Thursday, November 6, 2014

வெண்முரசுவுக்குநீ ஒரு வாழ்த்து

இன்றைய பதிவு: (http://siliconshelf.wordpress.com/2014/11/05/வெண்முரசு-விழாவுக்கு-வாழ/)

நண்பர் செந்தில்குமார் தேவன் வெண்முரசுவுக்குநீ ஒரு வாழ்த்து அனுப்பலாமே என்று கேட்கும்வரை எனக்காகத் தோன்றவே இல்லை. என்னையும்இ என் மகாபாரதப் பித்தையும் ஜெயமோகனுக்கு ஓரளவு தெரியும், இந்த வரிசையை மிகவும் ரசித்துப் படித்திருப்பேன், படிப்பேன், இது தொடர வேண்டும் என்று முழு மனதுடன் விரும்புவேன், ஒவ்வொரு நாளும் அடுத்த பகுதியைப் படிக்க ஆவலோடு காத்திருப்பேன் என்பதை எல்லாம் அவர் நன்றாகவே அறிவார். இதில் வெளி உலகத்துக்காக ஒரு வாழ்த்தைப் பதிவு செய்ய வேண்டுமா, ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு என்று கொஞ்சம் யோசித்தேன். வாழ்த்து அவர் பூரித்துப் போய்விடுவார் என்பதற்காக அல்ல, என் மன நிறைவை வெளிப்படுத்த என்று புரிந்த அடுத்த கணம் எழுத ஆரம்பித்துவிட்டேன்.
மகாபாரதமே உலகின் ஆகச் சிறந்த காவியம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். உண்மை மனிதர்களால், ஆனால் அசாதாரண மனிதர்களால் நிறைந்தது, அந்த மனிதர்கள் முன் எப்போது இருக்கும் இரண்டு வழிகள், அவர்கள் தேர்வுகள் அந்தப் பாத்திரங்களை என் மனதுக்கு நெருக்கமானவர்களாக மாற்றி பல வருஷங்கள் ஆகிவிட்டன. எனக்கு மூன்று வயது இருக்கும்போது இறந்து போன என் பாட்டியின் மடியில் அமர்ந்து பீமனைப் பற்றி கதை கேட்டதே இன்னும் மறக்கவில்லை. பீமனும் கர்ணனும் சகுனியும் துரோணரும் பூரிஸ்ரவசும் பகதத்தனும் கடோத்கஜனும் எனக்கு அண்டை வீட்டு மனிதர்கள் மாதிரிதான், அடிக்கடி அந்தப் பக்கம் போய் வருவேன்.
மகாபாரதத்திற்கு சிறந்த மறுவாசிப்புகள் இருக்கின்றனதான். ஆனால் அவற்றுள் பல பாரதத்தின் ஒரு சிறு கிளைக்கதையை எடுத்துக் கொண்டு விரிக்கின்றன. (காண்டேகரின் யயாதிஎம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி). பாரதத்தின் மொத்தக் கதையையும் பேச முற்படுபவையும் தங்களை ஒரு கோணத்தில் குறுக்கிக் கொள்கின்றன. (பர்வாவின் யதார்த்தச் சித்தரிப்பு, ரெண்டாமூழமில் பீமனின் கோணம்,  யுகாந்தரில் ஐராவதி கார்வேயின்சில பல கேள்விகள்). பாரதத்தின் அகண்ட வீச்சு பெரும் எழுத்தாளர்களைக் கூட பயமுறுத்தி இருக்க வேண்டும், அவர்களின் மொத்த வாழ்நாளும் ஒரே தளத்தில் கழிந்துவிடுமோ என்ற பயம் காவியங்கள் படைக்கும் திறம் படைத்தவர்களைக் கூட மகாபாரதத்தின் முழுமையான மறுவாசிப்பு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கச் செய்திருக்க வேண்டும்.
மேலும் ஜீனியஸ் எழுத்தாளர்களுக்குக் கூட ஒரு காவியத்தை மறு ஆக்கம் செய்வது என்பது சுலபமல்ல. புதுமைப்பித்தனோஅசோகமித்ரனோ இதை முன்னெடுக்க முடியாது. அவர்களால் இதன் ஒரு (சிறு) பகுதியை இலக்கியம் ஆக்க முடியலாம். புதுமைப்பித்தன் செய்தும் இருக்கிறார். (சாப விமோசனம்) ஆனால் முழு பாரதத்தின் மறுவாசிப்பு என்பதற்கு வேறு மாதிரியான mindset வேண்டும். விஷ்ணுபுரமும் கொற்றவையும் எழுதும் திறம் வேண்டும்!
jeyamohanஜெயமோகன் தன் வாழ்வின் சரியான நேரத்தில் சரியான தளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். விஷ்ணுபுரத்தையே இது வரை வந்த தமிழ் நாவல்களில் சிறந்ததாகக் கருதுகிறேன். இந்த முயற்சி அதையும் விஞ்சும் அறிகுறிகள் தெரிகின்றன. (குறிப்பாக நீலம் பகுதி). ஜெயமோகனுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் தளராத உற்சாகமும் சோர்வடையாத மனமும் அருளி இந்த முயற்சி பாரதத்துக்கும் ஜெய்மோகனுக்கும் பெருவெற்றியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஆனால் ஒன்று – பாற்கடலைக் குடிக்க வந்த பூனை என்று கம்பன் தன்னைப் பற்றீ சொல்லிக் கொண்டானாம். பாரதமும் பாற்கடல்தான், ஜெயமோகனாலும் கரைத்து குடித்துவிட முடியாது. உதாரணத்துக்கு ஜெயமோகன மகாபாரதத்தில் ஒரு சின்ன “முரண்பாடு”; துருபதனின் வீழ்ச்சியை கண்டதும் எழும் துரோணரின் புன்னகை அர்ஜுனனின் மனதில் இருக்கும் பீடத்திலிருந்து துரோணரை இறக்கிவிடுகிறது. ஆனால் கர்ணன் அவரது குருகுலத்தில் அவமதிக்கப்படும்போதோ, அல்லது ஏகலைவனின் கட்டை விரல் வெட்டப்படும்போதோ அர்ஜுனனுக்கு அவரிடமோ, பீமனிடமோ, எவரிடமும் மனவிலக்கம் ஏற்படுவதில்லை!