Tuesday, December 17, 2019

களிற்றியானைநிரை-02 சொல்லா? பசியா?




அன்புள்ள ஜெ வணக்கம்.
சத்குரு ஜக்கிவாசுதேவின் சீடர் சுவாமி நிர்விச்சாரா தனது வாழ்க்கைப்பயணத்தில் கண்ட பசியின் கொடுமையை  காட்சிப்படுத்துகின்றார். அந்த காட்சியை கண்டபோது  வானமே தன் தலையில் இடிந்து விழுந்ததுபோல் இருந்தது என்கிறார். அந்த காட்சியை படித்த எனக்கு வானம் தீமழை பொழிந்ததுபோல் இருந்தது. 
துறவறம் பூண்ட நிர்விச்சாரா 1998ல் மௌனவிரதத்துடன் தேசாந்திரியாக நடந்து இந்தியா முழுவதும் திரிகிறார்.  ராஜஸ்தானில்  ஒரு நாள் ரோட்டோரத்தில் ஒருவர்  உணவு தேடிக்கொண்டு வருகிறார். 50மீட்டர் தொலைவில் உள்ள அவர் மண்போன்ற எதையோ எடுக்கிறார். சாப்பிட அதில் என்ன இருக்கும் என்று இவர் நினைக்கிறார். அவர் சாப்பிடுகின்றார். அருகில் சென்று பார்த்ததும் அதிர்ந்துவிடுகிறார் இவர். 
யாரோ எடுத்த வாந்தியை, காய்ந்து போனதை சாப்பிடுகின்றார் அவர். அப்போதுதான் அவர் தலையில் வானம் இடிந்துவிழுந்ததுபோல் இருந்தது என்கிறார். எப்படியோ சமாளித்துக்கொண்டு இவர் தன்னிடம் உள்ள பிஸ்கட்டை கொடுக்கிறார். அவர் அதை இரண்டு கைகளாலும் வாங்கி இரண்டு கைகளாலும் சாப்பிடுகின்றார். அந்த வருடத்தில் நானும் சிலநாள்    ரோட்டோரம் உணவை எடுத்திருக்கிறேன் என்கிறார். 
சில கொடுமைகள் சொற்களாக இருப்பதே பெரும் வலியை ஏற்படுத்துகின்றன. அவை அனுபவங்கள் ஆகமல் இருப்பதே பெரும் பாக்கியம். இந்த இடத்தில் பாக்கியம் என்பது ஒரு கோழைத்தனம் என்று உணர்கின்றேன். எது பாக்கியம்? ரோட்டோரத்தில் உணவு தேடி தின்கின்ற நிலையில் இருக்கும்போதும் ஆடுத்தவர் பசி அறியும்போது தன் கையில் இருப்பதை கொடுக்கின்றவர் பாக்கியவான். நிர்விச்சாரா அந்த நேரத்தில் பாக்கியவான்தான். எந்த சொற்களும் எங்கோ யாருக்கோ அனுபங்களாகத்தான் இருக்கின்றன அதனால்தான் அந்த அனுபவங்கள்  சொற்களாகி காலம் கடந்து உலகம் முழுவதும் உலவுகின்றன. அந்த சொற்கள் செவிநுழையும்போது உடலை உலுக்கிவிடுகின்றன.
நெருப்பென்றால் வாய் சுடுமா? என்பது ஒரு சொல். நெருப்பென்றால் வாய் சுடனும் என்று லா.ச.ரா சொல்வார்.
நிர்விச்சாரா பசி என்று சொன்னபோது சுட்டது. அந்த சொல் சுடுவதற்கு நிர்விச்சாரா எவ்வளவு தொலைவை கடந்திருக்கிறார் என்று நினைத்துப்பார்த்தேன். 
களிற்றியானை நிரை-02 பசியை காட்டும் பாலைவனக்காட்சியும் சுட்டது.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற நான்கு நிலங்களில் பாலை என்று ஒன்று தனியாக இல்லை. மழையில்லாதபோது இந்த நிலங்களே திரிந்து பாலையாகிவிடுகின்றன என்பதை கதை காட்சிப்படுத்திக்கொண்டே செல்கிறது.
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது-என்கிறார் வள்ளுவர்.

