Thursday, November 6, 2014

வெண்முரசு விழா ஏன்

அன்பின் எழுத்தாளருக்கு,

ஏன் வெண்முரசு விழா எடுக்க வேண்டும் என்று நீங்கள் விளக்க வேண்டிய சூழல் மிகவும் வருத்தமாக இருந்தது. ஒரு மகத்தான செயலை செய்துகொண்டிருக்கும்போது இப்படி விளக்கம் அளிக்க வேண்டிய சூழலை எப்படி கடந்து செல்கிறீர்கள் என்று .ஆச்சர்யமாக உள்ளது. 

விழாவிற்கு வர இயலாத சூழலிலும் இணையத்தின் வாயிலாக அதை காணக்கிடைக்கும் ஒரு இடத்தில் இருக்கிறேன் என்பது நிம்மதி அளிக்கிறது. 

விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.   

சா. ராம் குமார். 
நோங்க்போ, மேகாலயா. 


அன்புள்ள ஜெ 

வெண்முரசு விழா  ஏன் - வாசித்தேன் 

என்  எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். 

மிகவும் கடினமான செயல்களை மிகுந்த பொறுப்புடன் செய்கிறீர்கள். நான் எப்படி உதவலாம் என்கிற எண்ணம் மிகுகிறது.

நண்பர்கள் நால்வர் - உங்களது வெண்முரசு எழுத்துக்களை ஊக்கத்துடன் புத்தகமாகவும் மிக விரும்பி படிப்போம். வேறு ஏதாவது வகையில் நாங்கள் பங்கேற்க முடியுமெனில் தயவு செய்து தயங்காமல் கேளுங்கள். எந்த தயக்கமும் இல்லாமல், கேள்விகள் இல்லாமல் இயன்ற அளவு செய்ய காத்திருக்கிறோம். இது  மீதான அன்பும் மரியாதையும் காரணமாக.

சில யோசனைகள் உண்டு. பேசினால் தெளிவாக இருக்குமோ  தோன்றுகிறது. நேரம் கிடைக்கும் போது செய்யலாம்.

நுகர்வோரின் தளம் - நீங்கள் இணையத்தில் ஆக்க பூர்வமாக செயல் .படுவதால். சில disruptive innovation பாணியில் செயல் படுகிறது. பல புதிய சாத்தியங்களை தன்னுடன் கொண்டது. இவை உங்களுக்கு - உங்கள் நண்பர்கள் மூலம் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.

crowd sourcing என்கிற அணுகுமுறை நுகர்வோர் தயாரிப்பாளர் இடையே ஒரு புது உறவை ஏற்படுத்துகிறது. www.kickstarter,com, www.indigogo.com முயற்சி செய்யவும். புதிய கருவிகளிலிருந்து சினிமா தயாரிப்பு வரை இயங்குகிறது - புத்தக வெளியீடு முயற்சியும் சேர்ந்தே.

நற்றிணை பதிப்பகம் சிறப்பாக பணியாற்றுகின்றனர். இருப்பினும், ஆன்-லைன் மூலம் விற்பனை - உலகத் தமிழருக்கு உங்கள் புத்தகம் சேர வாய்ப்பளிக்கலாம். Flipkart or Amazon முதலியன உதவக் கூடும். 

இதனை நீங்களே செய்வது அயர்ச்சி ஊட்டலாம். நல்ல நண்பரின் உதவியை நாடவும்.

கடைசியாக.. உங்கள் எழுத்துக்களை படிப்பவரில் பலர் நிஜமாகவே பணம் கொடுத்து புத்தகம் வாங்கி படிப்பதில் தயக்கம் இல்லாதவர்கள் என தோன்றுகிறது. உதாரணமாக - நான் வண்ணக்கடல் புத்தகத்தை சற்று தாமதமாகத் தான் ஆர்டர் செய்தேன். சற்று சோம்பேறித்தனம் தான் காரணம். அது போல பலரும் இருக்கலாம். செம்பதிப்பை இழந்து விடுவேனோ என்கிற அச்சமும் இருந்தது, நல்லவேளை - நான் ஆர்டர்  செய்த பின்னரும் கொஞ்ச நாட்கள் இருந்தது . என் போன்றவர்களுக்கு எதோ ஒரு முடுக்குதல் தேவையாக இருக்கிறது. அது என்ன என்பது எங்களுக்கே தெரியாது :).

சிறுவர்களும், இளைஞர்களும் சற்று தள்ளி இருக்கிறார்களோ என தோன்றுகிறது. அவர்கள் நுகரும் பழக்கத்தை ஒட்டி இருக்கும் அறிவிப்பு முயற்சிகள் உதவலாம்.

இந்த செயல்கள் உங்களது தரத்தை, தளத்தை அது குறைத்து விடுமோ என அஞ்சலாம். அது நியாயமானதே. இருப்பினும், இணையம் சில சாத்தியங்களை நோக்கி நிகழ்வுகளை சரிக்கும் (Tipping Point) சாத்தியப் பாடு உடையது. அது உங்களுக்கு கிடைக்க கூடும் என்கிற ஆவலில்  இதனை எழுதுகின்றேன்.

அன்புடன் 
முரளி 
 
 
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுடைய பதிவு "வெண்முரசு விழா ஏன்" படித்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது.

உலகத்திலேயே ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, அதை உற்சாகப்படுத்தாமல் பொறாமை கொண்டு செயல்படும் பலர் கண்டு, நம் தமிழ் சமூகம் கண்டு வருத்தமாகவும் அவமானமாகவும் உள்ளது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்துபவரல்ல தாங்கள் என அறியும் போதுதான் ஆறுதலாக உள்ளது.

நம் தமிழ் சமூகத்தை காட்டிலும் சாகித்யகாரர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளித்து வரும் மலையாளத்தில் வெண்முரசு  இப்போதே அல்லது எழுதப்படும் போதே மொழி பெயர்க்கப்பட்டால் அது அதற்குரிய அந்தஸ்தை அடையும் என தோன்றுகிறது. இது தவறான கருத்தாக கூட இருக்கலாம். தங்களுடைய பார்வைக்கு.

பிரயாகை அதற்கேயுரிய பாய்ச்சலுடன் நிகழ்கிறது. தங்களுடைய புனைவில் அஸ்வத்தாமனின் பல மேன்மைகளையும் அறிய முடிகிறது.

அன்புடன்,

கணேஷ்
பஹ்ரைன்