Monday, December 7, 2020

பிறழ் உறவு


                            


                 இனப்பெருக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள ஒன்றாகும். ஒருசெல் உயிரினங்கள் தன்னை தானே இரட்டிப்பு செய்துகொண்டு பெருகுகின்றன. பல தாவரங்கள் தன்னிலிருந்து மற்றொரு தாவரத்தை கிளைத்து வளரவிட்டு கொள்கின்றன. ஆனால் இத்தகைய இனப்பெருக்க ங்களில் ஒரு உயிர் அப்படியே மற்றொரு உயிராக பதிவு எடுக்கப்படுகிறது ஒன்றுக்கொன்று வேறுபாடுகள் இருப்பதில்லை அதன் பண்புகளில் எவ்வித முன்னேற்றமும் நிகழ்வதில்லை. ஆனால் இயற்கை சூழல் உயிர்களுக்கு இடையே பலத்த போட்டியை உருவாக்கி   வைத்திருக்கிறது.    காலம் செல்லச் செல்ல  போட்டி கடுமையாகி கொண்டே இருக்கிறது.  தன் வாழ்வை தக்கவைத்துக்கொள்ள அவை தன் பண்புகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாக உள்ளது.  
   
          தனித்தனியாக இரு உயிர்கள் வாழ்ந்து அனுபவித்து அதன்மூலம் மேம் படுத்திக் கொண்டிருக்கும் பண்புகளை  அடுத்த சந்ததிக்குக் கடத்த இரு உயிர்களில் இருந்து மற்றொரு உயிர் உருவாவது தேவையாகிறது. அப்படி ஒரு உயிர் உருவானால், அந்த இரு உயிர்களின் பண்புகளை அது கொண்டிருக்கும் அதன்மூலம் இயற்கைச் சூழலில் தன் இருப்பை  நீடித்து தக்கவைத்துக் கொள்வதற்கான அதிக வாய்ப்புகளைப்  பெரும். ஆகவே உயிரின பரிணாம வளர்ச்சியில் தாவரங்களில் அடுத்தகட்டமாக பூக்கள் தோன்றி விதைகள் உருவாகி அதன் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. தாவரங்கள் தம்  பூக்களில் மகரந்தம் மற்றும் சூலகம் என இருவேறு வகைகளை கொன்டிருக்கிறது. ஒரு தாவர இனத்தில் ஒரு தாவரத்தில்  இருக்கும் மலரிலிருந்து மகரந்தம் மற்றொரு தாவரத்தில் இருக்கும் மலரில் இருக்கும் சூலகத்தோடு சேர்ந்து உருவாகும் புதிய தாவரம் இவ்விரு தாவரங்களில் இருக்கும் பண்புகளை கொண்டு மேம்பட்டு இருக்கும். சில வகை தாவரங்களில் ஆண் தாவரம் பெண் தாவரம் என இரண்டாக பிரிந்து இருப்பதும் உண்டு.  ஆண் தாவரங்களில் பெண் மலர்கள் இருப்பதில்லை பெண் தாவரங்களில் ஆண் மலர்கள் பூப்பது இல்லை.   இதனால் ஒரே தாவரத்தின் மலரிலிருந்து மகரந்தம் அதில் இருக்கும் மற்றொரு மலரின் சூலகத்தில் இணைந்து விதை உருவாவது தவிர்க்கப்படுகிறது. 
 
         இவ்வேறுபாடு விலங்கினத்தில் முழுமையாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.   விலங்கினங்களில்  ஒவ்வொரு உயிரும் ஆண் விலங்கு  பெண் விலங்கு என இரு வகைகளாக பிரிக்கப் பட்டிருக்கின்றன. புதிய உயிர் ஒவ்வொன்றும் உறுதியாக இரு வெவ்வேறு உயிர்களின் இருந்து உருவாக்கப்படுவதால் அவை வெவ்வேறு உயிர்களின் பண்புகளை அது கொண்டிருக்கின்றது. அதன் மூலம் உயிர்களின் உடலமைப்பில் வாழ்வியல் முறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன.  இப்படி ஆண் பெண் என பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒரு தாய்க்கு பிறந்த குட்டிகள் பெரிதாக வேறுபடுவதில்லை. அவற்றுக்கிடையே மீண்டும் குட்டிகள் பிறக்குமானால் அவை புதிய பண்புகளை தம்மில் சேர்த்துக்கொள்ளுதல் என்ற காரணம் மீண்டும் அடிபட்டுப்போகிறது.  மேலும் தாய் தந்தைக்கு இருந்த உயிரியல் குறைபாடுகள் மேலும் தொடர அது வழி செய்து விடும்.  ஆகவே பெரும்பாலான  விலங்கினங்களில்  குட்டிகள் வளர்ந்தவுடன் தன் கூட்டத்தை விட்டு பிரிந்து விடுகின்றன. அல்லது ஆண் விலங்குகள் மட்டும்  தம் தாய் தந்தை இருக்கும்  குழுவை விட்டு விலகி தனித்து செல்வது பல  விலங்கினங்களில் நடக்கிறது. இப்படி நெருங்கிய உறவுகொண்ட விலங்கினங்களுக்கிடையே இனப்பெருக்கம் நடப்பது வெகுவாக குறைக்கப்படுகிறது. 

