் நிலைகொள்வது. நீங்கள் உங்கள் சொல்லில் நிலைகொள்ளாதவரை மக்கள் சொல் உங்களுக்கு நிலையல்ல. எனவே, முதலில் நாம் வெல்லவேண்டியது நம்மை. எளிய விழைவுகளாலோ தனிப்பட்ட வஞ்சங்களாலோ நம் செயல்கள் தூண்டப்படாதிருக்கட்டும். என்றும் மாறாத சில உண்டு என்றால் அவற்றால் நாம் நடத்தப்படுவோம்" - இது பாண்டுவின் குரல். அவன் அரசை ஏற்ற போது ஏற்றுக்கொண்ட உறுதி. அதனால் தான் நீரில் மூழ்கிய சகதேவனின் கால்கள் தருமனுக்கு மிகவும் நன்கறிந்த கால்களாகத் தெரிகிறது. 



அந்த தலைப்பிரட்டை உவமையும் அதைத் தான் குறிக்கிறது, விண்ணை நோக்கி ஆணையிடும் அதிகாரம் - ஐவரில் மூத்தவனுக்கு ஆணையிடும் அதிகாரம் கொண்ட இளையவன் என்ற வகையில். தருமனிடம் அவன் சிரமேற்கொண்டு, எதிரெண்ணம் இன்றி நிறைவேற்றக்கூடிய ஆணையிடும் அதிகாரம் கொண்டவர் பாண்டு மட்டுமே. (குந்தியும், திரௌபதியும் கூறுவதை தருமன் ஏற்பதற்குள் நமக்கே ஊர் பட்ட குழப்பமெல்லாம் வந்து விடும்.  பீமன் வந்து தான் தருமனையும், நம்மையும் காப்பாற்ற வேண்டும்!!) எனவே தான் சகதேவன் அதைக் கூறிய பிறகு மறுமொழிக்குக் காத்திராமல் நீரில் மூழ்குகிறான். ஒரு வகையில் நீரில் மூழ்கும் முன் அவன் பாண்டு, எழுகையில் நாணம் கொண்ட ஒரு இளையோன்!! 

அறக்குழப்பம் கொண்ட ஒரு அறவோனின் சந்தேகம் தீர ஒரு முழு நூலே வெண்முரசில் வர வேண்டியிருக்கிறது!!! தருமனை நாயகனாகக் கொண்ட ஒரு நாவல்... அவன் அலைகழிப்புகள் அனைத்தையும் ஒரு எளிய மானுடனாக நானும் உணர்கிறேன். எப்படியும் அவனுக்கு தெளிவு வந்து விடும். எனக்குத் தான்....?!!!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்