Tuesday, January 22, 2019

துரியோதனன் மனம்



அன்புள்ள ஜெயமோகன் சார்,


துரியோதனன் மனம் உவகையில் துள்ள துச்சாதனன் அப்படி இல்லை,ஏன்? அண்ணன் வெற்றிபெற்றுவிடுவான் என்ற எண்ணமா? அடிமையாகவே இருந்தவனுக்கு அண்ணன் பொறுப்புகளை வழங்கும்போது திகைக்கிறான். இரண்டாம் இடத்தில் இருப்பவர்களுக்கு உரிய குணநலன்கள். திடீர் சர்ப்ரைஸ்கள் அவர்களை சாக அடிக்கும் என்பதை துரியோதனன் உணர்ந்தே இருக்கிறான். அஸ்தினபுரியின் அரசனாய் இருந்தவனுக்கு இது கூட தெரியவில்லை என்றால் இவ்வளவு பேரை குருஷேத்திரதிற்கு கூட்டி கொண்டு வந்திருக்கமுடியுமா?, தனது ஆட்சிகாலத்தில் எவ்வளவு பார்த்திருப்பான்.

துரோணர் இப்போதும் தன்னை மையமாகவே கொண்டு சிந்திக்கிறார். அவரால் அனைவரோடும் சேர்ந்து எந்த மனைதடையும் இல்லாமல் அவர்களாகவே அழைத்தாலும் விளையாடமுடியாது போல..தாழ்வுணர்ச்சி போய் குழப்பத்தில் இருக்கிறார். ஆனால் நெறியை சுட்டுகிறார். களத்தில் செய்யவேண்டியதை விட்டுவிட்டு தோல்விக்கு பின் தர்க்கபூர்வமாய் அதற்க்கு சப்பை கட்டுகட்டுகிறார். வெண்முரசில் "ஆடிப்பாவை" என்ற கருதுகோள் வந்தபடியே இருக்கும். பீமனுக்கு துரியோதனன், அர்ஜுனனுக்கு கர்ணன்என. துரோணர், தர்மரை கடத்தி வரும்போதும் சரி இப்போது துரோணர் தான் செய்யாமல் விட்டதை எண்ணி புலம்பும்போதும் சரி ஒருவேளை தர்மனின் ஆடிப்பாவை துரோணர் தானா? ...தன்னைப்போலவே உடம்பும், நூல்களாலும்,நெறிகளாலும்,உறவின் பற்றுகளாலும் தலைவீங்கி குமுறும் ஒரு மனிதன். இங்கு துரோணர் அழுது புலம்பி வஞ்சினம் உரைக்க அங்கு தர்மர் கடுப்பில் ஆணவத்தில் இருக்கிறார்,எப்போதும் இருக்கும் துரோணர் போல. இந்த குளவிகளுக்கு நடுவில் திரிகர்தனாகிய சுதர்மன் கொசுபோல தனது வஞ்சினத்தை உரைக்க அதை யாரும் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.பலிகடாக்கள் மரியாதை வெட்டப்படும் களம் வரைதான். தவ்வை என்றால் ஜேஷ்டாதேவி, சப்தகன்னிகைகளில் ஒருத்தி என்றும் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக நம்மை வைத்திருப்பாள் என்றும் அவரது தமக்கை லட்சுமி என்றும் விக்கிபீடியா கூறுகிறது. சுதர்மன் தனது உயிரை காப்பாற்ற பொன்னும் பொருளும் கொடுத்ததாக கூறுகிறான். ஒரு வேளை இவனிடம் இருந்து அங்கு சென்றவள் அவனை கூப்பிடுகிறாள் போல..ஆனால் தமக்கை கரியநிறம் உள்ளவள், எருமை போன்ற கண்களை உடையவள் என வெண்முரசு சொல்கிறது. பழைய பழங்குடி லட்சுமியா?  இல்லை பீஷ்மரை தொடர்ந்த அஷ்ட வசுக்களைபோல கர்ணனை தொடர்பவைகளா?

துரியோதனின் மூளை தனது நண்பன் இருக்க பயங்கரமாய் வேலை செய்கிறது.முழுவாழ்நாளிலும் கர்ணனும் துரியோதனனும் ஒத்திசைவாய் முதல் வெற்றியை சுவைத்தபின் அடுத்த அடிக்கு செல்கிறார்கள். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்