அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
வெண்முகில் நகரம் மழை பெய்யும் என்று குடையோடு நின்றேன். மழைக்கு முன்னுள்ள மின்னனோடு வெண்முரசு வானம் புன்னகைத்தது அழகு. மின்னலைப்பிடித்து சொல்லென்று ஆக்கி கண்ணனில் ஆடவிடும் கவியோவியம் அற்புதம். நீலத்தின் குழந்தைபோல மென்மையாக ஆனால் சூடாக ஒளியாக இருந்தது.
இருப்பதில் இல்லாததை, தெரிந்ததில் தெரியாததை, குளிர்ச்சியில் வெம்மையை, முகிலிலிருந்து வெளிச்சத்தை, நீரில் இருந்து அக்கினியை காட்டிவிட்டீர்கள்.
ஏர் முன்னோக்கி செல்கையில் பின்னால் உழுத இடம் உருவாகிவருவதுபோல் ஞானதீபம் தனது தடத்தை பின்னால் எழுப்பிக்கொண்டே செல்கின்றது.
மூன்றுக்கால்களால் நான்கு திசையையும் ஏழு நாக்கால் தின்றுசெல்லும் அக்கினித்தேவனின் படைப்பு. அறிமுகம், வணக்கம். அற்பும்.
அக்கினிதேவன் அவனே மண் விண் எங்கும் இருக்கிறான். அவனே எல்லாம் ஒளிர்வதற்கு காரணம். அவனே அனைத்தும் நீறாவதற்கும் காரணம். எழுதலும் விழுதலும் என்று இருமுகம் கொண்டவன் என்பது எத்தனை அழகு.
அக்கினி என்பது ஒன்று, எழுதல் விழுதல் என்ற இரண்டு முகம் கொண்டது., கால் என்ற காற்று இயங்கும் மூன்றுநாடிகளில் நடக்கும் மூன்றுகால் கொண்டது. திசை நான்கையும் வெல்லும் நான்கு கொம்பு அல்லது நான்கு திசையிலும் கிளைக்கும் (மரக்) கொம்புபோன்றது. ஐந்து பூதங்களுடன் கலந்து மெய்யில் வெம்மையாய், வாயில் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய தூஊம் மழையாய், கண்ணில் ஒளியாய், மூக்கில் புகையாய், செவியில் இடியாய் இக்கக்கூடியது. உயிர்கொண்ட உடல்கள் அனைத்திலும் விழியும், செவியும், மூக்கும், நாவும், கையும், காலும் ஆறு அணையா தீபங்களாக இருப்பவன். ஏழுகோடி மந்திரங்களை சுவைக்கும் ஏழுநாக்கு கொண்டவன் அல்லது ஏழுகோடி மந்திரங்களை அள்ளி உண்ணும் ஏழு கரம் கொண்டவன். அவன் எங்கும் இருப்பவன் அவன் அனைத்திற்கும் சான்றானவன், எங்கும் உள்ளவன், எப்போதும் உள்ளவன். அவன் வணக்கத்திற்கு உரியவன். அவனை வணங்கித்தொடங்கும் வெண்முகில் நகரம் தன்னை அக்கினித்தேவன் என்றே காட்டிக்கொள்கின்றது.
அக்கினித்தேவன்போல வெண்முகில் நகரமும் கடினத்தில் கடினமாக, மென்மையினல் மென்மையாக, குழைவியல் குழைவாக, திசைகளில் திசையாக, பசியில் பசியாக, விழைவில் விழைவாக, அறிவில் அறிவாக, நெறியில் நெறியாக, மெய்யில் மெய்யாக,விழியில் விழியாக இருக்கும் என்பதையே உட்பொருளாக கொண்டு உள்ளது.
பிரயாகை நீரில் தோன்றி அக்கினியில் வந்து நின்றது என்றால், வெண்முகில் நகரம் அக்கினியில் தோன்றி நீரில் வந்து நிற்கும். அதுதானே அதன் வட்டம்.
பொன்னொளிர் நாக்கு – 1-சிறியதுபொல் இருக்கும் பெரியது. நெருப்பில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
பிரமத்தில் வந்த நெருப்பை பிடித்துக்கொண்டு பிரமத்தை அடையம் நுட்பம் நிறைந்த பகுதி. யோகம் பயில்பவர்கள் எண்ணி எண்ணி கண்டு கண்டு இன்புறும் பகுதி. எளிதாய் விளங்கும் உண்மையின் காட்சி. சிரத்தை, ஸ்மிருதி, உதத்யன், பிரகஸ்பதி, சத்தியம் என்று கிளைத்து கிளைத்து செல்லும் பிரம்மம், தியானத்தில் அமர்ந்து கனிவை யோகசித்தியாக்கி, தன்னையே நெய்யாக்கி, தனக்குள் எழும் அக்கினியை ஆராதிப்பன் மண்ணிலிருந்து விண்ணகம் தொடுகின்றான். அக்கினியும் அவனும் இரண்டல்ல ஒன்று. ஒன்றிலிருந்து பலவாகி, பலதி்ல் இருந்து ஒன்றாகி எங்கும் நிறைந்திருக்கும் அக்கினிதேவனுக்கு வணக்கம். அக்கினிதேவன் போன்ற வெண்முகில் நகருக்கும் வணக்கம்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.