அன்புள்ள ஜெ
அரக்கர்கள் என்ற ஒற்றை வார்த்தை மூலம் கடந்துசெல்லப்படும் ஒரு மக்கள் தொகையின் பண்பாட்டையும் வாழ்க்கைமுறையையும் விரிவாக எடுத்துரைத்துச் சென்ற பிரயாகையின் 50-53 அத்தியாயங்கள் மிகச்சிறப்பானவை. வழக்கமாக இந்தமாதிரி கதைகள் ஒன்று புராணநோக்கிலே நின்று அரக்கர்கள், அசுரர்கள் எல்லாரும் கெட்டவர்கள் என்று சொல்லி முடித்துவிடும். அல்லது அதற்கு எதிராக எழுதுகிறேன் என்று அசுரர்கள் அரக்கர்கள் எல்லாரும் நல்லவர்கள், மற்றவர்கள் கெட்டவர்கள் என்று எழுதி முற்போக்கு வேடம் போடுவார்கள்
விரிவான சமூக இயக்கநிலையை காட்டுகிறது பிரயாகை. வெவ்வேறு மக்கள்குழுக்களுக்கு நடுவே நிகழும் பெரும் போராட்டத்தைச் சித்தரித்துக்காட்டுகிறது. அதில் எல்லா நியாயங்களும் வருவதுபோல எழுதிச்செல்கிறது
அசுரர்களுக்கும் விரிவான குலக்கதை உள்ளது. அதேபோல அரக்கர்களுக்கும் உள்ளது. அரக்கர்களின் குலக்கதையை அந்த மூதாதைக்குன்றிலே நின்றுகொண்டிருக்கும் அந்த பெருங்கற்கள் காட்டுகின்ரன. தலைமுறை தலைமுறையாக நடப்பட்டவை அவை. அவற்றின் தொன்மையை அர்ஜுனன் உணரும் இடமும் அழகாக வந்துள்ளது
செம்மணி அருணாச்சலம்.