அன்புள்ள ஜெ சார்
அர்ஜுனனின் பரத்தமை பற்றிய அத்தியாயம் வெண்முரசில் ஒரு துணுக்குறலை ஏற்படுத்தியது. அர்ஜுனன் எப்படிப்பட்டவன் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். போர் வரும்போது தாசித்தெருவில் முரசறைந்து சொல்வார்கள் என்றும் ஏதாவது வீட்டில் இருந்து ஓடிவருவார் என்றும் சொல்லிக் கேட்டிருக்கிரேன். ஆனாலும் நேரடியாக வாசிக்கையும் என்னமோ போல இருந்தது
அதிலும் பரத்தமைக்குப்போவதைப்பற்றிய அத்தனை நுட்பங்கள் தேவையா என்று தோன்றிவிட்டது. போவதற்கு பின்னால் உள்ள மனநிலை அந்தப்பரத்தையின் நிலைமை அவளுடைய நடிப்பு இவன் போய்விட்டுத்திரும்பும்போதுள்ள மனநிலை எல்லாமே மிகவும் துல்லியமாகச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் துல்லியமாகவே சொல்கிறீர்கள் ஆனால் இதையெல்லாம் அப்படிச் சொல்லத்தான் வேண்டுமா என்று நினைத்துக்கொண்டேன்
தப்பாக நினைக்கவேண்டாம். அர்ஜுனன் இந்திரனின் அம்சம். அந்தக்காலத்தில் இதெல்லாம் சாதாரணம். இன்றைய வாசகர்களின் மனநிலை வேறு. ஒரு காவியத்தில் இதற்கெல்லாம் இடமிருக்கிறதா என்ன? காவியச்சுவை இதனால் குறைந்துவிடாதா என்று கேட்டறியவிரும்புகிறேன்
சாமிநாதன்
அன்புள்ள சாமிநாதன்
ஒரு காவியத்தில் இருந்தாகவேண்டிய ஒன்பது சுவைகளில் ஒன்று அருவருப்பு.. இன்னொன்று சிருங்காரம். அவை வியாச மகாபாரதத்திலும் உண்டு
வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகச் சொல்லவே ஒரு காவியம் முயல்கிறது
ஜெ