    மனித இனத்தில் எந்த ஒரு சமூக குழுக்களிலும் இப்படி இரத்த உறவு இருக்கும்  நெருங்கிய உறவுகளுக்கிடையே இனப்பெருக்கம் நிகழவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.  பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயும், சகோதர சகோதரிகளுக்கிடையேயும் முழுதுமாக தவிர்க்கப்பட வேண்டியதாக கிட்டத்தட்ட அனைத்து பண்பாடுகளும் கொண்டிருக்கின்றன.  இது  மனித உடலின் உயிரணுக்களில் எழுதப்பட்டிருக்கும் பண்புகளில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால்  இது மனித ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.  மனிதர்களில் இத்தகைய உறவுகளுக்கிடையே இனக் கவர்ச்சி ஏற்படுவதற்கான  மன விலக்கம் பெரிதாக இருக்கிறது. 

      மேலும் மனிதன் குடும்பமாக குழுவாக இணைந்து வாழ்பவன். அதே நேரத்தில் தான் பாடுபட்டு உழைத்து அடைந்ததை  முதன்மையாக பகிர்ந்து கொள்ள வேண்டியது தன் உதிரத்தில் உதித்த பிள்ளைகளை என சுயநலம் கொண்டவன். ஆகவே தன் இணைக்கு பிறக்கும் பிள்ளை தன் உதிரத்தில் உதித்தது தான் என உறுதியை அவன் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அதன் காரணமாக அவன் ஆண்-பெண் உறவுகளை மிகவும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன் ஆக உள்ளான். உலகெங்கும் பரவியிருக்கும் மனித சமூகத்தின் எந்தப் பிரிவிலும் ஆண் பெண் இடையே இல்லறம் தாண்டிய உறவு இருப்பது எதிர்க்கப்படுகிறது. அதன் காரணமாக ஆண்களும் பெண்களும் பழகுவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணையும் ஆணையும் சமூகம் மிகக்கவனமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இரத்த உறவு இல்லாமலும்  கணவன் மனைவி என்ற உறவு முறை இல்லாமலும் இருக்கும்  ஆணும் பெண்ணும், ஒரு குடும்பத்திற்குள்ளேயே ஒரு வீட்டுக்குள்ளேயே  இருக்க வேண்டிய அவசியம் நேரிட்டிருக்கிறது.    அத்தகைய உறவுகளுக்கிடையே உடலுறவு மிகக்கவனமாக தவிர்க்கப்படுகிறது.  அதற்கான மனப்பயிற்சி ஒவ்வொரு மனிதருக்கும் சிறுவயதிலிருந்தே அளிக்கப்பட்டிருக்கிறது. 

   ஆனால் இயற்கையில் பிறழ்வுகள் என்பது எப்பொழுதும் நடைபெறுவதே.  ஒரு நிகழ்வு நடப்பதற்கான  நிகழ்தகவு மதிப்பு மிகக் குறைவாக இருக்கலாம்.   ஆனால் அது பூஜ்யமாக இல்லாதவரை அது நடப்பதற்கான சாத்தியம் எப்போதும் இருக்கிறது. ஆகவே மனித உறவுகளில் இத்தகைய முறை மீறிய உடல் உறவுகள் அரிதிலும் அரிதாக இருந்தாலும் அவை நிகழ்ந்திருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஆனால் மனித சமூகம் இதை வெளிப்படையாக பேசுவதில்லை இதன் விளைவுகளை வெளிப்படையாக வெளியே தெரிய விடுவதில்லை.  இப்படி நிகழ்ந்த பிறழ் உறவுகள் மந்தனமாக வெளியார் பார்வைக்கு வராமல் கவனமாக கையாளப்படுகின்றன, அதே நேரத்தில் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுகின்றன.     இதை அறியவந்த நெருங்கிய சுற்றம் வெளிப்படையாக என்றும் விவாதிப்பதில்லை.  இப்படிப்பட்ட நிகழ்வை  மிகக் கெட்ட கனவாக கருதி அது மறக்க விழைகிறது.  இது பொது சமூகத்தால் மிகவும் தவிர்க்கப்பட வேண்டிய பேச்சாக இருக்கின்றது.  சீரிய இலக்கியங்களில் மிகக்குறைவாகவே பிறழ் உறவுகள்  பதியப்பட்டு இருக்கின்றன. 

