Thursday, August 13, 2020

யானை

 

அன்புள்ள ஜெ

இந்த அனுபவத்தை நீங்கள் உங்கள் இளமையில் நேரில் கண்டதாக எழுதியிருந்தீர்கள். இப்போது மழைப்பாடலை திரும்ப வாசிக்கும்போது இதைக் கண்டுபிடித்தேன்

கானுலாவச் சென்றிருந்தபோது ஒருமுறைகாட்டுயானை ஒன்றைக் கண்டான். வெண்தந்தம் நீண்டெழுந்த மதகளிறு அது. வேங்கைமரத்தை வேருடன்சாய்த்து உண்ணும் துதிக்கை கொண்டது. இளவெயிலில் சுடர்ந்து நின்ற சிறிய மலர்களை துதிக்கைநுனியால் கொய்து சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டிருந்தது. விதுரன் அதைக்கண்டு புன்னகைசெய்தான்.அதனால் அந்த வீண்செயலை நிறுத்தமுடியாதென்று எண்ணினான். நிறுத்த எண்ணும்தோறும் அவ்வெண்ணத்தின்விசையே அச்செயலை அழுத்தம் மிக்கதாக ஆக்கிவிடும்.

விதுரன் அந்த யானையைக் கண்டு புன்னகைப்பது அது திருதராஷ்டிரரைப்போலிருப்பதனால். திருதராஷ்டிரரின் மொத்தக் குணாதிசயமும் அந்தக் குறிப்பில் வந்துவிடுகிறது. அந்த யானைதான் திருதராஷ்டிரர் கர்ப்பத்தில் இருக்கும்போது அம்பிகையின் கனவிலே வந்த யானை

ரவிசங்கர்