Monday, December 8, 2014

காட்டில்...




 இனிய ஜெயம்,

குகையை விட்டு வெளியேறிய பிறகு  அர்ஜுனன் பார்வையில்  வரும் வனத்தின் சித்திரம்  கனவை உருவாகும் ஒன்று. குறிப்பாக  அனைத்து ரீங்காரங்களும்  ஒன்று கூடி பெரும் கார்வையாக மாறி, காட்டின் இலை துவங்கி இருள் வரை அனைத்தும்  அக் கார்வை  எனும் இசையில்  ஒரு  அங்கமாக மாறி ஒருமை கொள்வது அழகு.

பீமன்  வனத்தினுள்  நுழைந்தது துவங்கி பெரும் ஆகிருதியாக  வளர்ந்து வருகிறான். அன்னை முதல் தமையர்கள்  வரை  அனைவருக்கும்மான  உணவு, உடை, உறைவிடம்  அனைத்துக்குமான பொறுப்பாளியாக மிளிர்கிறான்,

பீமார்ஜுனர்களின் நகைச்சுவையும்  கூடிக் கொண்டே செல்கிறது. குறிப்பாக ''ஊன் உணவு  உண்ணாதவர்களுக்க்காக களத்தில் குருதி சிந்தி, ஊன் உண்ணும் பாவத்தை சமன் செய்வது'' .

குந்தி  அன்று தன் மகன்களுடன் பாண்டு காட்டில் எதை அனுபவித்தானோ  அதை இன்று இடும்பவனத்தில் அனுபவிக்கிறாள் என்று மேலுக்கு தோற்றம் அளித்தாலும், குந்தி வசம் உள்ள  அடிப்படை பேதம்  அவளை இயக்கும் ரஜோ குணம்.தனியாகவே தெரிகிறது.பாண்டுவால் பிள்ளைப் பாசத்தில் 'கரைய' முடிந்தது. குந்திக்கு அது இயலாதது  அவள் என்ன கதை சொன்னாலும்,

தாய்ப்பாலின் உவகையை அருந்தாமல், தாயின்  கண்ணீர் வழி அவளது துயரத்தையே தாய்ப்பாலென அருந்தும் விநதையின் மூத்த மைந்தன்  அருணன்  கதை  'கர்ணனின்' கதைதான் இல்லையா?

பீமனின் இறுதிக் கேள்வியான ''எந்த அறத்தின் பொருட்டு'' எனும் கேள்வி எடை மிக்கது.

ஆம் பீமனே  அதிசயிப்பது போல, அவன் கணிகனின்  தலையை தனது கதாயுதத்தால்  தட்டி எரியாதது, திரியை மைந்தர்களுக்கு மது அளித்தது  இவையெல்லாம்  எந்த அறத்தின் பொருட்டு?

பீமன் முதன் முதலாக  சிந்தனையின் இடருக்குள் விழுகிறான்.

கடலூர் சீனு