ஜெ,
பாண்டவர்கள் அரக்குமாளிகையில் எரியும் காட்சி பழையபுராணம். ஆனால் அதை உங்கள் விவரிப்பில் பார்க்கும்போது நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் காட்டும் ஒரு சித்திரம் என்ற எண்ணம் வந்துவிட்டது. அரக்குமாளிகை என்பது என்ன? தீயை ஒளித்து வைத்திருக்கும் மாளிகை. வீடுகட்டும்போது தீ உள்ள மரங்களை வைக்கக்கூடாது என்று வாஸ்து உண்டு. நீர் உள்ள மரங்களையே வைக்கவேண்டும். உதாரணமகா பலா. [இப்போது எல்லா வீட்டையுமே தீ உள்ள அரக்கு மரங்களால் அமைக்கிறோம். ]
’தீ’ உள்ள வீட்டிலே நான் குடியிருந்திருக்கிறேன். அந்தக்காலகட்டத்தை இப்போது நினைக்கவே முடியவில்லை எங்கு திரும்பினாலும் பிரச்சினைகள். அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். தப்பவேண்டும் என்றாலும் வழி தெரியவில்லை. அதன்பின்னர் மீண்டேன். அதே மாதிரி சிதையில் எரிந்ததை நானே கண்டேன். அதேமாதிரி ஒரு பயங்கரமான கனவுமாதிரியான குகைப்பயணம். வெளியே வந்து மீண்டும் எளிமையாக ஆரம்பித்து இன்றைக்கு மீண்டுவிட்டேன். திரும்பிப்பார்த்தால் ஒரு பெரிய கனவு மாதிரி இருக்கிறது
ஒரு பெரிய இழப்போ நஷ்டமோ சிக்கலோ வந்து அதில் இருந்து மீண்டுவந்தவர்கள் அத்தனைபேரும் அந்த சிதையில் எரிவதையும் அந்த குகைப்பாதையையும் கண்டிருப்பார்கள். கண்ணில் தீ. உடனே இருட்டு. தட்டுத்தடுமாறி அந்தப்பயணம். கொஞ்சநாள்தான். ஆனால் அதுவே ஒரு வாழ்க்கை என்று தோன்றிவிடும்.
அவ்வளவையும் மீண்டும் நினைத்துக்கொண்டேன். இந்த அத்தியாயத்தை நான் மனசு நடுங்காமல் இனிமேல் நினைக்கவே மாட்டேன்
மகாதேவன்