Wednesday, December 18, 2019

06. லட்சிய பயணி. பயன்பயணி



ஆசை காமம் வஞ்சம் மனிதனை எல்லை கடக்க, நாடு கடக்க வைக்கிறது.  அதில் இருக்கும் சுக உணர்வு மனிதனை அந்த நிலைக்கு தள்ளுகிறது. அந்த உணர்வுகளை ஒழுங்குப்படுத்தி நெறிபடுத்தி நியதியில் நிற்கவைக்கும் அறிவு, ஒரு அங்குசம்போல் மனிதனுக்கு தேவைப்படுகிறது. அந்த   அங்குசத்தை செய்பவர்கள் மாமனிதர்கள்,  ஆனால் அறிவு ஆயுதம் கொல்லும் என்பதை அறிந்தும் அதனை கையகப்படுத்தியவர்கள் யானைமுகம் கொண்ட கடவுளர்கள்.

நாடுபிடிக்க சென்றவர்கள் அனைவரும் ஆசை காமம் வஞ்சத்தை சூடியவர்கள். கூட்டாக சென்று கூட்டாக செயல்பட்டவர்கள். ஒரு விதத்தில் கொள்ளையர்கள்தான்.

அறிவுபிடிக்க சென்றவர்கள் கூட்டாக சென்றாலும் இறுதியில் தனியனாகவே அலைந்தவர்கள்தான். தனியாக அலைந்து, தனியாக பெற்றாலும் அறிவுப்போல உலகம் முழுமைக்கும் பயன்படும் ஒரு விலைமதிப்பில்லா குன்றா தீரா பொருள் உலகில் இல்லை. தீபம்போல எத்தனை விளக்கை ஏற்றினாலும் அறிவு தீபம் குறைவதி்ல்லை.

அறிவு அழிவதில்லை என்பதால்,அதனை தேடும்  அழியும் உடல்கொண்ட மனிதனை அது அழிக்கவும் தயங்குவதில்லை.

குருதேவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர்   “கயிறு தட்டுப்பட்டால்போதும், அதனை பிடித்துக்கொண்டே போனால் கடலின் ஆழத்தில் உள்ள பொருளை அடைந்துவிடலாம், கயிறுதான் பக்தி” என்பார்.

“அறிவின் நுனி தெரிந்துவிட்டால் முழுமை வெளியாகும் வரை அமைதிகொள்ளவும் இயலாது”- என்கிறது களிற்றியானை நிரை-06.

ஞானத்தைதேடி இந்தியாவிற்கு ஏழாம்நூற்றாண்டில்  வந்த சீனப்பயணி யுவான்சுவாங், கோபி பாலைவனத்தில் செத்துவிழுவேன் என்ற நிலை ஏற்படும்போது தான் வந்த குதிரையில் தன்னை வைத்து கட்டி நினைவற்றுப்போகின்றார். இரண்டுநாள் கழித்து குதிரை நின்ற இடம் ஒரு பாலைவனச்சோலை. அறிவைத்தேடி வந்தவர் வாழ்வில் நடந்த சிறுசம்பவம் இது. தடைகள், கொள்ளையர்கள், இயற்கை சீற்றம், நம்பிக்கை கொள்ளாத புதியமனிதர்கள். எதிரிகள் என்று பதினேழு ஆண்டுகள் பயணித்தவர் வாழ்வில் இது ஒரு சிறுசம்பவம்தான், ஆனால் இதைவிட பெரிய சம்பவம் எது இருக்கமுடியும்.

சௌதியில் பல கம்பெனி கேம்புகள் இருக்கும் காண்ட்ராக்டர் கேம் பார்க்கில் எனது கேம்ப் உள்ளது. ஒன்றுக்கு ஒன்று சதுரகிலோமீட்டர் உள்ள கேம்பார்க். சுற்றி பாலைவனம். கேம்ப் ஒரு பாலைவன  சோலை. ஒரு நாள் மாலை சிறுநடைபயணத்தின்முடிவில் கேம்பை அடைய நூறுமீட்டர் தொலைவில் உள்ளேன். மழைதுளி விழுகிறது, காற்று வருகிறது, கேம்பிற்கு ஓடிவிடலாம் என்று நினைக்கிறேன். பாலைவன மணல் வந்து அறைகிறது. கேம்ப் தெரியவில்லை.  பறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். திறந்து இருந்த பக்கத்து கேம்பில் நண்பர் ருமில் நுழைந்து கண்ணாடிவழியாக பார்க்கிறேன். வெளியில் உலகம் என்று ஒன்று இல்லை.  விர்..விர். படீர்..படீர் மட்டும்தான். போர்ட்டபில் தகர கூரை பிய்ந்து போய்விழும் டங்.டிங் ஓசை.  ஒன்றரை மணிநேரம் கழித்துதான் உலகம் தெரிந்தது. இயற்கையின் முன் மனிதன் ஒரு மண்துகள்கூட இல்லை.  இது சிறுதுளியின் சிறுதுளி சம்பவம். யுவன்சுவாங்க் கடந்தது பெருங்கடல் பாலைப்பயணம். அதை நடத்தியது அறிவுத்தேடல்.  அதனால்தான் நாடே கூடி கொண்டாடிக்கொடுத்த  அமைச்சர்பதவியையும் துறந்து கற்கவும் கற்பிக்கும் தன்னை  ஆற்றுப்படுத்தினார்.

தன்னை அழிக்கும் அறிவையும் மானுடர் விரும்புவார்களா?” என்றான் அழிசி. “அறிவில் பெரும்பகுதி மானுடனை அழிப்பதே. அதை வேண்டி விரும்பி இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கும் மானுடர்களே இப்புவியில் மிகுதி” என்று ஆதன் சொன்னான். “எனில் ஏன் அறிவை நாடுகிறான் மானுடன்?” என்று அழிசி கேட்டான். “அறிவில்லை என்றால் அவன் மானுடனாக உணரமாட்டான் என்பதனால்” என்று ஆதன் சொன்னான். அழிசி அவன் இளம்விழிகளில் திரண்ட துயருடன் நோக்கினான்.

சாவுக்கும் துணிந்து தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒருவனுக்குதான் அறிவுவாகனமாகிறது, அல்லாதவரை இல்லாதவராக விட்டுவேடிக்கைப்பார்க்கிறது.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்-என்கிறார் வள்ளுவர்.

யுவான்சுவாங் போன்ற ஆதனின் தொலைவை அழிசி போன்றவன் கண்களால் எப்படி காணமுடியும்?

நெடுந்தொலைவில் இருப்பது என்பது இல்லாமல் இருப்பதுதான். அதை அடைய லட்சியம் வேண்டும். அந்த லட்சியமே ஒரு பயன்தான். அதற்குமேல் பயன் என்பது அறிந்த அறிவுமட்டும்தான். அது பொருள் அல்ல கண்களுக்கு காட்ட, நெஞ்சம் மட்டுமே அறியும். பயனை கண்களால் காட்டவிரும்புவர்களுக்கு லட்சியம் இருப்பதில்லை ஆசை மட்டுமே இருக்கிறது.

ஆதன் லட்சிய பயணி, அவன் நெஞ்சால் நடக்கிறான். அழிசி பயன்பயணி. இவன் கண்களால் நடக்கிறான்.



அன்பும் நன்றியும்

ராமராஜன் மாணிக்கவேல்