அன்புள்ள ஜெயமோகன்
நான் ஸ்ரீவித்யா உபாசனைகொண்டவன். தேவிபாகவதத்தை பல ஆண்டுகளாகப்
பாராயணம் செய்பவன். வெண்முரசை பல காரணங்களால் நான் வாசிக்கவில்லை. முதற்காரணம் என்னிடம்
அதை வாசித்தால் நம் பக்தி இல்லாமலாகிவிடும் என்று சொன்னார்கள். நான் வாசித்தவரை மகாபாரதம்
புராணங்களை நவீன இலக்கியமாக எழுதும்போது பலரும் செய்வது பக்தியை அழிப்பதே. பக்தியை
இழந்தால் திரும்பப்பெற முடியாது. ஆகவே தவிர்த்தேன்
ஆனால் நாவல் முடிந்து வந்த சில கமெண்டுகளைப் பார்த்து வாசிக்க
முடிவு செய்தேன். தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். விதுரர் தேவியை உணரும் இடம் என்னை
பரவசத்திலாழ்த்தியது. தேவிபாகவதத்தின் சாரம். ஆனால் நவீனமொழியிலே சொல்லப்பட்டிருக்கிறது
வெண்முரசு எதற்கும் எதிரல்ல, எதையும் முன்வைக்கவுமில்லை. நீங்கள்
சொல்வதுபோல எல்லா விதைகளையும் முளைக்கவைக்கிறது. பக்தியின் விதைகளையும். கொள்வதைக்
கொள்ளவேண்டியதுதான்
\
எம்.ஸ்ரீராம்