அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
மனிதனுக்கு சுதந்திரம் இருக்கு என்று நினைக்கின்றோம் ஆனால் மனிதனுக்கு உள்ள சுதந்திரம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
புலன்களின் இயங்கு தன்மையைக்கொண்டு சுதந்திரம் உள்ளது இல்லை என்று கூறுகின்றோம். உண்மையான சுதந்திரம் புலன்களின் இயங்குத்தன்மைக்கும் அப்பால் உள்ளது.
பாரதவருஷத்தின் பெருங்களிறு திருதராஷ்டிரன் வாழ்க்கை மனித சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது.
துரியோதனன் தனது தந்தையிடம் இன்று கேட்பது அவனின் சுதந்திரத்தைத்தான். திருதராஷ்டிரன் இடமும் அவனுக்கு உரிய சுதந்திரம் இல்லை.
பெரும் இரும்புத்தூணை ஒரே அடியில் வளைத்துவிடும் திருதராஷ்டிரன் காட்டுவது அவனின் சிறைக்கூடத்தின் கம்பியின் வலிமையை.
துரியோதனன் திருதராஷ்டிரன் நெஞ்சோடு நெஞ்சுமுட்டி நிறைக்கையில் தெரிவது துரியோதனன் சிறைக்கூடத்தின் சுவற்றின் வலிமையை.
பாதுகாப்பென்றும், பாசம் என்றும் நாம் அமைத்துக்கொள்ளும் அனைத்தும் சிறைக்கூடம்தான். அந்த சிறைக்கூடம்தான் நமக்கு சுதந்திரமானது என்றும் நினைக்கின்றோம். இந்த சிறைகள் உடைய வழியே இல்லையா? இருக்கிறது.
பீமன்// பிறப்பில் இருந்து து றவு வழியாக அன்றி எவரும் தப்பமு டியாது…// பிரயாகை-36 என்று சொல்கிறான். இதன் எதிர்ப்பதம் துறக்காதவரையும் பிறப்பு உண்டு என்பது. பிறப்புக்குள் சுதந்திரம் இல்லை என்று வருகின்றது. சுதந்திரத்திற்கு வழிகாட்ட வந்த வள்ளுவர் தரும் குறள்.
யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்.
அதனின் அதனின் இலன்.
திருதராஷ்டிரன் துரியோதனை அனைத்திலும் நீங்கி துறியாகிவிடு என்று சொல்லமால். தந்தை மன்னனாக இருப்பதாலேயே ஒருவனுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிடும் என்பது இல்லை கூறும்வகையில் மொழிவதை காண்கிறோம்.
“நீ என் மைந்தன்… அந்த மதிப்பு மட்டும் உனக்கு எஞ்சும்… நான்நாடிழந்து காட்டில் வாழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?மலைச்சாரலில் ஒரு எளிய மரம்வெட்டியாக இருந்திருந்தால்ஒரு மழுவை மட்டுமல்லவா உனக்கு அளித்திருப்பேன்” என்றுதிருதராஷ்டிரர் கூவினார். “பிறப்பளித்த தந்தையிடம் நீ எனக்குஎன்ன தந்தாய் என்று கேட்க எந்த மைந்தனுக்கும் உரிமைஇல்லை. மைந்தனிடம் எள்ளும் நீருமன்றி எதைக்கோரவும்தந்தைக்கும் உரிமை இல்லை…”.
ஒவ்வொரு கணமும் ஒன்றாக இருக்கும் வாழ்க்கையில் ஒரு உணர்ச்சியை மனிதன் தனது அடிப்படையாக கொண்டு அந்த உணர்ச்சியை தனது பிம்பமாக மாற்ற முயலும்போது ஏற்படும் சிக்கல்கள்தான் வாழ்க்கையை விதியின் வலையாக மாற்றுகின்றது.