இரண்டுவிதமான பசிகள் இன்று கதையில் வந்துபோகிறது. ஒன்று கொண்ட லட்சியத்திற்காக காத்யர் அடையும் பசி. மற்றொன்று கைவிடப்படும் அன்னையின் பசி.  முதல் பசி தன் கையையே வெட்டி தன்குருதியையே குடிக்கிறது. தன் தசையே அறுத்து அவியாக்கி தானே உண்கிறது. தனக்காக, தான் விடுபட. இரண்டாம் பசி தன்னைத்தவிர அனைத்தையும் உண்கிறது.   
எது பெரும் பசி?
தன்னையே உண்ணும் பசிதான் பெரும்பசி. ஆனால் கதை அன்னையின் பசியைதான் பெரும்பசி, லட்சியத்தை வெல்லும் பசி என்று காட்டுகிறது.
ஏன்?
காத்யர் நிலத்திலிருந்து விடுபடுவதற்காக தன்குருதியையே பசியாறியவர். தனக்காக உண்டவர். மண்ணிலிருந்து தன் குருதியை உறிஞ்சிக்கொண்டவர், ருத்திரவடிவம்.
அன்னை நிலத்தில்  தன் குருதி பெருகுவதற்காக பசியாறியவள். தன் குழந்தைக்காக பசியாறியவள். அவள் கொற்றவை வடிவம்.
நிலத்தில் குருதியை பெருக்குபவள் அன்னை, நிலம் அவளுக்கே சொந்தம். அவள் எலும்பை பயன்படுத்திய துரியோதனனுக்கே நிலம் சொந்தம் ஆனது. குருதியினும் சொல்பெரிதென்று எண்ணிய காத்யரின் எலும்பை பயன்படுத்திய யுதிஸ்டிரனுக்கு நிலம் சொந்தமில்லை, காடே சொந்தம் என்று ஆனது.
நிலத்தில்  சொல் வலிதா? பசி வலிதா? என்றால் பசிதான் வலிது என்கிறது கதை. வாயா? வயிறா? வயிறே நிலம் அறியும் என்கிறது கதை.
அன்புள்ள ஜெ. மிளையன் ஆதனுக்கு சொல்லம் அஸ்தினபுரியின் மண்ணுரிமைபோர் கதை மிக மிக அற்புதம். சொல்வெல்லுமா? பசிவெல்லுமா? என்ற இருமுனை போராட்டத்தின் கபடியை அழகாக நடத்திக்காட்டுகிறது. பகடிபோல் இருந்தாலும், பகடியின் துள்ளல் கபடியாகி ஒன்றை ஒன்று தூக்கிப்போட்டு மிதித்து யுத்தகளமாக்குகிறது.
சொல் பெரிது என்று நிறுபிக்க வசிஸ்டர் வரை செல்கின்றார் யுதிஸ்டர். குழந்தையின் கையில் உள்ளதைகூட திருடிதின்றுவிடும் காக்கை, ஏழு அடுக்கு மண்ணுக்கு அடியில் கிடக்கும் அன்னையின் எலும்புக்கூட்டின் புனிதத்தால்  அதன்மீது இரந்துகிடக்கம் நாயை திங்கவில்லை என்பதை கதை காட்டும் இடத்தில் வயிறுபெரிது என்பது புவிமுழுதும் எதிரொலிக்கிறது.
ஆனாலும்..
வயிற்றின் முன் சொல் அடிபடும் இடங்களை நோக்கும்போது பாவம் இந்த சொற்கள் என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை. “அப்படி என்றால் ஓடு. இனி சொல்லை தின்றே உயிர்வாழ்“ என்று சொல்வேந்தன் வசிஸ்டனும்.  
“நல்லவேளை, அவன் அரசனாகவில்லை. இல்லையேல் அஸ்தினபுரியின் மக்கள் புகையுண்டு உயிர்வாழ வேண்டியிருந்திருக்கும் என்றது அன்னைநரி. குழவிநரி வான்நோக்கி மூக்கை நீட்டி ஊளையிட்டுச் சிரித்தது. என்னும்போது நரிகூட்டமும் வயிற்றுப்பக்கம் திரும்பி நின்று சொல்லை அடிக்கும்போதும் மௌனமாகமல் என்ன செய்ய?
வயிறு முன் சொல் விழுந்து விழுந்து தடுமாறி கரைந்துபோவதை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. இவ்வளவு பலகீனமான சொற்களை பற்றிக்கொண்டு வெல்லவேண்டும் என்றால் எத்தனை ஆன்மபலம் வேண்டும். எத்தனை அடி எத்தனைபெரிய தோல்வி எத்தனை விதமான பரிகாசம். அத்தனைக்கும் அப்புறம்  யுதிஸ்திரன் போன்றவர்கள் மட்டும்தான் நிற்கமுடியும். எல்லா சொற்களும் வயிற்றை வென்று எழுந்து நின்றவைதானா? 
களிற்றியானை நிரை-02 சொல்லா? பசியா? என்கிறது.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.