    வெண்முரசு அனைத்துவித அரசியல், உளவியல்,  தத்துவ,  சமூக,  சிக்கல்களை தன்னுள் நிகழ்த்தி பரிசோதித்துப் பார்க்கிறது.   பிறழ் உறவுச் சிக்கல் ஒன்றை மிக நுண்மையாக சொல்லிச் செல்கிறது. அது அர்ஜுனன்   உத்தரை அபிமன்யு ஆகியோருக்கு இடையேயான உறவு ஆகும்.  இந்த உறவு பற்றி வெண்முரசு வாசகர்கள் இதுவரை அதிகம் எழுதவில்லை.  ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் மட்டுமே பேசிக்கொள்கின்றனர்.  ஆனால் இலக்கியம் வாசகன் உடன் மிகவும் அந்தரங்கமாக பேசுவது. அது வாசகனிடம் எதை வேண்டுமானாலும் பேசலாம்.  அதன் மூலம் அது என்ன உணர்த்த வருகிறது என்பதுதான்  முக்கியமானது.     எனக்கு விளங்கிய வகையில் அர்ஜுனன் உத்தரைக்கு இடையேயான  உடல்உறவு  அர்ஜுனனே அறியாமல் அவன்  உள மயக்கத்தில் இருக்கும்போது  நிகழ்ந்த ஒன்று.  அவன் தன் மகன் அபிமன்யுவிற்கு உத்தரையை மணம் முடித்து வைக்கையில் இந்நிகழ்வை அறிந்திருக்க மாட்டான் என்று எனக்குத் தோன்றுகிறது.  உத்தரைக்கு இத்திருமணத்தில் இருந்த விலக்கத்தைக்கொண்டு கண்ணன் இதை பின்னர் ஊகித்து இருக்கலாம்.   அதற்கு  பின்னர் திரௌபதி யூகித்து இருக்கிறாள்.  அபிமன்யு உடனான  உத்தரையின் திருமணம் தான் ஏற்கெனவே நடந்த இவ்வுறவை பிறழ் உறவென ஆக்கிவிடுகிறது. அல்லது அபிமன்யுவிற்கும் உத்தரைக்கும் கணவன் மனைவியென  வாழாது போனதால் அப்படி இல்லை என்றும் சொல்லலாம் என்றும்  தோன்றுகிறது.  ஆனால் அபிமன்யுவின் மனைவி என்றே உத்தரை சமூகத்தால்  கருதப்படுவதால் சமூக இதை பிறழ் உறவு என்றே சொல்லும். 

   எப்படி இருப்பினும் இந்தப் பிறழ் உறவு ஒரு சிலர் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தாலும் தொடர்புடையவர்களுக்கு பெரிதாக  உளச்சிக்கலை உருவாக்குகிறது.  அபிமன்யுவை தன் பாதுகாப்பை அலட்சியம் செய்து போரில் மிகவும் அதீத நிலைப்பாட்டை எடுக்க வைத்து அவன் இறப்பதற்கு காரணமாகிறது. அவனுடைய தாய் சுபத்திரைக்கு அர்ஜுனன் மேலும் உத்தரை மேலும் பெரும் மனக்கசப்பை கொள்ள வைக்கிறது. உத்தரைக்கு  அவள் உளத்தை பேதலிக்கவைத்து, அவள் உடல் நலத்தை சீரழித்து, அவள்  இறப்பிற்கு வித்திடுகிறது. 

     தனிமனித சுதந்திரத்திற்காக  சமூக நெறிகளை, பண்பாட்டு மரபுகளை மீறலாம் எனக் கூறுபவர்கள் மிகுந்துவிட்டனர்.  ஆனால் அந்த மீறல்கள் அவருக்கோ மற்றவருக்கோ சமூக இணக்கத்திற்கோ கேடு விளைவிப்பதாக இருக்கக்கூடாது.  பிறழ் உறவுகள் அதில் ஈடுபட்டவர்களுக்கும் அவருக்கு தொடர்புடைய சுற்றத்துக்கும், சமூகத்திற்கும் பெரிய அளவில் சிக்கல்களை உருவாக்குவதால் அவை முற்றிலுமாக தவிக்கப்படவேண்டியவையே என வெண்முரசு இதன் மூலம் உறுதிப்படுத்துகிறது என்று நான் கருதுகிறேன்.

த.துரைவேல்