அவன் அடம்பிடிக்கின்ற பிள்ளை அவன் கேட்டதை கொடுத்துவிடுங்கள் என்பதும். இவன் புரிந்துக்கொள்வான் இவனுக்கு இல்லை என்றாலும் பரவா இல்லை என்று சொல்வதும் நாம் அன்றாடம் வாழ்க்கையில் பார்க்கின்றோம். இவை எல்லாம் உணர்ச்சியின் வடிவங்கள், உண்மையில் விவேகம் ஆகாது. விவேகம் என்னும் சூரியன் விழித்தெழும்போது உணர்ச்சி பனித்துளி உருகிவிடுகின்றது. ஏனோ துரியோதனன் போன்ற அடம்பிடிக்கும் பிள்ளைகள் தனது உணர்ச்சிகள் விவேக சூரியனால் உருவி ஆவியாவதை விரும்புவதில்லை அதை தனது பிம்பம் கரைவதாகவே நினைக்கின்றார்கள். அப்படிக்கரைப்பது அறமாக இருந்தாலும், மூத்தோராக இருந்தாலும் அவன் பொருட்படுத்துவதில்லை. பழத்திற்குள் உள்ள புழுபோல அவன் கட்டுமானத்திற்குள் உள்ள புழு அந்த உணர்ச்சி அவனையே குடைய தொடங்கிவிடும். துரியோதன் பாத்திரம் தன்னை மூடியிருக்கும் மண்ணை தட்டிவிட்டு எழுந்து வரும் களம் இன்று.
//“தந்தையே, என்னால் அவமதிப்புகளை தாளமுடியவில்லை…எதன்பொருட்டும் தாளமுடியவில்லை. அறத்தின் பொருட்டோதங்கள் பொருட்டோகூட தாள முடியவில்லை. அதுமட்டுமே நான்தங்களிடம் சொல்லவிழைவது… தந்தையே” என்று அவர்தோள்களில் புதைந்த உதடுகளுடன் துரியோதனன் சொன்னான்.திருதராஷ்டிரர் மூச்சை இழுத்து விட்டபின் மூக்கை உறிஞ்சினார். “ஆம், நான் அதை அறிகிறேன்” என்றார். “இளவயது முதலேஉன்னை நான் அறிவேன்…”//
ஒரு குழந்தை பிறப்பதற்கு தாயும் தந்தையும் காரணம் ஆனால் அந்த குழந்தை தனக்குத்தானே பிறந்துக்கொள்ளவேண்டியது அதனுடைய கடமை அல்லவா? துரியோதனன்போன்றோர் குருடர்களாக இருப்பது இங்குதான். இதைத்தான் குருடனாக இருந்தாலும் திருதராஷ்டிரன் அழகாக சொல்கிறான்.
//அவர் அவன் தலையில் கைவைத்து “பொறுத்திரு மைந்தா…காலம் அனைத்தையும் சரிசெய்யும். உன் உணர்ச்சிகளைஎல்லாம் நான் அறிகிறேன். ஆயினும் நான் முதியவன்,பொறுமைகொள்ளவே நான் சொல்வேன். மானுட உள்ளம்பலவகை பொய்த்தோற்றங்களை உருவாக்க வல்லது.ஏனென்றால் உள்ளம் என்பது தன்முனைப்பின் ரதம் மீது நின்றுஆணவத்தை படைக்கலமாக ஏந்தியிருக்கிறது. பொறுத்திரு…”என்றார்//
உணர்ச்சியும் விவேகமும் சமபங்கு கலந்திருக்கும் திருதராஷ்டிரன்போன்றோர் ஒன்றில் ஒன்று கழித்தல் பூஜியம் என்ற இடத்திற்கு வந்துவிடுகிறார்கள். அப்போது திருதராஷ்டிரனுக்கு தனது ஆடிப்பாவையுடன் முட்டிக்கொள்ளும் எண்ணம் தோன்றுகின்றது. அதை உடைத்து முன்னேறவும் முடியவில்லை. பின்னகர்ந்து விலகிவிடவும்முடியவிலலை. ஆனால் அந்த பூஜியத்தில் அவன் பெரும்குணம் என்ற ஒரு துரும்பை பற்றி வாழ்க்கை நதயில் நீந்துகின்றான். விதுரர் மகன் நன்றாக உள்ளானா? குண்டாசிக்கு உடல்காயம் எப்படி உள்ளது? அவர்களை நான் பார்க்கவேண்டும் என்று தந்தையாகிவிடுகின்றான்.
திருதராஷ்டிரன் உணர்ச்சி விவேகம் பாசம் என்ற முக்கோணத்தில் சுற்றி ஒன்றை ஒன்று சமன்செய்துக்கொள்கின்றான்.
பெருங்குணமும் விவேகமும் இல்லாத உணர்ச்சி மட்டும் உடைய துரியோதன்போன்றவர்கள். வாழ்க்கைநதியில் இழுப்பில் பெரும்பாறைகளில் மோதுகின்றார்கள். இவன் உடலும் காயமாகிறது. பாறையும் அசைகிறது. இருவரின் அழிவுக்கும் அது கொண்டு செல்லும்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்